அழியும் மொழிகளில் தமிழும் ஒன்று..!

உலகில் இப்போது பேசப்பட்டுவரும் மொழிகளில் ஒவ்வொருவருடமும் பத்து மொழிகள் அழிந்துவருகின்றன. இந்த நுற்றாண்டின் இறுதிக்குள் உலகின் அநேக மொழிகள் இருப்பிழந்துபோய்விடும் என ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கல்விக்கான அமைப்பு எச்சரிக்கையுடன் அபாயமணி எழுப்பி உள்ளது. கிட்டத்தட்ட ஆறாயிரம் மொழிகள் தமது இருப்பிற்கான இறுதியுத்தத்தில் நிற்கின்றன. இவற்றுள் அரைவாசிக்கும் அதிகமானவை பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களாலேயே பேசப்படும் மொழிகளாகவும், மிகுதி மொழிகளில் கால்பங்கு மொழிகள் ஆயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படும் மொழிகளாகவும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் பத்துகோடி மக்களுக்கும் அதிகமானவர்களின் தாய்மொழியாக இருக்கின்ற (கவனிக்க,பேசுகின்ற மொழி என்பது அல்ல) தமிழும் அழிந்துவரும் மொழிகளில் ஒன்று என குறிப்பிடப்பட்டு இருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமைவாய்ந்த மொழிகளில் தமிழும் ஒன்றாக லத்தீன், பாரசீகம், கிப்ரூ, கிரேக்கம், சீனம் என்பனவற்றுடன் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தமிழின் பெருமைகளுள் ஒன்றுதான். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதானது எங்கும் காணோம்’ என்று காசி சர்வகலாசாலையில் சமஸ்கிரதத்தை ஆழமாக கற்றபின்பும், ஆறுமொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தபின்பும் எங்கள் பாரதி சொன்னானே அந்தத் தமிழ்மொழிதான்.


‘எங்குமுள தென் தமிழ் இயங்கிய இசை உண்டாண்’ என்று கவிச்சக்கரவர்த்திகம்பன் வியந்ததமிழை,‘ஓங்கலிடை பிறந்து உயர்ந்தோர் தொழ விழங்கி’ என்று ஆரம்பித்து ‘தண்ணேரில்லாத்தமிழே’ என்று சங்ககாலப்புலவர் பாடிய தமிழ்தான்..


‘தமிழ் எங்கள் இளமைக்குப்பால் -
இன்பத்தமிழ் எங்கள் புலவர்க்கு புகழ்மிக்கவேல்’
என்று புரட்சிக்காரப் புலவன் பாரதி
தாசன் போற்றிய தமிழ்தான்..
‘பூமலர்ந்த நேரத்தை வண்டறியும்
பொழுதலர்ந்த நேரத்தை புள்ளறியும்
சேய்பிறந்த நேரத்தை தாய் அறிவாள்
செந்தமிழே நீ பிறந்த நேரத்தை யாறறிவார்?’


என்று புல்லரித்துப்பாடி தமிழின் தோற்றத்தையும் அதன் கட்டுக்குறையாத சீரிளமையையும் வியந்துபாடியது கேட்கவும் வாசிக்கவும் இனிமைதான். ஆனால் இத்தகைய நெக்குருதல்கள் மட்டுமே எமது மொழியை இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேசமயப்படுத்தலுக்குள்ளாக தப்பிப் பிழைத்து உயிர்வாழ வைக்கபோதுமானவையா..? எங்கள் மொழியை பத்துக் கோடிமக்கள் பேசுகிறார்கள் என்பதுவோ அல்லது எங்களது மொழிபத்துக்கோடி மக்களின் தாய்மொழி என்பதுவோ அதனை இந்த மொழிகளுக்கிடையிலான இருப்புக்கான யுத்தத்தில் வெற்றியீட்ட வைத்துவிடுமா.?

but the big battalions do not always win பெரியபடை அணிகள் எப்போதுமே வெற்றிபெறுவது இல்லை. எங்களைப்போன்ற பலரால் எமது மொழி பேசப்படுகிறது என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பது எமது மொழியை காப்பாற்றிவிடாது. எப்படி ஒவ்வொரு மொழியும் அழிந்துபோனது என்றும், இருப்பிழந்துபோனது என்றும் அறிந்துகொள்வதன் மூலம்தான் எமது மொழியின் நீண்ட இருப்பை உறுதிசெய்துகொள்ள முடியும். மொழிகள் தோற்றம்பெற்ற பின்னர் இதுவரை ஆகக்குறைந்தது முப்பதினாயிரம் மொழிகள்பிறந்தும் மறைந்தும் விட்டன.

ஐரோப்பிய காலனித்துவ வருகை பல நிலப்பரப்புகளின் பாரம்பரம்பரிய மொழிகளில் பலவற்றை இல்லாமல் செய்த காரணிகளில் ஒன்று என்பதுடன் முக்கியமானதும் ஆகும். கடந்த முந்நு£று ஆண்டுகளில் ஐரோப்பாவில்பத்து, பன்னிரண்டு மொழிகள்தான் வழக்கிழந்து போயிருக்கின்றன. ஆனால் ஐரோப்பியரின் வருகையின்போது அவுஸ்திரேலியாவில் பேசப்பட்டுக்கொண்டிருந்த (18ம் நு£ற்றாண்டின் முடிவில்) 250 மொழிகளில் இப்போது இருபது மொழிகள்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன.


போத்துக்கீசியிரின் காலனி ஆட்சி பிரேசில் தேசத்தில் ஆரம்பித்த 1530ஆண்டில் அங்கு பேசப்பட்டுக்கொண்டிருந்த மொழிகளில் 540 மொழிகள் அழிந்தே விட்டன. தமது நிலங்களுக்குள் தமது எண்ணங்களை தாமாக வெளிப்படுத்த தோற்றம்கொண்ட மொழிகள் அந்த நிலப்பரப்புகள் இன்னொரு மொழிபேசும் நிலப்பரப்புடன் பலவந்தமாக இணைக்கப்பட்டபோது அழிவின் ஆரம்பத்தைச் சந்திக்கத்தொடங்கின. தேசம், நாடு என்ற கோட்பாடும் அதன் எல்லைகளும், அவற்றுக்கென்று அரசமொழிகளும் உருவாக்கப்பட்டபோது அடுத்த மொழிகள் பலமிழந்து போகத்தொடங்கின.


நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் ஏராளமான மொழிகள் இருந்ததும், இருப்பதும் ஒருவிதமான தொடர்பாடல் தடையாகவே பார்க்கப்பட்டது. இதுவும் மொழிகள் இறப்பதற்கு காரணங்களில் ஒன்றாக அமைந்துவிடுகிறது. இப்போதோ உலகமே ஒரு சிறுகிராமம்போன்ற தொடர்புக்குள் வந்துவிட்டது. நாடுகள் உருவானபோதும், அவற்றுக்கிடையிலான வர்த்தகம் வளர்ச்சிபெற்ற போதும் சந்தித்த அபாயத்தைவிட இப்போது தோன்றியிருக்கும் சர்வதேசமயம் என்பது வலுக்குறைந்த மொழிகளுக்கு இன்னும்மோசமானது ஆகும். களில் இருந்து எப்படி காப்பாற்றி இருப்புடன் வைக்கமுடியும் என்பது முக்கியமான கேள்விக்குறியாகும்.

தமிழ்மொழி இன்னும் பலநு£ற்றாண்டு அதே தனித்தன்மையுடனும், செழுமையுடனும் இருக்கவேண்டுமானால் முதலில் தமிழ்மொழியை முதல் அரசமொழியாக கொண்ட தமிழர் தேசம் உருவாகவேண்டும். அது சாத்தியமாகும் வரைக்கும் தமிழ்மொழியை அழிவில் இருந்து மீட்பதற்கு அனைத்து வகையான முயற்களும் இனிவரும் காலங்களில் செய்யப்படவேண்டும்.


பெரியார் எழுத்துச்சீர் திருத்தத்துக்கு பின்னர் சொல்லப்படும்படியான எந்தவொரு எழுத்துச் சீரமைப்பும் தமிழில் தோன்றவில்லை. இப்போது இருக்கும் இலத்திரனியல் ஊடகமுறைக்கும், அதிநவீன தொடர்பாடல் முறைக்கும் ஏற்றவகையில் தேவையற்ற எழுத்துகளைகுறைத்தும், வடிவுமாற்றியும் செய்ய வேண்டிய தேவைகளும், அதற்கானகருத்துப்பரிமாற்றங்களும், துறைசார் அறிவுரைகளும் மிகத்தேவையாக இருக்கின்றது.


உயிர்கள் தப்பித்தலுக்கும், உயிர்வாழ்தலுக்கும் சார்ள்ஸ் டார்வின் கொடுத்தபரிணாமத்தத்துவம் இப்போது மொழிகளின் உயிர்வாழ்தலுக்கும் பொருந்திப்போகிறது. இந்தக்கட்டுரை மிகமேலோட்டமாக தமிழின் இருத்தலை வலியுறுத்தும் ஒரு ஆக்கம் மட்டுமே. இதிலிருந்தும் இதைவிடமேலாகவும் இதைப்பற்றிய கருத்துக்கள் எழவேண்டும். இதைப்பற்றி பலபல தளங்களில் விவாதங்கள் மேலெழவேண்டும். மொழி என்பது வெறுமனே தொடர்புக்கான ஒரு சாதனம் மட்டும் அல்ல. அதுவே தேசியத்தின் உயிர்மையம். தேசிய அடையாளத்தில் முதன்மையானது.அதனை சிதையாமல் காப்பது அனைவரின் உடனடிக்கடமையாகும்.


சிறகுகள் முளைத்த கிளி எங்கள் தாயகம் முழுதும் இராணுவ சிறைபோன்ற அமைப்புக்குள் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கின்றது. எல்லா நடமாட்டங்களின் பின்னாலும் கண்ணுக்குத்தெரியாத சங்கிலிஒன்றுகட்டப்பட்டு இருப்பதுபோலவே அங்குள்ள நிலைமை தெரிகிறது. அவற்றுக்குள்ளாகப் பிறக்கும் குழந்தைகளும் ஒருவித மிரட்சியுடனும், அடிமைத்தன்மையுடனும்தான் பிறப்பார்களா என்பது பெரிய கேள்வியாக மனமெங்கும்சலனமெழுப்பியபடி இருந்தது.கல்யாண்ஜியின் இந்தக்கவிதையைபடித்தபோது அதற்கான பதிலாக இருந்தது.


‘கூண்டுக் கிளிகள்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு வந்தன
சிறகுகள்’

(இன்னும் குட்டிபோடும்)

நன்றி - ஈழமுரசு_80

Comments