போராட்டத்தை தாங்கிநின்ற நாமே அதன் அழிவிற்கு காரணமாகலாமா?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியான காலகட்டமானாலும் சரி துரோகங்களினால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட போதும் சரி வல்லரசுகளின் ஒருதலைப்பட்சமான சிங்களத்தை அரவணைக்கும் போக்கினால் பாரிய தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்தித்து

நின்ற போதும் சரி தலைவனின் நம்பிக்கையை உயிரூட்டி விடுதலை நெருப்பை அணையாது காத்துநின்றது புலம்பெயர் தமிழர்களது அளப்பரிய பங்களிப்புத்தான் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

இதனை தமிழீழத் தேசியத் தலைவர் கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக எடுத்துக் கூறிவந்துள்ளார். களத்திலே புலிகள் படைபெற்ற வெற்றிகளின் பின்பலமாக புலம்பெயர் வாழ் உறவுகள் இருந்தமை சிங்கள அன்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலைபெற்று எமது தாயகமண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகத்தானே. அன்றி தனிப்பட்ட ஒருசிலரது பொருளாதார நிலையினை வளப்படுத்துவதற்கோ அல்லது அவர்கள் சார்ந்தவர்களது வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகவோ இல்லையே.

விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்ப காலம் தொட்டு புலத்தில் உள்ளவர்கள் நிதிப்பங்களிப்பினை அதுவும் மனமுவந்து செய்துவந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்னரான காலப்பகுதியில் வேகம்பெற்றுள்ள அனைத்துலக நாடுகளின் நெருக்கடிகள் தற்போது சூடுபிடித்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்வது பெரும் அச்சுறுத்தலாகும்.

வலிந்து கட்டாயப்படுத்தி நிதி சேகரித்தார்கள் என்று குற்றம் சாட்டும் வெளிநாட்டு அரசுகளுக்கு எம்மவர்களும் ஒத்துழைப்புக் கொடுத்துவருவதுதான் ஏன் என்று விளங்கவில்லை? நீங்கள் ஒருதடவை சிந்தித்துப் பாருங்கள் உறவுகளே!

மாவீரர் நாள் நிகழ்வு உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் தேசிய நினைவெழுச்சி நாட்களிலும் விசேட நிகழ்வுகளின் போதும் நீங்கள் உணர்வுப் பெருக்கோடு நிதி உதவிகளையும் பொருள் உதவிகளையும் வாரிவழங்கியமை வற்புறுத்தலின் பேரிலா…?

அப்படி என்றால் எமது பாரம்பரியத்தின் படி போற்றி பாதுகாக்கும் மாங்கல்யத்தை கூட கழற்றிக் கொடுத்தீர்களே அது எப்படி…? புத்தம் புதிய விலை உயர்ந்த காரில் நிகழ்விற்கு சென்றுவிட்டு தாயக மண்மீட்பு போரிற்கான பங்களிப்பாக அந்த காரையே உவந்தளித்து கார் சாவியை ஒப்படைத்து திரும்பினீர்களே அது எப்படி…? எமது இனத்தின் விடுதலை ஒன்றையே அதிமுக்கியமானதாக கருதி தேசியத்தலைவர் ஒருவரை சாட்சியாக்கி மாவீரர்களது ஒப்பற்ற தியாகத்தின் அடித்தளத்தில்தானே இது போன்ற எண்ணற்ற பங்களிப்பினை செய்தீர்கள்.

இன்று வசைபாடுபவர்களின் கூற்றிற்கு வலுச்சேர்ப்பது போன்று எமது புலத்து உறவுகள் சிலர் எதிர்களம் கண்டுவருவது ஈடுசெய்ய முடியாத வலியை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் வழங்கும் ஒவ்வொரு சாட்சியமும் எமது விடுதலைப் போராட்டத்தை மீள முடியாத இக்கட்டிற்குள் கொண்டு செல்லும் என்பதனை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

முள்ளிவாய்க்கால் துயர் ஏற்படும் வரை எல்லாமே நன்றாக நடந்தவை என்பதும் அதற்கு பின்னரான தேசநலனை முன்னிலைப்படுத்தி தலைவரது வெளிப்பாடு அற்று இருக்கும் இன்றுவரையான காலத்தில்தான் இந்த குழப்பமும் குளறுபடிகளும் என்பதும் எமது உறவுகளுக்கு தெரியாமல் இல்லை.

தாயக மண்மீட்பிற்காக வழங்கப்பட்ட நிதியானது குறிப்பிட்ட ஒருசிலரது கைகளில் இருந்து தலைமைக்கு கைமாற்றப்படவில்லை… நிதி சேகரிக்கும் பொறுப்பில் இருந்த சிலர் மாடமாளிகைகளிற்கு அதிபதிகளாக இருக்கின்றனர்… என்ற பல உறுதிப்படுத்தப்படாத சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களால் குழம்பிப்போயிருக்கும் எமது உறவுகளிற்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விளைகின்றோம்.

முற்பட்ட காலத்தில் ஒரு ரூபாய் கணக்கிற்கும் எப்படி கட்டுக்கோப்புடன் கணக்கு வழக்குகள் இருந்தது என்பது நீங்கள் அறவிர்கள். முள்ளிவாய்க்கால் துயரானது தமிழர்களிற்கு அழிவைமட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அனைத்துக் கட்டமைப்பிலும் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

அவ்வாறு சிதைக்கப்பட்ட கட்டமைப்புகளில் ஒன்றாக புலம்பெயர் செயற்பாட்டுகளமும் அமைந்திருந்தது. அது இன்றுவரை மீளமுடியாத பின்னடைவிற்குள் அகப்பட்டு நிற்பதன் வெளிப்பாடுதான் அனைத்துலக நாடுகள் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட கைது நடவடிக்கைகளும் அதனை வலுப்படுத்துவதுபோன்று எம்மவர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சில அற்பத்தனமான செயற்பாடுகளும் உணர்த்தி நிற்கின்றது.

இதற்கு தற்போது தேசியத் தலைமை தேச நலனை கருத்தில் கொண்டு வெளிப்படாது இருப்பதுதான் இந்த குழப்பவாதிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து குழப்பங்களுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வெளிப்படும் அந்த சந்தர்ப்பமே விடையளிக்கும். அதுவரை உறவுகளே உங்கள் உள்ளக் குமுறல்களையும் வேதனைகளையும் உள்ளத்தே அடக்கி அமைதிகாக்க வேண்டும் என அன்போடும் உரிமையோடும் கோட்டுக் கொள்கின்றோம்.

நாங்கள் பிளவுபடுவது எமது இனத்தின் விடுதலையை பலவீனப்படுத்தும் என்பத்துடன் எதிரிகள் வகுக்கும் திட்டம் வெற்றிபெறவே வழியேற்படுத்தும் என்பதனையும் உணர்ந்து கொள்ளுங்கள். தற்போது நடைபெற்றுவரும் செயற்பாட்டாளர்களது கைது நடவடிக்கைகள் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட பாதையில் நகர்வதையும் குறிக்கப்பட்ட அணியை இலக்குவைத்து செயற்படுத்தப்பட்டு வருவதும் அது இறுதி இலக்கினை அன்மித்துவிட்டதனையும் எமது அன்பு உறவுகள் உணர்ந்து கொண்டு விழிப்படைய வேண்டும்.

அமெரிக்கா, இத்தாலி, பிரான்சு, நெதர்லாந்து, யேர்மனி, சுவிஸ் என நகர்ந்து சென்ற இந்த நாசகாரதிட்டம் தற்போது நோர்வேயில் கால்பதித்து இறுதி இலக்கினை எட்டி தமிழீழ விடுதலைப் பயணப்பாதையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்த காத்திருக்கின்றது.

சில நாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள செயற்பாட்டாளர்கள் விசாரணையின் பின்னர் விடுவக்கப்பட்ட போதிலும் யேர்மனி நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சர்வதேச நாடுகள் கைது வேட்டையினை தொடர்ந்து வருகையில் எட்டுக்கால் பாய்ச்சலில் சிறிலங்கா சென்று இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் கே.பி.உள்ளிட்ட முக்கிய போராளிகளை விசாரணை செய்ய உள்ளதாகவும் அதற்கு சிறிலங்கா அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் வெளிவரும் தகவல்களே பெரும் அனர்த்தம் விளைய இருப்பதாக அச்சமூட்டுகின்றது.

நாசகார சக்திகளால் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படும் கே.பி.

கே.பி. என்பவர் தொடர்பான நிலை சிறு குழந்தைக்கும் விளங்கும் வகையில் இருக்கின்றது. அதாவது முற்றுமுழுதாக சிறிலங்கா அரச பீடத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்பட்டுவரும் கே.பி. சுயமாக எந்தவிதமான கருத்துக்களையோ தகவல்களையோ சொல்ல முடியாது என்பது எமது சிறு குழந்தைகளிற்கு கூட தெரிந்த யதார்த்தமாக இருக்கையில் மீண்டும் கே.பி. முன்னிலைப்படுத்தப் படுவதானது பல்வேறு ஐய்யப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்தியாவின் வட இந்திய ஊடகம் ஒன்று கே.பி.யை சந்தித்து சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து கேள்விகேட்டு வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்திய சிறிலங்கா புலனாய்வு அமைப்புக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னால் பாரதப் பிரதமர் இராசீவ்காந்தி மரணம் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்றிருக்கும் இந்த நேர்காணல் போகிற போக்கில் தமிழக முதல்வர் செல்வி.செயலலிதா அவர்கள் மீது புலிகள் கொலைவெறியுடன் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளமை இந்த பின்னணி தொடர்பான தகவல்களை உறுதிசெய்கின்றது.

முன்னால் பாரதப் பிரதமர் இராசீவ்காந்தி அவர்களது மரணம் இன்றுவரை சரியான பாதையில் விசாரிக்கப்படாது தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டவேண்டும் என்ற ஒரே நோக்கோடு முடிவுரை எழுதிவிட்டு அதற்கேற்ப சோடனை செய்யப்பட்ட முடிவுகளே உலகின் முன் திணிக்கப்பட்டுள்ளது. இதன் பின் வல்லரசுகளின் சதிவிளையாட்டு இருப்பதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளிற்கு இன்றுவரை விடைகான இராசீவ் குடும்பம் முற்பட்டதாக தெரியவில்லை.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இக் குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்தும் விதமாகவே அவர்களது நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழரிற்கு இழைத்த துரோகத்திற்கு பலனாக படுதோல்வியை சந்தித்திருந்தது காங்கிரசு கட்சி.

இந்த மீளாத்தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாது திசைதிருப்பி திருப்த்திப்பட்டுக் கொள்ள முனைந்துள்ளது சோனியா தலைமை. முதலில் விடுதலைப்புலிகள் தலைமை சார்பில் பதிலளிப்பதற்கு இந்த கே.பி. யார்? இந்த அதிமுக்கிய விடயத்திற்கு பதிலளிப்பதற்கு யார் இவரிற்கு அதிகாரம் அளித்தது? தானாக தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதாக அறிவித்தால் போதுமா? இது என்ன மன்னாரன் கம்பனி தலைமைப் பொறுப்பா யார் வேண்டுமென்றாலும் தலைமையேற்க.

நெதர்லாந்து விசேட விசாரணையாளர்கள் குழு சிறிலங்கா வந்து கே.பி. உள்ளிட்ட பதின்மூன்று முக்கிய விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களிடம் விசாரணை நடாத்த அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை எற்றுக் கொண்டுள்ள சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது. அத்துடன் கே.பி. உள்ளிட்டவர்களிற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தொடர்பான முக்கிய தகவல்களை விசேட விசாரணை குழுவிடம் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளமை நாம் அச்சப்பட்டதை உறுதிப்படுத்துகின்றது.

அதைவிடுத்து மீண்டும் கே.பி.யை சர்வதேச காவல்துறையினரால் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்து தமது நோக்கத்தை தெளிவாக உணர்த்தியுள்ளனர் இந்த நாசகாரத் திட்டத்தின் பின்நின்று செயற்படுபவர்கள். சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருக்கும் சில தளபதிகள் முக்கியஸ்தர்கள் போராளிகளை விசாரணை செய்தும் கே.பி.யை கைது செய்வது போன்று கைது செய்து ஜக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவினரது அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக் கொள்ளவைத்து இதே போன்றதொரு பரபரப்பு நேர்காணலை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவர்கள் அத்தோடு நின்றால் பறவாயில்லை. புலம்பெயர் தமிழர்களை தற்போது வழிநடாத்தி அறவழியில் போராடிவரும் செயற்பாட்டாளர்கள் மீதும் வீண் பழிகளைசுமத்தி சிறைக்கம்பிகளின் பின்னால் தள்ளி புலம்பெயர் தமிழர்களை நாதியற்றவர்களாக ஆக்குவதற்கும் முற்படுவார்கள்.

தற்போது நடைபெற்றுவரும் செயற்பாட்டாளர்களது கைது நடவடிக்கையால் ஆடிப்போயிருக்கும் புலம்பெயர் தமிழர்களை முற்றாக பலவீனப்படுத்தி தாம் விரும்பும் போலியான தலைமையினை உருவாக்கி உப்புச்சப்பற்ற தீர்வை தமிழர் தலையில் கட்டிவிட இந்த சக்திகள் விரும்பலாம்.

முள்ளிவாய்க்காலில் எமது மக்களோடு விடுதலைப்போராட்டமும் பாரிய அழிவைச் சந்தித்தது. அதன் பின்னர் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட உலகத் தமிழினம் சில காலம் தேசியத் தலைமையின் இருப்புத் தொடர்பான வாதப் பிரதிவாதங்களில் காலத்தை வீணடித்து வந்த நிலையில் இப்போதுதான் அவற்றை புறந்தள்ளிவிட்டு இனத்தின் நிரந்தர விடியலை நோக்கிப் பயணப்பட எத்தணிக்க முற்பட்டது கண்டு கதிகலங்கி நிற்கின்றனர் எதிரிகளும் துரோகிகளும்.

இந்த மீள்எழுச்சியை தடுத்து மீண்டும் எம்மை வீழ்த்துவதற்காகத்தான் இந்த நாசகார சதித் திட்டம் உருவாக்கப்பட்டு அவசரகதியில் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது.

தாயக விடுதலைக்காக நீங்கள் ஒவ்வொருவரும் செய்த பங்களிப்பானது எந்தவித அளவுகோள் கொண்டும் அளந்து விடமுடியாதவை என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ அவ்வளவு தூரம் நாம் இறுதி இலக்கின அடையும்வரை பொறுமைகாக்க வேண்டியது அவசியமானதாகும்.

உங்கள் பணமும் பொருளும் திருப்பித்தரப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் பெறப்பட்டதாயின் அது கண்டிப்பாக கிடைக்கும். தொன்னூறுகளில் மண்மீட்பு நிதியாக பத்தாயிரம் ரூபாய் அல்லது ஒரு பவுண் தங்கநகைகள் பெறப்பட்டதும் அதற்கு ஒத்துழைத்து தாயக மக்கள் பணத்தையும் தங்க நகைகளையும் வழங்கி ஒத்துழைத்திருந்தமையும் யாவரும் அறிந்ததே.

அதுகூட அப்போது சிலரால் நகைக்கப்பட்ட விடயமாகும். இவர்கள் எங்கே இதனை திருப்பிக் கொடுக்கப் போகின்றார்கள் என்று. ஆனால் காலம் கடந்தாலும் சமாதானகாலத்தில் அவை மீள்வழங்கப்பட்டிருந்தமையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். குறிப்பாக முன்னர் சொல்லப்பட்டது போல திருப்பி வழங்கப்படும் போது உள்ள பெறுமதியின் அடிப்படையில் இரண்டு மடங்காக திரும்பத்தரப்படும் என்று கூறியதைப் போன்று அத்தனை பேரிற்கும் எவ்வித பாரபட்சமும் இன்றி மூத்தோர் குடிமக்கள் மற்றும் வழங்கப்பட்ட காலத்தின் அடிப்படையிலும் விடுதலை இயக்கத்தால் திருப்பி வழங்கப்பட்டது. இது போன்றதொரு நிகழ்வு உலகின் எந்தவொரு விடுதலை அமைப்பிலும் நடைபெற்றிருக்காது. நடைபெறவும் மாட்டுது.

இந்த மண்மீட்பு நிதி மீளளிப்பு நிகழ்வானது மிகவும் நேர்த்தியாக கட்டம் கட்டமாக வழங்கப்பட்ட விதம் தூற்றியவர்களையும் பழித்தவர்களையும் ஏன் எதிரிகளைக் கூட வியப்பில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய வரலாற்று நெருக்கடியான காலகட்டத்தை எல்லோரும் உணர்ந்து கொண்டு அமைதிகாப்பதே எமது விடுதலைப் போராட்டத்திற்கு உகந்ததாகும். நீங்கள் சாத்திர சம்பிரதாயம் என்று கூறிக் கொண்டு கோயில் குளங்களில் செலவழிக்கும் பணத்தையும் நேத்திக் கடன் என்று சொல்லிக் கொண்டு கோயில் உண்டியல்களை நிரப்பும் பணத்தையும் திரும்ப கிடைக்கும் என்று எதிர்பார்த்தா செய்கிறீர்கள். அல்லது வேண்டியது நிறைவேற வில்லையென்று கடவுளிடம் கோபித்துக் கொள்கிறீர்களா இல்லையே! அதை மறந்துவிட்டு வேறு வேலை பார்க்க தயாராகிவிடுகிறீர்களல்லவா?

அதனை நாங்கள் தப்பு என்று சொல்ல வில்லை. உணர்ந்து கொள்வதற்காகத்தான் இதனை குறிப்பிட வேண்டி வந்தது. இது உங்கள் தனிப்பட்ட விருப்பு. ஆனால் தேச விடுதலைக்காக நீங்கள் மனமுவந்தளித்த பணத்தினை திரும்ப வழங்கக் கூடியவாறான சூழல் தற்போது நிலவுகின்றதா என்பதனை சிந்தித்துப் பாருங்கள் உறவுகளே.

இந்த பணச் சேகரிப்புத்தான் தற்போது புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கு நெருக்கடியாகவும் விடுதலைப்போரை இக்கட்டுக்குள்ளும் தள்ளியுள்ளது. இந்த விடையத்தில் எம்மவர்களது சாட்சியமும் ஒப்புதல் வாக்குமூலங்களும்தான் வலுச்சேர்க்கின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் செயற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கு ஆதரவாக பலர் சாட்சியம் வழங்கியுள்ளமை வேதனையாக உள்ளது. தயவு செய்து ஒரு தடவை நின்று நிதாணித்து தாயக விடுதலை ஒன்றையே தமது உயிர் மூச்சாக வரித்துக் கொண்டு வீர வரலாறாகிவிட்ட மாவீரர்களது ஒப்பற்ற தியாகத்தை சிந்தித்துப் பாருங்கள்.

தமிழினம் விடுதலைப் பாதையில் வீறுகொண்டு எழுந்திருக்கின்ற இந்தப் பெருமை மிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உலகத் தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டி நிற்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் உங்கள் தார்மீக கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன்” – 2006 மாவீரர் நாள் உரை.

அறிவுவளம் செயல்வளம் பொருள்வளம் பணவளம் என உங்களிடம் நிறைந்துகிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புகளுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இதே போன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்” – 2007 மாவீரர் நாள் உரை.

இந்த வரலாற்றுச் சூழமைவில் தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன் தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” – 2008 மாவீரர் நாள் உரை.

இவ்வாறு கடந்த காலங்களில் எல்லாம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து உரிமையோடு உதவிகளை பகிரங்கமாக கேட்டு வேண்டிக் கொண்டபோதெல்லாம் இன்று யாரோ சிலதரப்பின் நலனிற்காக சிலிர்ப்பிக் கொண்டு நிற்கும் நாடுகள் என்ன செய்து கொண்டு இருந்தன?

எமது விடுதலை இயக்கம் ஒன்றும் மறைமுகமாக உதவிகளை பெறவில்லை. முழு உலகே ஆவலோடு எதிர்பார்த்து முக்கியத்துவத்தோடு காத்திருந்து கேட்கும் மாவீரர் நாள் உரையின் போதுதானே உலகறிய எமது புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட உதவிகளிற்கு நன்றிதெரிவித்தும் தொடர்ந்தும் இவ்வித உதவிகளையும் ஆதரவையும் வழங்குமாறும் உரிமையோடு கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

தொடர்ந்தும் உங்கள் பிராந்திய உலக நலன்களை முன்னிறுத்தி எமது விடுதலையினை தடுக்க வல்லாதிக்க சக்திகள் முற்படுமாகில் பெரும் தவறிழைத்ததாகவே அமையும். உலக வல்லாதிக்க சக்திகள் தாமாகவே விரும்பி சாட்சியமற்ற மண்ணாக ஈழத்தை ஆக்கிய சிங்களத்தின் முயற்சியை தடுக்காது ஒதுங்கிநின்று முள்ளிவாய்க்கால் பேரழிவை வேடிக்கை பார்த்துவிட்டு இன்று அதற்கு பரிகாரம் தேடமுற்படாது மீண்டும் தமிழர்களிற்கு அநீதி இழைக்க முற்பட்டு நிற்பதானது தலைவர் சொன்னது போன்று ஒட்டு மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

நடைபெற்று முடிந்த போராகட்டும் தற்போது பல்வேறு காரணங்களை முன்வைத்து உலகத்தமிழினத்தை நோக்கி நடாத்தப்பட்டுவரும் போராகட்டும் வெறுமனே புலிகளுக்கு எதிரான போர் அன்று. தமிழினத்திற்கு எதிரான போர். தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர். மொத்தத்தில் இது ஒரு இன அழிப்புப் போர் ஆகும்.

முழு உலகே விழிதிறந்த உறக்க நிலையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க முள்ளிவாய்க்காலில் எமது சொந்தங்கள் கொன்று குவிக்கப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் சிறைப்படுத்தப்பட்டும் முள்வேலிக்குள் சிதைக்ககப்பட்டும் உயிரோடு குழிதோண்டி புதைக்கப்பட்டும் பிணங்களாக சரிந்த பின்னும் சீரழித்தும் சிங்களத்தால் முற்றுமுழுதான இன அழிப்புச் செய்யப்பட்டது.

இதனைத்தானே இன்று நீதிவழங்கும் பொறுப்பை அலங்கரித்துவரும் நாடுகளும் உலகமகா சபையான ஜக்கிய நாடுகள் சபையும் செய்துவருகின்றன. உலகத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி சொல்ல வேண்டிய இந்த உலகநாடுகள் மீண்டும் பிராந்திய உலக நலன் சார்ந்த சகதிக்குள் புரண்டெழுந்து தமிழினத்தின் விடுதலையினை தரமறுக்கின்றமையானது தமிழினத்திற்கு தானாகவே தனது தலையெழுத்தை தீர்மாணிக்கும் வரலாற்றுப் பொறுப்பை வழங்கும் என்ற வரலாற்றுப் புறநிலையினையும் இவர்கள் உணர்ந்து கொள்ளத்தலைப்பட வேண்டும்.

thalaivarஇல்லையேல் இதுகாலம் வரை உலகம் கண்டிராத பேரழிவுடன் உலகத் தமிழர்களிற்கான எக்காலமும் அசைக்க முடியாத தனியரசாக தனித்தமிழீழத் தனியரசை அமைக்க நாம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் அணிசேருவோம்.

உலகத் தமிழினமே நீ துவண்டு போய் விடலாமா!?
இல்லை அணிமாறி இனத்தை வீழ்த்த கருவியாகலாமா!?
நாம் ஆண்டபரம்பரை இதற்கெல்லாம் கலங்கி நிற்கலாமா!?
இல்லை! இல்லை! நம் கதை முடியவில்லை என்று முழங்கி நில்லடா…!

வருவோம் நாம் விரைந்து வருவோம் புயலாக எழுந்து வருவோம்.
எழுவோம் நாம் எழுவோம் ஏழுகடல் தாண்டி எழுவோம்.
கதைமுடிக்க பகைமுடிக்க கருவேங்கைகளாக நாம் பாய்ந்தோடி வருவோம்.
தமிழீழம் அது சாத்தியமா என்று விவாதமா…? வேண்டவே வேண்டாம்.
தமிழீழத் தனியரசு அது வரலாறு தீர்மாணித்த சூரியக் குழந்தை.


“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(28-05-2011)

ஈழ அதிர்வுகள் தொடர்பாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்க athirvalaikal@hotmail.com athirvalaikal@hotmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

Comments