நெதர்லாந்து நீதிமன்றின் விடுதலைப்புலிகள் மீதான விசாரணை - நெதர்லாந்து வானொலி

2009 வரை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினரால் தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள இவர்களுடன் தொடர்புபட்ட விடுதலைப் புலிகளின் ஆவணங்களை சிறிலங்கா அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நெதர்லாந்து விசாரணைக் குழு ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு Radio Netherlands Worldwide - RNW தனது இணையத்தளத்தில் விடுதலைப் புலிகள் விசாரணபற்றி எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. நெதர்லாந்து நீதிமன்றின் விசாரணை விபரங்களின் முதல்பகுதியை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன் விபரமாவது,

கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறிலங்காவில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இரத்தம் சிந்தும் போரானது, மே17, 2009 அன்று பெரும்பான்மைச் சிங்கள இராணுவத்தினை கொண்ட ஆட்சியாளரால் தோற்கடிக்கப்பட்டது. இதற்கு அடுத்த நாள், நோயாளர் காவு வாகனம் ஒன்றின் உதவியுடன் யுத்தகளத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற புலிகள் அமைப்பின் தலைவரும் நிறுவனருமான வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார்.

அதேவேளையில், இந்த சண்டைக்களத்திலிருந்து வடக்காக சில 8300 கிலோ மீற்றர்களுக்கும் அப்பால், அதாவது நெதர்லாந்தின் நகரங்களான Schagen, The Hague, Breda, Zeist, Raalte ,Ammerzoden போன்ற இடங்களில் உள்ள புலிகளின் பிரதிநிதிகள் இன்னமும் தமது போராட்டத்தைக் கைவிடவில்லை.

தமிழர்களுக்கான தாய்நிலத்தை மீட்டெடுப்பதற்கான அவர்களது போராட்டம் இன்னமும் தொடர்கிறது. 2010ல் நெதர்லாந்தில் பல தமிழர்கள் கைது செய்யப்படும் வரைக்கும், தமது தாய்நாட்டை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நிதி சேகரிப்பு மற்றும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றில் தமிழ் மக்கள் ஈடுபட்டதாக நெதர்லாந்துக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்ட Schagen நகரைச் சேர்ந்த 52 வயதுடைய நெதர்லாந்துத் தமிழரான ராமச்சந்திரன் மூலம் இத்தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சிறிலங்காவின் வட பகுதிக் காடுகளில் மறைந்து வாழும் எஞ்சியுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் இவர் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் எனவும், இவரின் கண்காணிப்பின் கீழ் நிதி சேகரிப்புக்கான புதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டதாகவும் நெதர்லாந்துக் காவற்துறையினரின் விசாரணை அறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து நெதர்லாந்திலுள்ள புலிகளால் சட்டத்திற்கு முரணாண செயற்பாடுகள் தெரிய வந்துள்ளன. இது வரை இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட 38 தமிழர்களும், சட்டத்துக்குட்பட்ட ஐந்து அமைப்புக்களும் நெதர்லாந்தின் குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் நிதி சார் ஆதரவுகளை வழங்கியமை மற்றும் குற்றவியல் அமைப்பின் செயற்பாடுகளில் பங்கெடுத்தமை போன்ற காரணங்களுக்காக சந்தேகிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய சமூகத்தில் உள்ள நாடுகளின் பயங்கரவாதிகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சேர்க்கப்பட்டிருந்தது. அத்துடன் நீதித்துறையினர் சுட்டிக்காட்டுவது போல், சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு.

இந்த அமைப்பானது குறிப்பிடத்தக்க சில குண்டுத்தாக்குதல்களையும், கொலைகளையும் மேற்கொண்டிருந்தது. குறிப்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி 1991 ல் புலிகளால் கொல்லப்பட்டு இரு ஆண்டுகளுக்குப் பிற்பாடு சிறிலங்காவின் அதிபராக இருந்த றணசிங்க பிரேமதாசா கொல்லப்பட்டார். சிறுவர்களை ஆட்சேர்த்தல் என்ற குற்றச்சாட்டு புலிகளிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையாலும் UNICEF ஆலும் முன்வைக்கப்பட்டது.

நீதிமன்ற கூற்றின்படி, 13 மாதங்களாகத் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு நெதர்லாந்துத் தமிழர்களில் ஒருவரான ராமச்சந்திரன், புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தலைவர்களில் ஒருவராவர். அத்துடன், நெதர்லாந்தில் சேகரிக்கப்பட்டு ஆயுதக் கொள்வனவுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பெருந் தொகையான நிதி நடவடிக்கைகளுக்கும் ராமச்சந்திரனே பொறுப்பாவார்.

அதற்கும் மேலாக, 136மில்லியன் யூரோக்களுக்கு வரையில் இவரால் கையாளப்பட்டுள்ளதாக ராமச்சந்திரனின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட USB யிலிருந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு நெதர்லாந்தின் வரிவாய்ப்புத் துறையின் ஆராய்ச்சி அமைப்பான Fiod ன் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இவரே சேகரிக்கப்படும் நிதியைக் கையாள்வதாக நெதர்லாந்து அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ஆயுதக் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும் நாடுகளுக்கு அனுப்பப்படும் நிதியுடன் அதற்கான தகவல்களும் அனுப்பப்படுகின்றன. இதற்கான நிதி பண வடிவில் அனுப்பப்படுவதுடன் சில நேரங்களில் புலிகளது நடவடிக்கைகளுக்காகச் சேகரிக்கப்படும் நிதியில் தங்க ஆபரணங்கள் வாங்கப்பட்டு பின் அவை தேவையான இடங்களில் மீளப் பணமாக மாற்றப்படுகின்றன.

இதற்காகக் கையாளப்படுகின்ற நிதி தொடர்பான பதிவு ஆவணங்கள் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுகின்றன. இதில் போக்குவரத்துச் செலவுகள் கூட பதியப்பட்டுள்ளன. சந்தேகிக்கப்படும் இரு பிரதான நபர்களினால் விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்ட சம்பளக் கொடுப்பனவு மற்றும் வாடகை, காப்புறுதி போன்றவற்றுக்காக வழங்கப்பட்ட நிதி போன்ற விபரங்களும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இன்னொரு நபரான 46 வயதான Hague நகரைச் சேர்ந்த சிறிறங்கம் என்ற நெதர்லாந்துத் தமிழர், புலிகளின் நெதர்லாந்துப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஏனைய சந்தேக நபர்கள் போன்று இவரும் சிறிலங்காவிலிருந்து நெதர்லாந்திற்குப் புலம் பெயர்ந்தவர் ஆவார். புலிகள் அமைப்புக்கான நிதி சேகரிப்பு மற்றும் பரப்புரை நடவடிக்கைகள் உள்ளடங்களலாக குறிப்பிடத்தக்க சில செயற்பாடுகளுக்கு இவர் பொறுப்பாக இருந்திருக்கலாம் என நெதர்லாந்து நீதித்துறையால் சந்தேகிக்கப்படுகிறது.

2009 வரை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினரால் தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள இவர்களுடன் தொடர்புபட்ட விடுதலைப் புலிகளின் ஆவணங்களை சிறிலங்கா அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நெதர்லாந்து விசாரணைக் குழு ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த ஆவணங்களில், நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பேர்க் போன்ற இடங்களில் புலிகளிற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தான் பொறுப்பு என 2003ல் ராமச்சந்திரனால் நிரப்பப்பட்டுள்ள படிவம் ஒன்றும் உள்ளது. 1989ம் ஆண்டிலிருந்து தான் புலிகளின் அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக நாடுகளில் பணியாற்றும் புலிகளின் பிரதிநிதிகள், வன்னியில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட போது இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது.

"யுத்த களங்களிற்குச் செல்லும் போதும், யுத்தத்தில் ஈடுபட்ட வீரர்களைச் சந்திக்கும் போதும் அவர்கள் இந்தப் போரை வெற்றி கொள்வதற்காக தம்மை எவ்வளவு தூரம் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியுள்ளது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இது எம்மை மேலும் உத்வேகம் கொள்ள வைத்தது" என சிறிறங்கம் 2003ல் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக தனது மனவெளிப்பாட்டை எழுதிவைத்துள்ளார். புலி உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இவர்கள் பல ஆண்டுகளாக நெதர்லாந்தில் வாழ்ந்த போதும் டச்சு மொழியை சிறிதளவே பேசுகின்றனர்.

நெதர்லாந்து புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பான Dutch intelligence and security bureau - AIVD ஆல் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதன் பிற்பாடு 2009ல் 'Koninck நடவடிக்கை' ஆரம்பிக்கப்பட்டது. ஏனைய நாடுகளின் புலனாய்வு அமைப்புக்களின் உதவியுடன் AIVD ஆனது விடுதலைப் புலிகளின் அனைத்துலக நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தது.

கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் செயற்பட்ட புலி ஆதரவாளர்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. இதன் விளைவாக, ஒக்ரோபர் 2008ல், நெதர்லாந்தில் செயற்பட்ட புலி ஆதரவுச் செயற்பாடுகளில் ஈடுபட்ட தமிழர்கள் நெதர்லாந்து நீதிமன்றின் முன் கொண்டுவரப்பட்டனர்.

1984ம் ஆண்டிலிருந்து நெதர்லாந்து நாட்டில் புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கை தொடர்வதாக இந்நாட்டின் நீதித்துறை அடையாளம் கண்டுகொண்டது.

நெதர்லாந்து வாழ் 10,000 வரையான தமிழர்களும் விடுதலைப்புலிகள் இரும்புப்பிடிக்குள் சிக்கிக்கொண்டனர். அதாவது நெதர்லாந்து வாழ் தமிழ்க் குடும்பங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டு அவர்களை இலகுவில் அடையாளம் காணத்தக்க வகையில் சிறப்புக் எண்கள் புலிகளால் வழங்கப்பட்டன. அத்துடன் நெதர்லாந்துத் தமிழர்கள் ஒவ்வொருவரதும் வருமானங்களை அறிந்து வைத்ததுடன் அவர்களது வருமானத்திற்கேற்ற வகையில் நிதி செலுத்தப்பட வேண்டிய தொகையும் புலிகளால் வரையறுக்கப்பட்டிருந்தது.

விளையாட்டுப் போட்டிகள், அதிர்ஸ்ட லாபச் சீட்டுக்கள், கண்காட்சிகள் போன்றவற்றின் மூலமும் நிதி திரட்டப்பட்டது. இவற்றைவிட நெதர்லாந்துத் தமிழர்களின் வீடுகள் தோறும் சென்றும் நிதி திரட்டப்பட்டது.

2005ம் ஆண்டிலிருந்து, தனித்தாயகத்தை பெற்றுக் கொள்வதற்கான புலிகளின் 'இறுதிப் போருக்கான' நிதி சேகரிப்பு நடவடிக்கையானது பல நாடுகளில் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. நெதர்லாந்தில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் 2000 யூரோக்களை வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இவ்வாறு நிதியை வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு இலக்கத்தினை தமிழர்களுக்கான தாய்நிலத்தின் எல்லையில் காட்டி உள்நுழைய முடியும் எனவும் கூறப்பட்டது. இதற்கான நுழைவு அனுமதி அட்டையும் வழங்கப்பட்டது. போருக்கான வரி என்ற பெயரில் அறவிடப்பட்ட இந்தப் பணத்தைக் கொடுக்கத் தவறியவர்களின் சிறிலங்காவில் வைத்து தண்டிக்கப்படுவர் என புலிகளின் நெதர்லாந்துப் பிரதிநிதிகளால் அச்சுறுத்தப்பட்டதாக நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நெதர்லாந்தில் பணியாற்றும் புலிகள் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. போருக்கான நிதியை சேகரிப்பதே இந்த ஏழு பிரிவுகளுக்கும் பொறுப்பான தலைவர்களின் கடமையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நிதியை சேகரிப்பதில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - TCC , தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - TRO , தமிழர் இளையோர் அமைப்பு - TYO , தமிழ் பெண்கள் அமைப்பு, தமிழ் நெதர்லாந்து கலை கலாசார அமைப்பு - TKCO போன்ற நிழல் அமைப்புக்களும் புலிகளால் நிறுவப்பட்டிருந்தது.

Comments