கொலைக் காட்சி காணொளிகளை காண்பிக்க வேண்டுமென நாம் ஏன் தீர்மானித்தோம்-சனல்-4


செவ்வாய் இரவன்று [14-06-2011] நாங்கள் பார்க்கப் போகும் 'சிறிங்காவின் கொலைக் களங்கள்' என்ற திரைப்படத்தில் காண்பிக்கப்படவுள்ள, இவ்வாறான கொலைக் காட்சிகள், காயப்பட்டோர் தொடர்பான காட்சிகள் மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள் தொடர்பான காட்சிகளை ஒரு பிரிட்டன் நாட்டின் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பார்க்க முடியும் என நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

இவ்வாறு சனல் - 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் இன்றைய நிகழ்வுகள் தயாரிப்பு பிரிவின் பொறுப்பாளர் Dorothy Byrne பிரித்தானியாவை தளமாகக் கொண்ட The Independent ஊடகத்தின் கருத்தாடல் பகுதியில் எழுதியுள்ளார்.

நிர்வாணமாக்கப்பட்ட பெண்களின் உடலங்கள் வீசப்பட்டிருந்ததுடன், ஒரு ரக் வாகனத்தின் பின்னால் அவை இழுத்துச் செல்லப்பட்டிருந்தன. இந்தப் பெண்களின் உடலங்களைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள் நிர்வாணமாக்கப்பட்ட அந்த உடலங்கள் தொடர்பாக மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதுடன், அவற்றைப் பார்த்து வக்கிரமாகச் சிரித்துக் கொண்டனர்.

இந்தப் பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது போன்றே காணொலிக் காட்சியில் தெரிகிறது. முழங்காலில் இருத்தப்பட்ட ஒரு பெண் எவ்வாறு கொல்லப்படுகின்றாள் என்பதை பிறிதொரு செல்லிடப்பேசியில் எடுக்கப்பட்ட காட்சியானது ஆதாரப்படுத்துகின்றது. இவ்வாறு கொடூரமாக நடாத்தப்பட்ட அந்தப் பெண்ணின் மூளைப் பகுதி சிதறடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் இரவன்று நாங்கள் பார்க்கப் போகும் 'சிறிங்காவின் கொலைக் களங்கள்' என்ற திரைப்படத்தில் காண்பிக்கப்படவுள்ள காட்சிகளில் சிலவே இவையாகும். இவ்வாறான கொலைக் காட்சிகள், காயப்பட்டோர் தொடர்பான காட்சிகள் மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள் தொடர்பான காட்சிகளை ஒரு பிரிட்டன் நாட்டின் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பார்க்க முடியும் என நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

இந்த நிகழ்ச்சியைப் பார்க்குமாறு நான் உங்களைத் தூண்டவில்லை. இது மிகவும் பயங்கரமானது. இதனை நீங்கள் பார்க்கும் போது அதில் காண்பிக்கப்படும் காட்சிகளை உங்களால் பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாதிருக்கலாம்.

இவற்றை எனது ஞாபகத்திலிருந்து நீக்குவதற்கு என்னால் முடியாதுள்ளது. இந்தக் காட்சிகளானது இரவு 11 மணிக்கே காண்பிக்கப்படுகின்றது. இதன் கடைசிப் பகுதியானது மிகவும் பயங்கரமானது. கண்ணால் பார்த்து சகிக்க முடியாத பல காட்சிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறான பயங்கரக் காட்சிகளை செய்திகளில் கூட மக்களால் பார்க்க முடியாதிருந்தது.

இந்தத் திரைப்படத்தை எங்களால் முழுமையாகப் காண்பிக்க முடியாமலிருக்கும்: சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போதும் அதன் பின்னரும் சிறிலங்காப் படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை ஆதாரப்படுத்தும் சாட்சியங்கள் உள்ளதாக ஐ.நாவின் வல்லுனர் குழுவானது ஏற்கனவே தெரிவித்திருந்தது. 40,000 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் இந்தப் போரின் போது கொல்லப்பட்டுள்ளனர் என அவர்கள் நம்புகின்றனர்.

பாரிய போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வருமாறு, ஐ.நா வல்லுனர் குழு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியிருந்தது. ஆனால் இதனை சிறிலங்கா அரசாங்கம் செவிமடுக்கவில்லை. யுத்தம் இடம்பெற்ற போது யுத்த வலயப் பகுதியில் என்ன நடந்தது என்பதைப் பார்வையிடுவதற்கு ஊடகவியலாளர்களையோ அல்லது ஐ.நா அதிகாரிகளையோ சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருக்கவில்லை. ஆனால், யுத்தக் காட்சிகளை சிறிலங்கா அரசாங்கமும் தமிழர் தரப்பும் செல்லிடப்பேசிகளின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளன. அதனையே நாம் இப்போது பார்வையிடுகிறோம்.

இராணுவச் சிப்பாய்கள் தமது செல்லிடப்பேசிகளில் எடுத்த காணொலிக் காட்சிகள் மிகவும் பயங்கரமானதாகவும், அதிர்ச்சியை ஏற்படுத்துகின்ற காட்சிகளாகவும் உள்ளன.

யுத்தத்தின் இறுதிப் பகுதியில் படையினரிடம் சரணடைந்த கைதிகளை அவர்கள் எவ்வாறு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதை அவர்களே காட்சிப்படுத்தியுள்ளனர். நீண்ட வரிசைகளில் அடுக்கி விடப்பட்டிருந்த பல இறந்த உடலங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட பல ஒளிப்படங்களும் இத்திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் பலரது முகங்கள் சிதைக்கப்பட்டுள்ளதுடன் பலர் அவர்களது தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த உடலங்கள் எறிகணைகளால் கொல்லப்பட்டதற்கான எந்தவொரு தடயங்களும் காணப்படவில்லை. மாறாக இவர்கள் 'போர் விதிமுறைகளுக்கு' ஏற்ப நடாத்தப்படவுமில்லை.

சிறு பிள்ளைகளைக் கொண்ட குழுவொன்று குழியொன்றிற்குள் இடப்பட்டுள்ளனர். இதில் சில கைதிகள் முதலில் உயிருடன் இருக்கும் காட்சிகளும் இதன் பின்னர் அவர்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படும் காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழர் தரப்பால் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் வேதனையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. வைத்தியசாலைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் இருப்பிடங்கள் இலக்கு வைத்துத் தாக்கப்படும் காட்சிகள் பலமான சாட்சியங்களாக உள்ளன.

சரணடைந்தவர்களை துன்புறுத்தி, சித்திரவதைப்படுத்தி கொலை செய்யும் காட்சிகள் போலியானவை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இவை போலியானவை அல்ல. இவை உண்மையான காட்சிகள் என ஒளிப்பட, கானொலித் துறை வல்லுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ்ப் புலிகளே தமிழ் மக்களைக் கொன்றதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியாகக் கூறுகின்றது. அவர்கள் அவ்வாறு செய்தார்கள் தான். ஆனால் அவர்கள் 40,000 பொது மக்களையும் கொலை செய்யவில்லை. ஆனால் இத்திரைப்படத்தில் பதிவாக்கப்பட்டுள்ள காட்சிகள் தொடர்பாக நாம் என்ன நினைக்கின்றோம் என்பதை உங்களுக்குச் சொல்ல முடியாது.

நீங்களே அதனைப் பார்த்து தீர்மானித்துக் கொள்ளுங்கள். இதைப் போன்ற அராஜகங்களுக்கு பொறுப்பானவர்களை கைது செய்வதற்கு அனைத்துலக ரீதியில் ஏதாவது ஒரு அமைப்பு இருத்தல் வேண்டும். ஒரு நிமிடம் பொறுத்திருங்கள், இதோ இங்கே.....

*Dorothy Byrne is Channel 4's head of news and current affairs

நித்தியபாரதி.

Comments