அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் – தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என, பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூன் 15ஆம் நாள் (15-06-2011) பிரித்தானியா நாடாளுமன்றக் கட்டிடத்தில் ‘தொழிற்கட்சிக்கான தமிழர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்துகொண்ட தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இங்கு உரையாற்றிய நிழல் வெளிவிவகார அமைச்சர் டக்ளஸ் அலெக்ஸான்டர், இலங்கையில் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கவும், அமைதியான வாழ்வை அமைக்கவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும், இணைந்து பணியாற்றுவேன் என்றும் கூறினார்.

தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பில், அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கு சழைக்காது தொடர்ந்து குரல் கொடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்தனர்.

பிரித்தானிய சனல்-4 (Channel-4) தொலைக்காட்சி ஒளிபரப்பிய ‘இலங்கையின் கொலைக்களம்’ பதிவு பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிர்ச்சி வெளியிட்ட அதேவேளை, இலங்கையில் என்ன நடந்தது என்பது பற்றிக் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் தமிழ் மக்கள் மீது மெற்கொள்ளப்பட்டது இன அழைப்பே எனக் கூறினர். அப்பாவிப் பொதுமக்கள் 40,000 பேர் கொல்லப்பட்டிருப்பதால், இது இன அழிப்பே என ஸ் ரீபன் பவுண்ட் (Stephen Pound) தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் (Keith Vaz) தலைமை தாங்கிய அதேவேளை, நீதிக்காக உழைத்துவரும் தொழிற்கட்சிகான தமிழர்கள் அமைப்பையும் வெகுவாகப் பாராட்டினார். தமிழ் மக்களின் குரல் செவிமடுக்கப்பட வேண்டுமாயின் அவர்கள் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் தனியார் வானூர்திகளில் சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவது பற்றி தனது கரிசனையை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிபொன் மன்டொனா (Siobhain McDonagh), உறுவுகளின் பாதுகாப்பு தொடர்பில் இங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் துடிப்பு விளங்கிக் கொள்ளக்கூடியது எனக் கூறினார். இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதால், பிரித்தானிய அரசாங்கம் இதனைப் புரிந்துகொண்டு திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

போர் முடிவடைந்த பின்னரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் பற்றிய தனது கரிசனையை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்தி சர்மா (Virendra Sharma), இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சட்டவாளர்களோ, சுயாதீன கண்காணிப்பாளர்களோ நேரில் பார்க்க முடியாது இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன், தமிழர்கள் கடத்திச் செல்லப்படுதல் வழமைபோன்று இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுதும் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு, படைத்துறை நிருவாகத்திற்குள் அச்சத்துடன் வாழும் மக்களின் நிலை பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரெலா கிறேசி (Stella Creasy) கூறினார்.

‘தொழிற்கட்சிக்கான தமிழர்கள்’ அமைப்பின் தலைவர் சென் கந்தையா கூறும்போது, நிழல் வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அதேவேளை, அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தி அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கும் தமிழர்கள் சார்பில் நன்றி கூறினார். அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்த தொழிற் கட்சியின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாரிய அவலத்துடன் நிறைவுக்கு வந்த போர் தொடர்பாக முன்னய தொழிற்கட்சி அரசாங்கம் உலக நாடுகளின் ஆதரவைப் பெற வெகுவாக உழைத்திருந்தது எனக்கூறிய சென் கந்தையா, எமது சமூகத்திற்காக தொழிற்கட்சி தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றது என்றார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

நிழல் வெளிவிவகார அமைச்சர் டக்ளஸ் அலெக்ஸாண்டர் (Rt. Hon Douglas Alexander MP – Shadow Foreign Secretary), கீத் வாஸ் (Keith Vaz), சிபோன் மக்டொனா (Siobhain McDonagh), எமா றெனோல்ட்ஸ் (Emma Reynolds), பற்றி கார்ட்னர் (Barry Gardiner), கலாநிதி ஸ்ரெல்லா கிறேசி (Dr Stella Creasy), கரத் தோமஸ் (Gareth Thomas), போல் மேர்பி (Paul Murphy), ஜொவான் றடொக் (Joan Ruddock), ஜோன் மான் (John Mann), ஸ் ரீபன் பவுண்ட் (Stephen Pound), அன்றூ லவ் (Andy Love), மைக் கேப்ஸ் (Mike Gapes), விரேந்திர சர்மா (Virendra Sharma).

சென். கந்தையா
‘தொழிற்கட்சிக்கான தமிழர்கள்’

Comments