திடீர் தொடர்-01
ஈழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது ஐ.நா. நிபுணர் குழு. அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே...
நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையில்,
நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்!
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும்பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர். ஆனால், இந்த வெற்றிக்காக இலங்கை இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள், பல தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
போரில் புலிகள் வட கிழக்குக் கடலோரப் பகுதியான வன்னிக்குத் தள்ளப்பட்டதால், லட்சக்கணக்கான தமிழர்கள் எங்கேயும் தப்பிச் செல்ல முடியாதபடி, வலிமையான இரண்டு போர்க் குழுக்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டனர். இதனால்தான், உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
இலங்கை இராணுவத்தினரின் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலால், முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும் தாக்குண்டு சிதறினார்கள். மறுபுறம் இராணுவத்துக்கு எதிராகப் புலிகள் நடத்திய தாக்குதலிலும் தமிழ் மக்கள் சிக்கிக்கொண்டனர்.
போர்ச் சூழலில் மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டிய இலங்கை அரசு, பாதிக்கப்பட்ட மக்களை அடக்குவதிலேயே குறியாக இருந்ததுதான் பெரும் துயரம்!
கடைசிக் கட்டத் தாக்குதல் உக்கிரமாக நடந்தது. அதனால், அந்த இடத்தில் இருந்து எந்தத் தகவலையும் அறிய முடியவில்லை. 'என்ன நடந்தது?’ என்கிற புதிர் விலகும் முன்னரே, அதிபர் ராஜபக்ஷே 2009 மே 19-ம் தேதி, போரின் வெற்றியை அறிவித்தார். அதனால், இறுதிக் கட்டத் தாக்குதலின் கடுமையும், பாதிப்புகளும் உலகுக்குத் தெரியாமலே போய்விட்டது.
போர் முடிந்த சில நாட்களுக்குப் பின்னர், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கைக்குப் போனார். போர் நடந்த சில இடங்களையும், சில முகாம்களையும் பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக, நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் தொடக்கத்தில் தங்கள் பலத்தைப் பெருக்கிக்கொள்வதில் அதிக அக்கறை காட்டினர். இதற்காக குடும்பத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில், தங்கள் அமைப்பில் ஆட்களை சேர்த்துக்கொண்டனர். போரின் தீவிரத்தால் ஒரே குடும்பத்தில் இருந்து பலரையும் தங்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கும் சூழலுக்கு புலிகள் தள்ளப்பட்டனர்.
பதுங்கு குழிகள் தோண்டும் பணிகளில் பொதுமக்களையும் ஈடுபடுத்தினர். 2008-ல் புலிகளின் படை பலம் கணிசமாகக் குறைந்துவிட்டது. அவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. புலிகள் வலிமையாக இருந்தபோது, 20,000 பேர் அந்த அமைப்பில் இருந்துள்ளனர். ஆனால், இறுதிக் கட்டப் போரில், அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வெறும் 5,000 ஆகிவிட்டது.
புலிகளை மேலும் முடக்கும் வகையில், 'அமைப்புடன் தொடர்புடையவர்கள்’ என சந்தேகிக்கப்பட்ட நபர்களைக்கூட இராணுவம் சித்திரவதைக்கு உட்படுத்தியது. இதற்காக 'வெள்ளை வான்’ என்ற ஆபரேஷன் நடத்தப்பட்டது.
புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்கள், அந்த வானில் பிடித்துச் செல்லப்பட்டார்கள். அதில் பலர் காணாமலேயே போனார்கள். கொல்லப்பட்டவர்களின் உடல்கள், இரகசியமாக மறைக்கப்பட்டன. பலர் திரும்பி வராததால், அவர்கள் குறித்து அறிய முடியாத நிலை!
மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த 'வெள்ளை வான்’ ஆபரேஷனுக்கு இரையாகினர்.
செய்திகளுக்குக் கடுமையான தடைகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. செய்தியாளர்கள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
சில பத்திரிகையாளர்களின் பெயர்கள், 'புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று இராணுவத்தின் இணையத்தளத்தில் பகிரங்கமாகக் குறிப்பிடப்பட்டன.
போர்ச் செய்திகளை வெளியிட கடுமையான நிபந்தனைகள் 2008-ல் விதிக்கப்பட்டன. இதனை மீறிய பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மிரட்டப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.
போர் முடிந்த பிறகும் இந்த மிரட்டல்கள் வழக்கத்தில் இருந்தன. அரசை விமர்சித்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க, கொலை செய்யப்பட்டார். போத்தல ஜெயந்த 'வெள்ளை வானில்’ தூக்கிச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். பல செய்தி நிறுவனங்கள் நொறுக்கப்பட்டன. இது குறித்து அரசு எந்த விசாரணையும் நடத்தவில்லை.
இறுதிக் கட்டப் போரின்போது, ஐ.நா. தொண்டு நிறுவனத்தினர், கிளிநொச்சியை விட்டு வெளியேறிச் சென்றனர். உதவிக் குழுக்களின் உணவு விநியோகத்தை இராணுவம் தடுத்தது.
தளவாடங்கள் மற்றும் பொருட்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, இராணுவப் பயன்பாட்டுக்காக எடுத்துக்கொண்டது. அதனால், மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுக்க முடியவில்லை. பசியின் கோரப் பிடியில் சிக்கித் தமிழ் மக்கள் கதறினார்கள்.
இத்தகைய இக்கட்டிலும் உதவிக் குழுவினர் தங்களிடம் இருந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள். ஆனால், அந்த இடத்தில் இருந்து அவர்களால் வெளியேற முடியாத அளவுக்கு இரு தரப்பினரின் தாக்குதல் இருந்தது.
இறுதிக் கட்டப் போரில், இலங்கை இராணுவம் அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து கொடூரத் தாக்குதல் நடத்தியது. மருத்துவமனைகளைக்கூட இராணுவம் விட்டுவைக்கவில்லை. காயமடைந்த விடுதலைப் புலிகள் சிகிச்சை பெறுவதாக நம்பப்பட்ட மருத்துவமனைகள் மீது மீண்டும், மீண்டும் தாக்குதலை நடத்தியது இராணுவம்!.
- துயரங்கள் தொடரும்...
நன்றி - ஜூனியர் விகடன்
Comments