சனல் – 4 வடிவமைத்துள்ள அடிப்படைக் கருத்துக்கள் ஒரு பார்வை…

சனல் – 4 வன்னிப் போர்க்களத்தின் கொலைக்களத்தை சுமார் ஒரு மணி நேரம் கொண்ட காணொளியாகத் தந்து மானிட நேயமுள்ள மனிதர்களின் இதயங்களை எல்லாம் உறைய வைத்திருக்கிறது. சனல் 4 ன் காட்சிகள் ஒன்று, அதன் கருத்தாக்கம் அதைவிட வேறொன்றாக இருக்கிறது.

சனல் 4 காட்சிகளைவிட அதன் கருத்தாக்கம் 21 ம் நூற்றாண்டின் நவீன ஜனநாயகக் கொள்கைகள் சார்ந்திருப்பதை அடையாளம் காணவேண்டியது தமிழர்களின் கடமை. ஐ.நாவின் தடைகளுக்கு அப்பால், நேட்டோவின் எல்லைகளை தாண்டி, புதிய ஜனநாயக உலகம் ஒன்றைத் தேடி 21ம் நூற்றாண்டின் அரசியல் விஞ்ஞானம் நடக்கத் தொடங்கியிருக்கிறது. அரசியல் கருங்காலிகளையும், கட்டாக்காலிகளையும் கழுவிச் செல்லப்போகும் தூரத்து அலையோசை சனல் 4ன் குரலில் கேட்கிறது. இனி அதனுடைய நோக்கங்களையும், கருத்தாக்கங்களையும் படிப்படியாகப் பார்ப்போம்.

அரசியலில் இருப்போர் பொய் பேசுவது மன்னிக்க முடியாத குற்றம் !

சிறீலங்காவின் அமைச்சர் ஒருவர் போர் முடிந்துவிட்டதாகவும், தமிழ்ப் பொது மக்களை சிங்கள இராணுவம் காப்பாற்றிவிட்டதாகவும் கருத்துரைக்கிறார். இவருடைய கருத்தை முன் வைக்கும் சனல் 4 அதன் பிறகு அவருடைய இராணுவம் நடாத்திய காட்டுமிராண்டித் தனங்களை வரன் முறையாகக் காட்டுகிறது. சிறீலங்கா அரசு சொல்வது ஒன்று செய்வது வேறொன்று என்பதை அது சிங்கள அமைச்சரின் செயல் மூலமாகவே நிறுவுகிறது.

சொந்த மக்கள் மீது குண்டு வீசுவது போர்க் குற்றம் !

ஒரு தடவையல்ல பல தடவைகள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது சிறீலங்கா படைகள் ஷெல் தாக்குதல் நடாத்தி காயப்பட்ட மக்களை கொன்று கொலை வெறியாடுகிறது. இராணுவத்தின் தாக்குதல் புலிகள் மீது மட்டுமல்ல, இராணுவம் பொது மக்கள்பற்றி யாதொரு கவலையும் கொள்ளவில்லை. தன்னுடைய இனம் இல்லை என்ற இன வெறுப்பை படையினரின் நடவடிக்கை தெளிவாகக் காட்டுகிறது. இது ஹிட்லரின் யூத இன அழிப்பு போன்ற செயல் என்பதை அப்பட்டமாக முன் வைக்கிறது காணொளி.

வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களைக் கொன்றது போர்க்குற்றம் !

நடேசன், புலித்தேவன் இருவரும் சிறீலங்கா அதிபரின் சம்மதத்துடன், ஐ.நாவின் அனுமதியுடன் சரணடைகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் கொன்று எரிக்கப்பட்டுள்ளார்கள். சிங்களப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, அரச அதி உயர்மட்டத்தில் இருந்து கிடைத்த தகவலின்படியே அவர்களைத் தாம் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கிறார். ஐ.நாவின் சார்பில் செயற்பட்ட விஜய் நம்பியார் சிக்குப்படும் பொறிக் கிடங்கு இதுதான். கட்டுப்படுத்த முடியாத ஒரு நாட்டுக்கு உதவியது இந்தியா செய்த குற்றம்.

ஐ.நாவின் மெத்தனப் போக்கு மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் !

இப்படியொரு போர்க் குற்றத்தை யார் செய்தார்கள்.. நாடற்ற பயங்கரவாதிகளா இல்லை.. ஐ.நாவில் அங்கத்துவம் வகிக்கும் ஒரு நாட்டின் படைகள் செய்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டை ஐ.நா தனது அங்கத்துவ நாடாக கருத என்ன முகாந்திரம் இருக்கிறது. போர் நடந்தபோது ஐ.நா என்ன செய்தது.. ஒன்றுமே செய்யவில்லை.. போர் முடிந்து இரண்டு வருடங்கள் போய்விட்டன ஐ.நா என்ன செய்தது.. ஒன்றுமே செய்யவில்லை.. ஐ.நா என்ற தாபனத்தால் செய்ய முடியாத கருமங்களை செய்வதற்கு புதிதாக பிரான்ஸ் – இங்கிலாந்து தலைமையில் உருவான புதிய அணி நியாயமானது என்பதை அது மறைமுகமாக ஊர்ஜிதம் செய்கிறது.

பான் கி மூனின் இமாலயத்தவறு!

ஐ.நா செயலர் பான் கி மூன் இவ்வளவு பெரிய அவலம் நடக்க அந்த இடத்தை வெறும் 15 நிமிடங்கள் மட்டும் பார்த்து செல்கிறார். அந்த இடத்தில் ஒரு குறியீடு வருகிறது. இரத்தக் கடலிலும், பிணக்குவியலிலும் நின்று அவர் மாலைகளை ஏற்றுக் கொள்கிறார். அது போர்க்குற்றம் ஐ.நாவிற்குக் கிடைத்த வெற்றி என்ற இரட்டை அர்த்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இரத்தம் படிந்த கரங்களால் சிங்களம் போடும் மாலையை ஏற்கும் கேவலமான இடத்தில் ஐ.நா செயலர் இருந்தார் என்ற காட்சியை விவரித்து, ஐ.நாவிற்கு மாற்றீடு வேண்டும் என்ற உண்மையை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது.

யுத்ததிற்கு துணைபோன நாடுகளின் சர்வதேச குற்றம் !

இன்றைய உலகில் விஞ்ஞானம் அமோகமாக வளர்ந்திருக்கிறது. பேரிடும் ஒரு பக்கத்திற்கு மட்டும் அளவுக்கு அதிகமான உதவிகளை வழங்குவது குற்றம். சீனாவின் விமானம், இஸ்ரேலின் விமானங்கள் இங்கே காட்டப்படுகின்றன. புலிகளும், அரசும் போரிடும்போது யுத்த சமநிலை குலைந்துள்ளது. இப்படிப்பட்ட சமநிலை குலைந்த யுத்தத்தை நடாத்துவது எப்படிப்பட்டது..? ஜப்பானில் அணுகுண்டு வீசியதற்கு இணையான குற்றம். இதற்கு உதவி புரிந்த அத்தனை நாடுகளும் இந்த குற்றத்திற்க்குள் வருகின்றன. யுத்தத்தை நிறுத்த விரும்பாத அவர்களுடைய செயல் போர்க் குற்றத்திற்கு துணைபோன செயலே.

கைகளை கட்டி கொலை செய்வது போர்க்குற்றம் !

சரணடையாமல்: தோல்வியடையாமல் : போர் புரிந்த, ஒருவருடைய கைகளை கட்ட முடியாது. போராளிகள் அனைவரும் கைகளைக் கட்டப்பட்ட பின்னர் சுடப்படுகிறார்கள். சரணடைந்த மனிதர்கள் மீது மரணதண்டனைத் தீர்ப்பளிக்க உலகில் எந்த நாட்டு இராணுவத்திற்கும் உரிமை கிடையாது. அத்தகைய செயல் செய்வோர் போர்க் குற்றவாளிகளே. இதற்கு ஏராளம் உதாரணங்களை அந்த ஒளிநாடா தருகிறது.

பொய்யான இராணுவத் தகவல் ஊர்ஜிதமாகிறது.

மட்டக்களப்பு தளபதி கேணல் ரமேஸ் போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா இராணுவ இணையம் கூறுகிறது. ஆனால் அவர் சிங்கள இராணுவத்தால் விசாரிக்கப்படுகிறார், பின் சித்திரவதை செய்து கொல்லப்பட்டு வீசப்படுகிறார். ஆகவே அரசு மட்டுமல்ல இராணுவமும் பொய்யான தகவல்களையே தந்துள்ளது.

கற்பழிப்பதும் போரும் ஒன்றல்ல.. அது மாபெரும் போர்க்குற்றம்.

இசைப்பிரியா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட புகைப்படங்களைக் காண முடிகிறது. மேலும் அங்கு ஒரு தாய் சாட்சியமளிக்கிறார், தானும் மகளும் ஒன்றாக பாலியல் வன்புணர்ச்சி கொள்ளப்பட்டதாகக் கூறுகிறார். தம்மோடு கைதான அத்தனை பெண்களும் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆகவே பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றால் பாலியல் பலாத்காரமும் செய்யலாமென நினைக்கப்பட்டுள்ளது. அப்படியொரு அனுமதியை இராணுவத்திற்கு வழங்கிய உயர் பீடம் குற்றவாளியாகிறது. சிறீலங்கா இராணுவத்தின் ஒழுக்கக் கேடான பார்வையும், செயலும் தெளிவாகச் சித்தரிக்கப்படுகிறது.

இறந்தவர்களை மதிக்கத் தவறுவது மானிட விரோத செயல்

இறந்த சடலங்களை நிர்வாணமாக்கி அவை பற்றிய தூஷண வார்த்தைகளை பேசுவது மானிட குலத்திற்கே விரோதமான செயல். அதை சிங்கள இராணுவம் செய்துள்ளது. சடலங்களையே மதிக்கத் தெரியாத ஓர் அரசு எப்படி உயிருடன் இருக்கும் மனிதர்களுக்கு உரிமையை கொடுக்கும் என்பது அடுத்த கேள்வி.

சர்வதேச தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காதது குற்றம்.!

சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், ஊடகங்களையும் அப்பகுதியில் இருந்து விரட்டியடித்து, இருண்ட பிசாசு, பிணம் தின்னும் பேய்கள் நடாத்துவது போன்ற -டெவில் ஸ்ரேற்- போரை நடாத்தியது குற்றம். இதனால்தான் இதற்கு போர் என்று பெயரிடவில்லை, சிறீலங்காவின் கொலைக்களம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு நாடு தனது சொந்த மக்களை இப்படி வகை தொகையின்றி அழிப்பது சந்தேகத்திற்கு இடமின்றி சர்வதேச போர்க் குற்றமே.

Comments