ஐரோப்பிய கண்டத்தை கடந்தும் தமிழீழத்திற்கான குரல் ஒலிக்கும் நேரமிது


விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாகக் கூறி, ஈழத்தமிழரின் அரசியல் போராட்டத்தை மழுங்கடிக்கும் நரித்தந்திர வேலைகளில் இறங்கியுள்ளது மகிந்த ராஜபக்சாவின் சிறிலங்கா அரசு. பல தமிழ் அருவருடிகளும் சிங்கள அரசுக்கு துணையாக செயற்படுகிறார்கள். யூதனிலும் விட தமிழன் எந்த விதத்திலும் சளைத்தவனில்லை என்பது உண்மையே. தமிழன் ஒரேயொரு விடயத்தில் மட்டும் யூதனிலும் விட வேறுபட்டு நிற்கின்றான். பல எட்டப்பர்களைக் கொண்ட இனம் என்றால் தமிழ் இனமாகவே இருக்க முடியும்.

தமிழரில் ஒரு சாரார் ஈழ விடுதலையைக் காண பல கூட்டங்களையும், கையெழுத்துப் போராட்டங்களையும் நடத்துகிறார்கள். இன்னொரு பகுதியினரோ, சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார்கள். இவர்களிடம் கேட்டால், தாமும் ஈழ விடுதலையைத் துரிதப்படுத்தவே சிங்கள அரசுடன் இணைந்திருப்பதாகக் கூறுகிறார்கள். யார் எதனைக் கூறினாலும் ஒன்று மட்டும் நிச்சயம் என்னவெனில், கனத்த இதயத்துடன் ஈழத்தின் கொடியை ஐக்கிய நாடுகள் சபை முன் பறப்பதை பார்க்க பல தமிழர்கள் போராடுகிறார்கள் என்று கூறினால் மிகையாகாது. அதேநேரத்தில், தமிழ்ச் சமூகத்திலிருக்கும் சிலர் தாமும் ஈழக்கனவை நிறைவேற்றவே பாடுபடுவதாகக் கூறுபவர்கள் டக்ளஸ் தேவானந்தாவிலும்விட தாம் சளைத்தவர்களில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

ஈழமே தமது கனவு என்று கூறி ஆயுதமேந்திய டக்ளஸ் தேவானந்தா போன்ற எட்டப்பர்கள், ஈழத்தமிழரின் விடுதலைக்காக எதைச் சாதித்தார்கள் என்று பட்டியலிட முடியுமா? தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே ஈழத்தமிழரின் போராட்டத்தை பாவித்தார்களே தவிர இவர்களினால் தமிழருக்கு எவ்வித விமோசனமுமில்லை. மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் இத்தமிழ் எட்டப்பர்களை நன்றாகவே தமக்குச் சார்பாகப் பாவித்து ஈழ விடுதலையை மழுங்கடிக்க பல தந்திரோபாயங்களை மேற்கொண்டே வந்துள்ளார்கள்.

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போய் இருக்கும் எட்டப்பர்களுக்கு மாறாக ஈழ விடுதலையே தமது இலக்கு என்கிற வகையில் களம் இறங்கியுள்ளார்கள் குறிப்பிட்ட சிலர் என்பது ஓரளவுக்கு திருப்திதரும் செய்தியே. இரு தரப்பினருக்கும் இடையில் பல தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். எவரின் பிரச்சாரம் வலிமையாக இருக்கிறதோ அவர்களின் பக்கம் துணை நிற்க காத்திருப்பவர்களே குறித்த இரு தரப்பினருக்கும் இடையில் வாழும் மக்கள். அந்த வைகையில், ஈழத்தமிழரின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் வல்லமை புலம்பெயர் மக்களிடம் இருக்கிறது. எட்டப்பர்களின் செல்வாக்கு வளரவிடாமளிருக்க வேண்டுமென்றால், ஈழ விடுதலையின் பக்கம் நிற்பவர்கள் தமது பிரச்சார வேலைகளை அதிகரிக்க வேண்டும்.

ஐரோப்பாவில் ஒலிக்கும் தமிழீழத்திற்கான குரல்

ஈழ விடுதலையே தமது கொள்கை என்கிற நோக்கமுடையவர்கள் ஜூன் 1இ 2011-அன்று ஒன்றுகூடி தமிழீழ விடுதலைக்கு வலிமை சேர்க்குமுகமாக பேசுயுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழீழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்தரங்கை நடத்தின.

பெல்ஜியம் நாட்டின் புறுசெல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்ற மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆர்வலர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

குறித்த மாநாட்டில் ஈழத்தின் நிகழ்கால நிலையும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் சின்னத்துரை வரதராஜா உரை நிகழ்த்தினார். தொடர்ந்து ஈழத்தின் ஏனைய நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உரை நிகழ்த்தினார். கஜேந்திரன் தனதுரையில், தாயகத்தில் இராணுவ அடக்குமுறையில் மக்கள் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அங்கு சிங்களமயமாக்கல் என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மக்கள் தவறான பாதைக்கு வழி நடத்தப்படுகின்றனர். தமிழ் மக்கள் தோல்வியடைந்தவர்கள் என்ற நிலைமையிலேயே சிங்கள அரசு நோக்கிவருகின்றதுஇ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சிறிலங்காவில் ஈழத்தமிழருக்கு எதிராக இடம்பெற்றுவரும் நிலை மாறவேண்டும். சர்வதேச ரீதியிலான பக்கசார்பற்ற ஓர் விசாரணை நடத்தப்படவேண்டும். மேலும், தாம் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதன் காரணத்தால் குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்படலாம். பழிவாங்கப்படலாம். இந்நிலையில் தமிழ் மக்களுக்காக தாம் இவற்றை சந்திக்கவும் தயாராக உள்ளதாகக் கூறினார் கஜேந்திரன்.

வழக்கம் போலவே வைகோ தனது உணர்ச்சி பொங்கும் குரலில் ஈழப்போராட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து வைகோ பேசுகையில்: “ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். உலகின் ஜனநாயக நாடுகள் அதற்கு வழிகாட்டட்டும். ஈழத்தமிழரின் கண்ணீரை, உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்."

ஈழத்தமிழரின் தாயக விடுதலைக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்குமுகமாக ஈழத்தமிழரின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார். வைகோ மேலும் தெரிவிக்கையில், “ஈழத்தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்குகிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக்குடி மக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார். போர்த்துக்கீசர் படை எடுத்தனர். 1619 ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638 ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர். பின்னர், 1796 ல் பிரித்தானியர்கள் வந்தனர். நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர். 1948 பெப்ரவரி 4 -இல் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத்தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள்."

உருக்கமான ஒரு கவிதையுடன் தனது பேச்சை முடித்தார் வைகோ. அக்கவிதை பின்வருமாறு:

“கல்லறைகள் திறந்து கொண்டன

மடிந்தவர்கள் வருகிறார்கள்

மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன

புகழ் மலர்களோடும், உருவிய வாளோடும் வருகிறார்கள்

இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்

ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்

ஈழம் உதயமாகட்டும்

சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்

ஆம், ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு

எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்."

கிழக்குத் திமோர், தெற்கு சூடான், மொண்டேநேக்ரோ பாதையிலா ஈழம்?

பனிக்கால யுத்த காலத்தின் பின்னர் ஐநா தலையிட்டுப் பல நாடுகள் பிறக்க வழி அமைத்தது. சமீபத்தில் கிழக்குத் திமோர், தெற்கு சூடான், மொண்டேநேக்ரோ மற்றும் கொசாவா போன்ற அடக்கப்பட்ட நாடுகள் விடுதலைபெற்றன. ஐநாவே முன்னின்று குறித்த நாடுகள் பிரிவதா வேண்டாமா என்கிற வாக்கெடுப்பை நடத்தி குறித்த நாடுகளை தனிநாடாக அங்கீகரித்தார்கள். ஆனால், ஈழத் தமிழர்கள் 60 வருடங்களுக்கு மேலாக அமைதி வழியிலும் ஆயுத வழியிலும் போராடி பல உயிர்களை விடுதலைக்காகக் கொடுத்தார்கள், பல இன்னல்களைச் சந்தித்தார்கள். இதனை கண்டுகொள்ளாமல் காலத்தை வீணடித்தது ஐநா. 2009-இல் முடிவுக்கு வந்த நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னர் உலக நாடுகளிடம் சில மாற்றத்தை காணக் கூடியதாகவுள்ளது.

ஈழத்தமிழர்கள் சுயநிர்ணயம் வென்றெடுக்கச் சாதகமான பொதுசன வாக்கெடுப்பு நடத்தி தமிழீழ தனியரசை நிர்மாணிப்பதே மாண்ட அனைத்து தமிழ் மக்களுக்கும் உயிருடன் இருக்கும் தமிழர்கள் செய்ய வேண்டிய பணி. ஈழத்திற்கும் தென் சூடானுக்கும் இடையில் கணிசமான ஒற்றுமை உள்ளது. தென் சூடான், சூடான் அரசால் பலவிதமான கொலைப் பாதகத்திற்கும் பல இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டது. இதே போல், ஈழத்தமிழர்களும் சிங்கள அரசினால் அடக்கி ஒடுக்கப்பட்டு படுகொலைகளுக்கும் பல விதமான இன்னல்களுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

செர்பிய முஸ்லிம்கள் 8 ஆயிரம் பேரை 95-இல் படுகொலை செய்ததாகக் கூறி போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்கள். ஆனால், சிறிலங்கா அரசு போர்க் குற்றத்தை மேற்கொண்டது என்று ஐநாவே ஏற்றுக்கொண்ட பின்னரும் சிறிலங்கா அரசு மீது எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தை இழுக்கிறார் ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்.

உலக நாடுகளின் மனக்கதவுகளைத் திறக்கவும், ஈழத்தமிழர்களின் விடுதலையின்பால் ஐநாவின் செயற்பாட்டை துரிதப்படுத்தவும் உலகமனைத்தும் வாழும் எட்டுக் கோடிக்கும் அதிகமான தமிழர்கள் ஒரே குடையின்கீழ் போராட வேண்டும். முதற்படியாக, ஐரோப்பாவின் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டம் என்று வர்ணிக்கலாம். இதனையடுத்து, குறித்த ஒரு வாரத்திலேயே முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தாயக விடுதலைப் பயணத்தில் உருவாகியுள்ள அரசியல் இடைவெளியை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பிரித்தானியா வாழ் தமிழீழ செயற்பாட்டாளர்களால் லண்டன் கிங்க்ஸ்பெறி பகுதியில் கருத்தரங்கு ஒன்றையும் நடத்துகிற செய்தியானது, ஈழத் தமிழரின் விடுதலைக்கு ஆதரவாக இருக்கும் தமிழ் பற்றாளர்களுக்கு சற்று மகிழ்ச்சி தரும் செய்தியே.

ஐரோப்பாவில் ஒலிக்கும் ஈழத்தின் விடுதலைக்கான குரல் அக்கண்டத்துடன் நின்றுவிடக்கூடாது. இப்படியான நிகழ்வுகள் உலகம் அனைத்தும் இடம்பெற வேண்டும். இதனூடாகத்தான் ஈழத்தின் பிறப்பை உறுதி செய்துகொள்ளலாம். ஆயுத வழியில் போராடியபோது, பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள். ஆனால், ஆயுதப் போராட்டம் ஓய்ந்திருக்கும் வேளையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களும், மனித நேயமிக்க மக்களும் ஒன்றிணைந்து ஜனநாயக வழியில் போராடி ஈழத்தின் விடுதலையை துரிதப்படுத்த ஓங்கி ஒலிக்கும் நேரமே இப் பொற்காலம்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Comments