போர்குற்றமா இனஅழிப்பா அரசியல் அழுத்தத்திற்கான நகர்வுகளும்..

இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் 'இனஅழிப்பிற்கு' உள்ளாக்கப் படுகின்றனர் என்பதை உலகத்தமிழர்கள் சுட்டிக்காட்ட முனையும் அதேவேளை தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது 'போர்குற்றம்' என்பதை பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் கூறி வருகின்றன.


'போர்குற்றம்' என்றால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படலாம், ஆகக்கூடினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையோ அல்லது நட்டதொகையோ வழங்கப்படலாம் இது இன்னும் ஒருவகையில் சிறிலங்கா அரசியல் எல்லைக்குட்பட்ட பகுதியாகவே தமிழர்கள் தொடர்ந்தும் வாழ்வதற்கு ஏற்று கொண்டதாக கருதப்படலாம்.

ஆனால் 'இனஅழிப்பு' என்று நிரூபிக்கப்பட்டால். தமது எதிர்காலத்தை சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்மானிப்பதற்கு பாதிக்கப்பட்ட பகுதியினருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும் என்பதற்கிணங்க பொதுசன வாக்கெடுப்பு மூலம் பிரிந்து செல்வதற்கு வாய்ப்பு உண்டு என உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அரசோ இந்நிலையை அடியோடு மறுக்கும் அதேவேளை சிறிலங்கா ஆட்சி முறைமையை தமிழர் தரப்பினர் ஏற்றுகொள்கின்றனர் என்பதை உலகிற்கு காட்டும் பொருட்டு தமிழர்களுக்கான அரசியல்தீர்வு என்ற பெயரில் வெற்றுப் பேச்சு வார்த்தைகளை காட்டி ஏமாற்றும் போக்கை கடைப்பிடிக்கிறது,

பெரும்பான்மை பேரினவாத மக்களாட்சி கொண்ட சிறிலங்கா அரசு, உலகின் மக்களாட்சி பண்புகள் என்ற பெயரில் ஒரு அரசியல் எல்லைக்குட்பட்ட பிராந்தியத்தில் எல்லா குடிமக்களுக்கும் அப்பிராந்தியத்தின் எப்பகுதியிலும் குடியேறி தமது வாழ்வாதாரங்களை தேடிக்கொள்ள உரிமை உண்டு என்ற கோட்பாட்டை திரும்பத்திரும்ப கூறிவருகிறது.

வலுவான வரலாற்று கலாசாரப் பண்பாட்டை கொண்ட ஒரு சிறுபான்மை இனத்தின் அடையாளங்களை இல்லாது ஒழிக்கும் வகையில்; சிறிலங்கா- பௌத்த பேரினவாத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்பது தமிழர் தரப்பின் நிலைப்பாடாகும்.

மேலும் சிறுபான்மை இனத்துடனான யுத்தத்தின் தொடர்ச்சியாக யுத்தத்தில் அழிவுகளினால் துவண்டு போயுள்ள தமிழ்மக்களை வறுமையின் கொடூரப்பிடியில் சிறிலங்கா அரசு வைத்திருக்கிறது என்பது தமிழர்களின் குற்றச்சாட்டாகும்

இதற்கு தமிழர் தரப்பு கொடுக்கும் ஆதாரம்

• அவசரமான ஒரு தீர்வு ஒன்றை தமிழர்கள் ஏற்றுகொள்ளவைப்பது,
• அடிப்படை வாழ்வாதாரத்தை வேண்டிநிற்க வேண்டிய நிலையில் மேலும் போராட்டங்கள் குறித்த சிந்தனையை சிதைப்பது,
• உச்ச இராணுவபலத்தை காட்டுவதன் மூலம் அரச சக்தியை தமிழ்மக்களுக்கு புரியவைப்பது
• இவை எல்லாவற்றிக்கும் மேலாக தமிழர்களை அவர்களது வாழ்விடங்களை கைவிட்டு நாட்டைவிட்டு வெளியேற வைப்பது

என பல்வேறுவகையான கருத்துகள் தழிழர்கள் மத்தியிலே நிலவுகிறன.

பயங்கரவாதத்தின் மீதான யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது என அறிவிக்கபட்ட பின்பும் சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக இனரீதியான ஒடுக்க முறையை நடாத்திவருகிறது என்பதை பல்வேறு தகவல்கள் நிரூபித்து வருகின்றன.

வடக்கு கிழக்கில் இடம் பெற்றுவரும் கொலைகள், கொலை மிரட்டல்கள், ஆயுதக்குழுக்களின் அடாவடி அரசியல் நிர்வாகநிலை [anarchical state of political administrations], இராணுவ கெடுபிடி நிர்வாகம் இவற்றின் மூலம் நடைமுறை இயல்பு வாழ்க்கைக்கு சாத்தியமற்ற சட்டதிட்டங்களை குறிப்பிட்ட சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் அமல்படுத்துதல்,

இதன் ஊடாக வரலாற்று சிறப்புடன் வாழ்ந்த மக்களை வறுமையில் நிரந்தர வாழ்விடமற்ற நிலையில் வைத்திருத்தல் என பல்வேறு தகவல்கள் வெளிநாட்டு செய்தி ஊடகங்களுடாகவும் வெளிநாட்டு அரச பிரதிநிதிகளின் சுற்றுப்பயண அறிக்கைகளின் ஊடாகவும் வெளிவந்திருக்கிறன.

சிறிலங்கா அரசு தனது சார்பு நிலைப்பாடுகளை வெளியுறவு அமைச்சு. ஊடகத்துறை அமைச்சு, மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனை வெளிநாட்டு பரப்புரை நிறுவனங்கள் ஆகியவற்றுடன், முள்ளிவாய்கால் கொலைகளின் போது சரணடைந்து அரச செயற்பாடுகளுக்கு இசைவுடன் செல்ல இணங்கிய போராளிகள் ஆகிய அனைத்து பலத்துடனும் நியாயப்படுத்த முனைந்து நிற்கிறது.

தமிழ் பகுதிகளில் சுதந்திர வெளிநாட்டு செய்தியாளர்கள் வருகைக்கும் தொண்டர் நிறுவனங்களின் நடமாட்டத்திற்கும் அனுமதி கொடுக்காத நிலையில் 'பயங்கரவாதத்தை அழிப்பதில் சிறிலங்காவின் அனுபவம்' குறித்த மகாநாடுகள் மூலம் அனைத்துலக நாடுகள் மத்தியில் தனதுதரப்பு வாதத்தை நிலை நிறுத்த முனைகிறது.

இனஅழிப்பு நடவடிக்கையை பயங்கரவாதத்தின் மீதான வெற்றி என்ற விவாத பொருளாக இவ்வாறு காலங்கடந்த நிலையில் வைத்து சிறிலங்கா அரசு நிலை நிறுத்த பார்க்கிறது.

ஏனெனில் உலகில் ஏற்பட்டு வரும் பதில் வல்லாதிக்க நிலையை உருவாக்ககூடிய இதர வல்லரசுகளுக்கு எதிராக வன்முறை பலத்தால் மட்டும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள முடியாது என்பதை மேலைத்தேய குறிப்பாக அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளர்களும் அனுபவம் மிக்க ராணுவ தளபதிகளும் எழுதிவரும் அறிக்கைகளே தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு பலத்தை பெருக்கி கொள்ளும் அதேவேளை சூழ்ச்சித்திறன் கொண்ட கையாள்கை மூலம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய diplomatic engagement கொள்கையின் அவசியம் குறித்தும் இவ்வறிக்கைகள் கூறிவந்தன.

பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்ட நாடுகளை வன்முறை மூலம் கட்டுக்கள் கொண்டு வர முற்பட்ட முன்னால் அமெரிக்க தலைவர் ஜோர்ச் டபிள்யு புஷ் தமது ஆட்சிக்காலத்தின் கடைசி பகுதியில் கையாள்கை மூலம் கட்டுக்குள் கொண்டு வரும் கொள்கையையே பெருமளவில் கையாண்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மத்தியகிழக்கில் இடம் பெற்று வரும் பிரச்சனைகளானாலும் சரி தெற்கு தென்கிழக்காசிய பகுதிகளில் இடம்பெறக்கூடிய சீனாவுடனான போட்டி நிலைகளிலும் சரி அமெரிக்கா மிகவும் நிதானமாகவே தந்திரமாக நகர்ந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்துலக பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து உலகில் வளர்ச்சிஅடைந்த நாட்டு தலைவர்கள் மத்தியில் அனைத்துலக வர்த்தகத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய தன்மையும்,

உலகமயமாக்கப்பட்ட பொருளாதார சந்தை நிலையில் ஒரு சிறிய வறிய நாடென்றில் ஏற்படக்கூடிய பாதிப்பு, சிக்கல் மிகுந்த உற்பத்தி கட்டமைப்பில் குறிப்பிட்ட பொருள்களின் கேள்வி அனைத்துலகத்தில் அதிகரித்து விட மறுபுறத்தில் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்திவிடுவதற்கு வாய்புள்ள நிலையும்,

ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதற்கு அப்பால் ஒன்றுடன் ஒன்று பிணைந்த பொருளாதார வளர்ச்சிநிலை நாடுகள் மத்தியிலே உருவாகி வருவதும், நாடுகளின் மீது வன்முறை போக்கை கடைப்பிடிக்க முடியாத நிலையினை பெரும் வல்லரசுகளிற்கு தோற்றுவித்துள்ளது.

இதனாலேயே ஆகாய, இராணுவ, கடற்படைகளின் தயார் நிலையிலிருந்து விலகாது இருக்க வேண்டிய அதேவேளை இதர வகையான கையாழுகைகளின் அவசியம் உணரப்பட்டுள்ளது.

அனைத்துலக நாடுகள் மத்தியிலே பொருளாதாரம் முன்னிலைப் படுத்தபட்டபோதிலும் வல்லரசுகள் மத்தியிலே தலைமைத்துவ பேட்டியும் இடம் பெற்று வருகிறது.

இராணுவ பலம், பொருளாதார பலம், அரசியல் பலம் கொண்ட ஒரு நாட்டை, அதேபிராந்தியத்தில் இன்னெரு நாடு தனது மேம்பட்ட வலிமையை காண்பிப்பதன் மூலம் கொள்ளடக்கி கொள்ள நினைப்பதும் மிக வேகமான அமைதியான முறையில் இடம்பெற்று வருகிறது என்பதையும் மறந்து விடலாகாது.

ஆக இன்று 'பயங்கரவாதம்' என்ற பதத்திற்கு பதிலாக 'மனித உரிமை' என்ற பதம் உலகில் முதன்மை பெறுகிறது. இதற்கு முக்கிய காரணமாக 'கையாளுகை' கொள்கைபெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த நிலையில் பேரினவாத கொள்கைகளுக்கேற்ப சிறுபான்மை இனத்தின் மீதான வெற்றியை இன்னமும் பயங்கரவாதத்தின் மீதான வெற்றி என காட்ட முயலுகிறது சிறிலங்கா அரசு, புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் சுட்டிகாட்ட முற்படும் இன அழிப்பு என்ற விடயத்தை இதன் மூலம் பின் தள்ளிவிட நினைக்கிறது.

இதேவேளை காலஓட்டத்திற்கு ஏற்றவகையில் சாமர்த்தியம் மிக்க சிறிய, மத்திய தரைகடல் நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளும் வல்லரசுகள் மத்தியிலே இடம் பெறக்கூடிய போட்டி நிலைகளை தமது சொந்த நலன்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவதில் திறமை பெற்றும் வந்துள்ளன என்பதை மறுத்து விட முடியாது.

தேற்காசிய நாடுகளிலே சிறிலங்காவினதும் பாகிஸ்தானினதும் அரச தலைமைகள் இத்தகைய வல்லரசுகளின் கையாளுகைக்குள் உட்படுவதிலும் அந்த கையாளுகையை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதலும் முதன்மை வகிக்கின்றன.

சிறிலங்காவைப் பொறுத்தவரையில் முள்ளிவாக்கால் படுகொலைகள் வரைக்கும் இதனை மிக லாவகமாக பயன்படுத்தி வந்தது. அதன் பின்பும் சிறிலங்கா அரசின் சூழ்ச்சித்திறன் மிக மிக வேகமாக ஆராயப்பட்டு மாறிவரும் உலக நியதிகளின் வரையறைகளுக்கு ஏற்ப சீர் செய்யப்பட்டு நடை முறை படுத்தப்பட்டு வருகிறது.

உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தமிழின ஒடுக்குமுறை ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதை நிரூபிப்பதில் விடாப்பிடியாக தற்போதைய சிறிலங்கா அரசு செயற்பட்டு வருகிறது.

உலக வல்லரசுகளை தம் பக்கம் இழுத்து விட பெரு முயற்சிகள் இடம் பெறும் அதேவேளை எதிர் நாடுகள் தலையிடாதவாறு சூழ்ச்சிகள் அமைப்பதிலும் மிக மும்முரம் காட்டுவதுவும் வெளிப்படையாக தெரிகிறது.

உலகமயமாக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் புதிய வர்த்தக உடன்படிக்கைகளில் முனைப்பு காட்டுவதன் மூலம் பக்க பெருளாதார உடன்படிக்கைகளில் சிறிலங்காவை ஈடுபட வைப்பது இதன் பிரதான நோக்கமாகும்.

சிக்கல் மிகுந்த உற்பத்தி கட்டமைப்பில் மேலை நாடுகளுக்கு தேவையான பல பொருட்கள் பொதுவான ஓரு உடன்படிக்கை மூலம் பிரதான ஒரு சந்தைக்கு விற்கப்படுவதும், உதாரணமாக கொங்கொங்கில் உள்ள உற்பத்தி உடன்படிக்கைகளை விற்கும் சந்தை நிறுவனங்கள் மூலம் மொத்தமாக பெற்று கொள்ளப்பட்ட உற்பத்தி அதிகாரம் சீனாவில் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பாக அந்த பொருளை உருவாக்குவதற்குரிய இதர பொருட்கள் பல்வேறு சிறிய நாடுகளிலும் தயாரிக்கப்படுகின்றன.

இத்தகைய பக்க உடன்படிக்கைகளை பெற்று கொள்வதில் வங்காளதேசம் வியட்நாம் தாய்லாந்து போன்ற நாடுகள் முன்னணி வகிக்கின்றன. இந்த வகையில் மலிவான ஊதியத்தொகை மூலம் மேலைத்தேய வர்த்தகத்தில் சிறிய நாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

சிறிலங்காவை இத்தகைய உலகின் பொருளாதார பங்களிப்பில் கலந்து கொள்ள வைப்பதன் மூலம் சிறிலங்காவை பொருளாதார முடக்க நிலைக்கு கொண்டு செல்வதை தடை செய்வது பிரதானமான நோக்கமாகும்.

அதேவேளை உலக சந்தையில் தேயிலையின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதாலும் சிறிலங்கா தேயிலை உற்பத்தி மூலம் தற்போது பிரதான வருவாயை பெற்று வருகிறது. இதுவும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை தக்க வைத்து கொள்வதற்கு பெரும் உதவியாய் அமைந்துள்ளது.

புலம் பெயர் தமிழர்களின் செயற்பாடுகளும் தமிழ் நாட்டு அரசின் அண்மைய தீர்மானமும் சிறிலங்கா அரசின் பொருளாதாரம் குறித்த செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வைக்கும் என்பதில் ஐயம் இருக்க முடியாது.

இதற்கு ஏற்றாற்போல் உலகின் கிழக்குப் பாதி நாடுகளில் அதிக கவனம் செலுத்தி ஒப்பந்தங்கள் கொண்டு வருவதில் கூடிய கவனம் செலுத்தப்படுகிறது.
புலம் பெயர் தமிழர்களில் பலர் சிறிலங்காவை பொருளாதார ரீதியாக முடக்க வேண்டும் என்ற வாதத்தை கொண்டிருப்பதுவும் மறைக்க கூடிய தொன்றல்ல.

இத்தகைய செயற்பாட்டாளர்களை ஏய்க்கும் வகையில் இரகசியமான வர்த்தக முகவர்கள் மூலம் சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட நேரடி நுகர்வுப்பொருட்கள் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் மூலமாகவே சந்தைப்படுத்தும் நிலை முனைப்பு பெற்று வருவதையும் பல தமிழ் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

சிறிலங்காவின் பொருளாதாரத்தை முடக்க முனையும் புலம்பெயர் தமிழர்கள் தமது செயற்பாட்டை தீவிரப்படுத்தாத நிலை கூட இந்த ஊடுருவல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும் புலம் பெயர் தமிழர்களின் மனோநிலை குறித்து ஒரு தமிழ்நாட்டு தமிழர் ஒருவரின் பார்வையூடாக விபரிப்பது மிக பொருத்தமானதாகும்.

ஈழத்தமிழர் விவகாரத்தை தமிழ்நாட்டு தமிழர் ஒருவர் குறிப்பிடும் போது “கொடிய சிங்கள அரசின் கைகளில் இருந்து எம் சகோதரங்கள் வதை படுகின்றனரே என்ற ஆழ்ந்த கவலை தெரிவிக்கும் அதேவேளை இங்கே வெளிநாடுகளிலே சிறிலங்கன் உணவகங்களையும் சிறிலங்கன் மளிகைகடைகளையும் பெயர்பலகையில் பார்க்கும் போது பெரும் குழப்பமாய் இருக்கிறதே” என்று குறிப்பிட்டார்.

வதைபடும் ஈழத்தமிழர்கள் தம்மை வதைக்கும் நாட்டையே பிரதிநித்துவப்படுத்தும் வகையில் வர்த்தக நிலைகளின் பெயர்பலகைகள் வைத்து கொள்வது எந்த வகையில் தகும் என்று அந்த தமிழ்நாட்டு தமிழர் கேட்பதில் தவறில்லைத்தான்.

புலம் பெயர் ஈழத்தமிழர்கள் தம்மைத்தாமே பிரதிநித்துவம் செய்வது போன்ற செயற்பாடுளில் இறங்குவது சிறிலங்கா அரசு மீதான பொருளாதார தடை குறித்த தமிழ்நாட்டு அரசின் முன்மொழிவுக்கு வலு சேர்ப்பதாக அமையும் என்பதுவும் உண்மைதான்.

2015ம் ஆண்டளவில் சிறிலங்கா மேலைதேய நாடுகள் மீதான தனது பொருளாதார தங்கு நிலையை 61 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக குறைத்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.

வளர்ந்து வரும் இந்திய, சீன, கிழக்காசிய, தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்துடன் தன்னை இணைத்து கொள்வதனூடாக மேலைநாடுகளில் பெருமளவில் தங்கி இருப்பதை தவிர்த்து கொள்வது சிறிலங்காவின் திட்டமாக இருந்தாலும்,

வெளியே சென்ற பொருளாதார நிதி வளங்களை மீண்டும் உள்நோக்கி திருப்பி விடுவதன் மூலம் தமது பொருளாதாரத்தை சரிசெய்து கொள்வதில் மேலை நாடுகள் மிக நுண்னிய வலிமை வாய்ந்தவை. இந்த வகையில் திடீரென வளர்ச்சிநிலையை காட்டும் சிறிலங்காவின் அண்மைக்கால பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க கூடியவகையில் கொழும்பு பங்கு சந்தை மீது தமது செல்வாக்கை செலுத்த முனைகின்றன.

அதேவேளை பங்கு சந்தை குறித்த அறிவை உள்நாட்டு மக்கள் மத்தியில் ஊட்டுவதற்கும் மக்களை சிறிலங்கா நிறுவனங்களின் பங்குகளின் மீது நிதிமுதலீடு செய்து கொள்வதற்கு குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் பங்களிப்புக்கு ஆர்வமூட்டும் படியும் ஆலோசனைகள் கூறிவருகின்றன.

இலங்கைத்தீவிலேயே வடக்கு கிழக்கு மக்களின் நிதி சேமிப்பு குறித்து சிறிலங்கா வங்கிகள் நன்கு அறிவார்கள் இதிலே புலம் பெயர் மக்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதுவும் எமக்கு நன்கு தெரியும்.

இவ்வகையிலே சிறிலங்கா நிறுவனங்களின் பங்குகளை வடக்கு கிழக்கு தமிழர்கள் கொள்வனவு செய்ய வைப்பதும் இதன் மூலம் தமிழருக்கும் கொழும்பிற்கும் இடையில் முதலீட்டு தொடர்புகளை உருவாக்குவதும், தற்காலிகமாக வளர்ந்துவரும் சிறிலங்காவின் பெருளாதார வளர்ச்சியிலே தமிழ்மக்களை பங்கு கொள்ள வைப்பதுவும் இதன் அடிப்படையாகும்.

இவ்விடத்தில் கொழும்பு பங்கு சந்தையிலே இலண்டன் பங்கு சந்தை முதலீடு செய்து கொண்டுள்ளது என்பது குறிப்பிட தக்கதாகும்.

புலம்பெயர் தமிழர்கள் தமது பொருளாதார நலன்கள் மீது அதிக கவனம் செலுத்தி கூட்டு முயற்சிகள் மூலம் செயற்படவேண்டிய நிலைமையை வலியுறுத்தும் வகையில் கொழும்பிலிருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் வடக்கு கிழக்கிலிருந்து புலம் பெயர்ந்து அனைத்துலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பொருளாதார பலம் குறித்த ஆய்வுகளில் இறங்கி இருந்தன.

சில கட்டுரைகள் புலம் பெயர் தமிழர்களின் பொருளாதார பலம் சிறிலங்கா அரச பொருளாதாரத்திலும் பார்க்க பன்மடங்கு பெரியது என்று கூட எழுதி இருந்தன.

சில கட்டுரைகள் புலம் பெயர் தமிழர்கள் கூட்டாக முயற்சிப்பார்களேயானால் சிலங்கா அரசு அரசியல் ரீதியான நெருக்கடிகளை அனைத்துலக மட்டத்தில் பாரிய அளவில் எதிர் நோக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்திருந்தனர்.

இவர்களுடைய எதிர்பார்ப்பு சரியாக இருக்குமாயின் சிறிலங்கா அரசுக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சட்ட பூர்வமான நிதி அமைப்பொன்றை உருவாக்குவது பெரும் தலையிடியை கொடுக்க வல்லது எனலாம்.

புதிதாக உருவாக கூடிய எந்த நிறுவனமும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கலாம். குறிப்பாக நிதி நிறுவனங்கள் அதுவும் தமிழர்கள் மத்தியில், சிறிலங்கா அரச ஊடுருவல்களுக்கூடாக மிகவும் கடினமான பாதையாகவே தென்பட்டாலும் எப்பொழுதும் எதற்கும் ஒரு தொடக்க புள்ளி உள்ளது.

உலக தமிழர்கள் மத்தியிலே நிதிசார் அமைப்பு ஒன்றின் தேவை தேலும் பல்வேறு விடயங்களால் நியாயப்படுத்தப்படலாம்.

இலங்கைப் பிரச்சனையில் பிரதான செல்வாக்கு செலுத்த கூடிய வல்லரசுகளின் பார்வையில் இது யுத்த மீறல் சம்பவங்களாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக சிறிலங்காவை தமது கையாள்கை கொள்கைகளுக்குள்ளேயே வல்லரசுகள் வைத்திருக்க விரும்புகின்றன.

இதன் பொருட்டே சிறிலங்காவை தமது நிரந்தர நட்பு நாடாக கூறுவதற்கு கூட அவை தயங்கவில்லை.

இந்த நிலையில் சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல் குற்றசாட்டுகளை படரவிட்டிருப்பது என்பது வல்லரசுகள் தமது நலன்களுக்கு ஏற்புடையதாக சிறிலங்கா அரசு மாறவேண்டும் என்பதற்காகவே ஆகும்.

இச்சந்தர்ப்பத்தை ஏற்ற வகையில் பயன்படுத்துவது தமிழர் தரப்பின் கைகளில் தங்கி இருக்கிறது என்பதை பல்வேறு தமிழ் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.
மேலும், வெளிவந்த தமிழ் ஆய்வாளர்களின் கட்டுரைகள் மற்றும் செய்திகளில் சில குறிப்புகளை தேர்ந்து எடுத்ததன் அடிப்படையில்:

• புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளையும் தாயக தமிழர்களின் பிரதிநிதிகளையும் தமிழ்நாடு தமிழர்களையும் வேறுவேறு தளங்களில் இப்பகுதியினருக்கு இடையில் தொடர்புகள் எதுவுமற்ற நிலையில் வெளியுறவு அதிகாரிகளை குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்திற்கான பதில் செயலர் அவர்களை சந்தித்துள்ளார்.
• தாயகத்தமிழர்களின் பிரதி நிதிகளுக்கு பேச்சு வார்த்தைகளை கைவிடாது தொடர்ந்து பேசம்படி அதே வெளியுறவு அதிகாரிகளால் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
• தாயக தமிழர்கள் என்ன தீர்ப்பளிக்கிறார்களோ அதனை ஏற்று கொள்ளும் வகையில் புலம் பெயர் தமிழர்கள் தலைவர்கள் செயற்பட தயாராக உள்ளனர்.
• தாயக தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு தமிழர்ளையும் ஒருங்கிணைத்ததான செயற்பாடுகள் எதுவும் தமிழர் வரலாற்றில் இடம் பெற்றதில்லை.
• பொருளாதார ரீதியாக தாயக தமிழர்கள் மிக கீழ்மடத்தில் வாழுகிறார்கள்
• தமிழ் நாட்டில் அரசின் மீது அழுத்தம் பிரயோகிக்க கூடிய சக்திகளும் தமிழ் நாடு அரசும் தற்போது ஈழத்தமிழர்களது உரிமையை மையமாக கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளன இந்நிலையில் தற்போதய இந்திய மத்திய அரசும் குறிப்பிடதக்க அழுத்தத்தை எதிர் கொண்டுள்ளது.

இத்தகைய குறிப்புகளின் அடிப்படையில் தமிழர்களின் செயற்பாட்டில் தெற்காசியாவில் செல்வாக்கு செலுத்தகூடிய பல சக்திகள் தமிழர் விவதாரத்தில் அதி கவனம் செலுத்துகின்றன.

ஆனால் தமிழர்களோ நிலைமை சாதகமாக தெரிவதாக உள்ளது என்று சந்தோசத்தில் கிடக்கின்றது.

இந்திய மத்திய அரசின் மற்றும் சிறிலங்கா அரசின் நிலையிலிருந்து பார்க்கும்போது மீண்டும் தமிழர்கள் மத்தியில் பாரிய பிளவு ஒன்றின் தேவை அவசியமாக கருதப்படுகின்றது.

அண்மைக்காலத்தில் மனித உரிமை என்ற சொற்பதம் குறிப்பாக அரபு நாடுகளுக்கு பெரும்தலையிடியாக பார்க்கப்பட்டது. மனித உரிமை என்ற ஆயுதத்தை எதிர் கொள்ள பொருளாதாரப்பலமே பதில் ஆயுதமாக பயன்படுத்த பட்டு வந்துள்ளது. இதற்கு சவுதி அரேபியாவினை நல்ல உதாரணமாக கொள்ளலாம்.

சவுதி அரேபியாவில் ஏனய அரபு நாடுகள் போன்றே மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது தனிமனிதர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் போராட்டம் சவுதி அரேபியாவில் தற்போதைக்கு பிசு பிசுத்து போனது.

மிகவறுமை நிலையில் பெருளாதார ஊட்டத்திற்காக காத்துகிடக்கும் ஈழ தமிழர்களுக்கு மீண்டும் முன்பு ஒருமுறை கொடுக்கப்படாது விடப்பட்ட நான்கு பில்லியன் உதவித்தொகையை வெளிகொணர்வதுடன் வெளிநாடு ஒன்றின் கண்காணிப்பில் பகிர்ந்தளிக்கப்படும் எனும் நிலை ஏற்படும்போது புலம் பெயர் தமிழர்களுக்கும் தாயக தமிழர்களுக்கும் தமிழ்நாடு தமிழர்களுக்கும் இடையில் பல்வேறு இடைவெளிகள் தோன்றுவதற்கு வாய்புகள் உள்ளன.

ஏற்கனவே நிலப்பறிப்பு குடியேற்ற திட்டங்கள் என தயார்படுத்திவரும் சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கு மக்கள் என்ற வகையில் குடியேறிய சிங்கள சமுதாயத்தின் பக்கம் நிதியை திருப்பிவிட காத்துகிடக்கிறது.

இத்தகைய நிலைமைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தாயக தலைமையையும் இணைத்ததான ஒரு நிதி நிறுவனம் ஒன்றின் தேவை மிக அவசியமானதாகப்படுகிறது.

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர்.

கட்டுரை பற்றியதான கருத்து எழுதுவதற்கு லோகன் பரமசாமி loganparamasamy@yahoo.co.uk

Comments