காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம்! – சீமான்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDQknxqtxio8jiFmBZaL5VCIPLmDSjpEYsdRgN-gYrqJU3xLqxSlS-HAVQTVSoa1giZxhRBZ73_0MT-NdZIFV-FX8Wok3HvjUnET3O5n4_wJITJahHl-tfR5BJxj23JDjomnTBhy9j37M/s1600/seeman1.jpgகாங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சி அடியோடு காணாமல் போகும், என்ற நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்தார்.

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் பொதுக் கூட்டம் நேற்றிரவு நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் நிறுவனரும், இயக்குநருமான சீமான் கலந்து கொண்டு பேசினார்.
Picture

அப்போது அவர் கூறியதாவது:

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஐ.நா.சபை அறிவித்துள்ள போர்க் குற்றவாளி விசாரணைக்கும், இலங்கையில் முள்வேலிக் கம்பிக்குள் அடைபட்டுக் கிடக்கும் நம் உறவுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 20 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க கோரி வலியுறுத்தியும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இலங்கை முள்ளி வாய்க்காலில் பல்லா யிரக்கணக்கானவர்ககள் கொல்லப்பட்ட இந்த நாளை (மே-18) அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நம் உறவுகள் துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர். ஆனால் நாம் அப்படி எடுத்துக் கொள்ள வில்லை. வீழ்ந்ததெல்லாம் அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே என நினைத்து இங்கு கூடியுள்ளோம். ஒன்றாய் விழுந்தால் ஒன்பதாய் எழுவோம் என தமிழீழ தேசிய தலைவர் கூறியதற்கு இணங்க, லட்சமாய் விழுந்து கோடியாய் எழுந்து நிற்கிறோம்.

நாம் வீழ்ச்சிக்காக கண்ணீர் சிந்தும் கூட்டமல்ல. எழுச்சிக்காக ரத்தம் சிந்தும் கூட்டம். கட்சி தொடங்கிய 7 மாதங்களில் 5 மாதங்கள் நான் சிறையில் இருந்தேன். மீதி நாட்களில் என்ன சாதித்தது நாம் தமிழர் கட்சி என்று கேட்பார்கள். இனத்தின் எதிரிகளை அடியோடு அழித்தொழித்தோம். பிறந்து 1 ஆண்டு கூட ஆகாத இந்த நாம் தமிழர் எனும் குழந்தை, காங்கிரஸ் எனும் இன எதிரியின் மார்பில் எட்டி உதைத்து மாநிலத்தை விட்டே விரட்டியுள்ளது.

எல்லோரும் இதை தேர்தலாய் பார்த்தார்கள். நாம் தமிழர் மட்டும் இதை யுத்தமாய் பார்த்தது. இது பிரபாகரனின் தம்பி சீமானுக்கும் சோனியாவின் மகன் ராகுலுக்கும் நடந்த யுத்தம். இனத்தை அழிக்க ராஜபக்சே கூட்டத்துக்கு ஆயுதம் தந்த காங்கிரஸ் அடியோடு ஒழிந்தது இந்தத் தேர்தலில்.

என் அண்ணன் பிரபாகரனை பெற்ற வீரமாதா திருமதி பார்வதி அம்மாள் அவர்களுடைய புனித சாம்பல் எனக்கு வந்தது. என்னைப்போலவே அண்ணன் நெடுமாறன், அண்ணன் வைகோ அவர்களுக்கும் வந்தது. அவர்கள் இருவரும் கடல் நீரிலே கரைத்தார்கள். ஆனால் நான் பத்திரமாக இன்னும் என் அறையில் வைத்திருக்கிறேன். என்றைக்கு என் லட்சியத்தை தொடுகிறேனோ, அன்றுதான் என் தாயின் சாம்பலை நான் கரைப்பேன்.

என் தாயின் சாம்பல் மட்டுமல்ல. தமிழ் சொந்தங்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்களை உசுப்பிவிடுவதற்காக தீக்குச்சாக மாறி வெந்து செத்தானே என் தம்பி முத்துக்குமாரின் புனித சாம்பலும் என்னிடத்தில்தான் இருக்கிறது. அதையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். என் இனம் என்று விடுதலை அடைகிதோ, அன்றுதான் அந்த சாம்பலை நான் கரைப்பேன். அதுவரை ஒவ்வொரு போருக்கும், ஒவ்வொரு களத்திற்கும் நான் செல்லும்போது அந்த சாம்பல் மீது சத்தியம் செய்துதான், நானும் என் தம்பிகளும் களத்திலே இறங்குவோம்.

2 ஜியால் வந்த தோல்வியா இது?

இந்த தேர்தலில் காங்கிரஸுக்கும் அதன் இனத் துரோக கூட்டணிக்கும் கிடைத்த தோல்வி 2 ஜி ஊழலால், குடும்ப ஆதிக்கத்தால் ஏற்பட்டது என கூறி வருகிறார்கள்.

2 ஜி என்பது தேசியப் பிரச்சினைதானே, அப்படியானால் கேரளாவில், அஸாமில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எப்படி வென்றது? 2 ஜி அங்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லையா?

உண்மையான காரணம், எனது இனத்தை அழித்த காங்கிரஸுக்கு சமாதி கட்டுவதே தமிழனின் நோக்கமாக இருந்தது. அந்த காங்கிரஸின் கூட்டாளிகளைக் கவிழ்ப்பதே அவன் நினைப்பாக இருந்தது.

110 ஆண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸ் இன்று அடியோடு சரிந்து கிடக்கிறதென்றால், அது எனது இனத்தைக் கொன்றொழித்த படுபாதகச் செயலுக்கு தமிழன் கொடுத்த பரிசு. பழிக்குப் பழி.

பாமக, விடுதலைச் சிறுத்தை தோல்வி ஏன்?

சரி, திமுகவும் காங்கிரஸும்தான் 2 ஜியால் தோற்றார்கள் என்றால், பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தோற்றது எதனால்? பதில் சொல்ல ஒரு பயலுக்கும் திராணியில்லை.

தமிழ் இனத்தைக் கருவறுத்த கயவர்களின் கூட்டம் மொத்தமாக இந்தத் தேர்தலில் மரண அடி வாங்கியது என எழுத, சொல்ல தைரியமில்லாதவன், தயங்குபவன் எப்படி தமிழனாக இருக்க முடியும்?

ரங்கசாமி தமிழன்…

ஈழத்தமிழர் படுகொலைக்கு காங்கிரசும் திமுகவும் துணை போனதும், அதை தம்பி சீமான் பரப்புரை செய்ததும்தான் இந்தத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முழு காரணம் என்று…நான் சொல்லவில்லை. புதுவை முதல்வராகியிருக்கும் என் ரங்கசாமி பகிரங்கமாக சொன்னார். அவர் முன்னாள் காங்கிரஸ்காரர்தான். ஆனால் தமிழன். நல்ல தமிழன். அதனால் அவருக்கு உண்மையான காரணம் தெரிந்திருக்கிறது.

அப்படியும் இந்தத் தோல்வியில் உனக்கு சந்தேகம் இருக்கிறதா.. இன்னும் இரண்டரை ஆண்டுகள்தான். வா பார்த்து விடலாம், இன்னொரு தேர்தலில். காங்கிரஸ் மற்றும் தமிழின அழிப்புக்கு துணைபோன துரோகிகளுக்கு சொல்கிறேன்.. இந்த சீமான் உயிருடன் இருக்கும் வரை இதுதான் உங்கள் நிலை.

மதவாத பாஜவோடு கூட்டணி சேர எல்லோரும் எப்படி பயந்து வெறுத்து ஒதுங்கி ஓடுகிறார்களோ, அதே நிலைதான் இனி காங்கிரசுக்கும்.

உண்மையி்ல் காங்கிரஸின் இந்தத் தோல்வியில் மகிழ்ச்சியில்லை. ஆனால், பணத்தால், சாதியால் இந்த மக்களாட்சியை வென்று விடலாம் என்ற நினைப்புக்கு தமிழன் கொடுத்த மரண அடிதான் எனக்கு உண்மையான சந்தோஷம்.

சாதி பார்க்காமல், பணத்துக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்காமல், இனத்தைக் கொன்றழித்தவனைப் பழிக்குப் பழி வாங்கிய தமிழனை நினைத்து பெருமைப்படுகிறேன்.

ஆனாலும் எப்படியோ இந்த 5 சீட்டில் ஜெயிச்சிட்டாங்க. இந்த தொகுதிகளுக்கு மட்டும் நான் போகவில்லை என்பது ஒரு காரணம். இங்கே பரப்புரை செய்த நமது தோழர்கள், காங்கிரஸ் தவிர, யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதுதான் இந்த 5-ல் காங்கிரஸ் நின்றுவிட்டது. இல்லையேல் அங்கும் தலை தெறிக்க ஓட்டமெடுக்க வைத்திருப்போம்.

இந்தத் தேர்தல் பரப்புரையில், தமிழன் ஒரு அப்பன் ஆத்தாளுக்குப் பிறந்தவனா இருந்தா தமிழனைக் கொன்றொழித்த காங்கிரஸுக்கு ஓட்டுப் போடக் கூடாது என்று சொன்னோம். தான் ஒரு அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவன்தான் என நிரூபித்துவிட்டான் தமிழன்.

இது எனக்கு கிடைத்த வெற்றி இல்லையடா.. தமிழனுக்கு கிடைத்த வெற்றி. இன உணர்வு கொண்ட அத்தனை பேரின் வெற்றி. காங்கிரசுடன் சேர்ந்து யார் தேர்தலில் நின்றாலும் மானமுள்ள தமிழன் இனி வாக்கு செலுத்தமாட்டான்.

முள்ளிவாய்க்கால் சோகம் நடந்து 1000 ஆண்டுகளா ஆகிவிட்டது… அல்லது நூறு ஐம்பது என ஆண்டுகள் ஓடிவிட்டனவா… இதோ இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த இனப்படுகொலை அது. அந்த ரத்த வாடை இன்னும் என் மக்கள் நாசியில் இருக்கிறது. அதனால்தான் அடித்து விரட்டப்பட்டது காங்கிரஸ்.

நாம் தமிழர் மட்டுமே…

இந்தத் தேர்தலில், ஈழத் தமிழனின் உரிமை, இனத்துக்கு நேர்ந்த அவலம் பற்றிப் பேச இந்தப் பரந்த தமிழகத்தில் ஒரு கட்சி கூட இல்லை. இந்த நாம் தமிழர் மட்டுமே அதைப் பேசியது. இதைவிட அவமானம் வேறு உண்டா… இத்தனை பெரிய இனத்துக்காகப் பரிந்து பேச ஒரே ஒரு கட்சி மட்டும்தானா…

நாமெல்லாரும் தமிழர்கள்தானே… இதை நினைவுபடுத்த நாம் தமிழர் என்று சொல்ல வேண்டியிருக்கிறதே… இதைவிட கேவலம் உண்டா….

தமிழனுக்கு எதிரி ஜாதி மதம்தான்:

தமிழன் ஒற்றுமையாக இருந்தால் வாழ்வு பொன்னாகும், இல்லாவிட்டால் வாழ்வு மண்ணாகும்.

தமிழனின் எதிரி சிங்களவன் இல்லை. வேறு யாரும் இல்லை. அவனது சாதி மத வெறிதான். இந்த வேற்றுமைதான் நம் இனத்தை ஒன்று சேரவிடாமல் பிரித்தே வைக்கிறது. நாம் இனி சாதியின் பெயரால் அறியப்படும் அவலத்தை மாற்றுவோம். இந்த சீமான் ஒரு தமிழன். அதைப் போல நீயும் ஒரு தமிழன். நானும் தமிழன், நீயும் தமிழன்… நாம் தமிழர்!

ராஜீவின் மரணம் பற்றி யாரும் பேசக் கூடாது…

ராஜீவின் மரண்ம் பற்றி இனி யாரும் பேசத் தேவையில்லை. ராஜீவின் கொலை பற்றிப் பேசினால், அந்த ராஜீவ் ஈழத்திலே 12500 தமிழர்களைக் கொன்றாரே, அதைப்பற்றிப் பேசுங்கள்.

இரட்டை கோபுரத்தை தகர்த்த ஒசாமாவை பாகிஸ்தானில் போய் கொன்றுவிட்டு வருகிறது அமெரிக்கா. அதைப்பற்றி ஒரு பயல் பேசியதுண்டா… ஆனால் ஈழத்திலே 12500 பேரை, பீரங்கியால் சுட்டும் நசுக்கியும் கொடூரமாகக் கொன்றது ராஜீவின் ராணுவம். அந்த ராஜீவைக் கொன்றதில் என்ன தவறு? ஒசாமாவுக்கு ஒரு நியாயம் உனக்கொரு நியாயமா?

ராஜீவ் மரணம் பற்றி என்னுடன் நேருக்கு நேர் நின்று வாதாட தயாரா?

இனி ராஜீவ் மரணம் பற்றிப் பேசினால் தோற்றுப் போவோம் என்ற பயம் ஒவ்வொரு காங்கிரஸ்காரனுக்கும் வரவேண்டும்.

பிரிவினை கூடாதா…?

இறையாண்மை என்றும், பிரிவினை கூடாது என்றும் பேசுகிறார்களே… அப்படியானால் உலகம் இத்தனை நாடுகளாகப் பிரிந்ததுதான் எப்படி? கொசோவா, கிழக்கு தைமூர், செர்பியா இப்படி சமீபத்திய உதாரணங்கள் எத்தனை… நீங்கள் செய்தால் போராட்டம்… அதையே தமிழன் செய்தால் பிரிவினைவாதமா?

ஈழத்திலே நடந்தது இனப்படுகொலை, இந்திய துணையுடன் இலங்கை திட்டமிட்டு அரங்கேற்றி படுகொலை என்பதை நிரூபிப்பதே நம் வேலை.

எமக்கான அங்கீகாரத்தை சீனாவோ, ரஷ்யாவோ இல்லை இந்தியாவோ தர வேண்டாம். நாங்களே அதை தீர்மானிக்கிறோம். ஒரு கோடி தமிழர்கள் ஒன்றாய் திரண்டால் அதை சாதிக்க முடியும். அதற்கு ஒரு முன்னோட்டம் இந்த கூட்டம். இவர்கள் கூலிக்கு கூடிய கூட்டமல்ல. கொள்கைக்கு கூடிய கூட்டம்.

நன்றிக் கடனாக…

நாம் தமிழர் என்ற கருத்தை எப்போதும் மனதில் இருத்துவோம்.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். ஆட்சி மாற்றம் நடந்தது. அதற்கு நன்றிக் கடனாக, தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் நல்லாட்சி தருவார் என நம்புவோம். ஊழலற்ற ஆட்சி, உண்மையான ஆட்சியை தருவார் என வாழ்த்துவோம்.

ராஜீவ் கொலையில் மிகச் சாதாரண குற்றங்களுக்காக இருபது ஆண்டுகளாக சிறையில் வாடும் நம் சகோதர சகோதரிகளை விடுவிப்போம். இந்த கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா பரிசீலிப்பார் என நம்புவோம்.

பிரபாகரனே தலைவன்:

சீமான் தலைவன் என்று நினைக்கக் கூடாது. நான் யார் என் இனத்தின் விடுதலைக்கு, உண்மையாக நேர்மையாக அர்ப்பணிப்போடு போராடுகிற எண்ணற்ற தலைவர்களை உருவாக்குகிற ஒரு முதண்மை தொண்டன். அப்படியானால் இந்த கட்சிக்கு யார் தலைவர். இந்த கட்சிக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற 12 கோடி தேசிய இன மக்களுக்கு ஒரே தலைவர் பிரபாகரன்.

நாம் தமிழர் என்கிற கட்சி தேசிய இன விடுதலைக்கான மக்கள் ஜனநாயக புரட்சி. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்காகவா, தமிழினம் மீட்சிக்காக. நாம் தமிழர் கட்சி ஆள்வதற்காகவா, தமிழர்கள் வாழ்வதற்காக. நாம் தமிழர் கட்சி பணத்திற்காகவா, சத்தியமாக இனத்திற்காக. நாம் தமிழர் கட்சி மக்களை வைத்து பிழைப்பதற்காகவா, மக்களுக்காக உழைப்பதற்காக. நாம் தமிழர் கட்சி பதவிக்காகவா, மக்களுக்கான உதவிக்காக. இதனை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனது அன்பு தம்பிகள்.

என் மொழி காக்க, என் இனம் காக்க, என் மண் காக்க, என் மக்களை காக்க, என் உயிருக்கும் மேலாக நின்று போராடிக்கொண்டிருக்கிற எழுச்சிமிக்க இளைஞர்களின் பாசறைதான் இந்த நாம் தமிழர் கட்சி.

ஓயாமல் கொள்கை என்ன என்று கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு 29 இடத்தில் ஓட்டு போட்டீர்கள். இவர்களுக்கு கொள்கை இருக்கிறதா. கொள்கையை கேட்டுக்கிட்டா போட்டீர்கள். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அந்த ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.

ஆனால் இந்த நாம் தமிழருக்கு கொள்கை இருக்கு. அது இன நலம். இலவசங்களை ஒழிப்பது. கல்வி வேலையை கொடு… ஒரு ரூபாயோ நூறு ரூபாயோ, சொந்தக் காசை கொடுத்து அரிசி வாங்கி சாப்பிட்டுக் கொள்கிறான்.

பெட்டி வாங்கினேனா…?

என்னை பார்த்து சிலர் பிரபாகரனிடம் பெட்டி வாங்கி விட்டார். ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கிவிட்டுத்தான் பேசுகிறார் என்றார்கள். பெட்டி வாங்கி பழக்கப்பட்டவர்கள் தான் அப்படி பேசுகிறார்கள். அயோக்கியர்கள்.

மத்திய-மாநில அரசுகளை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கையின் வடக்கு பகுதியில் இருக்கும் இடம் பெயர்ந்தோர் முகாம்களை மூடிவிட்டு அங்கு இருக்கும் தமிழர்களை விடுவித்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்”, என்றார் சீமான்.

முன்னதாக வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் வேலூர் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடை வரை ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் தீரன், சாகுல் அமீது, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வெற்றிக்குமரன் உள்பட பலர் பேசினார்கள்.

Comments