தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும் விவகாரமாகட்டும் அல்லது இலங்கை தமிழர்களை சிங்கள இராணுவம் சிதைக்கும் விவகாரமாகட்டும், இப்போது இலங்கையின் போர்க் குற்றம் அம்பலமான பின்னராகட்டும், தமிழர்கள் விடயத்தில் எதுவானாலும் கள்ள மவுனம் சாதிப்பதே மத்தியில் ஆட்சியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வாடிக்கையாகி விட்டது.
2008 மற்றும் 2009 மே மாதம் வரை விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய இறுதிக் கட்டபோரின்போது அப்பாவி பொதுமக்கள் மீதும்,பச்சிளம் குழநதைகள் மீதும் எரிகுண்டுகள் வீசப்பட்டு கொல்லப்படுவதை பார்த்து, போரை நிறுத்தச் சொல்லுமாறு தமிழகம் பதறி துடித்தபோது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மலையாளி எம்.கே. நாராயணனை தமிழகத்திற்கும், கொழும்புக்குமாக அனுப்பி வைத்து போக்கு காட்டியபடியே கடைசி வரை அசைந்து கொடுக்கவில்லை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு.
2006 ல் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து தமிழகம் மற்றும் புதுவையில் 40 க்கும் 40 இடங்களை திமுக-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியபோது, அவர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள் சோனியா காந்தி மனதுக்குள் இப்படி ஒரு பழி தீர்க்கும் உணர்வு பதுங்கி கிடந்திருக்கும் என்று!
கூடவே காங்கிரஸ் கட்சிக்காக வக்காலத்து வாங்கி வாக்கு சேகரித்து கொடுத்த கருணாநிதி இப்படி நெஞ்சத்தை கல்லாக்கிக்கொண்டு 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி இலங்கை தமிழர்களை கொல்ல துணை போவார் என்று நினைத்திருக்க மாட்டார்கள்!
ஆனால் 2006 தேர்தலில் வெற்றிபெற்றதுமே சோனியா தெளிவாகவே தனது மனதுக்குள் பூட்டிவைத்திருந்த பழி தீர்க்கும் படலத்தை அரங்கேற்ற திட்டமிட தொடங்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவரது விருப்பத்தை நிறைவேற்ற சோனியா வீட்டு பூஜாரிகள் செய்த முதல் காரியம், எங்கோ ஒரு வெளிநாட்டில் செட்டிலாகி இருந்த மலையாளி எம்.கே. நாராயணனை தேடி பிடித்து அழைத்து வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஆக்கியதுதான்.
இந்த நாராயணன், ஆரம்ப காலம் தொட்டே விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு நபர்.1987- 1990 காலப்பகுதியில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டதற்கு,முக்கிய காரணமாக இருந்தவர் இவர்.எம்.கே.நாராயணன் இந்திய உளவுத்துறையான 'ரா'வுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த இவரது தவறான ஆலோசனையின் பேரில்தான், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, புலிகள் மீது வலுக்கட்டாயமாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை திணிக்க காரணமாக இருந்தவர்.
அவ்வளவு ஏன்... இவர் ஒரு விடுதலைப் புலி எதிர்ப்பாளர் என்பதை விக்கிலீக்ஸே அம்பலப்படுத்தியுள்ளது.அவருக்கு விடுதலைப் புலிகளைப் பிடிக்காது எனவும்,சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசி என்றும், இலங்கை போரில் ஒரு பக்கச் சார்பாக அவர் நடந்ததோடு,போரில் அவர் நடு நிலை வகிக்கவில்லை என தெற்காசியா விவகாரங்களுக்கான அமெரிக்க அயலுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் ஓ பிளேக், தங்கள் நாட்டு அரசு தலைமைக்கு அனுப்பிய தகவலில் குறிப்பிட்டிருந்ததை கைப்பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.
இதன் மூலம் நாராயணன் எந்த மாதிரியானவர் என்பதை புரிந்துகொள்ளலாம்.
இப்படி நாராயணன்கள், சிவசங்கர மேனன்களின் துணையோடு,இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரை நடத்திய இந்திய காங்கிரஸ் அரசு,இந்திய தமிழர்களுக்காவது உண்மையானதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.அவ்வப்போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொன்று வீசும்போதெல்லாம்,கள்ள மவுனம் கடைபிடிப்பதே வாடிக்கையாகிவிட்டது.
அண்மையில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இனிமேல் தமிழக மீனவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார்.
ஆனால் அடுத்த சில தினங்களிலேயே உலக கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோற்றுபோனதை பொறுத்துக் கொள்ள முடியாமல், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை மிகக் கொடூரமாக கொன்று வீசினர் இலங்கை கடற்படையினர்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்தபோது அவ்வளவு வீராவேசமாக முழங்கிய சோனியாவிடமும், தற்போது அதே கள்ள மவுனம் - தேர்தல்தான் முடிந்துவிட்டதே!
இதையும் மீறி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று அழுத்தம் அதிகமானால் "இனி இதுபோல் நடக்காது: விசாரணை நடத்துகிறோம், வருத்தமளிக்கிறது, கவலை அளிக்கிறது..." என்றெல்லாம்தான் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகமும், அதன் அமைச்சரும் கூறுவார்களே தவிர, தவறியும் அவர்கள் வாயிலிருந்து கண்டனம் என்ற வார்த்தையோ அல்லது எச்சரிக்கை என்ற வார்த்தையோ வந்துவிடாது.
அதுவே ஆஸ்ட்ரேலியாவில் ஒரு வட நாட்டு இந்தியர் தாக்கப்பட்டாலோ, அல்லது அமெரிக்காவில் ஒரு சீக்கியர் அவமதிக்கப்பட்டாலோ சிலிர்த்துக்கொண்டு எழும் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம், ஒரு சுண்டைக்காய் நாட்டு கடற்படையினரால் கொல்லப்படுவது தமிழன் என்றால் எளக்காரமாகவும், ஏளனமாகவும் நடந்துகொள்ளும்.
இப்படியான ஒரு நிலையில்தான், இலங்கையின் போர்க் குற்றம் அம்பலமாகி அதனை ஐ.நா. நிபுணர் குழுவும் ஒப்புக்கொண்டுள்ள சூழ்நிலையில், அது குறித்து இன்னமும் அதே கள்ள மவுனத்தை கடைபிடித்துக் கொண்டே, சர்வதேசத்திடமிருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கான கமுக்கமான வேலைகளை தொடங்கியுள்ளது காங்கிரஸ் அரசு.
இலங்கை மீதான போர்க் குற்றத்திற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமானால், முதலில் அதுபற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க வேண்டும்.ஆனால் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு, ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே உறுதிபடுத்தியுள்ளார்.
ஆனால் இப்போதும் அதே கள்ள மவுனம்தான் இந்திய காங்கிரஸ் அரசிடம். என்ன செய்யப்போகிறது தமிழகம்?
வெப்துனியா.
Comments