சிறிலங்கா போர் ஓய்ந்துள்ள போதிலும் பழைய வாழ்வை மீளப்பெற முடியவில்லை

போரின் போது சிந்தப்பட்ட குருதி இன்னமும் உறைந்து காணப்படும்
நிலையில்....?

சிறிலங்கா போர் ஓய்ந்துள்ள போதிலும் பழைய வாழ்வை மீளப்பெற முடியவில்லை

யுத்தம் ஒய்வுக்கு வந்தபிறகும்கூட வன்னியில் இராணுவத்தினரின் நடமாட்டங்கள் அதிகமாக இருப்பதுடன், வீதிக்கு வீதி காணப்படும் சோதனைச்சாவடிகள் மக்களின் இயல்பான போக்குவரத்துக்குத் தடையாக உள்ளன. பொதுக்கட்டடங்களின் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளதுடன், வீதிச்சோதனைச் சாவடிகள் முழத்திற்கு முழம் அதாவது 200 மீற்றர் இடைவெளிகளில் காணப்படுகின்றன.

இவ்வாறு அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் Sydney Morning Herald ஊடகத்தின் செய்தியாளர் Ben Doherty எழுதியுள்ளார்.



அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

சிறிலங்காவின் வடபகுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது இரு ஆண்டுகளின் முன்னர் முடிவுக்கு வந்தபோதிலும்; அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்னமும் தொடர்வதாகத் தென்படுகிறது.

தமிழ்ப் புலிகள் என நன்கறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைத் தடுக்கும் முகமாக மன்னாரிலுள்ள ஆன்னி மனுவேற்பிள்ளையின் (உண்மைப் பெயர் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிப்படுத்தப்படவில்லை) கிராமத்தின் மீது சிறிலங்காப் படைகள் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

ஆன்னியின் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதல்கள் மற்றும் அவரது கிராமம் முழுவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் இக்கிராமத்து வாழ் மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்க, ஆன்னியும் உயிர்த் தஞ்சங்கோரி பல முகாங்களில் அடைக்கலம் புகுந்தாள்.

ஆனால் இந்த இடங்கள் முதலில் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டு பின்னர் சில குறுகிய கால இடைவெளியில் போர்வலயங்களாக மாற்றப்பட்டபோது ஆன்னியும் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளவேண்டியிருந்தது.

ஓராண்டுக்கு பின்னர் அவர் தனது சொந்த வீட்டிற்குச் சென்றபோது அவளது வீட்டுநிலை பார்க்க மிகப் பரிதாபகரமானதாக இருந்தது. வீட்டுச்சுவர்களை எறிகணைகள் பதம் பார்த்திருந்தன. வீட்டின் கூரையாக தறப்பாள் மாறிக்கொண்டது. வீட்டிற்கு வெளியே சமைத்துக் கொண்டு கையில் போதியளவு நிதியிருக்காதபோதிலும் மனதில் எஞ்சியிருந்த நம்பிக்கையுடன் அவள் மீண்டும் தனது வாழ்க்கையைக் கொண்டு நடாத்தத் தயாரானாள்.

கிராமத்து வாழ்க்கை மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. புழுதி படிந்த வீதிகளில் இந்தக் கிராமத்து மக்களின் நாளாந்தங்கள் நகரத் தொடங்கியது. தமது வீட்டுத் தேவைகளுக்கு வேண்டிய நீரை நீர்த்தாங்கிகளிலிருந்து எடுத்து அவற்றை வாளிகளில் இந்தக் கிராமத்துச் சிறார்கள் காவிச்செல்ல வேண்டியிருந்தது.

இது இவ்வாறிருக்க, புலிகளால் விதைக்கப்பட்ட கண்ணிவெடிகளின் தொகை இங்கு அதிகமாக இருந்தது. பெருமளவான கண்ணிவெடிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளபோதிலும், பெரும்பாலான குடும்பங்களின் வயல்நிலங்களில் கண்ணிவெடிகளின் அபாயம் இன்றும் காணப்படுகின்றது.

"இங்கு வாழ்வதென்பது மிகக் கடினமான விடயமாகும். நாங்கள் முன்னிருந்ததை விட மிகவும் வறுமைநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலையில் எமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்த நாம் தினமும் யுத்தம் செய்கின்றோம். வெளிப்படையாகப் போர் ஓய்வுக்கு வந்தபோதிலும், எமது பழைய வாழ்வை எம்மால் மீளப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எமது வயல்களில் சுதந்திரமாக நடமாடமுடியாதுள்ளது. சிலர் தமது காணிகளுக்கு மீள வரமுடியாதுள்ளனர்" என்கிறார் ஆன்னி.

சிறிலங்காவின் வடபகுதியில் அமைந்துள்ள வன்னிப் பெருநிலப்பரப்பு உள்ளடங்களாக தமிழர்களுக்குச் சொந்தமான இடங்களுக்கு அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரும்பிச் செல்லமுடியாதுள்ளனர் என ஆன்னி கவலையுடன் கூறுகிறார்.

தமது சொந்த நிலங்களுக்குச் செல்ல முடியாததமிழ்மக்கள் மொத்த சனத்தொகையில் 17 வீதமாவர். சிறிலங்காவின் மொத்த சனத்தொகையான 20 மில்லியனில் நான்கில் மூன்று பகுதியினராக தென்னிலங்கையில் வாழும் பெரும்பான்மைச் சிங்களவர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவிலிருந்து சிறிலங்காவிற்கு குடிபெயர்ந்த வந்தேறு குடிகளாகத் தமிழர் உள்ளனர் எனச் சிலர் கூறுகின்றனர். சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர் சிங்களவர்களால் தமிழர்கள் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டதாக வேறுசிலர் கூறுகின்றனர்.

புலிகள் 1983ல் 13 இராணுவ வீரர்களைக் கொலை செய்தமை, சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வன்முறை வெடிக்கக் காலாக இருந்தது. 1983 கலவரத்தில் 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர், பலர் கடத்தப்பட்டனர், பலர் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். தமிழ் வர்த்தகர்களின் கடைகள் எரிக்கப்பட்டதுடன் பொருட்களும் சூறையாடப்பட்டன.

அதுநாள்வரையிலும் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக வடகிழக்கு நோக்கித் தப்பியோடினர். இவர்களில் பலர் புலிகளின் பயிற்சி முகாங்களுக்கும் சென்றனர். இவ்வாறு வெடித்த இந்தக் கலவரம் இரு இனத்தவர்களுக்குமிடையிலான போராக மாறி கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்தது.

வன்னிப்பெருநிலப்பரப்பு உண்மையில் ஒரு அழகான இடமல்ல. இது மிகவும் வறண்ட உலர்ந்த நிலப்பரப்பாகவும், சனத்தொகை அடர்த்தி மிகக்குறைந்த பிரதேசமாகவும் காணப்பட்டது.

ஆனால் யுத்த காலப்பகுதியில், இப்பிரதேசத்தில் வாழ்ந்த 40,000 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 3,00,000 இற்கும் மேற்பட்டோர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா வின் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வடபகுதியைச் சேர்ந்தமக்களில் குறைந்த எண்ணிக்கையானோர் தமது வாழிடங்களை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். சில பகுதிகளில், மீள்புனரமைப்புப் பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ள போதிலும் இவர்களுக்கு இந்தப் பணி மிகவும் சவாலானதாகவே உள்ளது.

இந்நிலையில் "உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களில் 95 வீதத்தினர் 18 மாதங்களில் அதாவது மிக்ககுறுகிய காலப்பகுதியில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகின்றது" என இவ்வாரம் ஐ.நா வின் பாதுகாப்புசபைக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சிறிலங்காப் பிரதிநிதி பாலித கோகன்ன தெரிவித்திருந்தார்.

ஆனால் வன்னிப்பெருநிலப்பரப்பில் தற்போதும் போர் எச்சங்கள் காணப்படுகின்றன. கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஏற்படும் தாமதம், குறிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவத்தின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாத நிலை, வீடுகட்டித் தரப்படும் என்ற உறுதிப்பாடு நிறைவேற்றப்படாமை போன்ற பல்வேறு காரணங்களால் இன்னமும் 18,000 வரையானோர் இடம்பெயர்ந்த முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

போர் முடிவுக்கு வந்ததையடுத்து 300000 வரையான மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என அரசாங்கத்தால் கூறப்படுகின்றது.

"செய்வதற்கு நிறைய உள்ளது. ஆனால் 2011 முடிவதற்குள் நாங்கள் முழுச் செயநற்பாடுகளையும் பூர்த்தி செய்துவிடுவோம்" என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் உத்பால பஸ்நாயக்கா [Uthpala Basnayakaye] கடந்த பெப்ரவரியில் உறுதியளித்திருந்தார்.

புலி உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 4,000 வரையானோர் தற்போது இராணுவத்தின் இரகசிய 'புனர்வாழ்வு முகாங்களில்' அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெயர்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. ஆயிரக்கணக்கான பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள் தமது பிள்ளைகள், கணவன்மார், மற்றும் தந்தையார் இன்னமும் உயிருடனிருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முடிவுக்கு வந்துள்ள சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஐ.நா வெளியிட்டதன் பின்னரே இவ்வாறான இரகசிய வதைமுகாங்களில் புலிச்சந்தேநபர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போர் முடிவிற்கு வந்ததும், சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்த 11,600 வரையிலான தமிழ்ப் புலிப் போராளிகள், படையினரால் நிர்வகிக்கப்படும் 'புனர்வாழ்வு முகாங்களுக்குக்' கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களில் 6,000 வரையிலானோர் மீளவிடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போதும் 4,343 வரையான புலிச் சந்தேக நபர்கள் 24 புனர்வாழ்வு முகாங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

"இந்த இளைஞர்கள் தமது வாழ்க்கையில் மிகக் கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தமது வாழ்க்கையின் வசந்த காலத்தைத் தொலைத்துவிட்டனர். இவர்களது எதிர்மறை எண்ணங்களை சாதகமாக மாற்றி சமூக நீரோட்டத்துடன் இவர்களை இணைப்பதென்பது மிகவும் கடினமான பணியாகும். ஆனாலும் பல்வேறு வகையன முறைகளின் ஊடாக இவர்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவர நாம் மிகப் பிரயத்தனப்பட்டுள்ளோம்" என புனர்வாழ்வுக்கான உயர் ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் 'நல்லதொரு சிறந்த பணியை' ஆற்றுகிறார் எனக் கூறியுள்ள தமிழ்த் தெசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தெடர்ச்சியாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைப்பதென்பது ஆபத்தானதும் சட்டரீதியற்றதுமான ஒரு நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கபட்டவர்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றபோதிலும், வல்லுறவு, பாலியல் வன்முறைகள், ஆட்கடத்தல் போன்ற பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடாத சந்தேகநபர்கள் இரு ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்" என அண்மையில் ஐ.நா வின் வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்டுள்ள 200 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவிற்குள் இடம்பெற்ற பல்வேறு விதமான குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்கப இந்த அறிக்கையில் மிகவும் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

"சிறிலங்காவில் அமைதி நிலவ நாம் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டோம் என்பதை உலகின் முன் சமர்ப்பிக்கவுள்ளோம். அத்துடன், உள்நாட்டுக்குள் இடம்பெற்ற மோதலை முடிவுக்குக் கொண்டு வர நாம் பட்ட முயற்சிகளையும் அனைத்துலகத்திடம் ஒப்புவிப்போம்" என அதிபர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையானது, விடுதலைப் புலிகளாலும், அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களை தெளிவுபடுத்திக்காட்டியுள்ளபோதிலும் அரசாங்கத் தரப்புக் குற்றங்கள் மிகக்கடுமையானதாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டுகின்றது.

அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வைத்தியசாலைகள் மீதான குண்டுத்தாக்குதல்கள், பாதுகாப்பு வலயங்களில் குடியிருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதல்கள், ஐ.நா மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் மீதான தாக்குதல்கள் ஆகியவை ஐ.நாவால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் ஆதாரங்களுடன் ஆவணமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வன்னி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சரணடைவதற்காக வந்த புலிகள் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலர் உயிருடன் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு சிறிலங்கா அதிபர், மற்றும் அவரது சகோதரன், மூத்த அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் காரணமாக இருந்துள்ளனர் எனவும் இந்த அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

யுத்தம் ஒய்வுக்கு வந்தபிறகும்கூட வன்னியில் இராணுவத்தினரின் நடமாட்டங்கள் அதிகமாக இருப்பதுடன், வீதிக்கு வீதி காணப்படும் சோதனைச்சாவடிகள் மக்களின் இயல்பான போக்குவரத்துக்குத் தடையாக உள்ளன. பொதுக்கட்டடங்களின் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளதுடன், வீதிச்சோதனைச் சாவடிகள் முழத்திற்கு முழம் அதாவது 200 மீற்றர் இடைவெளிகளில் காணப்படுகின்றன.

'யுத்த கதாநாயகர்களுக்காக' சிறிலங்கா அரசாங்கத்தால் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள றணசெயபுர என்ற குடியேற்ற இடத்திலிருந்து 50 கிலோமீற்றருக்கும் குறைவான தூரத்திலேயே ஆன்னியின் வீடும் அமைந்துள்ளது.

பாடசாலைகள், வைத்தியசாலைகள், உடற்பயிற்சி நிலையங்கள், சிறப்புச்சந்தைகள் எனப் பல நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த இராணுவ வீரர்களுக்கான குடியிருப்பானது மூன்று அறைகளைக் கொண்ட 1500 வீடுகளையும் உள்ளடக்கியுள்ளது. வடக்கில் பணியாற்றும் 50,000 வீரர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள முதலாவது குடியிருப்பு இதுவாகும்.

இவ்வாறு திட்டமிட்ட ஒரு சிங்களக் குடியேற்றமாக வன்னி மாற்றப்பட்டுவருவது மிகவும் கவலைக்குரியதென தமிழ்த் தலைவர்கள் கூறுகின்றனர். தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற குறுகிய நிலப்பரப்பைக் கொண்ட முல்லைத்தீவுக் கடல்நீரேரியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்தப் போரின் போது சிந்தப்பட்ட குருதி இன்னமும் இங்கு உறைந்து காணப்படும் நிலையில், இதன் பெரும்பாலான பிரதேசங்கள் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே உள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் சில கிராமத்து மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

உக்கிர போர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விவசாயியாக இருந்த 73 வயதான நேசமணி சுகுமார் தற்போது ஒரு பெட்டிக்கடையின் சொந்தக்காரன். தனது சொந்த நிலத்தில் மீளப் பயிர்செய்ய முடியாத நிலையில் இவர் விளையாட்டுப் பொருட்கள், மென்பானங்கள் போன்றவற்றை விற்கும் கடையை நடாத்துகிறார்.

இவரின் நாளாந்த வியாபாரம் மிகக் குறைவாக உள்ளது. இவரது மகனும் மகளும் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். இவரது அயலவர்கள் காணாமற்போய்விட்டனர். அவர்களுக்கு என்ன நடந்ததென்பது அவருக்குத் தெரியாது.

"போரின் முன்னர் என்னிடம் பணம் தாராளமாக இருந்தது. என்னிடம் மிக அழகான வீடிருந்தது. எனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் கொண்டிருந்தேன். போரின் விளைவு நான் எல்லாவற்றுடனும் எனது அனைத்து உறவுகளையும் இழந்துவிட்டன்" என தனது விரல்களை நெஞ்சில் வைத்தவாறு சுகுமார் நெஞ்சம் நெகிழ்கிறார்.

நித்தியபாரதி.

Comments