ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவை நோக்கியதே எமது அடுத்த இலக்கு

சிறீலங்காவை ஆட்சி செய்துவரும் சிங்கள பெரும்பான்மை அரசுகள் கடந்த 63 வருடங்களாக மேற்கொண்டுவரும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் உச்ச அவலங்கள் நடைபெற்ற வருடமாக 2009 ஆம் ஆண்டே திகழ்ந்துள்ளது. மே 18 ஆம் நாள் நிறைவடைந்த போரின் இறுதி மாதங்களில் 40,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சியில் 75,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமலும் போயுள்ளதுடன், மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.


வன்னியில் இருந்த மனிதாபிமான அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், ஐ.நா அமைப்புக்களை வெளியேற்றிய சிறீலங்கா அரசு அங்கு சாட்சிகள் அற்ற போரை உயர் தொழில்நுட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் ஆயுதங்களுடன் மேற்கொண்டிருந்தது. ஆனால் அதே உயர்தொழில்நுட்ட ஒளிப்படக் கருவிகள், செய்மதிப்படங்களுடன் சிறீலங்கா அரசின் இனப்படுகொலை உலகளவில் ஆதாரமாக்கப்பட்டுள்ளது.


அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட போர்க்குற்ற ஆலோசனைக்குழு கடந்த மாதம் 25 ஆம் நாள் தனது அறிக்கையை வெளியிட்டிருந்தது.
சிறீலங்கா அரசு மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளையும் அது முன்வைத்துள்ளது.


ஐ.நா அறிக்கைக்கு ஆதரவாக பெரும்பாலான மேற்குலக நாடுகள் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, சுவிஸ், ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றை இங்கு குறிப்பிடலாம். எனினும் தமிழ் மக்களை அதிகளவில் கொண்டுள்ள கனடா மற்றும் அவுஸ்திரேலியா என்பன தொடர்ந்து மௌனம் காண்பித்து வருகின்றன.


இந்தியாவும் தொடர் மௌனம் காத்துவந்தபோதும், கடந்த செவ்வாய்கிழமை (17) அது தனது மௌனத்தை கலைத்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அது கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் இந்த கோரிக்கை சிறீலங்கா அரசுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் கடந்த வருடம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வார்த்தைகளை இந்தியா புறம்தள்ளமுடியாது.


அதாவது இந்தியா தனது பிராந்தியத்தில் தன்னை ஒரு வலுவான ஜனநாயக நாடாக பிரகடனப்படுத்தவேண்டும் எனில் அது அண்டைய நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை தட்டிக்கேட்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பரிசாக ஐ.நா பாதுகாப்புச்சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்பெற்றுத்தர அமெரிக்கா பாடுபடும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், பின்லாடனின் மரணத்தின் பின்னர் கடந்த வாரம் இந்திய பிரதமருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒபாமா, தனது முன்னையை நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது, சீனாவின் பிரசன்னத்தை தடுக்கவேண்டிய நிலையும் இந்தியாவுக்கு உண்டு. மூன்றாவது காரணமாக தமிழக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியானது சிறீலங்கா தொடர்பில் இந்திய மத்திய அரசின் வெளியுறவுக்கொள்கையின் தோல்வியாகவே கருதப்படுகின்றது.


எனவே எதிர்வரும் காலத்தில் தமிழகத்தை காப்பாற்றவேண்டும் எனில் சிறீலங்கா அரசின் இனஅழிப்பை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய தேவை இந்திய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த காரணிகள் தான் இந்திய அரசின் சிறிய அசைவுக்கு காரணம் எனலாம்.எனினும் ஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு? என்பதே தற்போது எம்முன் உள்ள மிக முக்கிய கேள்வி.


கடந்த 12 ஆம் நாள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஐ.நா அறிக்கை மீதான விவாதம் கொண்டுவரப்பட்டபோதும், அதற்கு ஆதரவாக ஐந்து தீர்மானங்களும், எதிராக ஒரு தீர்மானமும் முன்வைக்கப்பட்டிருந்தன. எதிரான தீர்மானத்தை முன்வைத்தது சிறீலங்கா அரசின் நீண்டகால நண்பரும், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினருமான நிராஜ் தேவா தலைமையிலான குழுவினரே.


அறிக்கைக்கு ஆதரவான தீர்மானத்தை முன்வைத்த ஐரோப்பிய இடதுசாரி முன்னனி, நோர்ட்டிக் கிறீன் இடதுசாரி ஆகியன முதலாவது தீர்மானத்தை பிரஞ்சு மொழியில் முன்வைத்திருந்தன. சமூக மற்றும் ஜனநாயக நிபுணர் கூட்டணி, ஐரோப்பிய மக்கள் கட்சி, ஐரோப்பிய லிபரல் டெமோகிரட் கூட்டணி, ஐரோப்பிய கிறீன் சுதந்திரக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒப்பமிட்டு அறிக்கைக்கு ஆதரவான தமது நான்கு தீர்மானங்களையும் முன்வைத்திருந்தனர்.


மேற்கூறப்பட்ட ஐந்து கட்சிகளும், ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமது தீர்மானத்தில் முன்வைத்திருந்தன. அதற்கு ஆதரவாக அவர்கள் பல காரணங்களை முன்வைத்திருந்தனர்.


இருந்தபோதும், ஐரோப்பிய கொன்சவெட்டிவ் மற்றும் றிபோமிஸ்ட் கட்சியின் சார்பில் நிராஜ் தேவா தலைமையிலான குழுவினர் ஐ.நா அறிக்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்திருந்தனர். தேவா தலைமையிலான குழுவின் அறிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் தீர்மானத்தில் ஒரு மென்தன்மை காணப்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


எனினும், சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான காத்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், ஐ.நா அறிக்கையை வரவேற்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் அடுத்த நகர்வாக ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் தீர்மானம் தான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைப்பதன் மூலம் அதனை மேலும் வலுப்படுத்துவதில் மனித உரிமைகள் ஆணைக்குழவின் தலைவர் நவநீதம்பிள்ளை உறுதியாக உள்ளார்.


அவ்வாறு முன்வைக்கப்பட்டால் அதில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 24 நாடுகளாவது தீர்மானத்திற்கு ஆதரவு தரவேண்டும். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் இருந்தாலும் ஐ.நா பாதுகாப்புச் சபையை போல அவர்களால் வீட்டோ அதிகாரத்தை அங்கு பயன்படுத்த முடியாது. அதற்கு அங்கு இடமில்லை.


இந்த நிலையில் நாம் ஒன்றை கவனிக்கவேண்டும் 2009 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசு தனது படை நடவடிக்கைக்கு ஆதரவான தீர்மானத்தை கொண்டுவந்தபோது அதனை ஆதரித்து அங்கோலா, ஆர்சாபைஜான், பஹரைன், பங்களாதேசம், பொலிவியா, பிரேசில், பேர்கினியா பசொ, கமரூன், சீனா, கியூபா, ஜிபோற்ரி, எகிப்து, கானா, இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மடாகஸ்கர், மலேசியா, நிக்கரகூவா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, செனகல், தென்ஆபிரிக்கா, உருகுவே, சம்பியா ஆகிய 29 நாடுகள் வாக்களித்திருந்தன.


சிறீலங்காவுக்கு எதிராக பொஸ்னியா, ஹெர்சோகோவியா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, சுவிற்சலாந்து, பிரித்தானியா ஆகிய 12 நாடுகள் வாக்களித்திருந்தன.


ஆர்ஜன்ரீனா, கபோன், யப்பான், மொறீசியஸ், கொரியா, உக்ரேன் ஆகிய 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.


தற்போது எமக்கு முன் உள்ள பணி, கடந்த முறை சிறீலங்காவுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் ஒரு 12 நாட்டை எமக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பது தான். இந்த முறை அது சுலபமாகலாம். ஏனெனில் கடந்த முறை ஆபிரிக்க நாடுகள் கூட சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. ஆனால் தற்போது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஐ.நா அறிக்கைக்கு ஆதரவாக விடுத்துள்ள அறிக்கை பல ஆபிரிக்க நாடுகளில் மாற்றத்தை கொண்டுவரலாம்.


1912 ஆம் உருவாக்கப்பட்ட ஆபிரிக்க காங்கிரஸ் ஒரு பேராட்ட அமைப்பாக இருந்ததுடன், தென்னாபிரிக்க அரசிலும் ஒரு முக்கிய கட்சியாகும். அடுத்த கட்ட நடவடிக்கை அரபு நாடுகள் தொடர்பானது. மேலே கவனித்தால், அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான சவுதி அரேபியா கூட கடந்த முறை சிறீலங்காவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இத்தகைய நாடுகளுடன் மேற்குலக நாடுகளின் உதவியுடன் தமிழர் தரப்பு பேச்சுக்களை மேற்கொள்ளலாம்.


அதுமட்டுமல்லாது, சிறீலங்காவுக்கு ஆதரவான நாடுகளுடன் தமிழர் தரப்பும் இந்த நாடுகளுக்கு அனுசரனையுள்ள நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் உதவியுடன் பேச்சுக்களை மேற்கொள்ளலாம். எதிர்வரும் 31 ஆம் நாள் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானம் முன்வைக்கப்பட்டால் அதனை நிறைவேற்றவேண்டிய முக்கிய பொறுப்பு ஒன்று புலம்பெயர் தமிழ் மக்களின் தோள்களில் உள்ளது.


ஐ.நா அறிக்கைக்கு ஆதரவாக பல நாடுகள் அறிக்கையை விடுத்தாலும், அவற்றில் பல நாடுகளை மாற்றுவதற்கு சிறீலங்கா அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. உதாரணமாக நிராஜ் தேவா போன்றவர்கள் சில நாடுகளின் போக்கை மாற்றிவிடலாம்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் அறி;க்கை எமது பக்கம் 27 நாடுகளின் ஆதரவுகளை பெற்றுத்தரும், ஆபிரிக்க காங்கிரசின் அறிக்கை பல ஆபிரிக்க நாடுகளின் ஆதரவுகளை பெற்றுத்தரலாம் மேலும் 2009 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா அரசு முன்வைத்த தீர்மானத்திற்கு எதிராக கனடா வாக்களித்திருந்தது. எனவே மேற்குலகத்தின் நகர்வுக்கு எதிராக அது இயங்காது என நம்பலாம். ஆனால் அவற்றை தொடர்ந்து உறுதிப்படுத்தவேண்டியது எமது கடமையாகின்றது.


மேலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளநிலையில் நாம் எமது பணிகளை விரைவுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். ஏனெனில் ஐ.நா அறிக்கையை உத்தியோகபூர்வமற்றது எனவும், தருஸ்மன் அறிக்கை எனவும் கூறிவரும் சிறீலங்கா அரசுக்கு அதனை உத்தியோகபூர்வமான அறிக்கையாக மாற்றிக் காண்பிக்கவேண்டியது எமது கடமையாகின்றது.


ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டால், அதனை எதிர்க்கும் வலுவை சிறீலங்காவை ஆதரிக்கும் நாடுகள் இழந்துவிடும் என்பதும் இங்கு முக்கியமானது.

– வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நன்றி: ஈழமுரசு.

Comments