பீ.பீ.சி.யின் சிங்கள சேவையான சந்தேசய வெளியிட்டுள்ள அந்தச் செய்தியின் சுருக்க விபரம் கீழ்வருமாறு உள்ளது.
உள்நாட்டு யுத்தம் முடிவுற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் யுத்த காலப்பகுதியில் காணாமற்போன தமது உறவுகள் தொடர்பான விபரங்களைப் பார்வையிடுவதற்காக கடந்த பத்து நாட்களாக வவுனியாவில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
பத்து நாட்களின் முன்னர் காணாமற்போனவர்களின் விபரங்களைப் பார்வையிட முடியும் என பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தது. அதே நேரம் காணாமற் போனவர்களின் நெருங்கிய உறவினர் தவிர வேறெவரும் விபரங்களைப் பார்வையிட முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி பி.பி.சியின் சிங்கள சேவையிடம் தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் [Terrorist Investigation Division - TID] கீழ் உள்ள காணாமற் போனோர் தொடர்பான விபரங்களை வடக்கு, தெற்கு மற்றும் தலைநகர் கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
காணாமற் போன உறவுகள் தொடர்பான விபரங்களைப் பார்வையிடுவதற்காக வவுனியாவிற்குச் சென்றிருந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவர் மட்டுமே தனது பிள்ளை உயிருடன் இருக்கின்றார் என்ற தகவலைப் பெற்றுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.
அவரது மகன் தென் பகுதியில் அமைந்துள்ள காலி என்னும் இடத்தில் உள்ள ஒரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட இவர் தனக்கு இந்தச் செய்தி கிடைத்தவுடனேயே வவுனியாவிலிருந்து பல நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள காலி தடுப்பு முகாம் நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தார்.
பெருந் தொகையான மக்கள் வவுனியா நிலையத்தை சென்றடையும் போதிலும், நாளொன்றிற்கு 200 பேருடன் மட்டுமே பொலிசாரைச் சந்தித்துக் கலந்துரையாடுகின்றனர்.
விபரங்களை அறிந்து கொள்வதற்காக இந்த நிலையங்களிற்குச் செல்கின்ற பத்திரிகையாளர்கள் அங்கிருக்கும் பொலிசாரால் தடுக்கப்பட்டதால், வீதியோரத்தில் மிகவும் ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும் நின்ற உறவுகளுடன் மட்டுமே இவர்களால் உரையாட முடிந்தது.
காணாமற் போன தமது உறவுகள் தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத தமிழ் மக்கள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பினர். 'காணமாற் போனோர்' தொடர்பான விபரங்களைத் தம்மால் வழங்க முடியாதிருப்பதாக வவுனியாவிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2006 இலிருந்து காணாமற் போன 5000 இற்கும் மேற்பட்டோர் தொடர்பான விபரங்கள் தம்மிடம் உள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தமது காணாமற் போன உறவினர் தொடர்பான விபரங்களைத் திரட்டுவதற்காக ஒவ்வொரு நாளும் வவுனியா நிலையத்திற்கு ஆவலுடன் செல்லும் மக்கள் தமது நம்பிக்கைகளை இழந்து திரும்பி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட 5000 இற்கும் மேற்பட்டோர் தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் பயிற்சிகள் பெற்று வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments