பிளஸ்- மைனஸீக்குள் திணறிக்கொண்டிருக்கும் தீர்வு அன்று 'சமாதானப் பொறி" - இன்று 'பேச்சுவார்த்தை பொறியா?"

ஆயுதப் போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாத விடயங்களை வேறு மார்க்க வாயிலாகப் பெற்றுக் கொள்வதற்குச் சர்வதேச நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் முயற்சிக்கின்றனர். அதேவேளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக எந்தவொரு தரப்பினரையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

vanni-52


இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து சகல கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்துவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்லாது அனைவருடனும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன. அரசாங்கத்தின் சார்பில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாடு கடந்த வியாழக்கிழமை 26 ஆம் திகதி நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அப்படியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்துகின்ற பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமையாது என்ற உண்மையை அரசாங்கம் கூறவருகின்றதா?

ஏற்கனவே அரசாங்கம் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வ கட்சிக் குழுப் பிரதிநிதிகளைச் சந்திக்க வைத்து அறிக்கையையும் பெற்றுக் கொண்டது.

தற்போது அனைத்து கட்சிகளுடனும் மீண்டும் பேச உள்ளதாக அறிவித்துள்ளதின் மர்மம்; பின்னணி என்னவென்று தெரியவில்லை. மறுபுறம் அரச தரப்பில் இருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கமைய தீர்வு காண்போம் என்ற செய்தி வந்தது. பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி வந்தது. தற்போது 13 பிளஸ் என்ற செய்தி வருகின்றது. தீர்வு குறித்து மூன்று வகையான நிலைப்பாட்டை அறிவித்து அரசாங்கம் குழப்பிக் கொண்டிருக்கின்றது.


இத்தகைய நிலைப்பாட்டுக்குள் இந்தியா சென்றிருந்த வெளி விவகார அமைச்சர் 13 ஆவது சரத்து குறித்து உடன்பாடு கண்டுள்ளார். அந்த உடன்பாடு 13 ஆவது திருத்தச் சட்டமா அல்லது பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத 13 மைனசா அல்லது 13 உம் பிளசுமா என்று தெரியவில்லை.
உள்நாட்டில் தமிழர் தரப்பில் உரத்துக் குரல் எழுப்ப எவரும் இல்லாத நிலையில்; இருப்பவர்களில் ஒரு சாரார் பிள்ளைப் பூச்சிகளாகவும், மறு தரப்பினர் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருப்பதி னால் அரசாங்கம் எதையும் கூறலாம் என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்குக் களம் அமைத்துக் கொடுத்துள்ளது.


அரசாங்கம் புலம்பெயர் வாழ் தமிழர்களைத் தலையிடியாக நோக்குகின்றது போலும், அதனையே இப் பந்தியில் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சரின் கூற்று உணர்த்தி நிற்கிறது.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாத விடயத்தை வேறு மார்க்கத்தில் புலம் பெயர் வாழ் தமிழர்கள் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டுகின்றார்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் கேட்பது அரசியல் தீர்வைத் தான்; தனி நாடல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

முறையான அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வினை ஆட்சி பீடம் ஏறிய சிங்களத் தலைமைகள் முன் வைத்திருப்பார்களேயாயின் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தோன்றியிருக்காது.


இதனைத் தமிழர் தரப்பு மாத்திரம் கூறவில்லை முள்ளிவாய்க்கால் வரை சிங்களத் தரப்பும் கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழ் மக்களிடையே போராட்டங்களும் வெடித்திருக்காது. கடந்த 60 வருட காலமாகத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண மறுக்கும் சிங்களத் தரப்பு நோர்வேயின் தலையீட்டால் உருவாகிய சமாதான ஒப்பந்தத்தையே சமாதானப் பொறியாக மாற்றி தமிழர் தரப்பை வீழ்த்தியதை தமிழ் மக்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிடுவதற்கில்லை. இந்த அனுபவங் களுக்குப் பிறகும் பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்துக்கொள்வோம் வெளியார் தலையீடு அவசியம் இல்லை என்று கூறி பேச்சுவார்த்தை வலைவிரித்து தமிழர் தரப்பை மீண்டும் ஒரு பொறிக்குள் வீழ்த்துவதே நோக்கம் என்று தமிழ் மக்கள் கருதுவதில் தவறில்லை.


வெளியார் தலையீடு இன்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என்று "பொடிவைத்து', பொறிவைத்து' அரசாங்கம்பேசுவது எதிர்பார்த்ததொன்று. ஆனால் அரசியல் சாயம் பூசிக்கொள்ள விரும்பாத இந்து மன்றங்களும் பேசுவதுதான் வியப்பாக உள்ளது. எனவே வெறுமனே தமிழர் தரப்பு மீதும் புலம் பெயர் வாழ் தமிழர்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவதை விடுத்து தீர்வை முன் வைத்து இதயசுத்தியுடன் நடைமுறைப்படுத்துவதே ஆரோக்கியமான சூழ்நிலைக்கு வித்திடும் இது இவ்வாறு இருக்க நாளை 30 ஆம் திகதி முதல் ஜூன் 17 ஆம் திகதி வரை ஐ.நா சபையின் மனித உரிமை 17 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை எடுக்கப்படுமா என்பது குறித்துத் தெரியவில்லை.


தருஷ்மன் அறிக்கைக்கு இலங்கை பதிலளிக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கொண்டு வருவதை சார்பான நாடுகள் தடுக்கலாம். இவ்வாறான ஒரு நிலையை உருவாக்கிக் கொள்வதற்காக இலங்கையின் சார்பில் அமைச்சர்களும் தூதுவர்களும் உயர் அதிகாரிகளும் மனித உரிமைகள் சபையை நோக்கிப் படை எடுத்துள்ளனர்.


மறுபுறம் தமிழ் அமைப்பினரும் அங்கு படையெடுத்துள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்தும் வருகின்றனர். இந்த விடயத்தில் அமெரிக்கா எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பது தெரியவில்லை. ஏனெனில் 2009 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட கண்டன அறிக்கை பிழையானது என்று அப்போது தீர்மானம் நிறை வேற்றப்பட்டபோது மனித உரி மைகள் சபையில் அமெரிக்கா அங்கம் வகிக்கவில்லை இப் பொழுது அங்கம் வகிக்கின்றது.


சிரியாவுக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாடு காரணமாக 29 நாடுகள் ஆதரவாக அணிதிரண்டதை மறுப்பதற் கில்லை.


இலங்கைக்குச் சாதகமாகவா அல்லது பாதகமாகவா நிலைமை உருவெருக்கும் என்பது நாளை தெரியவரும் இவ்வேளையில் இந்தியாவின் நிலைப்பாடும் அதன் பரப்புரையும் முக்கியமானது.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் தற்போது இந்தியா அங்கம் வகிக்கவில்லை. ஆனால், இந்தியாவின் நடவடிக்கைகளை ஆபிரிக்க, ஆசிய நாடுகளும், ஒரு சில மேற்குலக நாடுகளும் பின்பற்றலாம் என்பதால் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை முயன்றிருந்தது என்று ""இந்தியன் எக்ஸ்பிரஸ்'' செய்தி வெளியிட்டிருந்தது.


ஐ.நா.வின் இலங்கை விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை ஆராயப்படும் போது முன்னைய தருணங்களை போலல்லாமல் இலங்கையை விடுவிக்கக் கூடாது என்று சென்னை பல்கலைக் கழகத்திற்கு, தென்கிழக்கு ஆசிய கற்கைகள் நிலையத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி வி. சூரிய நாராயணனும் சென்னை ஆசிய கற்கைகள் நிலையத்தின் ஆய்வாளருமான அஸாக் பொனோ எழுதியுள்ள கட்டுரை மூலம் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

வி.தேவராஜ்

Comments