சிங்களஆதிக்ககனவினுள் தீக்குச்சிகிழித்து எறிந்தவன் -எல்லாளன்

(தியாகி சிவகுமாரனின் முப்பத்திஏழாவது நினைவாக)


அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்ற ஒரு காட்சியை தமிழீழம் பார்த்து அறிந்து இருக்கவில்லை.மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை.தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப் போராட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்ட வீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்பு நிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட்டுத்தில் நின்று கொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் போராட்டகளத்துக்கு வந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது.பொன்.சிவகுமாரன் தான்வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டதுபோலவேதன் மரணத்தின்போதும் விடுதலைப் போராட்டத்துக்கு ஒருவிதமான மக்கள்அங்கீகாரத்தை பெற்றுத்தந்துவிட்டு போய்ச்சேர்ந்தவன்.

பொன்.சிவகுமாரனின் வாழ்வானது 1950ல் தொடங்கி 1974 யூன்மாதம் 5ம்திகதி தற்கொடையுடன் முடிவடைகின்றது என்பதற்கும் அப்பால்,சிவகுமார் எறிந்ததும், வைத்ததுமான சில வெடிகுண்டுகளின் வெடிப்புகளுக்கும் அப்பால்,சிவகுமாரால் குறிவைக்கப்பட்டும் தப்பிய தமிழினவிரோதிகளின் தலைவிதிக்கும் அப்பால் சிவகுமாரனின் வாழ்வு மிகவும் வீரியம்மிக்கதும் தியாகம் நிறைந்ததும் ஆகும்.



பொன்.சிவகுமாரன் விடுதலைக்கான போராட்டத்தை நடாத்தினான் என்று சொல்வதைவிட விடுதலைக்கான போராட்டத்துக்கான அமைப்பு ஒன்றைகட்டும் முயற்சியிலும் விடுதலைக்கான உண்மையான போராளிகளை தேடிஅறியும் இடைவிடாத தேடலிலும் இறுதிவரை முயன்றவன்.ஆயுதமுனையில் அடக்கிஒடுக்கப்பட்ட ஒருஇனத்தின் விடுதலைக்கான போராட்டபாதை ஆயுதந்தரித்தாகவே இருக்கவேண்டும் என்று வரலாற்று பட்டறிவுடன் முற்றுமுழுதாக உணர்ந்து கொண்டவன் சிவகுமாரன்.

மென்வழிப் போராட்டங்களும்,பாராளுமன்றத்துக் கூடான போராட்டங்களும், ஜனநாயகவழியிலான போராட்டங்களும் சிங்கள ஆயுதப்படைகளால் கொடூரமான முறையில் அடக்கிஒடுக்கப்பட்டபோது இயல்பாகவே எழும் ஆயுதஎதிர்வினை அப்போதைய தமிழ் இளைஞர்களுக்குள் வேர்விடத்தொடங்கிய பொழுதின் அடையாள இளைஞன்தான் சிவகுமாரன்.

தமிழீழத்தின் சில இடங்களில் அப்போதே ஆயுதப் போராட்டத்துக்கான தயாரிப்புகளும், ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தோற்றத்துக்கான முன்னெழுச்சிகளும் நிகழ்ந்து கொண்டே இருந்தன.சிவகுமாரன் அவர்களை தேடிதேடிச்சென்று சந்தித்தான்.ஆயுதங்களின் பாவனைபற்றிய அறிவு பரிமாறப்பட்டன.வெடிகுண்டு செய்யப்படும் முறைகள் அறிந்துகொள்ளப்பட்டன. சிவகுமாரனின் முதலாவது குண்டுவைக்கும் முயற்சி 1971ம் ஆண்டு யூன்மாதம் 19ம் திகதி அரங்கேறியது.

சிவகுமாரன் படித்த உரும்பராய் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு வருகைதந்த சிங்களபிரதி அமைச்சர் சோமசிறீசந்திரசிறீயின் வாகனத்தின் கீழ்வைக்கப்பட்ட இந்த முயற்சி வெற்றியீட்டாத போதிலும் ஆயுத எதிர்வினை பரணாமம் கொள்வதை சிங்களத்துக்கு புரியவைத்த நிகழ்வாக இதுஇருந்தது. அதன்பின்னர் பலபல முயற்சிகள். வெற்றியளிக்காத முயற்சிகள்.ஆனாலும் சிவகுமாரன் ஒருபோதும் தன்னுடைய இலக்கினில் சமரசம் செய்து கொண்டதோ,பின்வாங்கியதோ இருந்திருக்கவில்லை.தமிழீழம் சம்பந்தமான எல்லாதளங்களிலும் தன்னுடைய ஒப்புயர்வான ஈடுபாட்டை வெளிக்காட்டியவன் அவன். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மாநாட்டின்போது நடைபெற்ற ஊர்திகளின் பவனியின்போது அன்னபூரணிகப்பல் ஊர்திக்கு பின்னால் வந்துகொண்டிருந்த பண்டாரவன்னியன் ஊர்தியின் முகப்பில் எழுதப்படடிருந்த‘உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு’ என்ற வாசகத்தை அகற்றும்படி சிங்களகாவல்துறை வற்புறுத்தியபோது சிவகுமாரன் அதனை எதிர்த்து கொதிக்கும் வீதியிலேயே மறியல் செய்தவன்.

அவனுடைய உறுதியான எதிர்ப்புடன் மற்ற இளைஞர்களும் இணைந்தபோது சிங்களம் பணிந்து பின்வாங்கியது.இப்படியாக எமது சமூகத்தின் அவலங்கள் அனைத்துடனும் மல்லுக்கட்டியவன் சிவகுமாரன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடரும் சாதியஏற்றத்தாழ்வுக் கொடுமைக்கு எதிராகஅவன் நிறையவே முயன்றவன்.

இன்று அவனின் நினைவுநாள் ஒரு ஊமைப்பொழுதில் வந்து இருக்கின்றது.அவன் போராடியா காலத்தைப் போன்ற ஒரு காலகட்டத்தில் அவனின் நினைவை ஏந்துகிறோம். எமது முழுஇனமும் ஒரு மௌனப்பொழுதுக்குள் முகம்புதைத்துநிற்கும் அவநம்பிக்கைப் பொழுது இது.சிவகுமாரனின் நினைவு இந்தபொழுதை ஊடறுத்து நம்பிக்கையை விதைக்கட்டும்.பொன்.சிவகுமாரன் எந்தநம்பிக்கையுடன் விடுதலைக்காக அலைந்தானோ, அந்த நம்பிக்கையை எமக்குள்நாமே ஊட்டுவோம். புன்னகைமாறாத அந்த போராளியின் முகமும் அவனின்தியாகமும் வரலாற்றின் மிகப்பெறுமதியான தடங்களாக என்றும் இருக்கும்.


நம்பிக்கையை விதைக்கும்

------------------------------------------------------

நீளும் பொழுதுகள் கரைந்து

நிமிடங்களாகி விரிந்து நாட்களாகி

நகர்ந்து வருடங்களான பொழுதும்

நினைவுகளுக்குள் தேங்கி நிற்கிறது

அவன் சிதை எரிந்த பொழுது.



சிதைஎரிந்து சாம்பலாகி

துகள்களாகி காற்றில் கரைந்திட்டபொழுதும்

இன்னும் சிதை மீது கிடந்த இவனின்

மாறாப்புன்னகை முகமே மனமெங்கும்

என்றும் பூத்துக்கிடக்கிறது.



பொன்.சிவகுமாரன்,

புரட்சிவிதைகளை எங்கள் புழுதித்தெருவெங்கும்

விதைக்க எழுந்த முதல்வர்களில் ஒருவன்.



அடர் இருளொன்றில் விடுதலையின் ஒளிதேடி

நீண்ட பெரும்பாதையில்

முதல்தடம் பதித்த கால்கள் இவனது.



பயமூட்டும் கொடும் மௌனனப் பொழுதொன்றில்

விடுதலையின் பிரகடனத்தை உரத்து சொன்னவன்.



எல்லோரினதும் செவிப்பறையில்

ஓங்கி அடித்துப்போனது இவனின் மரணம்.



தூங்கிக் கிடந்த எல்லோர் விழிகளுக்குள்ளும்

விழிப்பெழுதிப் போனது சிவகுமாரன் மரணம்.



விடுதலைக்காக மரணிப்பது என்பது

உன்னதத்திலும் உன்னதம் என்றே

ஈழத்து வாழ்வு வட்டத்துள்

அழியாது எழுதிவைத்துபோனவன் இவன்.



ஏதுமே இல்லாத பொழுதொன்றில்

போராடபோனவன் சிவகுமாரன்.-இப்போது

எதுவே இல்லாமல எல்லாம்;

இழந்த பொழுதொன்றில் அவன் நினைவு மீண்டும்.



எல்லாம் இழந்த பொழுது இது

என்ற போதிலும்

அவன் சொல்லாமல் சொல்லிச் சென்ற

ஈகமும் ஈழவிடுதலையும் எல்லோர்

மனமெங்கும் ஏற்றிவைப்போம்.

விடுதலை என்ற வார்த்தையின்

வீரியத்துக்குள் சிவகுமாரனும்,

சிவகுமாரன் என்ற பெயருக்குள்

விடுதலையின் பெரு வெளிச்சமும்

எப்போதும் ஒளிவிடும்.-அன்று

எரிந்த பொழுதில் ஒளிதந்த

அவனின் சிதைபோலவே....!

-எல்லாளன்-

Comments