அரசுகளுக்கும், அதிகாரிகளுக்கும் வலைவிரிக்கத் தெரிந்த எம்.எஸ்.சுவாமிநாதன் என்ற இந்த மனிதர் ஏர் பிடிக்கா வேளான் விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் மீன் பிடிக்கத் தெரியாத மீனவநண்பனாகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்த அவதாரம் தந்திருக்கும் வரம்தான் கடற்கரை மண்டல வேளாண்மைத் திட்டம் என்னும் பெயரில் இந்திய அரசு மற்றும் உலக நிதியத்தின் பேராதரவோடு மீனவர்களைக் கடலைவிட்டு விரட்டக் கொண்டுவரப்பட்டிருக்கும் திட்டமாகும். சுனாமி வருவதற்கு முன்பிருந்தே கடற்கரைகளில் வசிக்கும் மீனவர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்வதாகக் கூறி வேறு இடங்களுக்கு அனுப்பிவிட்டு கடற்கரைகளைக் கைப்பற்றித் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டமாகும்.
இதற்கு வாய்ப்பாக சுனாமி வந்துவிட உங்களுக்கு நிலம் தருகிறோம் வீடுகட்டித்தருகிறோம் என்று கடற்கரையிலிருந்து 500 மீற்றருக்கு அப்பால் வீடு கட்டும்திட்டத்தினைச் செயற்படுத்தத் தொடங்கினார்கள். இதன் மூலம் கடற்கரையில்வசிக்கும் உரிமையை மீனவர்களிடமிருந்து பறித்து அவற்றை வெகு எளிதில்பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்கு தாரைவார்த்துவிட்டார்கள். (எ.கா- கிழக்கு கடற்கரை சாலைகள் இப்படி தாரைவார்க்கப்படும்தனியார் இடங்கள் 500 மீட்டர் என்ற அளவுக்கு உட்டபட்டவை அல்ல. கடற்கரையை ஒட்டிய நிலமும் கடற்கரையும், அதை யட்டிய குறிப்பிட்ட அளவு கடலும் கூட அவர்களுக்கே சொந்தம் என கிரயம் எழுதிக் கொடுத்து விட்டார்கள்.) இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக மீனவர்களுக்கும் கடலுக்குமான தொடர்பைத் துண்டித்து, அவர்களை வெறுப்படையச் செய்து, மீன்பிடிக்கும் தொழிலிருந்து அவர்களை விரட்டி கடல்பரப்பை மொத்தமாகக் குத்தகைக்கு விட்டுவிடும் பணியைத்தான் இப்போது மும்மரமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.
இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் இவர்கள் பசப்பு வாதங்களைக் கேட்கும் சின்னப்பிள்ளைக்கும் தெரியும். உன்னை நான் இலட்சாதிபதியாக்குகிறேன் என்று கோடீஸ்வரனுக்கு ஆசைகாட்டுவது போல்தான் இதுவென்று.
இந்தியாவிலேயே அதிக கடல்பரப்பு கொண்டது தமிழ்நாடு தான். அதிலும் மீன்வளம் கொழிக்கும் இயற்கை எழில் சார்ந்த மன்னார் வளைகுடாவிற்கும், காவிரி கடலில் சேரும் இடத்திற்கு மிடையிலான பகுதியை எண்ணெய் வளமான பகுதி என அடையாளம் கண்டு கொண்டதன் பலனைத்தான் இப்போது தமிழக மீனவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் இருக்கும் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க யாக்சயர் நிறுவனத்தின் கூட்டுடன் களம் இறங்கியிருப்பது கேர்ன் இந்தியா, கேர்ன் லங்கா நிறுவனங்கள்.
இலங்கையில் இருந்தபடி சீனாவின் பாதுகாப்போடு, இந்தியாவின் ஒப்புதலோடு எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி, கொட்டும் வளத்தைக் கொள்ளையிடுவதற்கு வசதியாகத்தான் மீனவர்களை விரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதிதான் தமிழக மீன
வர்கள் படுகொலைகளும்! இது இன்றைக்கு முளைவிட்டதல்ல. கச்சதீவு ஒப்பந்தத்தையெட்டியே இதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இதற்கு சிக்கலாகி விடக் கூடாது என்பதால்தான் சேதுசமுத்திரத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் பாதி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே இல்லாத ராமர் பாலத்தைக் காட்டி திட்டப்பணிகளை தடுத்து நிறுத்திவிட்டார்கள். சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்ததொடக்க காலமுதலே சிங்கள அரசு பெரும் பிரயத்தனம் செய்து வந்ததை நாம் அறிவோம். கோழும்பின் நலன் பாதுகாக்கப்பட தமிழக நலனை புறந்தள்ளியது இந்திய ஆளும்வர்க்கம்.
மேலும் மேலும் சிக்கல்களையும் குழப்பங்களையும் உருவாக்கும் வண்ணம் ஒன்றுக்கு கீழ் ஒன்று அதற்கு கட்டுப்படாத ஆனால் இதன் கட்டுப்பாடுள்ளபகுதிகளின்தனிக்கட்டுப்பாடு கொண்ட இன்னொன்னு என எண்ணற்றஅமைப்புக்களைத் தோற்றுவித்து இவற்றையெல்லாம் யாரும் எளிதில் கேள்விகேட்டுவிடாதபடி உருவாக்கிவைத்து விட்டார்கள். கடலடி மண்ணும் இப்போது காஸ்மெடிக் பொருளாகிப் பன்னாட்டுச் சந்தையில் விற்பனையாகிறது. இதனால் நாட்டுக்கு இலாபம்தானே என அம்மாஞ்சியைப் போல நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், இத்தனை வளங்களும் சுரண்டப்பட்டபின் இதன் விளைவுகளைச் சந்திக்கப் போவது தமிழகம் தான் என்பதை எப்போது புரிந்துகொள்வது?
மீனவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இப் பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் வாரப்போகிறது என்று தான் முதலில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்த்து வந்தனர். பின்னர் இதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டு பல்லுயிரிப் பாதுகாப்புக்கு எந்தச் சிக்கலும் இல்லாதவாறு சேதுசமுத்திரத்திட்டம் வரும் என்று விளக்கமும் அளிக்கப்பட்டது. அவர்கள் ஒப்புக் கொண்ட பின்னும் கப்பல் போக்குவரத்துக்கான கால்வாய் தோண்டப்படுவதாக அறிவிக்கப்பட்ட போது வரித்துக்கட்டி கிளம்பிய எதிர்ப்புக்காரர்கள், இப்போது எண்ணெய்க்கிணறுகளால் கடலே கொத்திப் போடப்படும் நிலை வந்திருக்கும் போது எங்கேயிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ராமர் பாதம், ராமர் பாலம் என ரூமர் விட்டுக் கொண்டிருந்த பூணு£ல் திருமேனிகள் ஆன்லைன் அப்ளிகேசன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர் பணியிலிருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே எல்லைத் தொல்லை இல்லாதது தெற்குதான் என அப்பாவியாக நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆப்புவைக்க வந்துவிட்டன ஏண்ணெய் நிறுவனங்கள். அமெரிக்காகண்வைத்திருந்த இடத்தில் இன்று சீனா! யார் வந்தாலும் ஆளுக்கொரு பங்கு கொடுக்க தயாராய் சிறீலங்கா. சாகப்போவது தமிழர்கள்தானே, நமக்குப் பங்கு வந்தால் சரியென்று தலையாட்டுவதற்கு இந்திய அரசு இப்படி நம்கண்ணுக்குத் தெரிந்தே நமது நெய்தல், பாலையாகத் தொடங்கியிருக்கிறது.
ஈழத்தில் நடந்த நிலை நாளை தமிழகத்துக்கும் வரும். புவிசார் அரசியல் நலன்களுக்காகவும், எண்ணெய் வளத்துக்காகவும் இன்று தன்வரலாற்றைத் தொலைத்து ஒழிந்து போயிருக்கும் முந்தைய மெசபடோமியாவான இன்றைய ஈராக்கைப் போல் வெகுவிரைவில் குமரிக்கண்டத்தின் எச்சமான தமிழ் நிலமும் மாறும்.
இப்படி படிப்படியான நகர்வுகளின் முடிவில், இப் பகுதி எங்கள் சொத்து என்று ரியல் எஸ்டேட்காரர்கள் வரைபடம் போட்டுக் காட்டுவது போல எங்கள் சொத்து வரைபடம் என்று தங்கள் இணையத்தில் மன்னார் வளைகுடாவைப் படம் பிடித்துப் போட்டிருக்கிறது கேர்ன்லங்கா நிறுவனம். நடந்திருப்பதன் தீவிரத்தை அறிய இந்த ஒரு படம் போதும்.
ஆம் தோழர்களே! எல்லாம் முடிந்து போய்விட்டது. இயற்கை வளங்களைக் கூறுபோட்டு விற்றுக்கொண்டிருந்தவர்கள் இயற்கையையே விற்கத்தொடங்கிய நியமகிரி கதையைப்போலதான், பாக் ஜலசந்தியும் இப்போது பன்னாட்டு பண முதலைகளின் சொத்தாகிவிட்டது. கடலோரம் இனி காற்று வாங்குவதாயிருந்தாலும் முன்னனுமதிபெற்று பணம் செலுத்தித்தான் வாங்க முடியும். இனி சிப்பி பொறுக்குவதாவது... கடற்கரை மணலைக்கூட உங்கள் கைகளால் தொடமுடியாது. அப்புறம் திரைகடல் ஓடி திரவியம் தேடவா?
விவசாயிகள் சகதியில் பாடுபடுவதைக் காணச்சகிக்காமல், அவர்களுக்குச் சாந்துச்சட்டி தூக்கும் வேலையைக் கொடுத்ததுபோல, கடலில் சென்று உயிரை விடாமல் இருக்க கருணைப் பார்வையோடு வழங்குவதற்கு இந்தியாவில் கூலி வேலைகள் இல்லையா என்ன?
Comments