நெல்சன் மண்டேலாவின் பொன்மொழியும் – புலம்பெயர் தமிழ் மக்களும்

“செயற்படுத்தி முடிக்கும் வரை சில விடயங்கள் எப்போதும் சாத்தியமற்றதொன்றாகவே காட்சிதருவதுண்டு” –நெல்சன் மண்டேலா.

அண்மையில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது தென்னாபிரிக்காவின் முன்னாள் விடுதலைப்போராளியும், உலகின் புகழ்பெற்ற “த எல்டேர்ஸ்” அமைப்பின் தற்போதைய தலைவருமான நெல்சன் மண்டேலா கூறிய மேற்குறிப்பிட்ட வார்த்தைகள் தான் எனது நினைவில் வருவதுண்டு.

முள்ளிவாய்க்கால் சமரின் முடிவுடன் ஈழத் தமிழ் இனம் அழிந்துபோனது என சிங்களம் கொக்கரித்தபோது தான் அங்கிருந்து பலமான பூகம்பம் ஒன்று கிளம்பியுள்ளது. போரின் போது கூட நிம்மதியாக உறங்கிய சிறீலங்கா அரச தரப்பு தற்போது தூக்கம் இன்றி அலைகின்றது.

1981 ஆம் ஆண்டு யாழ் நகரத்தின் காங்கேசன்துறை வீதியில் வைத்து முதல் முதலாக சிறீலங்கா இராணுவத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்ட விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலனின் கனவு, விடுதலைப்புலிகளின் படையணிகள் யாழ் நகரத்தில் அணிவகுத்து செல்ல வேண்டும். அதனை மக்கள் அன்றாட நிகழ்வாக பார்க்கவேண்டும் என்பது தான்.

சீலன் வீழ்ந்தபோதும், சில வருடங்களில் அவரின் கனவு நினைவாகியது, அதேபோல ஒவ்வொரு விடுதலைப்போராளியின் கனவும் ஒன்றுதான், அதாவது எமது விடுதலைப்போரின் தேவையை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான். அவர்கள் தாங்கள் வாழவேண்டும், அல்லது அதனை பாhக்கவேண்டும் என விரும்பியதில்லை.

முள்ளிவாய்க்காலில் அவர்கள் வீழ்ந்தபோதும், அதற்கான வித்தாகத் தான் வீழ்ந்தார்கள். படை நகர்த்தலில் மட்டுமல்லாது, இராஜதந்திர நடவடிக்கைகளிலும் தமிழ் இனம் மேலோங்கி நிற்கவேண்டும் என்ற எமது போராளிகளின் ஆசைக்கு இன்று புலம்பெயர் தமிழ் சமூகம் வலுச்சேர்த்து வருகின்றது.

ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்துள்ள மூவர் கொண்ட போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கை போரின் கொடுமைகளையும், தமிழ் மக்களின் அரசியல் தேவைகளையும், சிறீலங்கா அரசுகளின் தொடர் இன ஒடுக்குமுறைகளையும் தெளிவாக வெளிக்கொண்டுவந்துள்ளது. இது தமிழ் இனம் சந்தித்த முதலாவது இராஜதந்திர வெற்றி என கூறலாம்.

2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஐ.நா செயலாளர் நாயகம் இந்த குழுவை நியமித்தபோது, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஈழம் ஈ நியூஸ் என்ற இணையத்தளம் பல ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்களிடம் இருந்து இந்த குழு தொடர்பில் சேகரித்து வெளியிட்ட தகவல்களும் சரியான திசையில் கணிப்பிடப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதாவது ஐ.நாவின் குழுவின் வலிமையை சிறீலங்கா உட்பட பல நாடுகள் குறைத்து மதிப்பிட்டபோதும், அது ஏன் அவ்வாறு அமைக்கப்பட்டது, அதன் நோக்கம் என்ன? அது எந்த திசையில் பயணிக்கப்போகின்றது என்பதை தமிழர் தரப்பு சரியாக கணிப்பிட்டிருந்தது.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையின் பின்னனியில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் உள்ளதாகவும், புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளதாகவும் சிறீலங்கா அரசு குற்றம் சுமத்திவருகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக உலக நாடுகளை தனது அணியில் சிறீலங்கா அரசு இணைக்கும்போது, மேற்குலகத்துடன் ஈழத்தமிழ் மக்கள் இணைந்து செயற்படுவதில் தவறு எதுவும் இருக்கப்போவதில்லை.


குறிப்பாக சிறீலங்கா அரசின் அரவணைப்பில் இருந்து மேற்குலகம் புறம்தள்ளப்பட்டதும், ரஸ்யா, சீனா உட்புகுந்து கொண்டதும் தான் தமிழ் இனத்திற்கு கிடைத்த வெற்றியாகும். பலமான நண்பன் ஒருவனை தெரிவுசெய்யும் வாய்ப்பை சிறீலங்கா அரசே எமக்கு விட்டுத்தந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (25) ஐ.நா அதன் அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளது. அதில் காணப்படும் பரிந்துரைகள் தான் மிக முக்கியமானவை. சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், சுயாதீன விசாரணைக்கும் அது கோரிக்கை விடுத்துள்ளது. சுயாதீன விசாரணைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டாலும் கூட அதனை கண்காணிக்க அனைத்துலக நிபுணர் குழு அவசியம் என்பதும் அதில் தெளிவாகக் கூறிப்பிடப்பட்டுள்ளது.


விடுதலைப்புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளபோதும், அவர்கள் முற்றாக அழிந்துபோய்விட்டதாக சிறீலங்கா அரசே உலகத்தை நம்பவைத்துள்ளதால், அவர்கள் மீதான விசாரணைகள் அவசியமற்றதாகவே இருக்கின்றன. அதனை தான் உலகின் முன்னனி மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் நாடுகளின் அறிக்கைகளில் இருந்து நாம் உணர்ந்துகொள்ள முடிகின்றது.


அறிக்கையை பொறுத்தவரையில் நிபுணர் குழுவின் இந்த வலிமையான அறிக்கைக்கான காரணம், அது தன்னிட்சையாக சாட்சியங்களை கோரியபோது, அதற்கு புலம்பெயர் தமிழ் மக்களும், அமைப்புக்களும் வாரி வழங்கிய ஆதாரங்கள் தான். அது மட்டுமல்லாது, உலகின் முக்கிய நாடுகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நகர்வுகளும் அதன் ஒரு காரணம்.

ஆனால் தற்போது எம்மீது மேலும் வலுவான அழுத்தங்கள் வீழ்ந்துள்ளன. ஐ.நாவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் நாம் விரைவாக முன்நகர்த்தவேண்டும். அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை பான் கீ மூன் தன்னிட்சையாக செயற்படுத்த முடியாது. அதனை ஐ.நாவின் பொதுச்சபை, பாதுகாப்புச்சபை அல்லது ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் ஒன்றில் முன்வைப்பதன் மூலம் அதற்கான அங்கீகாரத்தை பெற்றே செயற்படுத்தவேண்டும்.


ஆனால் அதிக உறுப்பு நாடுகளை கொண்ட பொதுச்சபை மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவை விட 15 உறுப்பு நாடுகளை கொண்ட பாதுகாப்புச் சபையே சிறந்த தெரிவாக அமையலாம். எனவே தான் லிபியா பிரச்சனையையும் பாதுகாப்புச் சபை ஊடக அமெரிக்கா நகர்த்தியிருந்தது.

பாதுகாப்புச்சபையில் உள்ள 15 நாடுகளில் 9 நாடுகளின் ஆதரவுகள் கிடைத்தால் போதும் சிறீலங்கா மீதான அனைத்துலக விசாரணைகளை ஆரம்பித்துவிடலாம். ஓன்பது நாடுகளின் ஆதரவுகளை பெறுவது கடினமானதல்ல, ஆனால் சீனா மற்றும் ரஸ்யா போன்ற நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருக்கவேண்டும்.

சீனாவை மேற்குலகம் சமாளிக்கலாம், ஆனால் ரஸ்யாவின் தற்போதைய நிலை தான் எமக்கு பாதகமான சமிக்கைகளை தருகின்றது. சிறீலங்கா அரசும் ரஸ்யாவுடன் தனது நெருக்கத்தை அதிகரித்துள்ளதுடன், விண்வெளிக்குச் சென்ற ஜுரி ஹகாரினுக்கு தென்னிலங்கையில் சிலையும் வைத்துள்ளது. எனினும் சில பேரம் பேசுதல் ஊடாக அல்லது சில இராஜதந்திர அணுகுமுறைகள் ஊடாக மேற்குலகத்தின் உதவியுடன் ரஸ்யாவை வழிக்கு கெண்டுவர முடியும்.

ரஸ்யாவின் செச்சென்னியப் பிரச்சனை, சீனாவின் மனித உரிமை மீறல்கள் என்பவற்றை முன்நிறுத்துவதன் மூலம் அவர்களின் வாயை மூட முடியும். நிரந்தரமற்ற 10 உறுப்பினர்களில் தென்ஆபிரிக்கா, இந்தியா, கொலம்பியா, ஜேர்மனி, போத்துக்கல் ஆகிய நாடுகள் 2012 வரை உறுப்புரிமை கொண்டுள்ளன. இந்த வருடத்துடன் தமது உறுப்புரிமையை இழக்கும் பொஸ்னியா – ஹெர்செகோவியா, பிரேசில், லெபனான், காபோன், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு பதிலாக ஒஸ்ரியா, யப்பான், மெக்சிக்கோ, துருக்கி மற்றும் உகண்டா ஆகிய நாடுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

மேற்கூறப்பட்ட நாடுகளில் இந்தியாவை தாவிர ஏனைய நாடுகளின் ஆதரவுகளை மேற்குலகத்தின் உதவியுடன் பெற்றுக்கொள்ள முடியும். இந்தியாவின் ஆதரவுகளை பெறுவதற்கு தமிழகத்தின் ஊடாக நாம் அழுத்தங்களை மேற்கொள்ளலாம். ஐ.நாவின் பாதுகாப்புச்சபையில் நிரந்தர இடம் வாங்கித்தருவேன் என்ற அமெரிக்காவின் பேரம்பேசுதலும் இந்தியாவின் வாயை மூடிவிடலாம்.

எனவே நாம் வெற்றிகொள்ள வேண்டியவை ரஸ்யாவும், சீனாவுமே. அவர்கள் தமது வீட்டே அதிகாரத்தை பயன்படுத்தினாலும் கூட அது எமது பயணத்தின் முடிவல்ல. எனெனில் மேற்குலகத்தின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்புக்களின் உதவியுடன் சிறீலங்கா மீது ஒரு காத்திரமான முழுமையான பொருளாதார மற்றும் இராஜதந்திரத் தடைகளை ஏற்படுத்த முடியும்.

எனவே எம்மால் முடியாதது என்பது இங்கு உண்மையல்ல. நாம் முயற்சி செய்யவில்லை என்பதே உண்மை. மீண்டும் ஒரு முறை இந்த பத்தியின் ஆரம்பத்தில் உள்ள நெல்சன் மண்டேலாவின் வாசகத்தை படித்துப்பாருங்கள். அந்த வார்த்தைகளின் ஊடாக எமக்குள் பிறக்கும் உற்சாகத்துடன் அடுத்த கட்ட நகர்வுக்கு முழு வேகத்துடன் தயாராகுங்கள்.

நன்றி: ஈழமுரசு (29.04.2011).

Comments