கண்ணிவெடி அகற்றும் பணியில் துணிச்சல் மிக்க பெண்கள்

நிலக் கண்ணிவெடிகளை அகழ்வது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஆண்டின் இறுதியில் 'சண்டேலீடர்' பத்திரிகையினர் மகியன்குளம் என்ற இடத்திற்கு சென்றிருந்தனர்.

இந்தக் கிராமத்திற்குள் பிரவேசித்த போது வித்தியாசமான உலகிற்குள் காலடி வைப்பது போன்றிருந்தது. அகன்ற காட்டுப் பகுதியின் ஊடாக சென்று கொண்டிருந்த அடையாளம் இடப்பட்டிருந்த பாதுகாப்பான வழியைப் பின்பற்றி அங்கு செல்ல வேண்டியிருந்தது. மேலங்கிகளையும் தலைக்கவசங்களையும் அணிந்து கொண்டு செல்வது பாதுகாப்பானதாகும்.

கண்ணிவெடிகளை அகற்றுதல், அவற்றை செயலிழக்கச் செய்தல் போன்ற பணிகளில் நிலக்கண்ணிவெடி அகற்றுவோர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் காலை 9 மணியிலிருந்து மதியம் 1.30 வரை கண்ணிவெடி அகற்றும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

மகியன்குள கிராமத்தை சுற்றிப் பார்த்தபோது கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டவர்களில் பெண்களும் உள்ளடக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது அது எம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.

சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த உள்நாட்டுப் போரில் தமது குடும்பத்து உறவுகளை இழந்த பின்னர் சிலர் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் தம்மை இணைத்துக் கொண்டதாக இந்திய நாட்டைச் சேர்ந்த, கண்ணி வெடி அகற்றும் குழுவான Horizon நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் கேணல் P.M.மீனா எம்மிடம் தெரிவித்தார்.

மிகப் பாரமான கருவிகளைச் சுமந்து கொண்டு நின்ற கண்ணி வெடியகற்றும் மெல்லிய தோற்றமுடைய அந்தப் பெண் பிள்ளைகள் எம்மைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்தார்கள்.

இது நடந்து ஒரு ஆண்டின் பின்னர் தற்போதும், Horizon பணியாளர்கள் வேறு கிராமங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, இவர்களின் இரு குழுவினர் மன்னாரிலும், இரு குழுவினர் வவுனியாவிலும் பணியாற்றுவதாக குழுத் தலைவரான நரேந்திரா தெரிவித்துக் கொண்டார்.

கண்ணிவெடி அகற்றும் அமைப்பிலுள்ள ஒவ்வொரு குழுவினரும் ஐந்து பெண் பணியாளர்களையும் கொண்டிருப்பதாகவும், இவர்கள் அனைவரும் தொண்டர்களாகக் கடமையாற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏன் பெண் பணியாளர்கள் இந்தக் குழுக்களில் அடக்கப்பட்டுள்ளனர் என நாம் அவரிடம் கேட்டபோது "உள்ளுர் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு உதவி செய்வதை நாம் விரும்புகிறோம்" என நரேந்திரன் பதிலளித்தார்.

இந்தப் பணியானது மிகவும் ஆபத்தானதாக உள்ளபோதிலும், உடல் ரீதியான நோய்கள் மற்றும் உபாதைகள் இவர்களை இன்னமும் நெருங்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிலக்கண்ணிவெடி அகற்றும் பணியானது மிகவும் ஆறுதலாகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இந்தக் குழுவில் உள்ள பெண் பணியாளர் ஒருவர், நாள் ஒன்றிற்கு அண்ணளவாக எட்டு தொடக்கம் பத்து சதுரகிலோ மீற்றர் பரப்பளவான பிரதேசத்தில் நிலக்கண்ணிகளை அகற்றவதுடன் இது நிலத்தின் தன்மையிலேயே தங்கியுள்ளது என நரேந்திரா விளக்கினார்.

பூங்காவிலோ அல்லது காட்டிலோ வெறுமன நடப்பதைப் போன்ற ஒரு வேலை என இதை யாரும் கருதிவிட முடியாது.

முதலில் காட்டிலுள்ள புதர்களை அப்புறப்படுத்த வேண்டியது இவர்களின் முதலாவது செயற்பாடாகும். அதன் பின்னர், அங்கே புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் விடுதலைப்புலிகளினதா அல்லது சிறிலங்காப் படைகளினதா என அடையாளம் காண்பதுடன் அவை எவ்வாறான வடிவத்திலுள்ளன என்பதைக் கண்டுபிடித்து அதற்குப் பொருத்தமான உபகரணங்களைப் பயன்படுத்தி கண்ணிவெடிகளை அகற்றுவார்கள்.

எந்த வித விபத்துக்களும் நடைபெறமாட்டாது என்பதை உறுதிப்படுத்திய பின்னர் கண்ணிவெடி அகற்றும் பணி மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படும். வெறுமனே மேலங்கிகளையும் தலைக்கவசங்களையும் அணிந்து கொண்டு நின்றவுடன் இந்த வேலைகள் எல்லாம் முடிந்துவிட மாட்டாது.

ஆனால் அவர்களுடைய கதைகள் என்ன? தமக்கு பெரிய ஆபத்துக்கள் வரும் எனத் தெரிந்தும் கிராமங்களில் உள்ள கண்ணவெடிகளை அகற்றும்; பணியில் இந்தப் பெண்கள் ஈடுபடுவதற்கு இவர்களைத் தூண்டியது என்ன?

வவுனியாவில் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் ஒருவர் தான் மயூரி.

றமணலாபுரம் Ramanalapuram என்ற இவளது சொந்தக் கிராமமானது பாதுகாப்பற்ற சூழலில் அமைந்துள்ளதால், இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் இவர் தற்போது வாழ்கின்றார்.

இறுதியில், இவளது கிராமத்திலிருந்த நிலக்கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன. இருப்பினும், 2010ல் இவர்கள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்ட போதிலும் இவளும் இவளது குடும்பமும்; இடம்யெர்ந்தொர் முகாமிலேயே தொடர்ந்தும் வாழ்கின்றனர்.

பெரும்பாலான மக்கள் தமது கிராமங்களில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் தொடர்பாக முறைப்பாடு செய்கிறார்கள். இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள கண்ணிவெடிகள் மிக வேகமாக துப்பரவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இவர் Horizon இல் இணைந்து கொண்டார்.

தன்னைப் போல் நீண்ட காலம் காத்திருக்காது இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்கு மிகவேகமாகச் செல்ல வேண்டும் என இவர் விரும்பியதாலேயே இந்தப் பணியில் இணைந்துகொண்டார்.

தனது கிராமத்திற்கு மீளத்திரும்புவதில் தான் எதிர்நோக்கவேண்டிய பிரச்சினைகளை அவர் எம்மிடம் பகிர்ந்து கொண்டார். இவற்றுள் சோபையிழந்து பயிர் செய்ய முடியாத விவசாய நிலங்கள் தொடர்பான அவரது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

போர் முடிவடைந்து வெற்றி பெறப்பட்டு; அதிலிருந்து மீள்வதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் சில கிராமங்கள் முழுமையாக துப்பரவு செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளது. மீளத் தமது இடங்களுக்குத் திரும்புகின்ற ஆவலுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நிலக்கண்ணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் மயூரி போன்ற துணிச்சலுள்ள பெண்கள் எப்போதும் நன்றியுடன் பாராட்டப்படவேண்டியவர்களாவர்.

நித்தியபாரதி

Comments