அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படைத் தரவுகள்

வெளிவிவகாரக் கொள்கையானது ஒரு நாட்டின் தேசிய நலனை முன்னெடுக்கும் கருவியாக இடம் பெறுகிறது. இந்த நோக்கில் அந்த நாடு பொருத்தமான மூலோபாயங்களையும் சமயாசமயத் தந்திரோபாயங்களையும் தெரிவு செய்கிறது.

தனது வெளிவிவகார இலக்குகளை அடைவதற்கு எந்தவொரு நாடும் சர்வதேச ஒழுங்கிற்குள் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஒழுங்கை மீறாமல் தேசிய நலன் முன்னெடுப்பை மேற்கொள்ளும் போது தடுமாற்றங்களும் ஏமாற்றங்களும் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எந்தவொரு நாடாக இருந்தாலும் அதன் தேசிய நலன் நோக்கத்தில் மாற்றம் என்பது கிடையாது. அதை அடையும் மார்க்கங்களில் மாத்திரம் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தேசிய நலனை அடைவதற்கு நாடுகள் அமைதிவழி ஒத்துழைப்பு, மிரட்டல், சதி, இரகசிய உதவிகள், வெளிப்படையான போர் போன்ற உபாயங்களைக் கைக்கொள்கின்றன.

இதற்காகப் பிற நாடுகள் அல்லது நாடுகள் அல்லாத அமைப்புக்கள் ஆகியவற்றுடன் உறவுகளைப் பேணுதல் அல்லது முறித்தல் போன்ற நடவடிக்கைகளைத் தேசிய நலனைத் தேடும் நாடுகள் முன்னெடுக்கின்றன. வெளிவிவகாரக் கொள்கை உருவாக்கத்தில் இரகசியம் பாதுகாத்தல் அதன் முக்கிய பண்பாக இடம்பெறுகிறது.

தேசிய நலன் வெளிப்படையாகத் தெரிந்தாலும்; வெளிவிவகாரக் கொள்கை எப்படி உருவாக்கப்படுகிறது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாதிருக்கிறது. வெளிவிவகாரக் கொள்கை பற்றிய கற்கைக்கு இது தடங்கலாக இருக்கிறது.

வெளிவிவகாரக் கொள்கை எப்படி உருவாக்கப்படுகிறது அதன் அடிப்படைத் தத்துவங்கள் என்னவென்று எல்லா நாடுகளுக்கும் பொதுவான விதிமுறைகளைப் பட்டியலிட முடியாததைப் பெரும் பின்னடைவாக அரசியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

வெளிவிவகாரக் கொள்கை பற்றிய தமது ஆய்வு நூலில் மெக்கொவன் ஷாப்பிரோ (Mc Gowan Schapiro) ஆகியோர் அதன் இரகசியத் தன்மை காரணமாக உலக நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகளின் தோற்றம், முன்னெடுப்பு, பொது அம்சங்கள், உருவாக்க நெறிகள் பற்றித் திருப்தியான ஒப்பீட்டு நூலைத் தயாரிக்க முடியாதென்று தெரிவித்துள்ளனர்.

நாடுகள் அல்லது நாடு அல்லாத அமைப்புக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்களும் வெளிவிவகாரக் கொள்கை பற்றிய கற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு இந்தக் கற்கை அத்தியாவசியமாகிறது. அமெரிக்க அரசின் வெளிவிவகாரக் கொள்கை உலகில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகின் முதலாவது பொருளாதாரமாக இடம்பெறும் அமெரிக்காவின் பெறுமதி 15 திரில்லியன் (trillion) டாலர்களாகும். இது உலக நாடுகள் அனைத்தின் முழுத்தேசிய வருமானத்தின் (Gdp) கால் பங்காகும்.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைச் செலவினத்தின் பெறுமதி 711 பில்லியன் டாலர்கள். உலக நாடுகள் அனைத்தின் மொத்தப் பாதுபாப்புச் செலவினத்தில் 43 விகிதம் என்று அந்தத் தொகை மதிப்பிடப்படுகிறது.

உலகின் கடற்பாதைகள் அனைத்தையும் அமெரிக்கக் கடற்படை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அமெரிக்கக் கடற்படை கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டபடி உலகை வலம் வந்தபடி இருக்கின்றது. உலகின் மிகப் பெரிய இராணுவக் கூட்டமைப்பான நேற்ரோவை உருவாக்கிய அமெரிக்கா அதை இன்று வரை தலைமை தாங்குகிறது.

பொக்ஸ் நியூஸ் (Fox News)என்ற செய்தி ஊடகம் வெளியிட்ட தகவலின்படி உலகின் 130 நாடுகளில் அமெரிக்கா 700 வரையான முப்படைத் தளங்களை வைத்திருக்கிறது. இது போன்ற இராணுவப் பரப்பல் உலக வரலாற்றில் பிறிதோர் நாட்டிற்கும் இருந்ததில்லை. புதிய தளங்களைத் திறப்பதற்கும் அமெரிக்கா முயற்சி செய்கிறது.

நிதி உதவி வழங்கலை அமெரிக்கா தனது வெளிவிவகாரக் கொள்கை முன்னெடுப்பின் முக்கிய கருவியாகப் பயன்படுத்துகிறது. உலக நாடுகளில் மிகக் கூடுதலான இந்த வகை நிதி வழங்கலை (Foreign Aid) மேற்கொள்ளும் நாடு அமெரிக்கா மாத்திரமே.

2006ம் ஆண்டுத் தரவுகளின்படி அமெரிக்கா உலக நாடுகளுக்கு வழங்கிய உதவித் தொகையின் பெறுமதி 22.7 பில்லியன் டாலர்கள். மொத்தத்; தேசிய வருமானத்தில் மிகச் சிறிய விகிதமாக (2-3) இருந்தாலும் அமெரிக்கா இந்த வழங்கலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

அமெரிக்க முப்படைகளும் நிதிக்கு அடுத்ததாகத் தமது இயக்கத்திற்கு எண்ணையில் தங்கியுள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உலக எண்ணை வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பாரசீக வளைகுடா நாடுகளில் காணப்படுகிறது.

தனது நாட்டிலுள்ள எண்ணைக் கிணறுகளில்; இருந்து அமெரிக்கா தனது மொத்தத் தேவைகளில் 40 விகிதத்தை பெறுகிறது. பாரசீக வளைகுடா நாடுகளிடமிருந்தும் அயல் நாடு கனடாவிடம் இருந்தும் அமெரிக்கா தனது மிகுதி எண்ணைத் தேவையைப் பெறுகிறது.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் “இராணுவம் நிறுத்தப்படாத உலகின் மிக நீளமான இரு நாட்டு எல்லை” காணப்படுகிறது, கனடாவிடமிருந்து அது உற்பத்தி செய்யும் எண்ணை, எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றை அமெரிக்கா கொள்வனவு செய்கிறது.

கனடாவில் முதலீடு செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. வெளியுறவுக் கொள்கை முன்னெடுப்பில் கனடாவும் அமெரிக்காவும் ஒருமித்த கருத்தையும் நோக்கையும் கொண்டிருக்கின்றன. ஐக்கிய இராச்சியத்துடன் அமெரிக்கா ‘விசேட உறவுகளைப்’ பேணுகிறது.

இந்தியக் குடியரசை அமெரிக்கா தனது பங்காளி நாடாக வரித்துள்ளது. விரிவடையும் சீனாவின் வலுவுக்கு மாற்றீடாக இந்தியாவை கட்டியெழுப்பும் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கிறது. நேரடியாகத் தலையிட விரும்பாத விவகாரங்களில் இந்தியாவை ஏவுகருவியாகப் பயன்படுத்தும் கொள்கையை அமெரிக்கா கொண்டிருக்கிறது.

உலகின் ஒரேயொரு அமெரிக்க சார்புக் கொள்கையுடைய விடுதலை அமைப்பான புலிகளை அழிப்பதற்கு அமெரிக்கா இந்தியாவைப் பயன்படுத்தியது. இந்தியாவும் அமெரிக்காவுக்கு இசைவாக நடக்க வேண்டிய தனிப்பட்ட காரணங்கள் இருந்ததால் அதை முழுமனதுடன் நிறைவேற்றியது.

ஒரு கல் மூலம் இரு கனிகளை வீழ்த்தும் இந்திய இலக்கு எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை தமிழ் நாட்டில் தாக்கம் ஏற்படாமல் ஈழத்தமிழர்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கம் படுதோல்வி கண்டுள்ளதோடு எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

புலிகளையும் தமிழர்களையும் இனப் படுகொலை செய்வது மூலம் இலங்கையில் சீனப் பிரசன்னத்தை நிறுத்தலாம் என்ற தந்திரோபாயமும் எதிர்பார்த்த பலனளிக்கவில்லை. இலங்கையைப் பொறுத்தளவில் இந்திய வெளிவிவகாரக் கொள்கை ஸ்தம்பித நிலை அடைந்துள்ளது. இதற்கு மேல் அதனால் நகர்வுகளை மேற்கொள்ள முடியாதிருக்கிறது.

இதனால் அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டிய கட்டாயம் தோன்றிவிட்டது. கிழக்கு திமோரில் விடுதலைப் போரை முன்னெடுத்த பிறெற்றிலின் இயக்கத்திற்குச் சீனா ஆதரவு வழங்கி வெற்றி பெறச் செய்தது. இன்று அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும் கிழக்குத் திமோரில் சீனாவைத் புறந்தள்ளி நிலைகொண்டுள்ளன.

சீனா இதை வரலாற்றுப் பாடமாகக் கொண்டுள்ளது. தெற்கு ஆசியாவில் படைபலம் வலுத்த நாடாக வளரும் நோக்குடைய சிங்கள அரசுக்கு வேண்டிய அனைத்தையும் செய்வதற்குச் சீனா சித்தமாகவிருக்கிறது. இதன் காரணமாகச் சீனாவை வெளியேற்றும் இந்திய மூலோபாயம் மறுபரிசீலனை செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்து மாகடற் பாதையில் அமைந்த இலங்கையில் கால் பதிக்கும் நோக்கம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா தொடர்பான முக்கிய இலக்காக இருக்கிறது.

'அமெரிக்காவால் இலங்கையை இழப்பதற்கு இயலாது’ என்ற கொள்கைப் பிரகடனத்தை டிசெம்பர் 2009ல் அமெரிக்க செனேற் சபை வெளிவிவகாரக் கொமிற்றி அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் தோல்வியை இட்டு நிரப்புவதற்கு அமெரிக்கா களமிறங்கியுள்ளது.

ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கையும் இந்திய மத்திய அரசின் முகத்தில் அறைந்தாற் போன்ற தமிழ்நாடு அரசியல் மாற்றமும் உலகத் தமிழர்களுக்குப் புத்துணர்வை ஊட்டியுள்ளன. இதை மழுங்கடிக்க அமெரிக்கா மேற்குலகிலும் வட அமெரிக்காவிலும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

ஐநா நிபுணர் குழு அறிக்கை குற்றவாளிகளாகச் சுட்டிக்காட்டிய அதிபர் ராஐபக்ச மற்றும் அவருடைய சகோதரர்களைக் காப்பாற்றும் இரகசிய நகர்வுகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் அடிப்படை நோக்கம் இலங்கை மண்ணிலும் நீரிலும் முப்படைத் தளம் அமைப்பது மாத்திரமே.

Comments