ஈழத்தமிழர்கள் கெளரவமாக வாழ அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்க உரை


இலங்கைத் தமிழர்கள் முகாம்கள் சீரமைக்கப்பட்டு, அவர்கள் கெளரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழ்நாட அரசு கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் 14வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆங்கிலத்தில் தனது உரையை வாசித்தார். அதன் தமிழ் பதிப்பை அவைத் தலைவர் ஜெயக்குமார் வாசித்தார். அதில் இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ள உறுதிமொழி வருமாறு:

“இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் சீரமைக்கப்பட்டு அவர்கள் தமிழ்நாட்டிலேயே கௌரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த முகாம்களில் தரமான இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை செய்துத் தரப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான உதவிகளை வழங்குவதுடன் அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான சிறப்பு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும். இலங்கைப் போரினால் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் மாண்டு போன நிலையில் மீதமுள்ள இலங்கைத் தமிழர்களும் தங்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகள் போல் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் அவர்கள் சொந்தப் பகுதிகளிலேயே மறுவாழ்வு பெறுவதற்கான உடனடி நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வலியுறுத்துமாறு மத்திய அரசை இந்த அரசு கேட்டுக்கொள்கிறது” என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளையில், இலங்கையின் கிழக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுடனான சண்டையின்போது கணவனை இழந்த பெண்களுக்கு இந்தியா சார்பில் ரூ. 20. 3 கோடி மதிப்பிலான உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்குமான சண்டை 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. அதற்கு முன்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சண்டையில் கிழக்குப் பகுதியில் மட்டும் குறைந்தபட்சம் சுமார் 49 ஆயிரம் பெண்கள் கணவனை இழந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வட பகுதியில் சண்டையால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சண்டையால் பாதிக்கப்பட்ட கணவலை இழந்த இலங்கைத் தமிழ் பெண்களுக்கு உதவ இந்தியா முன் வந்துள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் அசோக் கே. காந்தா, வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: "போரால் கணவனை இழந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வழிவகை செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்த நிதி உதவித் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் வாழ்வாதாரத்துக்கான வழிவகைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த உதவித் திட்டம் மிகவும் முக்கியமானது. இந்தத் திட்டம் அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும். கிழக்குப் பகுதியின் ஒட்டுமொத்த சமூக - பொருளாதார நிலையை மேம்படுத்த இந்தியா இந்த உதவிகளைச் செய்கிறது. இதன்படி மட்டக்களப்பில் சமுதாயப் பயிற்சி மையம் மற்றும் வர்த்தக மையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் இலங்கை அரசுடன் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த உதவித்திட்டம் இலங்கையின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சண்டையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்தியா அளித்துவரும் மறு சீரமைப்புப் பணிகளுக்கான உதவிகளின் தொடர்ச்சியே இந்த உதவித் திட்டமாகும்" என்றார் அவர்.

--------------------------------

ஆளுநர் உரையில் ராஜபக்சவைக் கண்டிக்காதது வேதனை அளிக்கிறது: வைகோ

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த, தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இலங்கை அரச அதிபர் ராஜபக்சவை கண்டிக்காதது வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என ஆளுநர் பர்னாலா உரை குறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு, புதிய அரசின் முதலாவது சட்டசபை கூட்டம் இன்று (03.06.2011) கூடியது. ஆளுநர் பர்னாலா உரையாற்றினார்.

ஆளுநர் உரை குறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைக் கடற்படையின் கொடூரமான தாக்குதலால் தமிழக மீனவர்கள் பலியாகி வரும் நிலையில், தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவோ, இந்திய அரசின் துரோகத்தைச் சுட்டிக்காட்டவோ, எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்படும் நிலைக்கு உத்திரவாதம் தரும் வகையிலோ இல்லை என்பதை ஆளுநர் உரை காட்டுகிறது.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராஜபட்சவுக்கு எதிராக ஐ.நா. மன்ற விசாரணைக் குழு அறிக்கை வெளியிடப்பட்டு, ராஜபட்ச போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் கோரி வருகின்றன.

தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக மக்களும், உலகெங்கும் வாழும் தமிழர்களும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் ராஜபக்சவைக் கண்டித்தோ, இனப் படுகொலைக்குத் துணைபோன இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தோ அ.தி.மு.க. அரசின் கருத்து ஆளுநர் உரையில் இடம் பெறாதது தமிழகத்திலுள்ள மக்களுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments