சிறிலங்காவில் முள்ளிவாய்கால்: ஐ.நாவின் 'பாதுகாப்பதற்கான கடப்பாட்டு உணர்வு' என்ன செய்தது?

லிபியாவில் இடம்பெற்றது போன்று சிறிலங்காவும், தனது சொந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற 'பாதுகாப்பதற்கான கடப்பாட்டு உணர்வு' என்ற அனைத்துலகச் சட்டத்தை மீறி நடந்துள்ளது.

இவ்வாறு 'Sydney Morning Herald' ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் [columnist] Cynthia Banham தனது பத்தியில் எழுதியுள்ளார்

26 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் இராண்டாம் ஆண்டு வெற்றிநாளைக் கொண்டாடிய சிறிலங்கா அரசாங்கம் அதன் ஒரு பகுதியாக இந்த வாரம் 'பயங்கரவாதத்தை தோற்கடித்தல்' என்ற தலைப்பில் அனைத்துலக நாடுகளுக்கான கருத்தரங்கு ஒன்றையும் நடாத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி தொடர்பாக தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவே இந்தக் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் பல ஆண்டுகளாக தொடரப்பட்ட போர் நடவடிக்கைகள் தொடர்பாக தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள சிறிலங்கா அரசாங்கம் விரும்பியிருந்தாலும், ஐ.நாவின் வல்லுனர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயமான 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஆராய சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை.

அதே வேளையில், இந்தப் பயங்கரமான விடயத்தை கலந்தாலோசிக்க அனைத்துலக சமூகமும் அக்கறை கொண்டிருக்காது.

செப்ரெம்பர் 2008 - மே 2009 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டதாக ஐ.நா நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்டு கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட 200 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகள் மீதான சிறிலங்காப் படைகளின் எறிகணைத் தாக்குதல்களில் அங்கிருந்த பல நோயாளர்கள் கொல்லப்பட்டனர். உணவு வழங்கல் நிலையங்கள் மீதான படையினரின் தாக்குதல்களில் உணவுக்காகக் காத்திருந்த பல பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், காயமுற்றனர். பாதுகாப்பு வலயங்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று கூடியிருந்த பொதுமக்கள் மீது அரச படையினர் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த தனது நாட்டு மக்கள் மீது உணவுத்தடையை மேற்கொண்டு அந்த மக்களை பட்டினிநிலைக்கு ஆளாக்கியது. மிகப் பாதிப்புக்குள்ளான இடங்களில் மருத்துவ வழங்கலை இடைநிறுத்தியது. பால்மா பைக்கற்றுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்துநின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

புலிச் சந்தேக நபர்களை மட்டுமல்லாது அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளர்கள், மனிதாபிமான பணியாளர்கள் போன்றோர் காணாமல் போகவும் சிறிலங்கா அரசாங்கம் வழிவகுத்தது.

சிறிலங்கா அரசாங்கத்தால் மட்டும் இவ்வாறான அராஜகங்கள் மேற்கொள்ளப்படவில்லை. புலிகளும் இவ்வாறான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறுவர்களை பலாத்காரமாக ஆட்சேர்ப்புச் செய்தமை, தமது தலைமையைப் பாதுகாப்பதற்காக தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை, இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடாத்தியமை போன்ற பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், லிபிய அரச படைகள் கடந்த சில மாதங்களாக தனது சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்ததை அனைத்துலகமும் போர்க் குற்றமாகப் பார்ப்பது எல்லோரும் அவதானிததிருக்க கூடிய ஒருவிடயம். இதற்குப் பல காரணங்கள் உண்டு.

"பயங்கரவாத்திற்கு எதிராக அனைத்துலகமும் மேற்கொள்ளும் யுத்தத்தில் தற்போது புலிகள் அழித்தொழிக்கப்பட்டமையானது பெரும்பாலான நாடுகளால் மிகவும் மகிழ்வுடன் நோக்கப்படுகின்ற ஒரு விடயமாகும்" என சிறிலங்காவிற்கான முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான கோர்டன் வெய்ஸ் அண்மையில் 'Foreign Policy ' என்னும் வெளிநாட்டு கொள்கை சார் சஞ்சிகையில் எழுதியுள்ளார்.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவானது முன்னிருந்ததை விட பாதுகாப்பாக உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், லிபியாவில் இடம்பெற்றது போன்று சிறிலங்காவும், தனது சொந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற 'பாதுகாப்பதற்கான கடப்பாட்டு உணர்வு' என்ற அனைத்துலகச் சட்டத்தை மீறி நடந்துள்ளது.

"ஒரு நாடானது தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அட்டூழியங்கள் மற்றும் அடாவடித்தனங்களை தடுக்கத் தவறும் பட்சத்தில், அனைத்துலக சமூகமானது இந்த மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு முன்வரவேண்டும்" என்ற அடிப்படையில் 2005ல் ஐக்கிய நாடுகள் சபையால் 'responsibility to protect - R2P' ['பாதுகாப்பதற்கான கடப்பாட்டு உணர்வு'] என்ற கோட்பாட்டு விதி பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவில் பொது மக்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்றபோது ஐ.நாவின் 'R2P' என்ன செய்தது? இதற்கப்பால், தற்போது சுய பரிசோதனையின் முடிவாக ஐ.நாவின் வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வரவேற்றிருக்கும் அனைத்துலக சமூகம், 2009ல் பல்லாயிரக்கணக்காண மக்கள் தமது உயிர்களை இழந்தபோது அவர்களின் உயிர்களைப் பாதுகாக்க என்ன செய்தது?

எமது நாட்டு [அவுஸ்திரேலியா] வெளியுறவு அமைச்சர் கெவின் றூட் [Kevin Rudd] கடந்த வாரம் 'R2P' தொடர்பாக உரை நிகழ்த்தினார். லிபியாவின் சர்வதிகாரியான முகமர் கடாபியால் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் மக்களை பாதுகாப்பதற்கு அனைத்துலகமும் முன்வரவேண்டும் என இவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இவர் லிபியாவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் றுவாண்டா, சேர்பினிக்கா [Srebenica] போன்ற நாடுகளில் நிலவும் சர்வதிகார ஆட்சி தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சிறிலங்கா இருக்கும் பக்கம் கூட இவர் திரும்பிப் பார்க்கவில்லை.

இதனடிப்படையில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக எமது வெளியுறவு அமைச்சரான றூட் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என அவரது அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்வோர் தொடர்பாக மட்டுமே றூட்டும், தற்போது ஆட்சியிலுள்ள கிலாட் [Gillard] அரசாங்கமும் முக்கியத்துவப்படுத்துகின்றன. இவ்வாறான சட்ட ரீதியற்ற குடிவரவாளர்கள் எமக்குத் தேவையில்லை என்பதே அடிப்படையில் இவர்களது கருத்தாக உள்ளது. [ஆப்கானிலிருந்து வெளியேறும் மக்களுக்கு அடுத்ததாக உலகில் அரசியல் தஞ்சம் கோரும் மக்கட் கூட்டங்களாக சிறிலங்கர்களே இரண்டாம் நிலையில் உள்ளனர்]

இவை எல்லவாற்றையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது இரு விடயங்கள் தெளிவாகின்றன. கிலாட் /றூட் அரசாங்கத்தால் வகுக்கப்பட்டுள்ள வெளியுறவுக் கொள்கையை ஜேனஸ் Janus எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறார் என்பது முதலாவது விடயமாகும்.

அதாவது, 2013-2014 காலப்பகுதியில் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் தனக்கென ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள இந்த அரசாங்கம் விரும்புகின்றது. அதேவேளையில், தனது நாட்டிற்கு தஞ்சம் கோரி வருவோரை கையாள்வது தொடர்பான ஐ.நாவின் அகதிகள் சாசனத்தில் இதுவரையிலும் கையெழுத்திடாத, அகதிகளை சித்திரவதைப்படுத்தும், மலேசியாவிடம், தஞ்சம் கோரி வருகின்ற குடியேற்றவாதிகளை கையளிப்பது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசாங்கம் பேரம் பேசி வருகின்றது.

இவற்றுக்கிடையே, உரத்துப்பேசப்படுகின்ற 'பாதுகாப்பதற்கான கடப்பாட்டு உணர்வு' ['responsibility to protect -R2P'] என்னும் கோட்பாட்டிலுள்ள குறைபாடுகளையும் எடுத்துக் கூறுகின்றது.

லிபியா விடயத்தில், அரபு நாடுகளின் சங்கமான Arab League ன் ஆதரவு ஐ.நாவின் பாதுகாப்பு சபைக்கு இருப்பதால் ரஸ்யாவோ அல்லது சீனாவோ தமது வீற்றோ அதிகாரங்களை பயன்படுதத முடியாமல் உள்ளது.

ஆனால் சிறிலங்கா விடயத்தில், அதன் பொது மக்கள் அதிர்ஸ்டசாலிகளாக இருக்கவில்லை. இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவுகள் சிறிலங்காவிற்கு இருந்திருக்கின்றன. புலிகளை சிறிலங்கா அரசாங்கம் தோற்கடித்தது தொடர்பாக மே 2009ல் ஐ.நாவின் மனித உரிமைகள் சபை தனது பாராட்டைத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை தொடர்பாக கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் சபையின் உயர் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விமர்சித்திருந்தார்.

சிறிலங்கா, லிபியா ஆகிய இரு நாடுகள் தொடர்பான ஐ.நாவின் தீர்மானத்தில் வேறுபாடு காணப்படுவதாகவும் இதில் 'R2P' கோட்பாடு எந்தளவு குறைபாடுள்ளது என்பது தொடர்பாகவும் நான் நவநீதம்பிள்ளையிடம் வினவினேன்.

"இது மனித உரிமைகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் விருப்பத்திற்கிணங்கவே தீர்மானிக்கப்படுகிறது" என அவர் பதிலளித்தார்.

"நீங்கள் நல்லதொரு ஒழுக்க விதியை வகுத்த பின்னர் அதனை அமுல்ப்படுத்தும் போது எல்லோரும் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை. ஒவ்வொரு தடவைகளிலும் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொருவரினதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமா?" என நான் மீண்டும் அவரிடம் கேட்டேன்.

நவநீதம்பிள்ளை என்னிடம் மிக உறுதியாகக் கூறிய பதிலானது, நான் அண்மையில் வாசித்த ஜோன் கொவாட்டின் பதிவுகளை மீண்டும் ஞாபகப்படுத்தியது. "நாங்கள் தகுதியற்ற பலதரப்பு அமைப்புகளின் ஆணைகளுக்கு ஒப்புதல்களை வழங்கும் போது விழிப்பாயிருக்க வேண்டும். ஏனெனில், இவற்றின் சட்டங்கள் சிலசந்தர்ப்பங்களில் பெரும்பான்மையினரால் எழுதப்படுகிறது. இது, சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கைகொள்ளாததும் அவற்றை அமுல்படுத்தாத நாடுகளையும் உள்ளடக்குகிறது" என இவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நித்தியபாரதி

Comments