பறிபோகும் தமிழர் நிலங்களில் கைத்தொழில் பேட்டை!

தமிழீழ தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் நாளாந்தம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றமை தொடர்கதையாகத் தொடர்ந்து செல்கின்றது. தாயகத்தின் வன்னி மண்ணில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அவலநிலை மேலும் மேலும் கேட்க நாதியற்று தொடர்கிறது. மக்கள் இறுதியாக மீளாத் துயில்கொள்ளும் மயான பூமியைக்கூட கொடுங்கோல் படையினர் தம்வசப்படுத்திவைத்துள்ளமை உலகில் எங்குமே இல்லாத கொடுமை.

யாழ்ப்பாணம் கண்டி வீதியில் ஏ-9 நெடுஞ்சாலையில் முறிகண்டிப் பகுதியில் இறுதியுத்தத்திற்கு முன் 375 குடும்பங்கள் இருந்தன. ஆனால், தற்போது 254 குடும்பங்கள்மாத்திரமேமீள் குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. ஏனைய 120 குடும்பங்களும் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.

முறிகண்டிக்கு கிழக்கு பகுதியிலேயே மக்கள் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பேரிலேயே தமிழர் தாயகப் பகுதிகள் சூறையாடப்பட்டுள்ளன.

இதேவேளை இங்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் பலவாறான அவலங்களுடனேயே வாழ்க்கை நடாத்துகின்றனர். முக்கியமாக குடிநீர் பெறுவதற்கு மக்கள் சொல்லொணாத்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். காரணம் குடிநீர் பெறும்கிணறுகளை இராணுவத்தினரே அபகரித்துள்ளனர். குடிநீர் பெறுவதற்கு மிகத் தொலைவிற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப் பகுதியில் மீள் குடியேறிய மக்களுக்கு எதுவித உதவிகளும் வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் இந்த பகுதியில் கடமையாற்ற தொண்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்புத் தரப்பு அனுமதி வழங்கவில்லை எனவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அங்குள்ள மயானத்தையும் இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தம்வசப்படுத்தியுள்ளனர். இதனால் இறந்த உடலைக்கூட புதைப்பதற்கு பக்கத்து கிராமத்திற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் அங்குள்ள மக்கள் வாழ்கின்றனர். அதற்கும் நீண்ட தூரத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த உலர் உணவு நிவாரணப் பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் உள்ள பல ஏக்கர் கணக்கான காணித்துண்டுகள் ‘கைத்தொழில் பேட்டை’ என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு வருவதாக காணிகளை இழந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோநோதாரலிங்கம் ஆகியோரிடம், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரும் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள பெருமளவிலான காணிகள் அபகரிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்காணியில் பல வருடங்களாகக் குடியிருந்து வரும் மக்களின் காணிகள் கைத்தொழில்பேட்டை என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு வரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.


குறித்த காணிகளில் உள்ள வீடு மற்றும் மதில் என்பன மட்டமாக்கி காணியை அபகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களால் இராணுவத்தினருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது எமது குடியிருப்பு காணிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘கைத்தொழில் பேட்டை’ என்ற பெயறில் அமைச்சர் தனககுத் தேவையானவர்களை குடியமர்த்தவுள்ளமை தெரியவந்துள்ளது.

முஸ்லிம் மக்களினால் 1990ம் ஆண்டிற்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட காணித்துண்டுகளை நாம் பல இலட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி வீடுகளை கட்டி வாழ்ந்து வரும் நிலையில் எங்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் நிலை தற்போது அமைச்சரினால்ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் மக்களினால் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ள பல காணிகள் அமைச்சரினால் `கைத்தொழில் பேட்டை`என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு வருகின்றது. எனவே இச் செயற்பாட்டினை சிறீலங்கா ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்களால் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே தமிழர் தாயகப் பகுதி எங்கும் தமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்களத்தால் திட்டமிட்டு சூறையாடப்படுகின்றன. அதற்கு தமிழ் பேசும் அமைச்சர்களும் துணைபோவது கொடுமையிலும் கொடுமை.

`நடந்து வந்த பாதை தன்னைத் திரும்பிப் பாரடா
நீ நாசவேலை செய்த பின்பு வருந்துவாயடா....`

என்ற தாயகப் பாடல் ஒன்று நினைவுக்குவருகின்றது.
சூறையாடல்கள் தொடரும்........

Comments