போர் நிலவிய காலத்தைப் பார்க்கிலும் தமிழரின் தாயகம் பாரியளவில் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது! செ.கஜேந்திரன்
இலங்கைத்தீவில் நிலவுகின்ற பிரச்சினை பற்றி விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகளை மிகப் பொருத்தமான இத்தருணத்திலே ஏற்பாடு செய்தமைக்காக மட்டுமன்றி விசாரணையின் போது எமது கட்சியின் சமர்ப்பணங்கள் செய்வதற்காக எங்கள் கட்சியை அழைத்தமைக்காகவும், கௌரவ போல் மேவ்பி அவர்களுக்கும் ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவினது ஐரோப்பிய பச்சை இடதுநோடிக் பச்சை இடது குழுவினருக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். தமிழ் மக்களுடைய தலைவிதியும் அவர்களது இருப்பும் ஊசலாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலே நீதிக்காகவும் அமைதிக்காகவும் நியாயமான வகையில் போராடிவரும் தமிழ் மக்களுக்காக ஐரோப்பிய பாராளுமன்றத்தினுள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்களுக்கான முதற்படியாக இந்த விசாரணை அமைய வேண்டும் என்பது என்பது எங்கள் வேணவாவாகும்.
இலங்கைத்தீவில் நிலவும் பிணக்குக்கான மூலகாரணங்கள்
தீவிலும் அதேபோன்று பிராந்தியத்திலும் நிலவுகின்ற இனப்பரம்பல் ரீதியான ஒருசில உண்மை நிலைகளிலிருந்தே இத்தீவில் இன முரண்பாடு ஏற்படலாயிற்று. இலங்கைத் தீவில் இருவேறு தேசங்கள் உள்ளன. அவையாவன சிங்கள மொழிபேசும் சிங்கள தேசமும் தமிழ்மொழி பேசும் தமிழ்;த்தேசமும் ஆகும். மக்கள் தொகையில் அதிகமானோரைக் கொண்ட சிங்களத் தேசமானது பூகோள ரீதியாக தீவின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கியதான அமைவிடத்தில் அமைந்துள்ளது. மக்கள் தொகையில் குறைந்த தொகையினரைக்கொண்ட தமிழ்த் தேசமானது பூகோள ரீதியாக தீவின் வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கியதான அமைவிடத்தில் அமைந்துள்ளது. ஐரோப்பிய காலணித்துவ ஆட்சி இத்தீவில் ஏற்படுவதற்கு முன்னர் இந்த இரண்டு தேசங்களும் தமக்கெனத் தனியான சொந்த இராசதானிகளை கொண்டிருந்தன. பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்களே தமிழ்த் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றிணைத்தனர்.
இலங்கைத்தீவின் இனப்பரம்பலின் உண்மையான நிலைமை இவ்வாறு இருந்தபோதிலும், ஒட்டுமொத்த இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் யதார்த்தநிலைமை இதற்கு மாறானதாகவுள்ளது. காரணம் கடலால் பிரிக்கப்பட்டு வெறும் இருபத்திரண்டு மைல்களுக்கு அப்பாலுள்ள இந்தியாவின் தென்கோடியின் தமிழ்நாட்டில் 6,20,00,000 தமிழர்கள் வாழ்ந்துவருவதேயாகும். வேறுவகையிற் கூறுவதானால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சிங்களவர்கள் ஒரு சிறுபான்மையினராகவே உள்ளனர். இது இனப்பரம்பல் ரீதியான ஒரு யதார்த்தமாகும். சிங்கள மக்களை தமிழ் மன்னர்கள் ஆட்சிசெய்து வந்தனர் என்ற உண்மை மேற்சொன்ன இனப்பரம்பலை மேலும் உறுதி செய்கிறது. பிரித்தானியரிடம் சரணடையும்போது கண்டியை ஆண்ட கடைசி மன்னன் தனது சரணாகதிப் பத்திரத்தில் (சிங்களத்திலன்றி) தமிழ்மொழியிலேயே ஒப்பமிட்டான் என்பது வரலாற்று உண்மை.
இலங்கைத்தீவில் தமிழ் தேசத்தின் இருப்பினால் பிராந்தியம் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பரந்த தமிழ்த்தேசியவாதம் உண்டாக்கப்பட்டுவிடுமோ என்றும் அதன் காரணமாக தீவில் சிங்களத்தேசத்தின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடுமோ என்ற கரிசனையும் சிங்கள மக்களிடையே காணப்படுகின்ற பொதுவானதொரு அச்சமாகும்.
மறுபுறத்தில் தமிழர்களுடைய போராட்டம் ஓரங்கட்டலுக்கு(னளைஉசiஅiயெவழைn) எதிரான போராட்டம் என்பதைவிட நிரந்தரமாக சிங்களப் பெரும்பான்மையினரால் நீண்டகாலமாக தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அந்நிய ஆட்சிக்கு எதிரானதென்பதே உண்மையாகும். இதற்கு ஆதாரமாக, ஐரோப்பிய காலணித்துவ ஆட்சியாளர்கள் இறுதியாக தீவைவிட்டு வெளியேறிய பின்னர் கடந்த ஆறு தசாப்தகாலமாக இலங்கையில் எப்போதுமே நாட்டின் நிறைவேற்றதிகாரமுள்ள தலைவராக சிங்கள பௌத்தர் ஒருவரே இருந்து வருகிறார் என்பதைக் குறிப்பிடலாம்.
தமிழர்களது போராட்டம் சிங்கள அடக்குமுறைக்கு எதிரான போராட்டமென பலர் கருதுகின்றனர். இது உண்மையாயிருந்தபோதிலும், உண்மையில் தற்போதைய கேள்வியானது சிங்கள ஆட்சியானது அடக்குமுறை ஆட்சியா என்பதல்ல. அவ்வாறு சிங்கள ஆட்சியானது அடக்குமுறை ஆட்சியா? என்பது கேள்வியாயிருந்தால், அதற்குரிய தீர்வானது ‘நட்பிணக்கமுள்ள சிங்கள ஆட்சி’ அமைய வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால் தமிழ் மக்களது போராட்டத்தின் அடிப்படை என்னவெனில் தமிழ்மக்களின் போராட்டமானது தம்மைத்தாமே ஆட்சிசெய்வதற்கான தமக்குள்ள சனநாயக உரிமை பற்றியதாகும். இந்த உரிமையை பாதுகாத்துக்கொள்ளவே தமிழர்கள் முனைகின்றனர். தமிழ் மக்கள் ஒரு சுதந்திர இனமாக இருந்தால் மட்டுமே அவர்களால் தமது புராதன பாரம்பரியத்தையும் வளமான மொழியையும் ஒற்றுமையோடு தெளிவாக பரிணமிக்கச் செய்யமுடியும். சுதந்திரமான இனம் என்ற ரீதியில் மட்டுமே தமிழ் மக்களால் தமது பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்களது முழு ஆற்றல்களுக்கேற்ப முன்னேற்றமடையச் செய்யமுடியும். மக்களின், மக்களால், மக்களுக்காக நடைபெறும் ஆட்சியே சனநாயகம் என்றால் அதன்படி ஒரு இனம் இன்னோர் இனத்தை அடக்கி ஆளமுடியாது.
தீவில் நிலவும் இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பு மற்றைய தரப்பினரின் நலன்களை பாதுகாக்க முயல்கின்றது என்று கூறுவது போலியானதாகும். இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய ஒரு தமிழ்ப் பெரும்பான்மைக்கு எதிராக சிங்கள தேசம் தமது தேசிய அடையாளத்தை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கின்றது. தமிழீழ தேசம் இலங்கைத்தீவுக்குள் சிங்கள பெரும்பான்மையிடம் இருந்து தமது தனித்துவமான தேசிய அடையாளத்தை நிலைநிறுத்திப் பாதுகாத்துக்கொள்ள முயல்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமிழ்ப் பெரும்பான்மையினரின் ஆட்சி எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடுமோ என்று சிங்கள மக்கள் அஞ்சுகின்றனர். தமிழ் மக்களோ இலங்கைத்தீவுக்குள் நிலவும் சிங்கள மேலாதிக்க ஆட்சியைக்கண்டு அஞ்சுகின்றனர்.
போரும் அதன் பின்னரான உடனடி விளைவுகளும்
தமிழ் மக்கள் ஒரு தேசத்தின் மக்கள் என்ற தனித்துவ அடையாளத்தோடு இலங்கைத்தீவில் இருப்பதனை சிங்கள மக்கள் தமது சிங்கள தேசத்தின் இருப்புக்கான அச்சுறுத்தலாகவே நோக்குகின்றனர். இதன் காரணமாகவே, ஐரோப்பிய காலணித்துவ ஆட்சியாளர்கள் தீவைவிட்டு வெளியேறிய கையோடு ஆட்சிப்பீடமேறிய சிங்கள மேலாதிக்கம் கொண்ட அனைத்து அரசாங்கங்களும் தமிழ் மக்கள் ஒரு தேசமாக நிலைத்திருப்பதை இல்லாது அழிப்பதனை இலக்காகக் கொண்டு செயற்பட்டுவருகின்றன. தமிழ்ப் பகுதிகளின் இனப்பரம்பலை மாற்றியமைத்து அதன்மூலம் தமிழ் மக்களை அவர்களது தாயகத்திலேயே சிறுபான்மையினராக்கும் நோக்கோடு அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்களை தமிழ்ப் பகுதிகளில் மேற்கொண்டுவருதல் அத்தகைய செயற்பாடுகளுள் ஒன்றாகும். தமிழரது பாரம்பரிய கலாச்சார மையப்பகுதிகள் திட்டமிட்டவகையில் அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களது தற்சார்புடைப் பொருளாதார அமைப்பு திட்டமிட்டவகையில் இலக்குவைக்கப்பட்டுள்ளது. கல்விமுறைமையும் தமிழ் மக்களுக்குப் பாதகமான வகையில் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டதோடு அவர்களது மொழியுரிமையும் மறுக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் மேலாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கான இனவாத ரீதியான பல நிகழ்ச்சித்திட்டங்களை காலத்துக்குக்காலம் அரசு நிறைவேற்றிவந்துள்ளது. சிங்கள மேலாதிக்கம் கொண்ட அனைத்து அரசுகளுமே, தமிழ் மக்கள் தனியொரு இன, சாதிய, சமய, அல்லது தேசிய குழுமமாக இருப்பதை முற்றாகவோ அல்லது பகுதிபகுதியாகவோ அழித்தொழிப்பதற்கான ஒரேமாதிரியான திட்டத்தை வேண்டுமென்றே நிறைவேற்றி வருகின்றன என்பதில் ஐயமில்லை. வேறுவகையில் கூறுவதானால் மெதுவானதும் திட்டமிட்டதுமான ஒரு இனஒழிப்பையே தமிழ் மக்கள் எதிர்கொண்டனர் எனலாம்.
இன முரண்பாட்டை அரசியல் ரீதியாகவும் ஐனநாயக வழியிலும் தீர்ப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அம்முயற்சிகள் எதுவும் சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஒரு தேசம் என்ற ரீதியில் தமிழ் மக்களது இருப்பை அரசியல் ரீதியாக அங்கீகரிக்க சிங்களத் தேசம் மறுத்தமை, மட்டுமன்றி தனித்துவமான தேசிய இனமான தமிழ்த் தேசத்தின் இருப்பையே அழிப்பதற்கு தொடர்ச்சியாக சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த நடவடிக்கைகள்; காரணமாக, விரக்தியுற்ற தமிழ் மக்கள் தங்கள் இருப்பை பாதுகாக்கும் நோக்கோடு ஆயுதப்போராட்டத்திற்குள்த் தள்ளப்பட்டனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆந் திகதிவரை தமிழீழ விடுதலைப் புலிகளே அந்த ஆயுதப் போராட்டத்தை முன்னின்று நடத்தினர்.
இலங்கை அரசுக்குக்கெதிராக ஆயுதமேந்துவதற்கான உண்மையான காரணம் இப்படியிருக்கும் போது அந்த ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமென சர்வதேச சமூகத்தின் பெரும்பாலானோர் நோக்கினர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதோடு அதனை இராணுவரீதியாக தோற்கடிப்பதற்கான இலங்கை அரசின் முயற்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டது. விடுதலைப் போராட்டம் பற்றி தமிழ் மக்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்த போதிலும் சர்வதேச சமூகம் வேறொருவிதமான நம்பிக்கையை புரிதலைக் கொண்டிருந்தது.
அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் களத்திலிருந்து ஒழித்துவிட்டால் சிங்கள தேசிய இனமானது தமிழ்த்தேசிய இனத்துடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் அரசியல்யாப்பு மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அரசியல் தீர்வைக் காண்பதற்கான பாதுகாப்பான சூழ்நிலையை சிங்கள மக்களுக்கு ஏற்படுத்துமென சர்வதேச சமூகத்தினர் நம்பினர்.
துரதிஷ்டவசமாக உண்மை நிலைமையோ முற்றிலும் மாறுபட்டதாய் உள்ளது. தமிழ் மக்கள் வேண்டுமென்று பாரபட்சமின்றி தொடர்ந்தும் இலக்கு வைக்கப்பட்டு இன அழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும்கூட போர் நிலவிய காலத்தைப் பார்க்கிலும் தமிழரின் தாயகம் பாரியளவில் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது. உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக தமிழ் மக்கள் தத்தம் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து அரசினால் துரத்தியடிக்கப்படுகின்ற மறைமுகமான சூழ்ச்சிகளும் அமுலாகின்றன. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தபின்னரும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி அம்னெஸ்ரி இன்டர்நஷனல், இன்ரநஷனல் கிறைசிஸ் குறூப் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற பல மனித உரிமை அமைப்புகளால் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் திட்டமிட்டவகையில் தமிழ் மக்கள் இனஒழிப்புக்கு ஆளாகும் நிலை கேட்பாரின்றி தொடர்கின்றது.
நிரந்தர சமாதானத்திற்கான வாய்ப்புக்கள்
தமிழ் மற்றும் சிங்களத் தேசங்களுக்கிடையில் எழுந்துள்ள பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நிரந்தரமான நிலையான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதே ஒரேவழியாக இருப்பினும் அவ்வாறான நிரந்தர அரசியல் தீர்வொன்றுக்கான சாத்தியக்கூறுகள் யாவை? இலங்கைத்தீவிலுள்ள தமிழ் மக்கள் சந்தித்த, சந்தித்துவரும் இனஅழிப்புப் பற்றிய ஆழமான மற்றும் சுதந்திரமான, பக்கச்சார்பற்ற அனைத்துலக விசாரணையொன்று உண்மையாகவே தேவைப்படுகின்ற இந்த நேரத்தில் எமது கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அத்தைகைய விசாரணை அத்தியவசியமென வலியுறுத்துகின்றது. அத்தகைய விசாரணையானது போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு மாத்திரமன்றி கடந்த அறுபதாண்டு காலத்திலும் இடம்பெற்ற இனஅழிப்பை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டுமெனவும் கோருகின்றது.
தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்காகப் பொறுப்புக் கூறவேண்டியது அத்தியாவசியமென நாங்களும் கருதும் அதேவேளை, இன முரண்பாடானது அடிப்படையில் ஒரு அரசியல்ப் பிரச்சினை என்பதுடன் அதற்காக அரசியல்த் தீர்வே தேவைப்படுகின்றது என்றும் வலியுறுத்துகின்றோம். இதுவரை காலமும் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பிரேரிக்கப்பட்டு வருகின்ற படிமுறையானது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே அதிகாரப் பரவலொன்றை ஏற்படுத்தக் கூடிய ஏற்பாட்டினைக் கொண்ட அதிகாரப் பரவலாக்கல் அமைப்பாக இலங்கை அரசை மாற்றம் செய்துகொள்ள வேண்டுமென்பதேயாகும். வேறுவகையில் சொல்வதானால் ஓர் அமைப்பு என்ற முறையில் அரசிற்கு எல்லா அதிகாரங்களும் இருப்பினும் கூட அரசியலமைப்பை உள்ளகரீதியாக மீளமைப்பு செய்வதன் மூலம் கூட்டாட்சி ஏற்பாடு ஒன்றினை அறிமுகம் செய்யவேண்டும் என்பதேயாகும். குறிப்பாக இதன்பொருளானது மேலிருந்து கீழான அல்லது அதிகாரப் பரவலாக்கம் மூலமே ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு கூட்டாட்சி முறைமையொன்றினை கொண்டு வருவதாகும்.
அவ்வாறானதொரு அரசியலமைப்பு மாற்றத்தை இலங்கை அரசு நிராகரிப்பது மட்டுமன்றி, அதற்கெதிரான திசையில் தற்போது நிலவுகின்ற சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சிமுறையை அரசமைப்பில் மேலும் மேலும் ஆழப்படுத்தும் வகையில் எதிர்த்திசையில் பயணிக்குமாயின், அதன் விளைவு என்னவாயிருக்கும் என்பதே கேள்வியாகும். இதுவே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இத்தகையதொரு சூழமைவில் இலங்கைத்தீவில் உண்மையானதொரு தீர்வைக் காணவிரும்பும் ஒவ்வொருவரும் சனநாயக விழுமியங்களை அதன் முழுமையான அர்த்தத்துடன் மீண்டும் ஒருமுறை முழுமையாக பரிசீலிக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆணித்தரமான கருத்தாகும். இலங்கைத் தீவு அதிகப் பெரும்பான்மையாக வாழும் சிங்கள தேசியஇனத்தை நிரந்தர பெரும்பான்மையாகக் கொண்டுள்ளதுடன், எண்ணிக்கையில் குறைந்த தமிழ்த் தேசிய இனத்தையும் கொண்டுள்ளது என்பதே உண்மை. மாற்றம் ஏதும் இல்லாமல் பழைய பல்லவியையே பாடிக்கொண்டு இனப்பிரச்சினையை தொடர்ந்தும் அணுகினால் அதில் சிறிதும் முற்னேற்றம் ஏற்படப்போவதில்லை. சனத்தொகையில் எழுபத்தைந்து வீதத்தைக்கொண்ட ஒரு பெரும்பான்மையினம் கடந்த அறுபதாண்டு காலமாக ஆட்சியதிகாரத்தினைப் பயன்படுத்தி பௌத்த பேரினவாத அரசாக வலுப்படுத்தியுள்ளது, மேலும் மேலும் வலுப்படுத்த விரும்புகின்ற மனப்பான்மையை சடுதியாக மாற்றிக் கொள்ளுமென எதிர்பார்க்க முடியாது.
இன ஒழிப்புக்குச் சமமான போர்க் குற்றங்களை இழைத்தும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களை புரிந்தும் முழு இலங்கைதீவிலும் சிங்கள பேரினவாதத்தை நிறுவுவதில் விடாப்பிடியாக இருந்துவரும் சிங்கள தேசமானது அதன் பாதையை மாற்றிக் கொள்ளமாட்டாது.
இந்நிலையில் இலங்கைத் தீவின் ஒரேஒரு அதிகாரமையமாக உள்ள ஸ்ரீலங்கா அரசு வின் நிரந்தரமான பாதுகாவலர்களாக பௌத்த சிங்களவர்கள் காணப்படும்போது, அந்த ஸ்ரீலங்கா அரசை அங்கீகரிப்பதானது இனப்பிரச்சினையை மேலும் தீவிரப் படுத்துவதாகவும், இன அழிப்புத் தொடர்வதற்கு வழிவகுப்பதாகவும் அமையும்.
இவ்வாறான அணுகுமுறைக்குப் பதிலாக, கீழ்மட்டத்திலிருந்து மேல்நோக்கிச் செல்கின்ற படிப்படியான அணுகுமுறையையே நாங்கள் இந்த இனப்பிணக்கிற்குப் பரிகாரமாக முன்வைக்கின்றோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் தீவில் சிங்கள தேசம், தமிழ்த் தேசம் ஆகிய இரண்டு தேசங்கள் உள்ளன என்பதும், அத்தேசங்களின் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என்பதும் அங்கீகரிக்கப்பட வேண்டியது முதற்படியாகும். இதன்மூலம் தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பதை அரசியல் ரீதியாக அங்கீகரிக்கும் நிலையொன்றை தோற்றுவிக்கலாம். இவ்விரு அதிகார மையங்களும் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் பரஸ்பர நலன் கருதி இத்தேசங்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று கூட்டாக சில ஏற்பாடுகளுக்கு இணங்க முன்வரும் போது இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். அத்தகைய பிரச்சினைத் தீர்வானது அரசை மாற்றியமைக்கும் செயற்பாடாக அல்லாமல் அரசை உருவாக்கும் செயற்பாடகவே அமையும். இதன் மூலம் தமிழ்த்தேசமும் சிங்கள தேசமும் இணைந்து செயற்பட்டு அவையிரண்டும் சுதந்திர தேசங்களாக ஆனால் தங்கள் தமக்கிடையே இணங்குகின்ற சில துறைகளில் இறைமையை ஒருங்கிணைத்து செயற்படத்தக்க பொறிமுறையொன்றினை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இறைமையுள்ள இருவேறு தேசங்கள் தமக்குள் இணங்கிக் கொண்டவாறு சில விடயங்களில் தமது இறைமையை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு அரசை அமைத்துக் கொள்ளமுடியும். இதுவே எமது கட்சியின் தாரக மந்திரமான “இரு தேசங்கள், ஒரு நாடு” என்பதன் உட்பொருளாகும்.
அத்தகையதொரு படிமுறை மூலம் இன்றுவரை நாம் எதிர்கொண்டுவரும் கீழ்க்காணும் குறைபாடுகளை நீக்க முடியும்:
1. தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் சம அந்தஸ்த்தைப் பெறும் - இது இல்லாததே தற்போதைய பிரச்சினைக்கு மூலகாரணமாகும்.
2. பேரினவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்
3. தீவின் பல்லினத் தன்மை அங்கீகரிக்கப்படும்.
4. மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு இது அமைவானதாகும்.
நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி.
Comments