காரியம் சாதிக்க முனையும் நாடுகள் போர்க்குற்ற விவகாரத்தை வைத்துக் கொண்டு, இலங்கையை மிரட்டத் தொடங்கியுள்ள சர்வதேசம்...........?
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை இலங்கை அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளி விட்டுள்ளது.
* என்னதான் அரசாங்கம் அதை நிராகரிப்பதாகவும், சட்ட வலுவற்றதென்றும் வாதிட்டாலும், இது புறந்தள்ளி விடக் கூடியதொரு விடயம் அல்ல. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கை தொடர்பாக தன்னால் மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது என்று கூறியிருப்பினும், இதை வைத்துக் கொண்டு அவராலோ அல்லது ஐ.நாவினாலோ எதுவும் செய்து விட முடியாது என்று கருத முடியாது. சீனா, ரஸ்யா போன்ற நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்தாலும் கூட, பாதுகாப்புச் சபையில் அல்லது மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு வழிகள் இல்லையென்று கூற முடியாது.
ஏனென்றால் வீட்டோ அதிகாரம் பற்றி அமெரிக்காவோ மேற்குலகமோ அல்லது ஐ.நா பொதுச்செயலரோ அறிந்துள்ள அளவுக்கு வேறெவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.,
இந்த அறிக்கையை மேற்குலகம் குறிப்பாக, அமெரிக்கா நினைத்திருந்தால் வெளியே வராமல் தடுத்திருக்க முடியும்.
அறிக்கையை வாங்கி மேசையில் போட்டதுடன் பான் கீ மூன் தனது நகர்வுகளை நிறுத்திக் கொண்டிருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லை.
இலங்கை அரசின் பல்வேறு வேண்டுகோள்களையும் உதாசீனப்படுத்தி விட்டு, பான் கீ மூன் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளார் என்றால், அதன் பின்னணி வலுவானதென்றே அர்த்தம்.
இந்த அறிக்கையைத் தயாரிக்கும் போதும்,வெளியிடும் போதும், இதன் சட்டவலு எத்தகையது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
எனவே ரஸ்யாவும் சீனாவும் எதிர்ப்புத் தெரிவித்தாலும் மேற்குலகம் நினைத்தால் எதையும் செய்யும் நிலையிலே இருக்கிறது என்ற உண்மை அரசாங்கத்துக்குத் தெரியாத விடயம் அல்ல.
ஏற்கனவே போர்க்குற்ற விசாரணை கோரி அழைப்பு விடுத்த அமெரிக்காவும், பிரிட்டனும் ஐ.நாவின் அறிக்கையை வரவேற்றுள்ளன.
இந்தநிலையில் வீட்டோ அதிகாரமுள்ள பிரான்சும் இந்த நாடுகளுடனேயே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதனால் தான் இந்த அறிக்கையைக் கண்டு அரசாங்கம் ஆடிப் போயிருக்கிறது.
அதுமட்டுமன்றி இந்த அறிக்கையை வைத்து உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி தமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளவே பல தரப்பினரும் முயற்சிக்கின்றனர்.
1. ஐ.தேகவைப் பொறுத்தவரையில் உள்ளக விசாரணையைக் கோருகிறது. இன்னொரு பக்கத்தில் அது அறிக்கையை எதிர்க்கிறது. ஆனால் முற்றாக நிராகரிக்கவில்லை. இந்த அறிக்கையை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை எப்படிப் பலவீனப்படுத்தலாம் என்பதே ஐதேகவின் நோக்கமாக உள்ளது. ஐதேகவின் இணை பிரதித் தலைவர் சஜித் பிறேமதாஸ அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்க ஒரு யோசனை கூறியிருந்தார் . சிறையில தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என்பதே அது. இலங்கை அரசைப் போர்க்குற்றங்களில் இருந்து விடுவிக்கத் தன்னால் மட்டுமே முடியும் என்று சரத் பொன்சேகாவும் கூறியிருந்தார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆக, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சரத் பொன்சேகாவை வெளியே கொண்டு வருவது தான் ஐ.தேகவினது திட்டம் வெளியே வருவது தான் சரத் பொன்சேகாவினதும் நோக்கம்.
2. வேறும் பலதரப்புகள் இதை வைத்துக் கொண்டு அரசாங்கத்திடம் இருந்து காரியம் சாதிப்பதற்கே முனைகின்றன. உள்ளூரில் தான் இந்தநிலை என்றில்லை. சர்வதேச அளவிலும் இதேநிலை தான் உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில்.......!
இதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு, இலங்கை அரசை சில விடயங்களை நடைமுறைப்படுத்த வைப்பதற்கு முனைகிறது. அமெரிக்காவின் அழுத்தங்கள் அரசியல் தீர்வு நோக்கியதாக, அல்லது சீனாவின் பக்கம் சாய்வதைத் தடுப்பதற்கானதாக இருக்கலாம்.
3. அதேவேளை, இந்தியாவும் இந்த விடயத்தில் மதில் மேல் பூனையாகவே உள்ளது. அதன் கருத்து இன்னும் வெளியாகவில்லை. மொத்தத்தில் அமெரிக்கா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகளை விட இந்தியாவின் கருத்து என்ன என்பதையே பலரும் முக்கியமாக நோக்குகின்றனர். ஏனென்றால் தெற்காசியாவில் இந்தியாவின் கையை மீறி எதுவும் நடந்து விடப் போவதில்லை என்பது அவர்களின் கருத்து. ஆனால் இந்தியா உடனடியாகப் பதில் எதையும் கூறாமல் தவிர்த்து வருவதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்ற இலங்கை அரசு தவறி விட்டதாக ஒரு கருத்து உள்ளது. குறிப்பாக அரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு விடயத்தில் இந்தியாவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இந்தியாவின் திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஆனால் சீனாவின் திட்டங்களுக்கு கதவுகள் அகலத் திறந்து விடப்படுகின்றன. சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றவும் இலங்கை அரசு தவறியுள்ளது. இந்தநிலையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதைத் தடுப்பதற்கும், தமது ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த வைப்பதற்கும் இந்தியா இந்த விவகாரத்தை ஒரு பிடியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. இதனால் தான் இலங்கைக்கு ஆதரவு அளிக்க இந்தியா தயக்கம் காட்டுவதாக தகவல்கள் கசிகின்றன.
4. அதேவேளை சீனாவின் நிலைப்பாடும் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. இலங்கை அரசு தான், சீனாவின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் கூறிக் கொள்கிறதே தவிர, சீனா அதுபற்றி இன்னும் வாயே திறக்கவில்லை. அதுமட்டுமன்றி கடந்த 21ம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நடத்திய சந்திப்பிலும் சீனத்தூதுவர் பங்கேற்கவில்லை. ஆக, இலங்கையிடம் இருந்து சில விவகாரங்களை அடைவதற்கு சீனாவும் இதை ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணியிருப்பதாகவே தெரிகிறது.
5. ரஸ்யா மட்டும் தான் இந்த அறிக்கை வெளியானதும் இலங்கை அரசுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளது.
ரஸ்யாவைப் பொறுத்தவரையில் விழுந்தடித்துக் கொண்டு ஆதரவளிக்க முன்வந்ததற்கும் காரணம் உள்ளது. மன்னாரில் உள்ள இயற்கை எரிவாயு வளத்தை அது குறிவைத்துள்ளது. மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறுகளை அமைக்க ரஸ்யாவுக்கு அனுமதி வழங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அங்கு பயணம் மேற்கொண்டிருந்த போது இணங்கியிருந்தார். அதை நிறைவேற்றுவதற்காகவே இலங்கைக்கு கைகொடுக்கிறது ரஸ்யா.
மொத்தத்தில் பெரும்பாலான நாடுகள் போர்க்குற்ற விவகாரத்தை வைத்துக் கொண்டு, இலங்கையை மிரட்டத் தொடங்கியுள்ளன.
அல்லது இதை ஒரு கருவியாக்கிக் காரியம் சாதிக்க முனைகின்றன என்பதே உண்மை.
* இந்தநிலையில் இலங்கை அரசின் துரதிஸ்டம் என்னவென்றால், எல்லா நாடுகளையும், எல்லாத் தரப்பினரையும் ஒருங்கே தன்பக்கம் திருப்ப முடியாதுள்ளது தான். ஏனென்றால் ஒருவரின் தேவைகளை நிறைவேற்ற முனைந்தால் அது அடுத்த தரப்பின் அல்லது அடுத்த நாட்டுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். எனவே யாரைத் திருப்திப்படுத்தி யாரைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டு, இந்தப் பிரச்சினையில் இருந்து மீள்வதென்ற தெரிவை மேற்கொள்வது இலங்கை அரசுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கப் போகிறது.
கபில்
Comments