"ஒபரேஷன் கொனொக்! புலிகளை முற்றாக அழிக்க முழுச் சதி: அதிரடி ரிப்போர்ட் !



நெதர்லாந்தில் தேசிய செயல்பாட்டாளர்களான இராமச்சந்திரன், மற்றும் சிறிரங்கம் ஆகியோர் கடந்த 13 மாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஆவணங்கள் அடங்கிய 120 பைல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், DVD மற்றும் சீ.டிக்களும் இவர்களிடம் தாம் கைப்பற்றியதாவும் நெதர்லாந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 6,00GB(கிகா பைட்) தரவுகள் கணணிகளில் எடுக்கபப்ட்டு அவற்றை பரிசீலித்துவருகிறது நெதர்லாந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர். தமது நடவடிக்கைக்கு "ஒபரேஷன் கொனொக்" எனப் பெயர் சூட்டி தற்போது அதனை நகர்த்தியும் வருகிறது நெதர்லாந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு. பிரித்தானியா கனடா மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில் இருந்து, தமிழர்கள் போராட்டத்துக்கு கணிசமான பங்குகளை வழங்கியுள்ள நிலையில், நெதர்லாந்து அரசு இது குறித்து தனது கவனத்தை ஏன் திருப்பவேண்டும் ? என்பது பெரும் கேள்விக்குறியாகும். அது மட்டுமல்லாது நாடுகளின் எல்லைகளைக் கடந்துசென்று விசாரிக்கும் அளவுக்கு நெதர்லாந்து அரசுக்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது ?

அதுமட்டுமல்லாது, அவர்கள் இலங்கை சென்று ரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் 13பேரை விசாரிக்க, இலங்கை சட்டமா அதிபர் மொஹான் பீரிஸுடன் அனுமதி கோரியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதுமட்டுமால்லாது அவர்கள் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாபனையும் விசாரிக்கவுள்ளனர் என்ற தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. இவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து நெதர்லாந்து அரசு என்னசெய்ய முயல்கிறது என்று பார்த்தால், தேசியவாதிகளையும், புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் அதன் அங்கத்தவர்களை சர்வதேச ரீதியாக முடக்க முனைகிறது என்பது தெள்ளத்தெளிவாகிறது.

நெதர்லாந்து அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் ? இது இலங்கை அரசின் தூண்டுதலில் நடக்கிறதா என வினவினால், அப்படி இலங்கை விடுத்த கட்டளையை ஏற்று ஒருபோதும் நெதர்லாந்து அரசு செயல்படாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர், ஆனால் நெதர்லாந்து அரசு இதனைத் தாமாகச் செய்யவில்லை என்றும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் ஒரு நாடு திரைமறைவில் செயல்படுகிறதா என்ற சந்தேகங்கள் தற்போது வலுப்பெறுகிறது. நெதர்லாந்துப் பொலிசார் அமெரிக்க சென்று, அமெரிக்க சிறையில் இருக்கும் தமிழ் கைதியான பிரதீபன் அவர்களையும் விசாரிக்கவுள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சி தரும் விடையமாக உள்ளது. பிரதீபன் அவர்கள் தாம் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டு தண்டனையைப் பெற்றவர் ஆவார். அவர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

நினைத்துப்பார்க்க முடியாத அளவு பலமாகவும், கடற்புலிகள், வான்படை, மரபுவழி இராணுவம் என அனைத்து வளங்களைக் கொண்ட விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு, திட்டம் தீட்டிக்கொடுத்ததோடு மட்டுமல்லாது, அவர்களின் அழிவிற்கு வழிகோலி, பல சூழ்ச்சிகளைச் செய்த பல நாடுகள் பட்டியலில் இருக்கின்றனர். ஆனால் அவைகளில் ஒரு நாடு நெதர்லாந்து அரசினூடாக தனது செயல்பாடுகளை முடிக்கிவிட்டுள்ளது. தான் நேரடியாக இதில் தலையிடாது நெதர்லாந்து அரசு ஊடாக இதனைச் சாதிக்க நினைக்கிறது அந்த மர்ம நாடு. இலங்கையில் எவ்வாறு புலிகள் இயக்கத்தை செயலிழக்கச் செய்தார்களோ அதேபோல வெளிநாடுகளிலும் உள்ள வலையமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையில் தற்போது நெதர்லாந்து அரசு இறங்கியுள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால் அறிவிக்கப்படாத, ஒரு பனிப்போரை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது நெதர்லாந்து அரசு.

தமிழர்களுக்கு மத்தியில் பாரிய சூழ்ச்சி வலை ஒன்று பின்னப்பட்டு, பல முனைத் தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளது. ஒரு புறம் புலிகளையும் மக்களையும் அன்னியப்படுத்தும் நடவடிக்கையும், மறு புறம் தேசிய செயல்பாட்டாளர்களைக் கைதுசெய்து அல்லது அச்சுறுத்தி முடக்குவதும், புலிகளின் வலைப்பின்னலை இல்லாதொழித்தும், திரும்பவும் ஒரு போராட்டம் ஏற்படாத வகையில் நிதி சேகரிப்பை தடுக்கும் நடவடிக்கைகளும் நன்கு திட்டமிடப்பட்டு ஆரம்பமாகியுள்ளது. இதனை எல்லாம் புலம்பெயர் நாடுகளில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ள இலங்கை அரசால் நிச்சயம் முடியாது என்பது யாவரும் அறிந்த விடையம். அதற்கான பாரிய வளம் இலங்கையிடம் இல்லை.

புலிகள் போரில் தோற்றனரா ? எப்படி நடந்திருக்கும் ? எவ்வாறு அழிக்கப்பட்டனர் ? புலம்பெயர் நாடுகளில் ஏன் இவ்வளவு குழப்பம் காணப்படுகிறது ? ஏன் குழு குழுவாக பிரிந்து நிற்கிறாகள் ? என்று எம்மில் பலர் நினைப்பது உண்டு. அதற்கான விடைகள் இப்போது கிடைத்திருக்கும் என நாம் நம்புகிறோம் !

அதிர்வின் ஆசிரியபீடம்.

Comments