சிறிலங்காவில் அனைத்துலக சமூகம் செயல் முனைப்பற்று இருந்தது ஏன்? நோர்வே கருத்தரங்கில் விளக்கம்

ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவாக, விடுதலைப்புலிகளை வேறொரு அணுகுமுறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை என இரண்டு மூல காரணிகளால் அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென நோர்வே 'தமிழ் கற்கை மைய'த்தின் கருத்தரங்கில் நோர்வேயின் வெளியுறவு அரசியல் ஆய்வு மையத்தின் தலைவரும் முன்னாள் நோர்வே பிரதி வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் ஐ.நா பிரதிநிதியுமான Jan Egeland தெரிவித்துள்ளார்.



முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலங்களுடன் போர் முடிவுக்கு வந்த 2வது ஆண்டு நிறைவினையும், நிபுணர் குழு அறிக்கையினையும் முன்னிறுத்தி, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மீதான கவனக்குவிப்பினைப் பெறுவதற்கும், நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகத்தின் கடப்பாடுகளை வலியுறுத்தவும் மே 19ம் நாள் 'நோர்வே தமிழ் கற்கை மையம்' ஒஸ்லோ பல்கலைக் கழகத்தில் இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது.

இக்கருத்தரங்கு ஒஸ்லோ பல்கலைக் கழகத்தின் சமூக மானிடவியல் துறைப் பேராசிரியர் Øivind Fuglerud தலைமையில் இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் நாளிதழில் அனைத்துலக அரசியல் கட்டுரைகளையும் பத்திகளையும் எழுதி வரும் ஊடகவியலாளர் Kristoffer Rønneberg முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் வெளியுறவு, பாதுகாப்பு விவகாரக் குழு உறுப்பினருமான Morten Høglund சுவீடன் விவசாய அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா ஆகியோரும் கருத்துரைகளை வழங்கினர்.

Jan Egeland தனது கருத்துரையில் மேலும் தெரிவிக்கையில்,

உண்மைகள் கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவது வன்முறை சார்ந்த அவலங்களுக்கு முகம்கொடுத்த தேச மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும் தவறுகள் வெளிப்படுத்தப்பட்டு, பொறுப்புக் கூறப்பட்டு, திருத்தப்படாவிடின் நடந்தேறிய அவலங்களும் தவறுகளும் மீண்டும் நடந்தேறும் அபாயம் உள்ளது. எனவே உண்மைகள் கண்டறியப்பட்டு, நீதி வழங்கப்பட வேண்டும்.

இருதரப்பு மீதான போர்க்குற்றச் சாட்டுகளும் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறிய Jan Egeland, வென்ற தரப்பான கொழும்பு அதிகார மையத்தின் மீதே பொறுப்புக் கூறும் வகையிலான கவனம் குவிக்கப்பட வேண்டும் என்றார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

"தேசிய அரசுகள் தமது சொந்த மக்களை இன அழிப்பு, போர்க்குற்ற மீறல்கள், இனத்துடைப்பு மற்றும் மனிதத்திற்கு எதிரான மீறல்களிலிருந்து பாதுகாக்கத் தவறும் பட்சத்தில் நாங்கள் ஒருமித்தும், விரைவாகவும், வலுவானதுமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்" என 2005ல் இடம்பெற்ற ஐ.நா உயர்மட்டக்கூட்டத்தில் 190 நாடுகள் உறுதியெடுத்திருந்தன.

இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலான விரைந்த செயற்பாடு லிபியா விவகாரத்தில் நடைமுறைப்பட்டது. ஏலவே எச்சரிக்கப்பட்டிருந்த போதும் 2009ல் இலங்கைத் தீவில் நடந்தேறிய அவலமான பேரழிவினைத் தடுக்க ஐ.நா உட்பட்ட அனைத்துலக சமூகம் தவறி விட்டது.

இறுதிக்கட்டப் போரின் போது, நலன்சார் அரசியல் காரணிக்கு அப்பால், அனைத்துலக சமூகம் இரண்டு மூலகாரணிகளால் செயல் முனைப்பு இல்லாதிருந்தது. முதலாவது காரணி, ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கின. பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவு, விடுதலைப்புலிகளை வேறொரு அணுகுமுறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை இரண்டாவது காரணியாகும்.

நோர்வேக்கு முக்கிய பொறுப்புகள் உள்ளன. அதேவேளை, அதன் வகிபாகம் எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமையும். இந்தியா, சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் மூலம் சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுப்பது மிக அவசியமானதாகும் என்பதையும் Egeland சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை, ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதன் ஊடாக அனைத்துலக விசாரணையை நோக்கி நகர்த்தப்படுமா என கருத்தரங்கிற்குத் தலைமை வகித்த பேராசிரியர் Fuglerud கேட்டபோது, பெரும்பான்மை நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் புறநிலை நிலவவில்லை எனவும் இந்நிலையில் அவ்விடயத்தில் அதீத நம்பிக்கையைத் தான் கொண்டிருக்கவில்லை எனவும் Egeland குறிப்பிட்டார்.

2009 மே முதல் வாரம், இறுதிக்கட்டப் போரின் போது, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அடங்கிய சிறு குழுவினருடன் சிறிலங்கா படைத்தரப்பினரால் வன்னிப் போர் முனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனது அனுபவத்தினையும் கண்ணுற்ற காட்சிகளையும் ஆப்தன்போஸ்தன் நாளிதழின் ஊடகவியலாளர் Kristoffer Rønneberg விபரித்தார்.

இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதி தமக்கு வழங்கப்படவில்லை என்பதனையும் அவர் வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எந்தவொரு பொது மக்களும் கொல்லப்படவில்லை என படையதிகாரிகள் திரும்பத் திரும்ப கூறினர். படைத்தரப்பின் தகவல்கள் அனைத்தும் பரப்புரை நோக்கம் கொண்டவையாக இருந்தன. வீதியோரங்களின் அனைத்து வீடுகளும் கட்டடங்களும் அழிக்கப்பட்டிருந்தன.

மனிதப் பேரழிவுகளைத் தடுப்பதற்கும், போரை நிறுத்துவதற்கும் அமெரிக்கா மற்றும் நோர்வேயினால் எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் அவை சிறிலங்கா அரசாங்கத்தால் அடியோடு நிராகரிக்கப்பட்ட - வீக்கிலீக்ஸ் ஊடாகக் கசிந்த ஆவணங்கள் பற்றியும் அவற்றில் பெரும்பகுதி ஆப்தன்போஸ்தனில் தொகுப்பாக வெளியிடப்ட்டமை தொடர்பாகவும் - அவற்றின் முக்கிய பகுதிகள் தொடர்பாகவும் Rønneberg கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா மட்டத்திலும், அதற்கு வெளியில் அனைத்துலக குற்றவியல் நீதி மன்ற மட்டத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குரிய வாய்ப்புகள் நீண்ட கால அடிப்படையில் அமையலாமென Rønneberg நம்பிக்கை வெளியிட்டார்.

புவியியல் சார் அரசியல் மூலோபாய அடிப்படையில் அனைத்துலக சமூகத்திற்குச் சிறிலங்கா முக்கியமாகவுள்ளமையே அனைத்துலக சமூகத்தின் முரண்நிலைக்கான காரணியாகும்.

சிறிலங்காவைச் சீண்டுவதன் மூலம், கீழைத்தேச பிராந்திய வல்லரசுகளுடன் சிறிலங்கா நெருக்கமாகிவிடுமென்பதுவே அனைத்துலக சமூகத்தின் அச்சமாகும். சிறிலங்காவை இழப்பதற்கு அமெரிக்கா தயாராகவில்லை என அமெரிக்க செனற் அவை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமையை அவர் தனதுரையில் கோடிட்டுக்காட்டினார்.

தொடர்ந்து முன்னேற்றக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரக் குழு உறுப்பினருமான Morten Høglund தனதுரையில், 2004 ஏற்பட்ட சுனாமி பேரழிவு இன நல்லிணக்கத்திற்கும் தீர்வுக்குமான ஒரு கருவியாக பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்பு நிலவியது. அது நடக்கவில்லை. 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வென்ற சிறிலங்கா அரசாங்கம் நேர்மையான முறையில் தமிழ் மக்களின் இதயங்களை வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. அவ்வகையிலும் எதுவும் நிகழவில்லை.

சிறிலங்கா விடயத்தில் நோர்வேயின் வகிபாகம் தற்பொழுது மாற்றமடைந்துள்ளது. சிறிலங்காவில் நோர்வே தொடர்பான நல்லபிப்பிராயம் இல்லை. சிறிலங்கா விவகாரத்தை ஐ.நா மட்டத்தில் அணுகுவது அவசியமானது. உலகளாவிய நிலையில் மனித உரிமைகளைப் பேணுவது ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் முதன்மை இலக்கு. ஆனால் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏகமனதான ஆதரவினையும் பாராட்டுதலையும் அது தெரிவித்திருந்தது.

நோர்வேயின் 'Christian Michelsens' ஆய்வு நிறுவனத்தால் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்கு குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்படுகின்றமை முக்கியத்துவம் வாய்ந்தது.

சிறிலங்காவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் நோர்வேயின் வகிபாகம் இல்லாத இன்றைய சூழலில் நடுநிலைப் பாத்திரத்தை கைவிடுவதும் சில வேளைகளில் தேவையானதொன்றாக இருக்கலாம் என வும் Morten Høglund தெரிவித்தார்.

நீதியான கவுரவமான வாழ்வினை அமைக்கக் கூடிய தீர்வினை தமிழ் மக்கள் கோருவதாகவும் அதற்கான காத்திரமான செயற்பாடுகளை அனைத்துலக சமூகத்திடம் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா தனதுரையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் நம்பிக்கை மட்டுமே தமிழ்ச் சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி வந்துள்ளது. போர்க்குற்றங்கள் பற்றிய ஐ.நா அறிக்கை அந்த நம்பிக்கைக்கு மேலுமொரு ஒளியைத் தந்துள்ளது. "விழித்துக் கொள்வதற்கான அழைப்பு மணியாகவும்" அது அமைந்துள்ளது.

தற்போதைய சூழலில் புலம்பெயர் தமிழர்களே அரசியல் தளத்தில் சுதந்திரமாக இயங்க முடியும். பிரச்சினையை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வதற்கான திறவுகோலாகவும் புலம்பெயர் தளமே உள்ளது. புலம்பெயர் தமிழர்களை சிறிலங்கா அரசாங்கம் ஏன் அச்சுறுத்தலாகப் பார்க்கின்றது என்பது இங்கு கவனிக்கத்தக்க கேள்வியாகும்.

சிறிலங்கா அரச பொறிமுறையின் ஊடாகத் தமக்கு நீதி கிடைக்கும் எனத் தமிழ் மக்கள் நம்பவில்லை. இவ் விடயத்தில் அதை;துலக சமூகத்தின் பொறுப்பு முக்கியமானது எனவும் பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா வலியுறுத்தினார்.

கருத்துரைகளைத் தொடர்ந்து கேள்வி நேரமும் கருத்துப்பரிமாற்றமும் இடம்பெற்றது. நோர்வேயின் வகிபாகம், தமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்திடம் எதிர்பார்க்கும் விடயங்கள், நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையிலான அனைத்துலக விசாரணைக்கான வாய்ப்புகள் போன்ற பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு, அவை தொடர்பான கருத்துகளும் பகிரப்பட்டன.

இக் கருத்தரங்கில் தென் சூடான் அரசாங்கத்தின் இரு பிரதிநிதிகளும் அவதானிப்பாளர்களாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் நிறைவுரையாற்றியமை உற்சாகம் தருவதாக அமைந்தது.

நோர்வேஜிய மற்றும் தமிழ் மக்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இக்கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments