இன்று புதன்கிழமை நண்பகல் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்துகொண்டு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல்போனோரை தேடியறியும் குழுவின் இயக்குனர் சுந்தரம் மகேந்திரன் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
கடத்தல், காணாமல் போதல் போன்ற சம்பவங்களைக் கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த காலங்களில் 25 ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். இருப்பினும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கடந்த 2009ஆம் ஆண்டு காணாமல்போன இளைஞர் ஒருவர் 2011ஆம் ஆண்டின் முற்பகுதியில் கண்களைக் கட்டியபடி வவுனியாவில் விடுவிக்கப்பட்டதாகவும் மேற்படி இளைஞன் கடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட இடத்தில் கடத்தப்பட்ட மேலும் பல இளைஞர்கள் உள்ளதாகவும் அந்த இளைஞனின் தாயார் எம்மிடம் தெரிவித்தனர்.
மனித உரிமை அமைப்புகளுக்கு சந்தேகமாகவுள்ள இடங்களை சென்று பார்வையிடுவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். அவசரகாலச்சட்டம், பயங்கரவாததடைச் சட்டம் ஆகியவற்றை நீக்கி காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருவதுடன், தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும்.
நாட்டில் அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய வகையில் சுதந்திரமானதொரு ஜனநாயகம் உருவாக வேண்டும். இந்த நிலையில் முழுமையானதொரு ஜனநாயகம் ஏற்படும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.
இதேவேளை, காணாமல்போன கணவன்மார்களின் மனைவிகள் கூறுகையில், தமது கணவன்மார்கள் வல்வெட்டித்துறையில் நடந்த சுற்றிவளைப்பின்போது காணாமல்போனார்கள்.� எமது கணவன்மார்கள் காணாமல் போனமை தொடர்பில் மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்களிடம் முறையிட்டுள்ளோம். அவர்கள் தொடர்பில் இதுவரையில் எமக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. எமது நாளாந்த ஜீவனோபாயத்தை கொண்டு செல்வதற்கே நாம் கஷ்டப்படுகிறோம் என்றனர்.
புதிய சமதர்ம பத்திரிகையின் ஆசிரியர் நடராஜா ஜனகன் இங்கு தெரிவிக்கையில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போய் இன்றுடன் 500 நாட்களாகிவிட்டன. இலங்கையில் ஊடக சுதந்திரம் மிக மோசமாக ஒடுக்கப்பட்டு வருகிறது என்பதற்கு பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. வெகுஜனத்திற்கும் சர்வதேசத்திற்கும் வெளிக்காட்டுவதற்கானதொரு முயற்சியாகவே இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இதற்கான பதிலை அரசாங்கம் வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.
வன்னியில் வாழ்ந்த 148,000 தமிழர்கள் எங்கே?அரசியல் கைதிகளை விடுதலை செய்..காணாமல் போவதற்கு காரணமான அவசரகாலச்சட்டம், பயங்கரவாதச்சட்டத்தை நீக்கு. காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது…போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறும் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, முன்னாள் இராணுவ த்தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments