சிறிலங்காவின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் வேண்டும் - ராதிகா சிற்சபைஈசன்

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக நாடுகளும் ஆதரவளிக்கவேண்டும் என கனேடிய நாடாளுமன்றின் முதலாவது தமிழ் உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்ப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது, மே 2009ல் தமிழ் தலைமைத்துவம் சிறிலங்காப் படையினரால் அழிக்கப்பட்ட பின்னர் முடிவிற்கு வந்தது.

"இந்தப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படும் பட்சத்திலேயே சிறிலங்காத் தீவில் ஒரு நிரந்தரமான சமாதானத்தை அடைய முடியும்" என நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார்.

"மனித உரிமை மீறல்களை முடிவிற்குக் கொண்டு வரும் காலம் கனிந்துவிட்டது. மனித உரிமைகள் மற்றும் நீதி சார் விடயங்களிற்கு கனடா எப்போதும் ஆதரவாகவே இருந்துள்ளது. அந்த வகையில், சிறிலங்காவில் இடம் பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகளை முன்னெடுக்க நாம் ஆதரவளிக்க வேண்டும்" என இவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாட்டின் தொலைக்காட்சி சேவையான சனல் 04, சிறிலங்காவின் கொலைக் களங்கள் என்ற திரைப்படத்தை வெளியிட்டதையடுத்து ராதிகா சிற்சபைஈசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments