துரத்தி அடியுங்கள் தூதுவிடும் சோனியாவை! - சீறிப்பாயும் சீமான்



''கதரா... கருகிய பதரா... என்கிற அளவுக்கு காங்கிரஸை அறைவேன். எங்களின் உரு அறுத்த காங்கிரஸைக் கருவறுப்பேன்!'' - திருப்பி அடித்த சீமானின் வெறிகொண்ட வேகம் காங்கிரஸ் தோற்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. 63 தொகுதிகளில், 5 தொகுதிகளில் மட்டுமே தப்பித்தோம் பிழைத்தோம் எனக் கரையேறி இருக்கிறது காங்கிரஸ்!!
இது தனிப்பட்ட சீமானுக்கோ, 'நாம் தமிழர்’ கட்சிக்கு மட்டுமோ, கிடைத்த வெற்றி அல்ல. தமிழர் என்கிற இனத்துக்கும், இன மானத்துக்கும் கிடைத்த வெற்றி. இருட்டு, திருட்டு என எண்ண முடியாத அளவுக்கு இங்கே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும்... ஈழத் துயரமும் இந்தியக் கடல் எல்லையில் மீனவர்கள் பட்ட துயரமுமே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைத் துரத்தி அடித்திருக்கிறது! என்கிறார் சீமான்.

''ஸ்பெக்ட்ரம் என்கிற ஒற்றை வார்த்தைதான் தி.மு.க. கூட்டணியை இந்த அளவுக்கு வீழ்த்தியதாகச் சொல்கிறார்களே?''

கிடையாது! ஸ்பெக்ட்ரம் பிரசாரத்தையும் தாண்டி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது. 'ஈழத் தமிழர் படுகொலையும் சீமானின் பரப்புரையும்தான் ஒரே நாளில் புதுச்சேரி அரசியலைப் புரட்டிப்போட்டது!’ என புதுவை முதல்வர் ரங்கசாமி சொல்லி இருக்கிறார். ஈழத்தை நாசம் செய்த காங்கிரஸோடு கூட்டணிவைக்க இனி எந்தக் கட்சியும் முன்வராது. அப்படியே கூட்டணி வைத்தாலும், ஈரக்குலையில் தீப்பிடித்தவனாக இருக்கும் தமிழன் அவர்களை நசுக்கி எறியத் தயங்க மாட்டான்! தோற்றவர்களுக்கு மட்டும் அல்ல... வென்றவர்களுக்கும் இந்தப் பாடம் பொருந்தும். 'ஈழம் குறித்த அரசியல் எல்லாம் இனி எடுபடாது’ என்கிற வார்த்தைகளை மேற்கொண்டு தமிழகத்தில் எவரும் உச்சரிக்க முடியாது!

''வெற்றிக்குப் பிறகு ஈழம் குறித்து பேசிய ஜெய​லலிதா, 'மத்திய அரசால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்’ எனச் சொல்லி இருக்கிறார். இதைத்​​தானே முன்னாள் முதல்வர் கருணாநிதியும் சொன்னார்?''

ஜெயலலிதா மீது நாங்கள் எவ்வித எதிர்பார்ப்பையும் வைக்கவில்லை. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 'தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு. அதற்காக இந்திய ராணுவத்தை அனுப்பிவைக்கவும் தயங்க மாட்டேன்!’ எனச் சொன்னவர் ஜெயலலிதா. உடனே, 'இது ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதம்!’ எனப் பலரும் கூச்சல் கிளப்பினார்கள். இந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈழம் குறித்து அவர் பெரிதாகப் பேசாதது உண்மை. ஆனால், வாக்குப் பதிவுக்குப் பிறகு, 'ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக நிறுத்த இந்தியா முன்வர வேண்டும்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இவற்றைச் செய்யாவிட்டால், போரை நடத்தியதே இந்தியாதான் என்கிற குற்றச்சாட்டை நம்ப வேண்டி இருக்கும்!’ என உரக்கச் சொன்னார் ஜெயலலிதா. அபரிமித வெற்றியை அடைந்தபோதும், 'ஈழ விடிவுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்!’ என்றும், 'ராஜபக்ஷேவின் போர்க் குற்றம் கண்டிக்கப்பட வேண்டியது!’ என்றும் ஜெ. சொன்னார். சட்டமன்றத்தில் இதனையே முதல் தீர்மானமாக அவர் இயற்றினால், புதை மணலாகப் புழுங்கிச் சாகும் தமிழ் மக்களின் வாழ்வில் முதல் மழை விழுந்ததுபோல் இருக்கும்!''

''காங்கிரஸை மூர்க்கமாக எதிர்ப்பவர் நீங்கள். ஆனால், ஜெ. வெற்றி பெற்ற உடனேயே சோனியா டீ பார்ட்டிக்கு அழைத்திருக்கிறாரே?''

மரியாதை ரீதியான அழைப்பு. ஆனாலும், காங்கிரஸைத் தமிழ் மக்கள் துடைத்து வீசி இருக்​கிறார்கள் என்பது தமிழகத்தின் புதிய முதல்வருக்கு நன்றாகத் தெரியும். இன்றைய நிலையில் அ.தி.மு.க-வுக்கு சோனியாவின் தயவு தேவையே இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸைத் தவிர்த்து​விட்டே, பல இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. வலை விரிப்பதும் ஈரல் குலை அறுப்பதும், சோனியாவின் வழக்கமான வேலைதான். இத்தகைய அழைப்புகளை எல்லாம் விரட்டி அடித்து, ஈழத் தமிழர்களின் விடிவுக்கான அழுத்தத்தை ஜெ. கொடுக்க வேண்டும்!

''தமிழ் உணர்வாளர்கள் பலர் மீது முந்தைய ஜெய​லலிதா அரசில் நடவடிக்கை பாய்ந்தது... இப்போது உங்களை நோக்கியும் அத்தகைய அதிரடிகள் பாய்ந்தால்...?''

எதுவாக இருந்தாலும் மகிழ்வோடு எதிர்கொள்வோம். கடந்த ஒன்றரை வருடங்களில் ஐந்து முறை சிறைக்குள் என்னைத் தள்ளியது தி.மு.க. அந்த சிறைவாசம் என்னை சிதைக்கவா செய்தது? உணர்வுகளையும் உத்வேகத்தையும் விதைக்கவே செய்தது. மக்களுக்கான போராட்டங்களை ஓர் அரசு நசுக்குகிறது என்றால், அது மக்கள் விரோத அரசு என்றுதானே அர்த்தம். எல்லாவற்றையும் தாண்டி, 'ஜெ. நல்லாட்சி தருவார்’ என நம்பலாமே!

''முதியவர் என்றும் பாராமல் கருணாநிதிக்கு எதிராகக் கடுமையாக முழங்கி, அவரை நோகடித்துவிட்டோமே என்கிற வருத்தம் இருக்கிறதா?''

அவர் பெற்ற பிள்ளைகளைக் காட்டிலும்... என்னைப்போன்ற தமிழ்ப் பிள்ளைகள்தான் அவரைத் தலையில் வைத்துக்கொண்டாடினோம். கண் முன்னே நடந்த அத்தனைத் துயரங்களையும், ஆட்சிக்காகவும் கட்சிக்காகவும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்​ததை மன்னிக்கவே முடியாது!

போரைத் தடுக்க முன்​வராவிட்டாலும், முத்துக்குமார் தொடங்கி எத்தனையோ இளங்குருத்துகள் தெருவில் இறங்கிய போராட்டங்களை ஒடுக்காமலாவது இருந்து இருக்கலாம்.

தன் குடும்பத்துக்காக அவர் இன்றைக்கு இழந்த ஆட்சியை, தமிழ்க் குடும்பங்களுக்காக அன்றைக்கே இழந்திருந்தால், வரலாறு அவரை வணங்கி இருக்கும். ஈழக் கோரங்களைத் தடுக்க எதையுமே செய்யாத அவர், கனிமொழி கைதைத் தடுக்க உயர்நிலைக் குழுவைக் கூட்டி, 'என் துணைவியின் வீட்டுக்குப் போய் மூன்று நாட்களாகிவிட்டது!’ எனக் கலங்கினார்.

வீட்டுக்குப் போய் மூன்று நாட்கள் ஆனதற்காக வருந்தியவர், எம் மக்கள் நாட்டுக்குப் போய் 30 வருடங்களாகிவிட்டதை நினைக்கத் தவறிவிட்டாரே!

நன்றி: ஜூனியர் விகடன்

Comments