ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவின் அறிக்கை வெளியானதையடுத்து சிறிலங்கா அரசு அதற்கெதிரான பிரசாரங்களை பல முனைகளில் தீவிரப்படுத்தியிருக்கிறது. தமிழர்களும் இந்த அறிக்கையை நிராகரிக்கின்றனர் என காட்டுவதற்கான முயற்சியில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல கோணங்களில் இடம்பெற்று வருகிறது. வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் இதற்காக அந்தந்த நாடுகளில் உள்ள தமிழர்களை வளைத்துப்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. சிறிலங்கா தூதரகங்களின் இந்த மாயவலையில் வெளிநாடுகளில் உள்ள சில தமிழ் அமைப்புக்கள் வீழ்ந்திருப்பதாக தெரியவருகிறது.
அண்மையில் கனடா ரொறொன்ரோவில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளை அழைத்து கனடாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வாஹிஸ்வரா அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் விருந்தளித்துள்ளார். இந்த விருந்தில் சென் மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடா கிளைத்தலைவர் ஸ்ரான்லி செல்லையா, உறுப்பினர்களான ரேணு டானியல், வெஸ்லி டானியல், அமிதாம்சன் முருகேசபிள்ளை, சிறி முரளீதரன், சான் ரஜேந்திரன், சிவம் விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருந்தின் முடிவில் சிறிலங்கா தூதுவரின் அத்தனை வேண்டுகோள்களையும் தாம் நிறைவேற்றுவதாகவும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்து சிறிலங்கா தயாரித்திருக்கும் அறிக்கைக்கு ஆதரவாக தாம் கையொப்பம் இடுவதுடன் அதற்காக கனேடிய மக்கள் மத்தியிலும் பிரசாரம் செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர் என இந்த விருந்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளில் ஒருவர் தெரிவித்தார். ஆதாரப் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
Comments