மிக அண்மையில் நிறைவேறிய மலேசியா – அவுஸ்திரேலியா இரு நாட்டு ஒப்பந்தத்தின் கீழ் முன்னரிலும் கூடிய முக்கியத்துவம் UNHCR மலேசியாக் கிளைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இருநாட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் அவுஸ்திரேலியாவிலுள்ள 800 வரையான அகதி அந்தஸ்துக் கோருவோர் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படுவார்கள். இவர்களுடைய விண்ணப்பங்களை UNHCR அதிகாரிகள் பரிசீலனை செய்வார்கள். அதன் பிறகு அகதி அந்தஸ்துக் கோரிக்கை தொடர்பான தீர்மானத்தை இரு நாடுகளும் இந்தக் கிளையின் உதவியோடு செயற்படுத்தும்.
மேற்கூறிய இரு நாட்டு ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த ஒப்பந்தம் UNHCR மலேசியாக் கிளைக்குக் கூடுதல் பொறுப்புக்களைச் சுமத்தியுள்ளது என்பது ஒப்பந்தத்தின் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது.
மலேசியக் கிளை சிறிலங்கா அகதிகள் தொடர்பான முக்கிய தீர்மானத்தை சென்ற நவம்பர் (2010) தொடக்கம் எடுக்கத் தொடங்கியுள்ளது. “தமிழீழ அகதிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதை UNHCR நிறுத்தம்” என்ற தலைப்பில் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பிட்ட அட்டை வழங்கலை இந்த அகதிகளுக்கான ஐநாக் கிளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிறுத்தியுள்ளதாக UNHCR அண்மையில் நடத்திய கூட்டத்தில் அறிவித்துள்ளது. மலேசியாவுக்கு வந்து பதிவு செய்த பிறகு அடையாள அட்டைகளுக்காகக் காத்திருப்போர் பாதிக்கப்படுவார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அடையாள அட்டைகளுக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை 1,700 என்று மதிப்பிடப்படுகிறது. இதைவிட அண்மைக் காலமாக சிறிலங்காவுக்குத் திரும்பிப் போய்விடுங்கள், அங்கு அமைதி திரும்பிவிட்டது என்று சொல்லும் போக்கையையும் UNHCR கடைபிடிக்கின்றது.
இதுதொடர்பில் விண்ணப்பங்களை நிராகரிக்கும் கடிதங்களையும் அகதி அந்தஸ்து கோரும் ஈழத் தமிழர்களுக்கு UNHCR வழங்கத் தொடங்கிவிட்டது. ஆங்கில மொழியில் இருக்கும் இந்தக் கடிதங்களில் “நீங்கள் அகதியாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்குப் பொருத்தமானவரல்ல” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்காத் தமிழர் வாழ்வில் உண்மையில் அமைதி திரும்பிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. வடக்கு கிழக்கில் அபட்டமான இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. திருட்டுக்கள், காணாமற்போதல்கள், ஆட்கடத்தல்கள் வடக்கு – கிழக்கில் நடக்கின்றன.
யாழ் குடா நாட்டில் தலைவிரித்தாடும் சர்ச்சைக்குரிய கைதுகள் பற்றிய சந்தேகங்;கள் மக்களிடையே அச்சமான சூழலொன்றை மீண்டும் உருவாக்கி வருகின்றது. குடா நாட்டிற்கு வெளியே இருந்து வரும் ஆட்களால் பிடித்துச் செல்லப்படும் பொதுமக்களைப் பற்றித் தகவல்கள் அதன் பிறகு வெளிவருவதில்லை.
பிடித்துச் செல்ல வருபவர்கள் தம்மைத் தேசியப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்களென்றும் திருகோணமலை கடற்படைத் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளப் படுத்துகின்றனர். மனித உரிமைகள் ஆணைக்குழு வட்டாரங்கள் இப்படியான கடத்தல்கள் நடப்பதை உறுதிசெய்கின்றன.
வன்னியின் கிளிநொச்சி மாவட்டம் பெரியகுளம், முல்லைத்தீவு மாவட்டம் கல்லாறிலும் சீருடையில் வரும் இராணுவத்தினர் புதிதாகக் குடியேறியவர்கள் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்கின்றனர். மக்கள் இவர்களை அடையாளம் காட்டிய போதும் இராணுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளனர்.
பாலியல் வன்முறைச் சம்பவங்களும் வன்னியிலும் யாழ் குடாவிலும் ஆங்காங்கே நடக்கின்றன. இவற்றை யூஎன்ஏச்சிஆர் அதிகாரிகள் அறிந்தும் அறியாதவர்கள் போல் தமது பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றனர்.
அகதிகள் தொடர்பாக மலேசியா-அவுஸ்திரேலியா நிறைவேற்றிய ஒப்பந்தத்தின் கீழ் மலேசியாவுக்குக் கொண்டுவரப்படவிருக்கும் 800 அகதிகளில் சிறிலங்காத் தமிழர்கள், அப்கான் மற்றும் ஈரான் ஈராக் நாட்டவர்களும் அடங்குவர்.
மலேசியா கொண்டுவரப்படும் சிறிலங்கா அகதிகள் தொடர்பாக UNHCR சென்ற நவம்பர் தொடக்கம் முன்னெடுக்கும் அட்டையை மறுக்கும், கோரிக்கையை நிராகரிக்கும் போக்கைக் கடைப்பிடிக்குமா என்பது முக்கிய கேள்வியாகும்.
01) அவுஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்படவிருக்கும் தமிழ் அகதிகளுக்கு UNHCR என்ன பதில் கூறப்போகிறது.
02) 2010 நவம்பர் தொடக்கம் நடைமுறையில் இருக்கும் அடையாள அட்டை மறுப்பு, அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிப்பு இவர்கள் தொடர்பாகவும் அமுலாக்கப்படுமா?
03) இந்த இரு தரப்பு ஒப்பந்தத்தில் முத்தரப்பாக UNHCR கைச்சாத்திட்டுள்ளதா அல்லது அது தனது வழமையான போக்கில் செல்ல அனுமதிக்கப்படுமா?
இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பது மிக முக்கியம். UNHCR தனது ஈழத்தமிழர்கள் தொடர்பான அண்மைக்காலப் போக்கை மாற்றத் தவறினால் இருதரப்பு ஒப்பந்தம் அர்த்தமற்றதாகிவிடும்.
Comments