சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை – பிரித்தானியா, பிரான்ஸ் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் கோரிக்கை

ஐ.நா நிபுணர்குழு அறிக்கையின் அடிப்படையில் சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா மற்றும் பிரான்சின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

International Herald Tribune ஊடகத்தில் எழுதியுள்ள The Silence of Sri Lanka பத்தி ஒன்றிலேயே பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேனாட் குச்னர் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

நிபுணர்குழு அறிக்கையின் மீது ஐ.நா பொதுச்செயலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ள இவர்கள், சிறிலங்கா அரசு இதற்குப் பதிலளிப்பதற்கு உடனடியாக காலக்கெடு ஒன்றை வழங்க வேண்டும் என்றும் தமது நாட்டு அரசாங்கங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஐ.நா அறிக்கையின் பரிந்துரைகளின் படி சிறிலங்கா அதிகாரிகள் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கத் தவறினால், அனைத்துலக விசாரணைக்கான ஏற்பாடுகளை தொடங்க வேண்டும் என்றும் டேவிட் மில்லி பான்டும், பேனாட் குச்னரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டங்களின் படி, பொறுப்புக்கூறுதல் என்பது ஒரு கடமையாகும் என்று வலியுறுத்தியுள்ள இவர்கள், இவற்றுக்குப் பொறுப்பான சிறிலங்கா இராணுவ மற்றும் குடியியல் அதிகாரிகள் அனைத்துலக குற்றச்செயல்களுக்காக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

2009ம் ஆண்டு சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது தாம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் வடக்கில் படை நடவடிக்கைளின் போது பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று அழுத்திக் கூறியதாகவும் அவர்கள் தமது பத்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

சிறிலங்காவின் மௌனம்: டேவிட் மிலிபான்ட் மற்றும் பேனாட் குச்னர் [ The Silence of Sri Lanka By DAVID MILIBAND and BERNARD KOUCHNER]

சிறிலங்காவினது 25 ஆண்டுகால இனப்போர் அதன் முடிவுக்கட்டத்தினை எட்டியிருந்த வேளையில் ஏப்பில் 2009ல் நாங்கள் இருவரும் இணைந்து சிறிலங்காவிற்குப் பயணம் செய்திருந்தோம். அப்போது நாங்கள் எங்களது நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களாகப் பணியாற்றினோம்.

பெருந்தொகையான மக்களுடன் எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளும் நாட்டினது வடக்குப் பகுதியில் எஞ்சியிருந்த பகுதியில் சிக்கியிருந்தார்கள். போரின் இறுதிநாட்களில் 300,000 பொதுமக்கள் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் சிக்கியிருந்ததாக ஐ.நா கணக்கிடுகிறது.

எங்களது இந்த பயணத்தின் நோக்கம் தெளிவானது: அங்கு தொடர்ந்துகொண்டிருந்த மனித அவலம் தொடர்பான கவனத்தினைத் திருப்புவதும், மனிதாபிமானப் பணியாளர்களை அனுமதிக்குமாறு கோருவதும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு அழைப்பு விடுப்பதும்தான் எங்களது இந்தப் பயணத்தின் நோக்கம்.

தமிழ் அகதிகளுக்கென இலங்கைத் தீவின் வடக்கே யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாம்களுக்கு நாங்கள் பயணம் செய்தோம். அவர்கள் எங்களிடம் பகிர்ந்துகொண்ட கதைகள் கோரம் நிறைந்ததாகவும் அதிர்ச்சி தருவதாகவும் அமைந்தது.

போர் இடம்பெற்ற பகுதிகளில் வகைதொகையற்ற, சரமாரியான எறிகணைத் தாக்குல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அரசாங்கம் மோதலை இடைநிறுத்துவதாக அறிவித்திருந்த காலப்பகுதியிலும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அகதி முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்ட இளவயது ஆண்கள் தனியாகப் பிரித்து அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். நான்காம் அல்லது ஐந்தாம் தரப் குடிமக்களாகவே தமிழர்கள் நடாத்தப்பட்டனர்.

எங்களது நாடுகளில் வெளிநாட்டுக் கொள்கையானது இதுபோன்ற மனிதத்துவமற்ற செயற்பாடுகளை உடனடியாகவே நிறுத்தும் செயற்பாடுகளையும் கொண்டிருக்கவேண்டும்.

அதிபர் மகிந்த ராஜபக்சவுடனும் அரசாங்கத்தின் ஏனைய பிரதிநிதிகளுடனும் நாங்கள் சந்தித்து உரையாடினோம். விடுதலைப் புலிகள் எத்தகைய உத்திகளைப் பயன்படுத்துகின்ற போதிலும் தனது மக்கள் தொடர்பான சட்டரீதியிலான கடப்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உள்ளது என நாம் வாதிட்டோம்.

நாட்டில் அமைதியினை வெல்லுவதற்கு தமிழர்களையும் சரிநிகரான குடிமக்களாக மதித்துச் செயற்படும் வகையிலான அரசியலமைப்புசார் உறுதிப்பாடுகள் தமிழ் சிறுபான்மையினருக்குப் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என நாம் கோரினோம்.

ஊடகவியலாளர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையினால் சிறிலங்காவில் இடம்பெற்ற போரானது சாட்சிகள் எதுவுமற்ற ஓர் யுத்தமானது. ஆனால் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென 2009ம் ஆண்டு சிறிலங்காவிற்கு பயணம் செய்திருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் அதிபர் ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.

ஆனால் இந்த உறுதிப்பாட்டினை அதிபர் ராஜபக்ச தானே பின்னர் மறுத்திருந்தார்.

இது இவ்வாறிருக்க சிறிலங்காவில் இடம்பெற்ற சம்பங்கள் தொடர்பிலான பொறுப்புச்சொல்லும் பொறிமுறை பற்றித் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் 2010ம் ஆண்டு வல்லுநர் குழுவொன்றை நியமித்திருந்தார். மூன்று மூத்த வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மார்ச் 31 2011 அன்று வெளிளிடப்பட்டிருந்தது.

2009ம் ஆண்டினது முதற்பகுதி முதல் தொடர்ந்துவந்த மூன்று மாதங்களில் அரச படையினரின் எறிகணைத் தாக்குதல்களின் விளைவாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளை இலக்குவைத்தும் அரச படையினர் பெருமெடுப்பிலமைந்த எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஐ.நாவின் மையம் மற்றும் உணவு விநியோக மையம் ஆகியவற்றினையும் இலக்குவைத்து எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தவிர, மருத்துவமனைகள் மீது திட்டமிட்ட ரீதியில் எறிகணைத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.

இது இவ்வாறிருக்கு போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேறவிடாது தடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தப்பியோட முற்பட்ட பொதுமக்களை இலக்குவைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறார்கள்.

போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மோசமாக மீறும் வகையில் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையிலான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் இந்த குற்றங்களில் சிலவற்றை போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் வகைப்படுத்த முடியும் என்றும் வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்தக் குற்றங்கள் அனைத்துலக சட்டதிட்டங்களுக்கு விழுந்த பேரடி என வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் விபரிக்கிறது.

சிறிலங்கா தானே அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பாரபட்சமின்றி, அனைத்துலச நியமங்களுக்கு அமையவும் சுதந்திரமாகவும் செயற்படத் தவறிவிட்டது என்றும் குழு தனதறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

சிறிலங்கா அமைத்திருக்கும் ஆணைக்குழுவானது, ஐ.நா செயலாளர் நாயகமும் அதிபர் ராஜபக்சவும் இணைந்து மேற்கொண்ட பொறுப்புச்சொல்லும் செயல்முறை தொடர்பான உறுதிப்பாட்டினைப் பூர்த்திசெய்யும்வகையில் இல்லை என்றும் அது கூறுகிறது.

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கையானது உண்மையில் சிறிலங்கா அரசாங்கத்திற்குப் பெரும் சோதனையாகவே அமைந்தது.

தனது தவறுகளைத் தானே மூடி மறைக்கும் மோசமான குற்றத்தினை சிறிலங்கா அரசாங்கம் விளங்கிக்கொள்ளுமா?

அனைத்துலக சமூகத்தின் மத்தியில் தனக்கான இடம் கிடைக்கவேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அவசரகாலச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் இளைஞர்களையும் யுவதிகளையும் தடுப்பில் வைத்திருப்பது முட்டுக்கட்டையாய் உள்ளது என்பதை சிறிலங்கா அரசாங்கம் விளங்கிக்கொள்ளுமா?

சமத்துவமான வழிமுறையின் ஊடாக தமிழர்களைத் துரிதமாக மீள்குடியேற்றத் தவறியதும், அவர்களுக்கான பொருளாதார வாய்ப்புகளையும் சமூகவியல் உரிமைகளையும் கொடுக்க மறுப்பதும் சிறிலங்காவினது எதிர்காலத்திற்கு ஏற்பட்ட புற்றுநோய் என்பதை அது விளங்கிக்கொள்ளுமா?

ஆனால் ஐ.நா வல்லுநர்கள் குழு வெளியிட்ட அறிக்கையானது ஐ.நாவின் செயற்பாட்டு முறைமைக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் ஒரு பரிசோதனையாகவே அமைகிறது. 2005ம் ஆண்டு 'பாதுகாப்பதற்கான கடப்பாட்டு உணர்வு' ['responsibility to protect - R2P'] என்ற கோட்பாட்டினை ஐ.நா கொண்டுவந்திருந்தது.

சிறிலங்காவில் இடம்பெறும் நல்லிணக்கச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதோடு இடம்பெற்றதாகக் கூறப்படும் வன்முறைகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையினை முன்னெடுக்கும் வகையில் சுதந்திரமாகச் செயற்படவல்ல அனைத்துலகக் கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதற்காக செயற்பாடுகளை செயலாளர் நாயகம் முன்னெடுக்கவேண்டும் என ஐ.நா வல்லநர்கள் குழுவின் அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத்தொடரின் ஆரம்ப அமர்வுகளின்போது ஐ.நாவினது மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வல்லுநர்கள் குழுவின் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துக் கருத்துரைத்திருந்தார்.

எங்களைப் பொறுத்தவரையில் இந்தச் செயன்முறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கருதுகிறோம்.

வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப்போல, இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றசாட்டுக்களுக்குப் பொறுப்புச்சொல்லும் பொறிமுறை ஒன்று உள்நாட்டு, அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் அமைக்கப்படுவது ஒரு கடமை.

இந்தக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், இது சிறிலங்கா இராணுவத்தின் படைத் தளபதிகளாகவோ அன்றில் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளாகவோ இருக்கலாம், அவர்கள் அனைத்துலக சட்ட நியமங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மனித உரிமை மீறல்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்துலக பொறிமுறையின் ஒருமைப்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆராயப்படுகின்றன.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் யாரோ அவர்களுக்கு எதிரான பொறுப்புச்சொல்லும் செயல்முறைக்கான அமைதி தழுவிய, இராசதந்திர முனைப்புக்கள் முன்னெடுக்கப்படும்போது அவை தோற்றுப்போய்விடுகிறது.

இதன் விளைவாக சட்டத்தை தங்களது கையில் எடுத்துச் செயற்பட விரும்புபவர்களின் கரத்தையே இது பலப்படுத்துகிறது. ஆதலினால் ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினைச் சிறிலங்காவுடன் தொடர்புடைய விடயம் என மாத்திரம் பார்க்காது பரந்துபட்டதொரு பிரச்சினையாக அணுகவேண்டும்.

அனைத்துலக சட்ட நியமங்களை மதித்துச் செயற்படுவது தொடர்பில் அனைத்துலக சமூகம் தேர்ந்தெடுத்த அணுகுமுறையினை, அதாவது குறித்ததொரு தரப்பு தொடர்பாக ஒரு விதமாகவும் பிறிதொரு தரப்பு தொடர்பாக வேறு மாதிரியாகவும் செயற்படக்கூடாது என அண்மையில் கோபி அனான் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆதலினால் ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதற்கமைய சிறிலங்கா செயற்படத் தயாராக இல்லையெனில், பொறுப்புச்சொல்லும் கடப்பாடு தொடர்பான நடவடிக்கையினைச் சிறிலங்கா விரைந்தும் மேற்கொள்வதற்கான காலக்கெடுக்களை எங்களது நாடுகள் விதிக்கவேண்டும் என நாம் எங்கள் அரசாங்கங்களைக் கோருகிறோம்.

ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு வழங்கப்படும் இதுபோன்ற அறிக்கைகள் அலுமாரிகளில் முடங்கிவிடக்கூடாது. அடுத்தகட்டச் செயற்பாட்டுக்கான அடிப்படையாக இந்த அறிக்கை அமையவேண்டும். இல்லையேல் சட்டமென்பது முட்டாள்தனமான ஒரு விடயமாக மாறிவிடும்.

தி.வண்ணமதி

Comments