திடசங்கற்பம் பூணுவோம்!

சர்வதேசத்தின் வழிநடத்தல் மற்றும் ஆயுத தளபாட உதவியுடன் தமிழ் மக்களின் உரிமை நிலங்களை கையகப் படுத்தும் நோக்குடன் சிங்கள அரசு முன்னெடுத்த கோர யுத்தத்தினால் முள்ளிவாய்க்கால் வரை காவுகொள்ளப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை திட்டமாகக் கொள்ளமுடியாத அளவிற்கு சிங்களத்தால் மூடிமறைக்கப்பட்டது.


ஆனால், சிங்களம் எதிர்பார்க்காத அளவிற்கு சர்வதேச மட்டத்திற்கு இந்த போர்க்குற்ற ஆதாரங்கள், சிங்கள அரசு சற்றும் எதிர்பார்க்காத நிலையில் வெளியில் கொண்டுவரப்பட்டுள்ளன.

புலம்பெயர்நாடுகளில் வாழ்கின்ற எமது உறவுகள் மற்றும் தமிழக உறவுகள் தமது தொடர் போராட்டங்களால் சிங்களத்தின் கோர முகத்தை வெளிக்காட்டியிருக்கும் நிலையில் - சிங்களம் அடுத்த நிகழ்ச்சி நிரலை அவசரமாகத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் - 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் அவலமான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு தினம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

எந்த ஒரு நாட்டிலும் இடம்பெறாத அளவிற்கு தனது நாட்டு மக்களையே கோரமாகப் படுகொலை செய்த கொடுமை ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் இருந்து சிங்களம் மீள முடியாத அளவிற்கு அதன் கழுத்துவரை போர்க்குற்ற ஆதாரங்கள் வந்து இறுக்கிக் கொண்டு நிற்கின்றன.

தான் நிரபராதி போல் காட்டிக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையினையே எதிர்ப்பதற்கு சிங்களம் துணிந்ததுபோல காட்டி நிற்கின்றது. இதற்குப் பின்னணியில் இந்தியாவே நின்று காய் நகர்த்திக் கொண்டு நிற்கின்றது என்பது தற்போது நடக்கும் செயற்பாடுகளில் இருந்து அப்பட்டமாகத் தெரிகின்றது. இதனை ஜனாதிபதி மகிந்தாவே போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்கொள்ள இந்தியாவின் உதவி அவசியமானது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மகிந்த அரசு தமது ஆதரவாளர்களை பல பகுதிகளிலும் ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஏற்பாடுகளைச் செய்தது மட்டுமல்ல, தான்படுகொலை செய்த போர்க்குற்றத்திற்கு ஆளாகக் காரணமான மக்களையே மிரட்டி, தனக்கு ஆதரவாகவும் ஐ.நா. அறிக்கைக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கவைத்தமை சர்வதேசத்திடமிருந்து தப்பித்துக் கொள்ள. இது சிங்களத்தின் திட்டமிட்ட வன்முறைச் செயற்பாடுகளே. இவை என்று சாதாரண பாமர மக்களே காரணம் சொல்வார்கள்.

இது மட்டுமல்ல போர்க்குற்றத்திற்கு எதிராக கையெழுத்துப்பெறும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கு விசேடமாக இறக்கப்பட்ட சிங்கள காடையர்கள் யாழ்.குடா உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதி எங்கும் வீதி வீதியாகச் சென்று அப்பாவி மக்களை கடும் தொனியில் மிரட்டி வற்புறுத்திக் கையப்பம் பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இரத்தக் கையப்பங்களைச் சேகரிக்கும் நிகழ்வொன்றை கடந்தவாரம் கண்டியில் தலைமையேற்று நடத்திய அமைச்சர் மேர்வின் சில்வா, இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் பான் கீ மூன் தலையிட முற்பட்டால், அல்லது அது எந்த சர்வதேச விசாரணைக்குழுவாக இருந்தாலும் அவர்களைப் படுகொலை செய்ய 25 தற்கொலைக் குண்டுதாரிகள் தற்போதைக்குக் களனியில் தயாராக இருக்கின்றனர் என்று கடும்தொனியில் எச்சரித்துள்ளார்.

அத்துடன் நிற்காத சிங்கள அரசு, அறிக்கைகள் விட்டோ, வேறு வழிகளிலோ வெளிநாடுகளின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் அது உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும் என்று யாழ்குடாவில் நிகழ்வொன்றில் உரையாற்றும்போது கடும்தொனியில் தமிழர்களை எச்சரித்துள்ளார் சிறீலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ச.

இவ்வாறே ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையினால் குழப்பமடைந்துள்ள சிங்கள இனவாத அமைச்சர்கள் தமது வாய்க்குவந்தபடி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனை சிறீலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தெரியப்படுத்தியுள்ளது.

இதேவேளை தமிழகத்தில் கல்விச் சமுகம் உள்ளிட்ட அறிஞர்கள், படைப்பாளிகள் போன்றோர் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுசேர்ந்து போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவு தெரிவித்துக் குரல்கொடுத்து வருகின்றனர். இதற்கு இந்திய மத்திய அரசு ஆதரவுதெரிவிக்கவேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறிவருகின்றனர். இது மத்திய அரசிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்திவருகின்றது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் என்று அவரது பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

எனவே, புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் வரும் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு தினமான மே 18 புதன்கிழமை ஒருமித்து சிறிலங்காவை சர்வதேசக் கூண்டில் நிறுத்த உலக நாடுகளுக்கு உரத்துக் குரல் கொடுக்க திடசங்கற்பம் பூணுவோம்!

நன்றி - ஈழமுரசு_82

Comments