மனித உரிமை விவகாரம்: கழுத்தின் மேல் தொங்கும் கத்தி

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.


இப்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான கடந்த திங்களன்று இலங்கை விவகாரம் தான் சூடுபிடித்திருந்தது.


கூட்டத்தொடரை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது இலங்கை விவகாரம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.


இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக ஐ.நா நிபுணர்கள் குழு கூறியிருப்பதையும், அதன் அடிப்படையில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.


அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தை மீளக் கொண்டு வருவது குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


இதன் பின்னர் ஐ.நாவின் சட்டவிரோத படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோ காட்சி பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார்.


அந்த வீடியோ உண்மையானது என்று தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் உறுதி செய்திருப்பதாகவும் கூறிய அவர், இது அந்த இடத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


இலங்கை விவகாரம் இத்தனை இறுக்கமாக இருந்திருக்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்பியிருந்திருக்காது.


ஏற்கனவே ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை ஜெனிவா கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஒரு கருத்து நிலவியது.


பின்னர் அதற்கான வாய்ப்புகள் இல்லையென்றதும் கொஞ்சம் நிம்மதியடைந்திருந்தது அரசாங்கம்.


ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கையை இதுவரை மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கவில்லை. அதனால் இதுபற்றிய விவாதம் நடத்தப்பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்பட்டது.


ஆனால் கூட்டத்தில் முதல்நாளிலேயே இந்த அறிக்கை பற்றிய காரசாரமான விவாதம் தான் நடந்தது.


நவநீதம்பிள்ளை தனது உரையில் அததைக் குறிப்பிட்டுச் சொல்ல, அதற்கு இலங்கை அரசாங்க தரப்பு மறுத்துரைக்க, இலங்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு நாடுகளும் குரல்கொடுக்க, இந்த விவகாரம் சூடு கிளப்பியது.


நிபுணர்குழுவின் அறிக்கை விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்படாமலேயே அது பற்றி ஓரளவுக்கு அலசப்படும் நிலை ஜெனிவாவில் காணப்பட்டது. இதை இலங்கை அரசாங்கம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காது.


அதுமட்டுமன்றி நவநீதம்பிள்ளையின் உரையும் சனல்-4 பற்றி அறிக்கையும், இலங்கைக்கு எதிராகவே இருந்ததால் அரசாங்க தரப்புக்கு நிச்சயம் அதிர்ச்சியாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இலங்கைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஒருபக்கத்தில் நிபுணர்குழுவை நிராகரித்தாலும், மறுபக்கத்தில் அதை வைத்துக் கொண்டு தவறான முடிவுக்குச் சென்று விடக் கூடாது என்று கோரினார்.


உள்ளகப் பொறிமுறை மூலம் ஒரு முடிவு காணும் வரைக்கும் அவசரப்படாமல் பொறுமை காக்குமாறு அவர் அவகாசம் கோரினார்.


ஏற்கனவே ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் இதே வேண்டுகோளை ஐ.நாவுக்கான தூதுவர் பாலித கொஹன்னவும் விடுத்திருந்தார்.


அதனால் தான் பான் கீ மூன் அந்த அறிக்கையை மனிதஉரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத் தொடருக்கு அனுப்பி வைக்கவில்லை.


ஆனால், எப்படியோ அந்த விவகாரம் சந்தைக்கு வந்து விட்டது. என்னதான் இருந்தாலும் இப்போது ஐ.நா அறிக்கையை முன்வைத்து இல்லாவிட்டாலும் சனல்-4 பற்றிய அறிக்கையை முன்வைத்தாவது மனித உரிமைகள் பேரவையில் ஒரு விவாதம் நடக்கும் நிலை உருவாகியுள்ளது.


ஆனால் இந்த விவாதம் அல்லது மீள்தீர்மானம் எப்போது விவாதிக்கப்படும் என்பது குறித்துத் தான் கேள்வி எழுந்துள்ளது. இப்போதைக்கு இந்த விவாதம் வரப்போவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.


அடுத்த கூட்டத்தொடரில் அதாவது செப்ரெம்பரில் நடக்கப் போகும் கூட்டத்தொடர் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கின்ற ஒன்றாக அமையலாம்.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குரிய விவகாரமாகவே உள்ளது. மேற்கு நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு எதிராகவே நிற்கின்றன.


ஜெனிவா கூட்டத்தில் இலங்கைக்காக குரல் கொடுத்த நாடுகள் ரஷ்யா, சீனா, கியூபா மற்றும் பாகிஸ்தான் மட்டும் தான்.


மற்றெல்லா நாடுகளும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே முன்வைத்தன.


அதாவது இலங்கைக்கு ஆதரவாக நின்ற நாடுகள் கூட ஒரு விடயத்தை நிராகரிக்கவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.


இலங்கையில் போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை என்று எந்தவொரு நாடுமே குரல் கொடுக்கவில்லை. போர்க்குற்ற விசாரணைகள் ஏதும் நடக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் சொல்லவில்லை.


உள்ளக ரீதியாக இலங்கை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கையை மட்டுமே அவை முன்வைத்துள்ளன. இது இலங்கைக்கு மற்றொரு சவாலை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது, சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையிலான உள்ளக விசாரணைகளை அரசாங்கம் நடத்தத் தவறினால் இப்போது ஆதரவுக் குரலைக் கொடுக்கின்ற நாடுகளும் கூட எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.


ஜெனிவாவில் இப்போது நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஏதும் கொண்டு வந்து விவாதம் நடத்தப்படும் வாய்ப்புகள் இல்லாத போதும் அந்த ஆபத்து முற்றாக நீங்கி விடவில்லை. இது எந்தநேரமும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே இருக்கப் போகிறது.


ஐ.நா பொதுச்செயலரிடமும் மனித உரிமைகள் பேரவையிலும் கால அவகாசம் கோரி இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஓரளவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.


நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகும் வரை தான் அந்தக் கால அவகாசம் கிடைக்கப் போகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் மூலம் சரியானதொரு தீர்வு காணப்படாது போனால்- சர்வதேச சமூகம் நிச்சயமாக இலங்கை மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளன.


இந்த கால அவகாசத்தை அரசாங்கம் பெறுவது பெரிய விடயம் இல்லை. இதற்கே அரசாங்கம் பெரும் பாடுபட வேண்டியிருந்தது. ஆனால் இதை விடப் பெரிய விடயம் அடுத்தடுத்த கூட்டத் தொடர்களாகத் தான் இருக்கும்.


இந்தக் காலஅவகாசம் முடிவடைந்த பின்னர் அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவின் மூலம் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் நடைமுறை உருவாக்கப்படாது போனால்- ஏற்படப் போகும் நெருக்கடியை அரசாங்கம் சமாளிப்பது தான் மிகப் பெரிய சிக்கலாக இருக்கும்.


இதனால் இப்போது இலங்கை அரசுக்காக குரல் கொடுத்த நாடுகள் கூட பின்வாங்கும் நிலை ஏற்படலாம். அந்த நிலை ஏற்படாமல் தடுக்கின்ற முழுப்பொறுப்பும் இலங்கை அரசின் கையிலேயே உள்ளது.

Comments