மாபெரும் இரத்தப் போராட்டம் நிகழ்த்திய எமது மக்களின் தியாகத்தை அர்த்தமுள்ளதாக்கி தாயகவிடுதலையை வென்றெடுப்போம்
அந்தக் கதறல்களைக் கூட புலிகளது சூழ்ச்சி என சிறிலங்கா செய்த பொய்ப்பரப்புரையினை உறுதிப்படுத்துவது போன்று எமது மக்களது உயிர்களை பொருட்டாக கருதாது உங்கள் எசமானர்களது கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியேறியிருந்தீர்களே..! பறவாயில்லை இப்படியாவது உங்களது மனச்சாட்சியின் உணர்வுகளை உலகின் முன் வெளிப்டுத்தியுள்ளீர்களே அதுவே தற்போதைக்கு பெரும் ஆறுதலாகும்.
சிறிலங்கா அரசின் நெருக்கடிகளிற்கு அடிபணிந்து வன்னி மண்ணில் நடைபெறும் என அனைத்துலகத்தாலும் பெரும்தவிப்போடு எடுத்துக் கூறப்பட்ட மிகப்பெரும் மனிதப்பேரழிவை நடக்க அனுமதித்து சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னியை முழுமையாகவிட்டு வெளியேறத்தயாரான போது கிளிநொச்சியில் வழிமறித்து எமது மக்கள் பெரும் போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் சார்பாக கருத்துக் கூறிய முதியவர் ஒருவர், இன்று அனைவராலும் வாய்வலிக்க பேசப்படும் முள்ளிவாய்க்கால் துயரத்தை பிரதிபலிக்கும் விதமாக ஆணித்தரமாக கருத்துக் கூறியிருக்கின்றார். அவற்றை உணர்ந்தவர்களாக இன்று இந்தக் காணொளியில் வருத்தப்படும் அதிகாரிகள் அன்று வாய்திறந்திருந்தால் எமது இனம் காக்கப்பட்டிருக்குமே!
இதுதான் அந்த முதியவரின் தீர்க்கதரிசனமான வார்த்தைகள்… இவையளை(சர்வதேச தொண்டு நிறுவனங்களை) இப்ப போறதுக்கு அனுமதிச்சால் உண்மையின்படி இங்கை இருக்கிற ஒட்டுமொத்த மக்களும் மரணிக்கிற கட்டம் கழுத்துவரை வந்து நிக்குது…(05:01 - 07:41)
வீடியோ எடுக்க வேண்டாம் நீங்களும் எல்லோரும் படுங்கோ... அவங்கள் எல்லாரையும் கொல்லுறாங்கள் என்று கதறிய எமது உறவுகளின் உயிரச்சத்தின் இறுதி வரிகளை கேட்கும் போது உடலெல்லாம் நடுங்குகின்றதே... தொடர்ந்து காட்சியை ஓடவிட மனதில் வலுவில்லாது போய்விடுகின்றது. அந்த எமது ரத்த சொந்தங்களின் கதறல் ஒலி காதுவழியாக உள்சென்று எங்கெங்கு எப்படி செல்கிறதோ யாமறியோம்.... ஆனால் கணநொடிப்பொழுதில் உயிரணுக்களை அதிரவைத்து எங்கெங்கோ இனம்புரியாத அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது.
உடலின் பாகங்களை முழுமையாகமறைத்து பாதுகாப்புத் தேட முடியாத சிறு குழிக்குள் பலர் ஒன்றாக விழுந்து கதறுகிறார்கள்... அத்தோடு இன்றைய சர்வதேச அதிர்வுக்காயோ என்னவோ அவற்றை உயிரையும் பொருட்படுத்தாது காட்சிப்படுத்தும் ஊடகப் போராளியையும் தம்முடன் அழைக்கும் அந்த பாங்கு தமிழரின் உயரிய பண்பாட்டை இந்த உலகின் முன் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்தார்கள் என்ற வாதம் இங்கு உடைபட்டுப் போவதை காணலாம்.
அப்படி தமிழ் மக்களை புலிகள் கேடயமாக வைத்திருந்தார்கள் என்றால் மக்களின் அவல நிலையினை காட்சிப்படுத்தும் பணியில் உயிரைப்பணயம் வைத்து ஈடுபட்டிருக்கும் போராளியின் உயிர்ப்பாதுகாப்பில் அதே மக்கள் அக்கறைப்படுவார்களா? (09:12 - 10:20)
கிளிநொச்சியில் இருந்து தமது உயிர் உடமைகளுடன் ஏதாவது மாற்றம் ஏற்படாதா என்ற எதிர்பார்ப்புடன் நகர்ந்து சென்ற எமது மக்களை பாதுகாப்பு வளையம் என்று சிறிலங்கா அரசு கூறி மரணப்பொறி அமைத்து வரவழைத்து வாக்குறுதிகளை மீறி கனரக ஆயுதங்கள் மூலமாக கொன்றும் படுகாயப்படுத்தியும் வந்ததை ஆதாரத்துடன் விவரிக்கின்றது இக்காட்சி...(10:42 - 11:42)
அனைத்துலகத்தால் கைவிடப்பட்ட எமது சொந்தங்களின் இரத்தம் மழைநீருடன் கலந்து இரத்த ஆறாக ஓடுவதைப் பாருங்கள்... தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனை பகுதியாக காட்சிதருகின்றது. கூரையாக இருக்க வேண்டிய அலுமினியத் தகரம் பாடையாக மாறி கீழும் மேலுமாக மூடியிருக்க தமிழன் குருதி மழைநீருடன் கலந்து இரத்த ஆறாக ஓடுகிறது... (11:52 - 13-02)
புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான சிறிலங்காவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சாட்சியத்துடன்...(14:29 - 15:15)
காயமடைந்த 14வயது மகனை காப்பாற்ற முடியாது கண்முன்னே பறிகொடுத்த ஒரு தந்தையின் இரத்தக்கண்ணீர் வாக்குமூலம்...(17:28 - 18:42)
கண்முன்னே பெற்ற தாயைப் பறிகொடுத்த பெண்பிள்ளைகளின் உயிரைப்பிழியும் கதறல்களும் மற்றைய உறவுகளையும் சிங்களத்தின் கொடும் எறிகணைவீச்சிற்க்கு பறிகொடுத்து பதுங்கு குழிக்குள் இருந்தவாறே சிலஅடி தூர இடைவெளியில் இருந்து நேரடியாக பார்த்துக் கதறித்துடிக்கும் வேதனை மிக்க காட்சி....(19:19 - 19:58)
கண்முன்னே உயிருக்கு உயிராக நேசித்த உறவுகள் கொத்துக் கொத்தாக சிங்களத்தின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்படுவது சர்வசாதாரணமாகிப் போய்விட்டது எனவும் அன்டிபயோடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்து பற்றாக்குறைதான் பெரும்பாதிப்பினையும் குருதி சேகரிக்கும் குருதிப்பைகளும் இல்லாததே எமது மக்களின் இழப்புகளை தடுக்கமுடியாமைக்கான காரணம் என ஊடகத்தின் முன் கருத்துச் சொன்ன மருத்துவமனை ஊழியர் நான்கு நாட்களின் பின்னர் நடைபெற்ற செல்தாக்குதலில் சிக்கிப்பலியாகி தன்சார்ந்த குடும்பத்து உறவுகளை கதறியழவைத்த காட்சியை என்னவென்று சொல்ல…!?(27:18 – 27:58)
கிடைத்த கிடைத்த இடங்களில் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்து காயம்பட்ட எமது மக்களிற்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கிக் கொண்டு உயிர்காக்கும் பணியினை எமது மருத்துவ குழு செய்துவருகையில் அங்கு சிறிலங்கா படைகளால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவந்த குண்டுத்தாக்குதல்களையும் அதனால் சிதறிப்போன எமது சொந்தங்களின் உடல்குவியல்களையும் வெளிப்படுத்தி தொடரும் காட்சி… பெற்றெடுத்த பிள்ளையைப் பறிகொடுத்த தாயின் கதறலையும்.. இறுதியாக துணையாக இருந்த தந்தையையும் பறிகொடுத்து கதறும் சிறுமியின் ஆதரவுதேடும் அவலக் குரலையும்… உயிரிழந்த காயமடைந்த மக்களை மீட்பதில் அர்பணிப்புடன் ஈடுபட்டிருக்கும் தமிழீழக் காவல்துறையினரின் பங்களிப்பினையும்… சிங்களனின் குண்டுத்தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைப்பதற்காக பிரிந்து சிதறிஓடிய மகள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது தெரியாது உயிர்பறிக்கப்பட்ட உடலங்களின் நடுவே தேடிஓடும் முதிய தந்தையின் உயிர்த் தேடலையும் இரண்டு நாட்களின் பின்னர் அவரே உயிரற்ற உடலமாக கிடத்தப்பட்டிருக்கும் கொடூரக் காட்சிகளையும் பதிவு செய்துள்ளது. (29:42 – 31:46)
சிங்களக் கடையர் படையின் கொடூர முகத்தை வெளியுலகிற்கு உணர்த்திய வலுவான காட்சியாக அமைந்த உடைகள் கழைந்து நிர்வாணமாக்கப்பட்டு கைகள் பின்னாலும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு இழுத்துவரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டும் அதிர்ச்சி காட்சியும்… சண்டைக்களத்தில் இருந்து சிங்களத்திடம் உயிரோடு சிக்கிய 3பெண் போராளிகளையும் கைகள் பின்னாலும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் மண்டியிடவைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் பேரதிர்ச்சி காட்சியும்… பதிவாகியுள்ளது.(33:42 – 35:56)
உயிரோடு சிங்கள இராணுவத்திடம் அகப்பட்ட போராளி ஒருவர் தொன்னைமரத்தில் கட்டிவைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவத்தின் சாட்சியத்தை நேரடியாக பதிவுசெய்துள்ளது…(36:16 – 37:01)
முள்ளிவாய்க்கால் கோரத்தாண்டவம் முடிவுற்று சிங்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்த எம்குலப் பெண்களது ஆடைகள் அகற்றப்பட்டு நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்களினதும் தமிழ்பெடியல் எல்லாம் கடலுக்கு,தமிழ்ப் பெண்கள் எல்லாம் உங்களிற்கு(சிங்கள இராணுவத்திற்கு) என்ற கோத்தபாயவின் உத்தரவினை நிறைவேற்றுவதற்காக குடும்பத்தவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி செல்லப்பட்டு நிகழ்ந்தவை தொடர்பாக நேரடி சாட்சியமளிக்கும் ஒரு தாயின் வாக்குமூலம்…(37:30 – 38:04)
இதனை ஆதாரபூர்வமாக சிங்கள இராணுவமே நிரூபிக்கும் காட்சிகளாக தம்மால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண் போராளிகள் மற்றும் தமிழ்ப் பெண்களது உடல்கள் முன்னே நின்று வார்த்தைகளால் விபரிக்கும் காட்சி… அரசியல் போராளியான இசைப்பிரியாவின் சிதைக்கப்பட்ட அலங்கோலக்காட்சி… களத்தில் வீரச்சாவடைந்து வீழ்ந்து கிடக்கும் பெண்போராளிகளின் உடைகளை அப்புறப்படுத்தச் சொல்லிவிட்டு அந்த உடல்களின் மீது ஏறிநின்று வெறியாட்டம் போடும் கொலைவெறி சிங்களப்படையின் காட்சியும்… தமது வெறியாட்டத்தை முடித்துவிட்டு அந்த சிதைக்கப்பட்ட பெண் போராளிகளது உடல்களை வக்கிரத்தனமான சம்பாசனைகளுடன் உளவுஇயந்திரத்தில் அநாகரிகமான முறையில் எடுத்துப்போடுகின்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது (38:05 – 40:15)
வெள்ளைக் கொடியுடன் அனைத்துலகின் வழிகாட்டுதலினடிப்படையில் சிங்களப்படைகளிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளது மூத்த உறுப்பினர்களான கேணல் ரமேஸ் அண்ணா, அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அண்ணா சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அண்ணா போன்றவர்கள் கொன்று வீசப்பட்டுக்கிடக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது… (41:08 – 44:10)
முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டும் சிங்களப்படைகளால் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டதும் போக எஞ்சியவர்கள் இந்த நவநாகரிக உலகின் கண்முன்னே முள்வேலிக்குள் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது வாழ்வில் துளியளவேனும் மாறுதலை ஏற்படுத்த முடியாத விஜயத்தினை மேற்கொண்டு திரும்பிய ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான்கீ மூன் அவர்களின் பயனற்ற பயணத்தை தோலுரிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது…(44:28 – 45:20)
இவ்வாறு காட்சிகளுக்கு காட்சி உள்ளக் கொதிப்பை அதிகப்படுத்தியும் உணர்வுகளை உலுக்கியெடுத்தும் கண்களில் நெருப்பையும் உள்ளத்தே குமுறலையும் ஏற்படுத்திய சனல்4 இன் சிறிலங்காவின் கொலைக் களம் என்ற ஆவணப்படம் எமக்கான மூன்றாவது சட்டரீதியான ஆயுதமாகும்.
இதுவரை சிறு சிறு காட்சிகளாக வெளிவந்து கொண்டிருந்த காணொளிகளின் தொகுப்பாக சனல்4 தொலைக்காட்சியின் இந்த முயற்சி மிகவும் காத்திரமான பங்கை ஆற்றியுள்ளது. இந்த ஆவணப்படம் வெளிவந்தபின்னர் சிறிலங்காவின் கொலைவெறி ஆட்சியாளர்களுக்கு எதிரான குரல்கள் இன்னும் வலுவாக சர்வதேச அளவில் ஓங்கிஒலித்துவருவதே இதனை உறுதிப்படுத்தி நிற்கின்றது.
பிரித்தானியாவில் இதனை பத்துஇலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் சனல்4 தொலைக்காட்சியூடாக நேரடியாக பார்வையிட்டுள்ளதாகவும் சுமார் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கட்நத ஒரு வாரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் இணையத்தளங்கள் காணொளிப்பதிவுகள் மூலமாக பார்வையிட்டுள்ளனர். இதில் தமிழர்கள் அல்லாதவர்கள் பெருமளவில் பார்வையிட்டுள்ளமை மிகப்பெரும் திருப்பமாகும்.
சிறிலங்காவின் கொலைக்களம் என்ற சனல்4ன் 50 நிமிட ஆவணப்படத்தில் வரும் சில நிமிடக்காட்சியை ஒரு வடஇந்திய ஆங்கிலச் செய்திச்சனல் ஒலிபரப்பிய போது பார்வையிட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அதன் அடிப்படையில்தான் தமிழக சட்டமன்றத்தில் சிங்கள அரசிற்கு எதிராக வரலாற்றுத் தீர்மானத்தை கொண்டுவந்ததாக அறிக்கையில் முழுமையாக ஈழத்தமிழர்களிற்கு ஏற்பட்ட கொடுமைகளை பார்வையிட்ட சந்தர்ப்பம் கிடைத்தால் ஈழவிடுதலைப்பயணத்தில் இறுதிவரை உறுதியுடன் தமிழக அரசு பயணப்படுவது நிச்சயம்.
சனல்4 ஒளிபரப்பிய காட்சிகளை பார்க்காமலே பார்வையிட்டவர்களது கருத்தின் அடிப்படையில் சிறிலங்கா அரசின் போர்குற்ற மீறல்சம்பவங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை அவசியம் என பிரித்தானிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
சனல்4ன் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் கடந்த செவ்வாய்க் கிழமை(21.06.2011) நியூயோர்கிகில் திரையிடப்பட்டுள்ளது. இதன்போது பலநாட்டு இராசதந்திரிகள் சர்வதேச ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, அவுத்ரேலியா, நியூசிலாந்து, யேர்மனி, அயர்லாந்து, கிழக்குத்தீமோர் உள்ளிட்ட பல நாடுகளது ஐ.நா.விற்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச்சபையிலும் கடந்த புதன் கிழமை(22.06.2011) இவ் ஆவணத்திரைப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஒளிபரப்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பார்வையிட்டுள்ளனர்.
இதே வேளை மேலும் பல்வேறு இடங்களில் இந்த ஆவணப்படத்தினை திரையிடும் முயற்சியில் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் ஈழத்தமிழர்களும் கடுமையான முயற்சிகள் எடுத்துவருகையில் சிறிலங்கா அரசும் அதனை முறியடிக்க முயன்று வருகிறது.
அந்தவகையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மூலம் முறியடிக்கும் சிங்களத்தின் முயற்சிக்கு எதிர்களம் கண்டுள்ளது எம்மவர்கள் இல்லை அனைத்துலக மன்னிப்புச் சபை என்பதில் இருந்தே எமக்கான நீதி வேண்டிய போராட்டம் எந்தத் திசையில் பயணிக்கின்றது என்பது புலனாகிறது.
சிறிலங்காவில் போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளதாக கூறி சிறிலங்கா அரசிற்கு எதிராக வழக்குத் தொடர அனைத்துலக மன்னிப்புச் சபை தீர்மானித்துள்ளது. கடந்த 23ம் திகதி கனடாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்தத்தகவலை தெரிவித்துள்ளனர் அனைத்துலக மன்னிப்புச் சபையினர். பிரித்தானியா மற்றும் சுவிற்சர்லாந்து நாட்டின்
முன்னணி சட்ட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இந்த வழக்கினை சிறிலங்காவிற்கு எதிராக தொடரப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இது தவிர தாய்த்தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆவணப்படத்தினை திரையிடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழகம் தாண்டி மும்பையிலும் இந்த சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. தொடரட்டும் தாயத்தமிழகத்தின் முயற்சிகள்.
சிறிலங்காவை போர்க்குற்ற நாடாக அறிவித்து அதன் மீது பொருளாதாரத்தடை கொண்டுவர இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் தீர்மாணம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை பல்வேறு தரப்பினர்கள் பல்வேறுவதமாக விமர்சித்தும் வரவேற்றும் வரும் நிலையில் அது உலகத்தமிழர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்த்திருக்கும் ஓர் அங்கீகாரம் பெற்ற ஆயுதமாகும்.
முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு வெளியிட்டிருந்த போர்க்குற்ற அறிக்கையும் இவ்வாறு பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டும் எதிர்க்கப்பட்டும் வரவேற்க்கப்பட்டும் வருகின்றது. புலிகள் மீது ஆறு குற்றச்சாட்டுகளும் சிறிலங்கா அரசின் மீது ஐந்து குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி எண் கணித அடிப்படையில் குறை கண்டுகொண்டு வியாக்கியானம் செய்பவர்கள்தான் நம்மில் அதிகம்பேர் நேரத்தையும் காலத்தையும் விரையமாக்கி வருகின்றனர்.
அடக்கி ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை என்ற உயரிய இலட்சியம் ஒன்றிற்காக பல்வேறு இடர்பாடுகள் நெருக்கடிகள் துன்ப துயரங்கள் இழப்புகள் துரோகங்கள் காட்டிக் கொடுப்புக்கள் என்பவற்றிற்கிடையே விடுதலைப் போராட்டத்தை கரடுமுரடான பாதையில் நகர்த்திச் செல்கையில் எல்லோரும் எப்போதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான பாதையில் பயணப்படுவதென்பது சாத்தியமற்ற விடயமாகும்.
அவ்வாறே உலகத்தமிழர்களது பரிபூரண விடுதலை என்ற உண்ணத இலட்சியப்பயணத்தில் பற்றுறுதியோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழிகாட்டுதலில் போராட்டத்தை முன்னெடுத்து வருகையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எம்மவர்கள் மத்தியில் இருந்தும் சிங்களத்தரப்பில் இருந்தும் சர்வதேசத்திடம் இருந்தும் எழுந்திருந்தமை வெளிப்படையானதே.
அதே குற்றச்சாட்டுகள்தான் மீள் பதிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் போர்குற்ற அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் சிறுவர்களை படையில் சேர்த்தது வலுகட்டாயமாக போர்முனையில் பணிசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவையாகவே அமைந்துள்ளது.
மன்னாரில் இருந்து நகர்ந்து சென்ற யுத்தகளம் சுமார் இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரே முள்ளிவாய்க்காலில் முடித்துவைக்கப்பட்டது. இதன் போது ஆரம்பகாலம் முதலே எமது மக்கள் விடுதலைப்புலிகளின் பின்னாலே நகர்ந்து சென்றதை அவதானிக்கலாம். குறிப்பாக தாமாக விரும்பியே பெரும்பாலானவர்கள் புலிகளின் பின்னால் நகர்ந்து சென்றதை முன்னர் வெளிவந்த பல்வேறு காணொளிக்காட்சிகளிலும் தற்போது வெளிவந்துள்ள சனல்4ன் ஆவணப்படத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.
உண்மையைச் சொல்வதானால் என்ன முடிவானாலும் இறுதிவரை இருந்து பார்த்துவிடுவோம் என்ற உறுதியான நிலைப்பாடுடனேயே எமது மக்கள் நகர்ந்து சென்றுள்ளனர். 2009 மே 15ம் திகதி மதியத்திற்கு பின்னர் கசிந்த தகவல் ஒன்றின் பின்னரே மக்கள் வெளியேறிச் செல்ல முண்டியடிதத்தனர்.
முக்கியமான நகர்வொன்று இன்று இரவு நடைபெற உள்ளதாக வெளியான தகவலே மக்களை இனி எதுவும் நடைபெறாது என்ற முடிவுக்கு வரவைத்து வெளியேறத் தூண்டியது. அதுவரை எப்படியும் எங்கட பெடியள் அடிப்பாங்கள்… ஏதாவது ஒரு இடத்தில் இருந்து துவங்கும்… என்று காத்திருந்தனர் மக்கள்.
இடையிடையே மேற்கொள்ளப்பட்ட சில முறியடிப்புத் தாக்குதல்கள் பெரும் அழிவை சிங்களத்திற்கு ஏற்படுத்தி நீடித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் சரி தொடங்கிட்டாங்கள் போல..! என்று மக்கள் உற்சாகம் கொண்டு அடுத்து வரும் களமுணைச் செய்திக்காக ஆவலுடன் காத்திருந்தமைதான் உண்மை நிலவரம்.
அடுத்து சிறுவர்களை படைக்குச் சேர்த்தது தொடர்பான குற்றச்சாட்டினை முன்வைப்போர் இன்றுவரை சிங்களத்தால் பாதிக்கப்படும் தமிழ்ச்சிறார்களது எதிர்காலத்தை உறுதிப்படுத்த என்னவிதமான நடவடிக்கையினை எடுத்தார்கள் எடுத்துவருகிறார்கள் என்பதனை வெளிப்படுத்த முடியுமா?
அனைத்துவழிகளிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட போது அதிலிருந்து விடுபட்டு எமது இனத்தை தலைநிமிர்ந்து வாழவைக்க வேண்டும் என்ற உந்துதலில்தான் போராட்டம் ஆரம்பித்தது. அந்த சுதந்திர உணர்விற்கு வயதெல்லாம் தெரியாது. பாலஸ்தீனத்தில் எதிரேவரும் இஸ்ரேலின் கவசவாகனத்தை நோக்கி கல்லெடுத்து எறியும் எதிர்ப்புணர்வு யாரும் சொல்லிக் கொடுத்துவரவில்லை அந்த ஐந்து ஆறு வயதுடைய சிறுவர்களிற்கு.
பிறக்கும் போதே உலகத்தால் கைவிடப்பட்டவர்களாக பிறக்கும் தமிழர்கள் அந்த அநீதிக்கு எதிராக போராடக் களம்குதிக்க வயதெல்லாம் ஒரு பொருட்டல்ல. உணர்வு வெளிப்படும் தருணம்தான் அதிமுக்கியமாகும். ஆனாலும் ஆரம்ப காலம் தொட்டு சிறுவர்களை படையில் சேர்ப்பது என்பது புலிகள் படையில் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல.
முன்னைய காலங்களில் அதாவது என்பதுகளில் சாரம் கட்டிய பெடியளின் சண்டைகளை கண்ணுற்ற சிறுவர்கள் தாமும் அவ்வாறு வரவேண்டும் என்று எத்தனை நாள் விடுதலைப்புலிகளின் முகாம் வாசலில் தவம்கிடந்தனர் என்பதும் அவர்களை அறிவுரைகள் கூறி வீட்டிற்கு போராளிகள் அனுப்பிவைத்திருந்தமையும் நேர்மையோடு நினைவுகளை அசைபோடுபவர்களிற்கு நன்கு தெரிந்திருக்கும்.
2007 தை முதல் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் எவரும் இல்லை எனவும் யாரும் இருந்தால் பகுதிப் பொறுப்பானவர்களிடம் சான்றுகளுடன் தெரியப்படுத்தினால் விடுவிக்கப்படுவார்கள் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு அதன்படி பின்தொடரப்பட்டது என்பது சமாதான நடவடிக்கையில் ஈடுபட்ட தரப்பினரிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
அதைவிடுத்து போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரித்து எதிர்காலத்தை வளமானதாக்கும் நல்லெண்ணத்துடன் காந்தரூபன் அறிவுச்சோலை செஞ்சோலை போன்ற காப்பகங்களை தாயுள்ளமும் அன்பும் தவழுமிடமாக தலைவரின் நேரடி வழிநடத்துதலில் அமைத்து கடைசிவரை உலகம் மெச்சும் வண்ணம் நடாத்திவந்தார்கள் என்பது வரலாறு.
கட்டாயப்படுத்தி களமுணைகளில் ஆபத்து நிறைந்த பகுதியில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் எவ்விதத்திலும் அர்த்தமற்றதாகும். புலிகள் தனியே போராளிகள் இயக்கமாக செயற்படாமல் அவர்கள் மக்கள் இயக்கமாகவே தமிழீழத்தை மீட்டெடுக்கும் போரை முன்னெடுத்து வருகின்றனர்.
முழுக்க முழுக்க மக்கள் போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் பரிணாமம் பெற்றபிறகு அங்க கட்டாயப்படுத்தி பணியாற்ற வைக்கவேண்டிய தேவை இருக்கவில்லை. 2009 மே முதல் வாரத்தில் கடுமையான செல்தாக்குதல்கள் விமானக்குண்டுத் தாக்குதல்கள் என முழுவேகம் பெற்று களமுணை தமழர் செங்குருதியில் சிவந்து கொண்டிருக்கையில் பதுங்கு குழிக்குள் இருந்து முட்டைமா என்ற உலர் உணவினை தயாரித்து வெளியேறிச் செல்லும் போராளிகளிற்கு வழங்கியவர்களும் இன்று எம்மத்தியில் இருக்கின்றார்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இரத்தமும் சதையுமாக காத்து வளர்த்தவர்கள் ஒருவரல்ல.. இருவரல்ல.. பல்லாயிரம் பேர். இன்றும் அவ்வாறானவர்களது உயிர்த்துடிப்பான பங்கேற்பினால்தான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஐந்தாம் கட்ட ஈழப்போரை முன்னெடுத்து வருவது சாத்தியமாகின்றது என்பதனை உணரவேண்டும்.
இவைகள் போன்ற எமது விடுதலை இயக்கத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் வலுவிழந்து போகும் நிலையில் சிறிலங்கா அரசின் மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்குற்றச்சாட்டுகள் மனித உரிமை மீறல்கள் போன்றவை வலுவான சாட்சியங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளவை. அதில் இருந்து சிங்கள அரசு தப்பித்துவிட முடியாது.
ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவினது அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டே தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைந்துள்ளன.
தமிழர்களிற்கான ஒரு அரசாக அங்கீகரிக்கப்பட்டு சனநாயக முறையில் தேர்வுபெற்ற தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானம் உலகத்தமிழர்களது போராட்டத்திற்கு கிடைத்த புதிய நம்பிக்கையாகும்.
அடுத்து சனல்4 தொலைக்காட்சி வெளியட்ட சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப்படம் மிகப்பெரிய ஆயுதமாகும். அதுவே இன்று சிங்களத்தின் குரவளையினை நெரித்து திணறடித்து வருகின்றது. இவை அனைத்தும் சுட்டி நிற்பது கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவில் நடைபெற்ற போரை அடிப்படையாகக் கொண்டும் அதில் சிங்கள படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மனிதஉரிமை மீறல்கள் குறித்துமே ஆகும்.
1956ம் ஆண்டு முதற்கொண்டு சிங்களத்தால் திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலை தொடர்பாக நாம் இந்தநேரத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டியது அவசியமாகின்றது. தமிழினப் படுகொலையின் நீட்சியாகவே முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட மனிதக் கொலைகளும் இன்றுவரை தொடரும் தமிழர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டுவரும் அடக்குமுறை செயற்பாடுகளுமாகும்.
இதற்கு நிரந்தர தீர்வாக தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய சுதந்திர தமிழீழத் தனியரசே அமையமுடியும் என்பதனை அழுத்தம் திருத்தமாக தமிழர் தரப்பு வெளிப்படுத்த வேண்டும்.
அதனைவிடுத்து தற்போதைய பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பதற்கு முன்வைக்கப்படும் தற்காலிக தீர்வுத்திட்டங்களோ பேச்சுவார்த்தைகளோ எவ்விதத்திலும் பயனற்றதாகவே அமையும் என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இத்தனை கொடூரங்களை கண்ணுற்ற சர்வதேசத்தை நீடித்து நிலைத்து நிற்க்கக் கூடியதான தமிழர்கள் பிரிந்து செல்லும் வகையிலான தீர்வை நோக்கி செல்வதற்கு நெருக்கடிகளை கொடுக்க வேண்டும். அதற்கு எமக்கு கிடைத்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் போர்குற்ற அறிக்கை, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சனல்4 தொலைக்காட்சியின் சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப்படம் ஆகிய மூன்றையும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அறவழியில் போராடிய போது அடியும் உதையும் உயிரிழப்புமே சிங்களத்திடம் இருந்து பரிசாக கிடைத்தது. அறவழி தோற்றுப்போய் ஆயுதம் ஏந்தி போராடி முப்படை கண்டு உலக விடுதலை இயக்கங்களிற்கு முன்மாதிரியாய் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பல்வேறு வியத்தகு போர் வெற்றிகளை கண்டு இராணுவச்சமநிலையில் சிங்களத்தைவிட மேலோங்கி நின்ற போது பயங்கரவாதிகள் என்று நாமகரணம் சூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.
இன்று அரசியல் வழியில் போராட முற்பட்ட எமக்கு கிடைத்திருக்கும் இந்த மூன்று வலுவான ஆயுதங்களும் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் நிகழ்த்திய இரத்தப் போராட்டமே காரணமாக அமைந்துள்ளது.
எமது மக்களின் இழப்பானது எந்தவிதத்திலும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஆனாலும் எமது மக்கள் இரத்தம் சிந்திநிகழ்த்திய சத்திய வேள்வியே சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வழியேற்படுத்தியுள்ளது. அந்த மாற்றமே இன்று எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழர் என்ற எல்லைகடந்து மனிதநேய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் உறுதியோடு பங்கேற்கச் செய்துள்ளது.
மாபெரும் இரத்தப் போராட்டத்தை நிகழ்த்தி சர்வதேச ரீதியில் இதுவரை இருந்துவந்துள்ள நிலைப்பாட்டில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தி தாயக விடுதலைப்போரை வீச்சுடன் முன்னெடுக்க பாதையமைத்த எமது சொந்தங்களின் தியாகத்தை போற்றி அர்த்தமுள்ளதாக்க ஒன்றுபட்டு களமாடுவோம்.
இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்து விட்டால் உலகத்தில் எந்த சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ம.செந்தமிழ்(27.06.2011)
Comments