ஒசாமா பின்லேடனும் ஈழ விடுதலைப் போரும்

எதிரியின் இராணுவ, பொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல்களின் போது அந்தத்தாக்குதலில் ஈடுபடும் போராளிகளிடம் ஒருவிடயத்தை எப்போதும் தமிழீழத் தேசியத்தலைவர் மிகவும் உறுதியாகவே சொல்லி அனுப்பிவைப்பார். அது, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொது மக்கள் மீது இழப்புக்கள் ஏற்படக்கூடாது என்பதுதான். இதனை, அந்தத் தாக்குதல்களில் பங்கேற்ற போராளிகளே பலமுறை சொல்லியிருக்கின்றார்கள். இப்போது அமெரிக்காவும் பின்லேடன் மீதான தாக்குதலின்போது பொது மக்களுக்கும் இழப்புக்கள் இன்றியே மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.


அரசுகளின் மீதுள்ள வெறுப்புகளுக்காக அப்பாவிப் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் அவர்கள் கொல்லப்படுவதையும் என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இவற்றை எல்லாம் ஒசமா பின்லேடன் தலைமையிலான அல்-ஹைடா செய்தது. பொது மக்கள் மீதே அது அதிக தாக்குதல்களை நடத்தியது.


2001 செப்டெம்பரில் அமெரிக்க நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுரங்கள் மீதான அல்-ஹைடாவின் தாக்குதலின் பின்னர் உலகத்தை ஓரணியில் திரட்டும் நடவடிக்கையில் அப்போதைய அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இறங்கியிருந்தார். ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ இந்தப் போருக்கு ஆதாரவாக உலக நாடுகள் தம்முடன் இணைந்து கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு இணைந்துகொள்ளாதவர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்களாகவே கருதப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.


இந்த இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலின் பின்னர் உடனடியாகவே கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் ஆலோசகர் ‘தேசத்தின்குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்கள், முட்டாள் பின்லேடன் என்பவரால், உலக விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் பயங்கரவாதமாக பார்க்கப்படும் சூழ்நிலை எழப்போகின்றது என்று அச்சம் வெளியிட்டிருந்தார்.


அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சொற் பதத்தை, இன விடுதலைக்காகப் போராடும் அமைப்புக்களை ஒடுக்கும் நாடுகளே அதிகளவில் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன. அரசுக்கு எதிராகப் போராடுகின்றவர்களை பயங்கரவாதிகளாக பார்க்கின்ற, உருவகப்படுத்துகின்ற நிலையை பின்லேடனின் இந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல்தான் அதிகமாக ஏற்படுத்திக்கொடுத்தது.


அந்த வகையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவில் தமிழ் மக்களை ஒடுக்கிக்கொண்டிருந்த சிறீலங்கா அரசிற்கு அமெரிக்காவின் இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக்கூறிக்கொண்டே தமிழ் மக்களை வெளிப்படையாக ஒடுக்குகின்ற வாய்ப்பை சிறீலங்காவிற்கு இந்தச் சொல் தான் ஏற்படுத்திக்கொடுத்தது.


சிறீலங்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை உலக நாடுகளும், இன விடுதலையை ஒடுக்குகின்ற இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் மகிழ்ச்சியுடன் இரு கரங்களையும் கொடுத்து வரவேற்றன, இப்போதும் வரவேற்கின்றன. சிறீலங்காவின் இன அழிப்புப் போருக்கு இவர்கள் தோளோடு தோள் நின்றனர். மக்கள் அழிவதைக்கூடப் பொருட்படுத்தாமல் பயங்கரவாதம் அழிவதாக வேடிக்கை பார்த்து நின்றனர்.


அரசுகள் புரிவது ஜனநாயகமாகவும், அமைப்புக்கள் புரிவது பயங்கரவாதமாகவும் பார்க்கப்பட்டதன் விளைவுகள்தான் இவை. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் தமிழினம் அழிந்துபோனது.


எல்லாம் முடிந்ததன் பின்னர் இப்போதுதான் ஐ.நா ஆய்வு செய்து மக்கள் கொல்லப்பட்டனர், போர்க் குற்றம் நடந்துள்ளது என்று உறுதிப்படுத்துகின்றது. இதனால், கொல்லப்பட்ட மக்கள் என்ன திரும்பிவந்துவிடவா போகின்றார்கள்?


20 ஆண்டுகளாக உயரிய அர்ப்பணிப்புக்களோடு போராடிய ஒரு விடுதலை இயக்கத்தை முள்ளிவாய்க்கால் வரை கொண்டுவந்து விட்டதற்கு பின்லேடனின் முட்டாள்தனமான அந்தத் தாக்குதல் ஒரு முக்கிய காரணமே.


பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு இந்த உலகத்தால் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டதற்கும், ஒடுக்கப்பட்டதற்கும், ஆயுதம் தாங்கிய ஈழ விடுதலைப் போராட்டத்தின் பாரிய அழிவிற்கும் பயங்கரவாதியான பின்லேடனும் முக்கிய காரணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த வகையில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டது மேற்குலக நாடுகள் மட்டுமல்ல, தமிழீழ தேசமுமே.

நன்றி - ஈழமுரசு

Comments