நாளை இன்றேல் ஒருபோதும் இல்லை இதை ஈழத் தமிழினம் உணருமா?


சிறிலங்காவின் கொலைக்களம்’ என்ற பெயரில் பிரித்தானியாவின் சனல் - 4 தெலைக்காட்சி ஒளிபரப்பிய காணொலி, ஈழத் தமிழர் மத்தியில் பாரிய உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், போர்க் குற்றங்களைப் புரிந்தோருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தாடலையும் அனைத்துலக சமூகத்தில் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

தமக்காக, தமது நலனுக்காக தமிழர் அல்லாதோர் காத்திரமாகச் செயற்பட வேண்டும் என – வழக்கம் போலவே – எதிர்பார்க்கும் ஈழத் தமிழ் மக்கள் இன்றைய காலச் சூழலில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும், தமது அரசியல் அவாக்களைப் பூர்த்தி செய்து கொள்ளவும் இதய சுத்தியுடன் முயல்வார்களா என்பதில் சந்தேகம் தோன்றியுள்ளது.

‘சிறிலங்காவின் கொலைக்களம்’ காணொலி சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சம காலத்திலேயே, பிரித்தானியாவில் இருந்து சுமார் 40 வரையான ஈழத் தமிழர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட போதிலும், அதற்கு எதிராக தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்ப்புத் தெரிவிக்க முன்வராதமை, தற்போதைய சந்தர்ப்பத்தையும் தமிழர்கள் கைவிட்டு விடுவார்களோ என்ற ஐயத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

இத்தனைக்கும், அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்து தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பியனுப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு சனல்-4 ஊடகமும் மனித உரிமை அமைப்புக்களும் கோரிக்கை விடுத்திருந்தன.

தமிழர்கள் திருப்பியனுப்பப் படுவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த விமானம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமான நிலையத்தில் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் காலைமுதல் இரவு வரை நின்று தமிழர்களைத் திருப்பியனுப்புவதைத் தடுத்துவிடப் படாதபாடுபட்டனர்.

திருப்பியனுப்பப் படுவதற்காகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் கூட, தம்மைத் திருப்பினுப்புவதைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஈர்ப்பாட்டம் நடத்துமாறு தனிப்பட்ட முறையிலும், ஊடகங்கள் வாயிலாகவும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தமிழ் மக்கள் அந்தக் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை.

ஏன்? எதனால்? மகிந்த ராஜபக்ச லண்டன் வந்திறங்கிய போது விமான நிலையத்தில் தொடங்கி அவர் தங்குமிடம் வரை விரட்டிச் சென்று மறியல் நடத்தி ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் அவர் ஆற்றவிருந்த உரையையும் கூட நிறுத்தம் செய்யுமளவு திரண்ட ஈழத் தமிழர்களுக்கு அன்றைய தினம் என்ன நடந்தது?

சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி மற்றும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை என்பவற்றால் கனிந்துள்ள சூழலுக்கும் இது போன்றதொரு கதிதான் கிட்டப் போகின்றதா? இது புலம்பெயர் சமூகத்தில் அரசியல் பணியை முன்னெடுப்போர் மற்றும் பரப்புரைப் பணிகளில் ஈடுபடுவோர் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.

சமூக அசைவியக்கத்தில் பார்வையாளர்களாகவே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட, அதனையே ஒரு பெருமையாகக் கருதிச் செயற்படும் மக்களைக் கொண்ட சமூகத்தில் வாழும் நாம், மக்கள் மத்தியில் இருந்து ஆதரவை எதிர்பார்க்க முடியுமே தவிர தன்னெழுச்சியான செயற்பாடுகளை எதிர்பார்க்க முடியாது. எனவே, வெறுமனே மக்களைக் குறைகூறுவதில் பயனில்லை.

மாறாக, இது விடயத்தில் அரசியற் செயற்பாடுகளுக்கு பொறுப்பானோரே கவனஞ் செலுத்த வேண்டும்.

சனல்-4 தொலைக்காட்சி காணொலியைப் பொறுத்தவரை, வழக்கம் போன்றே சிங்களம் அதனை மறுதலித்தாலும் கூட, ஒரு சில விடயங்களை ஏற்றுக் கொண்டேயாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

அது மட்டுமன்றி, சிங்களத் தரப்பில் அச்சம் ஏற்பட்டுள்ளமையும் பல்வேறு பிரமுகர்களின் பேச்சுக்களுடாக வெளிப்படுகின்றது.

மறுபுறம், சிங்களம் கூறும் சாக்குப் போக்குகளை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் அனைத்துலக சமூகம் இல்லையென்பதுவும், பல்வேறு பிரமுகர்களின் கருத்துக்களுக்கு ஊடாக வெளிப்பட்டுள்ளது.

‘சிறிலங்காவின் கொலைக்களம்’ காணொலியைப் பார்வையிட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவிக்கும் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்ரர் பேர்ட், நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதே கருத்தையோ பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூணும் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுவரை கருத்துத் தெரிவித்த யாவரும் மேற்படி விவகாரத்தை இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் எனக் கூறுகின்றனரே தவிர, அனைத்துலக விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனக் கோரவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

இத்தனை அநியாயங்கள் நடைபெற்ற பின்னரும் கூட அனைத்துலக சமூகம் இலங்கை அரசாங்கத்தை நம்பத் தயாராக உள்ளது என்பதையே இது புலப்படுத்தி நிற்கின்றது.

ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு என்ற அடிப்படைக்கும் அப்பால் நாளை இதுபோன்றதொரு நிலை தமக்கு ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கரிசனையும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு உள்ளதை மறைப்பதற்கில்லை.

‘சிறிலங்காவின் கொலைக்களம்’ காணொலியை தான் இதுவரை பார்வையிடவில்லை எனத் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இது தொடர்பில் சுயாதீன விசாரணை நடாத்தப்படுவதாயின் ஐ.நா. பொதுச் சபையிலோ, பாதுகாப்புச் சபையிலோ அன்றி மனித உரிமைக் குழுவிலோ தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஒரு தீர்மானம் தானாக நிறைவேற்றப்படாது என்பது தெரிந்ததே. அத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதில் தமிழர்களாகிய நாம் எத்தகைய பங்களிப்பை நல்க முடியும் எனச் சிந்திக்க வேண்டும்.

செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. நவம்பரில் ஐ.நா. பொதுச்சபை கூடவுள்ளது. இந்த இரண்டு அமர்வுகளையும் இலக்கு வைத்து தமிழர்கள் தமது பரப்புரைப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். அத்தகைய பரப்புரை தொடர்ச்சியானதாகவும், தரம் வாய்ந்ததாகவும், இலக்கை மையப்படுத்தியதாகவும் அமையவேண்டியது அவசியம்.

துரதிர்ஸ்டவசமாக, இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்கலாம் எனும் கருத்து பல நாடுகளின் மத்தியில் உள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அல்லது அத்தகைய ஒரு கருத்து சிங்களத் தரப்பால் அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிக்கையை நவம்பரில் வெளியிடுவதாக சிங்களம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அதன் பின்னணியிலும் ஒரு சதி இருப்பதைப் போன்றே தென்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் கூட்டத்தொடர் செப்டம்பரிலும், பொதுச்சபை நவம்பரிலும் நடைபெறவுள்ள நிலையில் அந்த இரண்டு அவைகளிலும் போர்க் குற்றம் தொடர்பான விடயங்கள் முன்வைக்கப் படுவதைத் தடுத்துவிட முடியும், அதன் பின்னர் ஏதேவொரு காரணத்தினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைத் தாமதப்படுத்துவது அல்லது அரசாங்கத்துக்குச் சார்பான அரைகுறை அறிக்கையொன்றை வெளியிடுவது, சமாந்தரமாக அரைகுறைத் தீர்வு ஒன்றைத் தமிழர்களுக்கு வழங்குவதாக அறிவிப்பது எனப் பல்வேறு திட்டங்கள் அரசாங்கத் தரப்பில் இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.

காலம் செல்லச் செல்ல உலக அரங்கில் வேறு விடயங்கள் முன்னிலைக்கு வரும்போது ஈழத் தமிழ் மக்களின் விவகாரத்தை உலகம் மறந்துவிடக் கூடும் எனச் சிங்களம் எதிர்பார்க்கின்றது.

இத்தகைய சக்கர வியுகத்தை முறியடிக்கக் கூடிய வீரமும் விவேகமும் தமிழர் மத்தியில் உள்ளதா? புலம்பெயர் தமிழர் மத்தியில் பலர் ராஜதந்திர பரப்புரைச் செயற்பாடுகளில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வருகின்ற போதிலும் தூரதிர்ஸ்டவசமாக அவர்கள் மத்தியிலே ஒரு சிறப்பான ஒருங்கிணைவு இல்லாமல் உள்ளது.

இது தமிழர் தரப்பு பரப்புரையைப் பொறுத்தவரை பலவீனமான ஒரு அம்சமே. இது உடனடியாக நிவர்த்திக்கப்பட வேண்டிய ஒன்று.

‘நாளை இன்றேல் ஒருபோதும் இல்லை’ என்பதை மனதில் நிறுத்தி காரியமாற்றுவதே இன்றைய அத்தியாவசிய தேவையாகும்! இதை ஈழத் தமிழினம் உணருமா?

Comments