நியூயோர்க்கின் ஐ.நா அலுவலகத்தின் முன்பு இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்!

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்னால், இனஅழிப்பின் உச்சக்கட்டமாக அமைந்த கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது.


இந்நிகழ்வில் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஐக்கியநாடுகள்சபை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்

.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்தபோதும், அதனை தடுப்பதற்கு தவறிவிட்டது என வெள்ளைமாளிகையின் முன் போராட்டத்தை நடத்திவரும் கலாநிதி கே.தயாபரன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் தற்போதைய ஒபாமா அரசு சுயாதீன அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் நல்ல உதரணம் என இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கிளன் மொறிஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவிலும் இவர் அங்கம் வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments