யாழ்.பல்கலை மாணவர்கள் நடத்திய வலிகள் தந்த வாரம் அஞ்சலி நிகழ்வு!

வன்னியில் இறுதியுத்த காலத்தில் கொன்றொழிக்கப்பட்ட எமது மக்களை நினைவு கூர்ந்து யாழ்.பல்கலைக்கழக சமூகம் அஞ்சலிக் கூட்டமொன்றை நடத்தியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் பொது மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி அஞ்சலிக் கூட்டத்தில் கொன்றொழிக்கப்பட்ட எமது மக்களுக்காக மாணவர்கள் உணர்வு பூர்வமாக தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

அஞ்சலியின் பின்னர் பல்கலைக்கழக சமுகம் அறிக்கையொன்றையும் விடுத்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

உலக வரலாற்றில் தன்னாட்சியத்திற்கும், நீதியைப் பெறுவதற்கும், சட்டமுறையான பாதுகாப்பை பெறுவதற்கும், கைவிலங்குகள் இன்றி சுதந்திரத்துடன் நடமாடுவதற்கும், பாக்கியம் கிட்டாமை எமக்கொரு துரதிஷ்டமே.

முள்ளிவாய்க்காலில் வரையப்பட்ட வடுக்களுடனும் ஆறாத மனக்காயங்களுடனும் உள்ளெழும் அழுகுரலையும் தாங்கிக் கொண்டு உள்ளூரத்தெரியும் ஏதோ ஒரு நம்பிக்கையை மனதில் எண்ணியவாறு ஆயுதமோதலின் போது எங்களை விட்டுப்பிரிந்த எமது சக பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எங்கள் சகோதரர்கள் ஒவ்வொருவரையும் மனதில் எண்ணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தித்து நிற்கின்றோம்.

ஆயுதமோதலும் அதனோடு இணைந்த எண்ணற்ற மரணங்களும் நடந்து முடிந்து இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. இருப்பினும் நினைத்துப் பார்க்க முடியாத அந்த இறுதி நாட்களும் நேரங்களும் இப்பொழுதும் மனதில் ஊசலாடுகின்றன. எப்பொழுதும் ஊசலாடும்.

வன்னி அவலங்கள் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் நிறைவுற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இன்னமும் முன்னேற்றம் இன்றியும் மீள்நிர்மாணம் செய்யப்படாமலும் உள்ளமை வருத்தத்தையளிக்கின்றது.

ஆயுதமோதலின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் மக்களின் வாழ்வில் உண்மையான மேம்பாட்டையோ, வலுவாதாரத்தையோ உருவாக்கவில்லை மிகப்பெரிய அளவிலான நிதியொதுக்கீடுகளும் அபிவிருத்தித்திட்ட அறிவிப்புக்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதும் அவைகளின் நன்மைகள் சாதாரண உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையாமை வியப்பளிக்கின்றது.

மாற்றத்தை ஏற்படுத்தாத அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆழந்த கவலைகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுமுக மீள்கட்டுமானத்திற்கான அரசாங்கத்தின் உபாயங்களில் முன்னேற்ற கரமான மாற்றத்தையும் வெளிப்படையான அணுகுமுறையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

கல்வியினை அபிவிருத்தி செய்வதே தமிழினத்தின் உறுதியான ஏமாற்றப்பட முடியாத எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என்பதால் தமிழினத்தின் கல்வி அபிவிருத்தி குறித்து அனைத்து சமூகத்தினருடனும் அக்கறையுடன் செய்பட வேண்டும் என்றும் இதற்காக அனைவரும் ஒன்றிணைந்ததொரு செயற்திட்டத்தினைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றோம்.

தமிழர் பிரதேசங்களில் யுத்தத்தின் வடுக்களாக எஞ்சியுள்ள தாய், தந்தையரை இழந்தோர் விழிப்புலனற்றோர், அங்க அவயவங்களை இழந்தோர் கணவனை,மனைவியை இழந்த குடும்பஸ்தர்கள் பிள்ளைகளை இழந்து தனித்து வாடும் பெற்றோர்கள், முதியோர்கள், உடற்றிறன் அற்றுப்போயிருக்கும் சகோதரர்கள் தொடர்பாகவும் அத்துடன் யுத்தத்தினால் இழந்து போயிருக்கும் கல்வி, வேலைவாய்ப்புக்கள், கடின உழைப்பினால் சம்பாதித்துக் கொண்ட சொத்துக்கள், வாழ்வாதார முலதனங்க்ள். இயற்கை வளங்கள், என்பவற்றின் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய கேள்வியும் சவாலும் எங்கள் முன்னால் விடப்பட்டிருக்கின்றதை ஞாபகப்படுத்துகின்றோம்.

இவற்றின் மீது கவனம் செலுத்தி தேவையான ஆய்வினை மேற்கொண்டு பொருத்தமான செயற்றிட்டங்களை தயாரித்து மீளவும் நம்பிக்கையையும், நல்வாழ்வையும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அழைத்து நிற்கின்றோம். இதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் சார்பில் எங்களின் காத்திரமான பங்கு எப்பொழுதும் இருக்கும் என்பதையும் உறுதிகூறுகின்றோம்.

தமிழினத்தின் சமுகஉறவு, அபிவருத்தி, கீழ்க்கட்டுமானம், என்பவற்றில் புலம்பெயர் சமுகத்தின் முக்கியத்துவத்தை நாம் அதிகம் உணருவதால் அவர்களின் உறுதியான பங்கினை நாம் தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம். இந்தப்பங்களிப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றமையை வரவேற்பதுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் விரிவு படுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நாம் எப்பொழுதும் வரலாற்றின்பால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவே நடந்து கொள்ளவிரும்புகின்றோம். தற்போதைய சூழலில் தமிழினத்தின் அரசியல் தீர்வு மற்றும் உரிமைகள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்டு வரும் சூழல் காணப்படுகின்றது. எது எவ்வாறிருப்பினும் அரசியல்தீர்வு விடயங்களில் கவனம் செலுத்துகின்ற அரசுடன் பேச்சு நடத்துகின்ற தலைவர்கள் மக்களால் தமக்கு வழங்கப்பட்ட ஆணையின் படி தாங்கள் நடப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

அத்துடன் எந்தவொரு அரசியல் தீர்வு தொடர்பாகவும் இறுதித்தீர்வு எட்டப்படுவதற்கு முன்னர் தமிழினத்தின் அனைத்துத் தரப்பினருடனும் திறந்த நிலையிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். அரசியல் தீர்வென்பது இரகசியமானதொன்றாக மேற்கொள்ளப்படுதல் ஆகாது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

சமூகத்தின் மீதான அக்கறை எதிர்காலம் குறிதான சிந்தனையில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினராகிய நாமும் எப்பொழுதும் தெளிவாகவும் பொறுப்புடனும் செயற்படுவோம் என்பதை இந்நாளில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

எங்களுக்கும் சமுகத்திற்கும் இடையிலான தொடர்பாடலையும் ஆக்கபூர்வமான உறவினையும் சேதப்படுத்துவதில் பல்கலைக்கழகத்திற்குள்ளேயும் வெளியிலும் திட்டமிட்டுச் சில சதிகள் செயற்படுகின்றபோதும் இவைகளைக் குறித்து எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்பட்டு சரியான பாதையில் பயணிப்பதை நாம் உறுதி செய்கின்றோம்.

இறுதியாக நாம் ஒன்றுபட்டுச் சிந்திப்பதும் செயலாற்றுவதுமே எமக்குப் பலமும் இன்றியமையாத அவசியமாகவும் உள்ளன. எனவே தமிழினத்தின் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்த வகையில் சமூகவிருத்திக்கானதும் அரசியல் உரிமைகளுக்கானதுமான ஒன்றிணைந்த செயற்பாட்டை முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் அத்தகைய முயற்சிகளுக்கு பல்கலைக்கழக மாணவர் சமுகத்தின் ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்றும் உறுதியெடுத்துக்கொள்கின்றோம். என்றுள்ளது.







Comments