எந்த ஒரு நிறுவனமும் செய்யத் துணியாத சில காரியங்களை சனல் 4 தொலைக்காட்சி செய்துவருகிறது. ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டியும், குற்றவாளிகளைத் தண்டிக்கக்கோரியும் அது தனது சக்திக்கு மிஞ்சிச் செயல்ப்பட்டு வருகிறது. ஆனால் பிரித்தானியாவில் உள்ள கடைக்காரர்கள் அதனையும் காசாக்க முயல்கின்றனரே இது எந்த வகையில் நியாயம் ? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். 14.06.2011 அன்று சனல் 4 தொலைக்காட்சி முக்கியமான போர் குற்ற ஆதாரங்கள் அடங்கிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதனை பிரித்தானியாவில் உள்ள பல தமிழர்கள் பார்த்தாலும், சிலர் வேலை நிமிர்த்தமாகவும், பிற காரணங்களுக்காவும் அதனைப் பார்க்கத் தவறிவிட்டனர்.
இந் நிலையில் இதனை எவ்வாறு பார்வையிடமுடியும் என சிலர் தமது நண்பர்களைக் கேட்டபோது, அவை வழமையாக சீ.டி எடுக்கும் சில கடைகளில் 1 பவுன்ஸுக்கு விற்கப்படுவதாச் சொல்லியுள்ளனர். கேட்டதும் கதி கலங்கிப்போன சிலர் அக் கடைகளுக்குப் போய் கேட்டபோது, சனல் 4 நிகழ்ச்சி DVD யாக இருக்கிறது 1 பவுன்ஸ் என்று கடைக்காரர்கள் சொல்லியும் உள்ளனர். இவை ஒரு கடையில் மட்டுமா விற்கப்படுகிறது என ஆரயப்பட்டபோது, மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த DVD யில் இடை இடையே விளம்பரங்களும் போகிறதாம் போதாக்குறைக்கு ! என்ன கொடுமையப்பா ?
ஹரோ பகுதியில், வெம்பிளிப் பகுதி, ரூற்றிங் என்று சினிமா DVD கள் விற்கும் சில கடைகளில், இந்த சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சி DVD யாக அடிக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டு வருவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஐயா கணவான் மார்களே ! தொடர் நாடகங்களை அடித்து விற்றீர்கள், மானாட மயிலாட அடித்து விற்றீர்கள் , ராகமாலிகா அடித்து விற்றீர்கள், புத்தம் புதுப் படத்தையும் அடித்து விற்றீர்கள், இறுதியில் இறந்த தமிழர்களுக்காக யாரோ கஷ்டப்பட்டு ஒளிபரப்பிய நிகழ்ச்சியையுமா விற்றீர்கள் ! நீங்கள் விற்றது DVD அல்ல, தமிழர்களின் தன் மானத்தை ! தமிழர்களின் தேசியத்தை ! அநியாயமாக இறந்த தமிழர்களை அல்லவா விற்றிருக்கிறீர்கள். எங்களை நினைத்து நாமே வெட்கப்படும் அளவுக்கு உங்கள் செயல் சென்றுவிட்டதே... இதனை பொறுக்க முடியாது எழுதும் நிலைக்கும் எம்மையும் தள்ளிவிட்டீர்களே !
உங்களுக்கு நாம் விடுப்பது எல்லாம் ஒரு கோரிக்கை தான் , தயவுசெய்து மேலதிகமாக DVD க்களை அடித்து வைத்திருந்தால் அதனை வேற்றின மக்களுக்கு இலவசமாகக் கொடுங்கள் ! அதுவேனும் உங்கள் பாவங்களைக் கழுவட்டும் ....
Comments
Nilavaan