புரட்சித் தலைவியும் – புரட்சி நடிகரும் தமிழக அரசியலில்..

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இரு பெரும் நட்சத்திரங்கள் தமிழக அரசியல் வானில்

பாலஸ்தீன பிரச்சனையைவிட பாரிய பிரச்சனையான இலங்கைத் தமிழர் பிரச்சனையை தீர்க்கும் அரிய வாய்ப்பு நெருங்குகிறது.. முதல்வர் வாய்ப்பை தவற விடக்கூடாது.

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நட்புடன் இருக்கும் புதிய காலம் மலர்ந்துள்ளது. அற்புதமான வாய்ப்பு தவற விடக்கூடாது.

உலகத்தில் ஏற்பட்டுவரும் ஜனநாயக மாற்றம் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதத்திற்கு மூடுவிழா நடாத்தி வருகிறது. ஆகவே புதிய ஜனநாயக மாற்றத்தை புரிந்து கொள்வது அவசியம்.

இனி…

தமிழகத்தின் முதலமைச்சராக நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்த அனுபவம் கொண்ட செல்வி. ஜெயலலிதா பதவியேற்கவுள்ளார். அதேநேரம் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார். தமிழக அரசியலிலும், உலக அரசியலிலும் இதுவரை நாம் கேள்விப்படாத புதிய மாற்றம் இதுவாகும். ( மு.கருணாநிதி திரைப்பட வசனகர்த்தாவே அல்லாது நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்த ஒருவரல்ல. )

இதுவரை காலமும் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அவரை ஏற்று பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நடக்க வேண்டிய பாத்திரத்தை மு.கருணாநிதி வகிக்கவில்லை. அதற்குப் பதிலடியாக செல்வி. ஜெயலலிதாவும் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அவருடன் சேர்ந்து செயற்படவில்லை. ஆனால் இப்போதுதான் முதல் தடவையாக சேர்ந்து செயற்படக்கூடிய ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தமிழகத்திற்கு வாய்த்துள்ளன. முக்கியமான தீர்மானங்களில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயற்படக்கூடிய புதிய வாய்ப்பு கடந்த 25 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக வாய்த்துள்ளது.

எந்தத் தீர்மானத்தை ஆளும் கட்சி எடுத்தாலும் அது சரியோ தவறோ எதிர்த்து கேலி செய்வதே எதிர்க்கட்சி என்ற கருத்தே தமிழக சட்டசபையின் வரலாறாக உள்ளது. ஈழத் தமிழர் படுகொலை செய்யப்பட்ட வேளைகளில் எல்லாம் இந்த ஈகோ பெரும் நாசமான ஈகோவாக விளங்கியும் வந்துள்ளது. இந்த நிலையில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு கிடைத்துள்ள வாய்ப்பு மிகவும் பெரியதாகும். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நடக்கப்போவதாக அவர் தெரிவித்திருப்பது மகிழ்வு தரும் செய்தியாகும்.

பொதுவாக எதிர்க்கட்சி என்பது தோல்வி விரக்தியுடன் சட்டசபைக்கு வருவதே மரபாக இருந்தது. இப்போதுதான் வெற்றி மகிழ்வுடன் ஒரு கட்சி சட்டசபைக்கு எதிர்க்கட்சியாக வருகிறது. எனவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து கொண்டுவரும் தீர்மானங்கள் வடஇந்திய அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தைக் கொடுக்கும். தமிழகத் தமிழரை பிரித்து ஆண்ட அவர்களுடைய பழைய அரசியல் பலத்த நெருக்கடியை சந்திக்கும்.

ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயற்படும் காலம் வந்தால் தி.மு.க என்ற கட்சி மறுபடியும் பெரிய கட்சியாக எழும்ப முடியாத நிலைக்கு பின் தள்ளப்படும். எம்.ஜி.ஆர் காலத்தைப் போன்ற பலமான சட்டப்பேரவை உருவாக அது வழியாக அமையும். ஆகவே ஜெயலலிதா – விஜயகாந்த் இருவரும் சந்தித்துப் பேசும் மரபை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒருவரை மற்றவர் சந்திக்காத ஈகோவை வளர்த்துவிடக்கூடாது. ஜெயலலிதா பதவியேற்பு வைபவத்திற்கு விஜயகாந்தை அழைத்தது பாராட்டுக்குரியது. அவரும் ஜெயலலிதாவின் திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான உதவிகளை வழங்க வேண்டும். மறுபுறம் அறுதிப் பெரும்பான்மை இருக்கிறதே என்பதற்காக அதிமுக எதிர்க்கட்சியை புறக்கணித்து நடக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் சிறந்த வளமுள்ள மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய திறமையை மு.கருணாநிதி காலத்தில் சரியாக பயன்படுத்தியதாகக் கூறமுடியாது. இதற்கு சிறந்த உதாரணம் சினிமா தயரிப்பாளர் சங்கமாகும். அங்கு இருக்கும் குப்பை போன்ற கடிதங்களும், ஒழுங்கு முறையற்ற செயற்பாடுகளும் கலைஞர் ஆட்சிக்கு நல்ல அடையாளமாகும். தயாரிப்பாளர் சங்கத்தில் பணம் கட்டி, பல ஆண்டுகளாக அதற்கான அட்டைகூட கொடுக்காமல், போட்ட கடிதத்திற்குக்கூட கிடைத்தது என்ற பதில்கூட கொடுக்காத தலைவராக இராம.நாராயணன் பணியாற்றியிருக்கிறார். ஏழு கோடி மக்களை வைத்துக்கொண்டு சினிமாவை இவ்வளவு நெருக்கடிக்குள் தள்ளியது கலைஞர் ஆட்சியின் மாபெரும் குறைபாடாகும். ஒரு முதலமைச்சர் தானே படமெடுத்து தனது கட்சித் தொண்டர்களை கட்டாயப்படுத்தி படம்காட்டிய கதை உளியின் ஓசை காலத்தில் இருந்தே தொடர்ந்தது. இத்தகைய குறைபாடுகள் சகல இடங்களிலும் கிளைவிரித்து பரந்து கிடக்கின்றன.

மேலும் தமிழகத்தின் போக்குவரத்தில் யாதொரு ஒழுங்கு முறையும் கிடையாது. ஓர் உதாரணம் : உதயம் திரையரங்கிற்கு முன்னால் உள்ள சந்தியில் வாகனங்கள் திரும்புவதற்கு எடுக்கும் நெருக்கடி மிக மோசமானது. நயகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து தற்கொலை செய்வது போன்ற பயங்கரமான சாலை ஒழுங்காக உள்ளது. இதுபோல மதுரை முதற்கொண்டு எத்தனையோ உதாரணங்களை தர முடியும். எனவே சாலைகளை சீர்மைப்படுத்தி போக்குவரத்தை செம்மைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொது மலசல கூடங்களைப் பார்த்தாலே காறித்துப்ப நேரிடும், அந்தத் துப்பல்கள் ஆட்சியின் முகத்தில் விழும் துப்பல்களே என்பதை இனியாவது புரிந்து நடப்பது அவசியம்.

மந்திரியைப் பார்ப்பதற்கு 25.000 ரூபா, துணை முதல்வரைப் பார்க்க ஒரு லட்சம், எங்கு போனாலும் விளம்பரம் கொடுங்கள் என்று பணம் சுருட்டும் போக்கு. சேம்பருக்கு போங்கள் முதலில் தமது சஞ்சிகைக்கு விளம்பரம் கேட்பார்கள், தயாரிப்பாளர் சங்கம் போங்கள் அங்கும் அதுதான். சாதாரணமாக ஒரு ஜாதிக்கட்சியிடம் போங்கள் அங்கும் அதுதான். எல்லோரும் ஒரு சிறு சஞ்சிகையை வைத்துக் கொண்டு விளம்பரம் என்ற பெயரில் ஏழைகளின் வயிற்றில் அடிப்பது தொடர் கதையாக உள்ளது. முதல்வருக்கு ஆதரவாக உள்ள சி.பி.ஐ உறுப்பினரென சொல்லி பணம் கறக்கும் கூட்டமும் உள்ளது. இப்படி திரும்பின பக்கமெல்லாம் குறைபாடு. இதற்குள் முதல்வர் வருமிடமெல்லாம் நடிகை நமீதா வருவதும் அவசியம் என்ற கலாச்சாரம் நிலவுகிறது. இத்தகைய கத்துக்குட்டித் தனங்களை இனியாவது நீக்க வேண்டும். இப்படி மிக நீண்ட பணி இரு தலைவர்கள் முன்னாலும் காத்துக் கிடக்கிறது. இப்போது எதிரி யார் என்று அடையாளம் காண வேண்டும். தமிழக மக்களுடைய நல்வாழ்வுக்கான கரைவேட்டித் தடைகளை அகற்றி அண்ணா காலத்து நீர்மையான ஆட்சியை கொண்டு வரவேண்டும். உண்மையான எதிரி கலைஞரோ தி.மு.கவோ அல்ல காத்துக்கிடக்கும் கடமைகளே.

இவைகளை எல்லாம் வெற்றி கொள்ள ஆளக்கிடைத்த ஐந்து ஆண்டுகள் போதியதல்ல, ஆகவே அடுத்த தேர்தலிலும் இந்த வெற்றி தொடர வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் புரட்சித் தலைவியும், புரட்சிக் கலைஞரும் நடக்க வேண்டும். மு.கருணாநிதியும், குடும்பமும், அடியாட்களும் விட்ட தவறை இந்த ஆட்சியும் விட்டால் நிலமை அடுத்த தேர்தலில் மாற்றமடைந்துவிடும். இத்தனை தடவை முதல்வராக இருந்தும் மு.கருணாநிதிக்கு தெரியாமல் போன இரகசியம் அதுதான். அவருடைய தோல்விக்கும் அதுவே காரணம். மு.கருணாநிதி போல நல்ல புத்தகம் அ.தி.மு.கவிற்குக் கிடையாது. கருணாநிதி சறுக்கிய இடங்களில் சறுக்கி விடாதீர்கள். சிறப்பாக ஈழத் தமிழர் விவகாரத்தில் நல்ல வாய்ப்பு வருகிறது. இறுகிப் பிடித்தால் அதிமுகவை அடுத்த இரண்டு தேர்தல்களில் அசைக்க முடியாது. ஈழத் தமிழரின் பிரச்சனையை சீர் செய்த தலைவர் என்ற மங்காப்புகழை 2 ஜி ஸ்பெக்ரம் பண ஆசையில் கலைஞர் கோட்டைவிட்டுவிட்டார். செல்வி. ஜெயலலிதா அதைக் கோட்டைவிட்டுவிடக் கூடாது.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை, சர்வதேச ஆதரவு யாவும் புதிய சூழலை உருவாக்கியுள்ளது. தமிழக முதல்வர் பாலஸ்தீன பிரச்சனையைவிட பெரியதோர் பிரச்சனையை வெல்வதற்குரிய காலம் கனிந்து வருகிறது. அந்தப் புகழை அவர் பறிக்க வேண்டும். அதைக் கெடுக்க சில பார்ப்பனியர்கள் வேதமோத வருவார்கள், ஜெயலலிதா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழக முதல்வரின் பதவியேற்பு நிகழ்வுக்கு எமது மகத்தான பாராட்டுக்கள்.

அலைகள் ஆசிரிய பீடம் 15.05.2011

Comments