சர்வதேசத்திற்கு விளையாட்டு.. எங்களுக்கு சீவன் போகிறது…

விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் போர் நடவடிக்கைகளுக்கு ஏறத்தாள முழு உலகமும் ஆதரவு வழங்கியது. வேறுபட்ட நாடுகளின் அணிகளும், எந்தக் கூட்டிலும் சேராத நாடுகளும், தமக்குள் காணப்படும் முரண்பாடுகளை இவ்விடயத்தில் பயன்படுத்த முனையவில்லை.

அதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், வடஅமெரிக்க நாடுகள், கியுபா, இந்தியா, சீனா, ஜப்பான், பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா, ஈரான், லிபியா என சிறிலங்காவை ஆதரித்து நின்ற நாடுகளின் பட்டியல் நீண்டிருந்தது. சிலர், இது ஒற்றை துருவ அரசியலின் வெளிப்பாடு என்றோ உலகமயமாக்கலின் விளைவு என்றோ விளக்கம் கற்பித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இது சிறிலங்கா அரசின் பொயப்பிரச்சாரத்தின் பயனாக ஏற்பட்ட விளைவு என்கிறார்கள். எது எப்படியோ, இந்த ஒருமித்த பலத்தை எதிர்கொள்ள முடியாமல், ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் பாரிய இழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது என்பது உண்மை.

உண்மையில், சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்றாலும், உலகம் அதனை விடுதலைப்புலிகளுக்கு எதிரான போராகவே பார்த்தது. இதற்கு தமிழ் மக்களின் பரப்புரையில் உள்ள குறைபாடோ, அல்லது சிறிலங்காவின் பரப்புரையின் சீர்மையோ காரணமல்ல என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகக் காட்டுவதன் மூலம் அவர்கள் அழிக்கப்படுவதனை நியாயப்படுத்த முடியும் என்பதால் இக்கருத்து வலிந்து திணிக்கப்பட்டது. இதுதான் சர்வதேசத்தின் அரசியல் நிலைப்பாடு.

தமிழப்பரப்பில் சர்வதேசத்தின் நிலைப்பாட்டையொட்டி கருத்து வெளியிட்டு வருபவர்கள், தமிழர்தரப்பினர், குறிப்பாக விடுதலைப்புலிகள், சர்வதேசநாடுளின் ஆதரவினை வென்றெடுக்கத் தவறிவிட்டனர், கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டனர் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். இன்று தமிழ்த் தேசியவாதிகளில் காணப்படும் கருத்து முரண்பாடுகளுக்கு இதுவே அடிப்படையாக அமைந்துள்ளது. விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் இத்தரப்பினர், சர்வதேச நாடுகளின் அணுகுமுறையினை விமர்சனத்திற்கு இடமில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு வேளை, இத்தகைய வல்லாதிக்க சக்திகளை விமர்சித்து என்ன பயன்? கேட்கவா போகிறார்கள்? அதை விடுத்து நம்மாளை விமர்சித்தால் தங்களது புத்திசீவித்தனமாவது வெளிப்படும் என அவர்கள் எண்ணுகிறார்களோ தெரியவில்லை. விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்வது என்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல, ஆனால் சர்வதேச நாடுகளின் அணுகுமுறையில் உள்ள கோளாறு அதனால் மக்களிற்கு ஏற்படும் அவலம் பற்றியே இக்கட்டுரை பேசுபொருளாக கொண்டுள்ளது.

அண்மையில் லண்டன் பொருண்மியக் கல்லு}ரியில (London School of Economics), “வட அயர்லாந்து விடயத்திலிருந்து, தற்கால கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் முரண்பாடுகளுக்கு தீர்வு காணுதல் தொடர்பாக கற்றிந்தவை” (“The Lessons of Northern Ireland for Contemporary Counterterrorism and Conflict Resolution Policy” ) என்ற தலைப்பில் விவாதம் ஒன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளை எதிர்கொள்ளுதல், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தீர்வு முயற்சிகள் பற்றி பேசப்பட்டது. வடஅயர்லாந்தில் முரண்படும் கத்தோலிக்க – புரட்டஸ்தான் மக்களிடையேயான போராட்டம், சம்பந்தப்பட்ட தரப்புகள், தீர்வுக்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட “புனித வெள்ளி” உடன்படிக்கை போன்ற விடயங்கள் அங்கு பேசப்பட்டன. ஒரிரு சந்தர்ப்பங்களில், இவ்விடயத்துடன் தொடர்புபடுத்தி, இலங்கை தீவு விவவகாரம் பற்றியும் கருத்துகள் வெளியிடப்பட்டன.

இந்த விவாதத்தில் பங்குபற்றியவர்கள், கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்கள் என்ற வகையில் அவர்களது கருத்துகள் மேற்குல அரசுகளின் சிந்தனையை பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில், மேற்குலகமானது, இலங்கைத்தீவில் ஏற்பட்ட மோதல்களையும், கிளர்ச்சி (insurgency) - கிளர்ச்சி எதிர்ப்பு (Counter insurgency) நடவடிக்கை என்ற வகைக்குள் உள்ளடக்கி அதனைப் பார்த்திருந்தமை இவர்களது கருத்துகளில் வெளிப்பட்டது. மேலும் அங்கு வெளியிடப்பட்ட கருத்துகளை அவதானித்தால், கிளர்ச்சிகளை அடக்குவதற்கான தீர்வு நடவடிக்கைகயானது சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் ஒரு இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவதில் மாத்திரமே கவனம் செலுத்துவதனை உணரக்கூடியதாக இருந்தது தெரிகிறது. இங்கு இனமுரண்பாடுகளுக்கு நீதியான சமதானத்தை அடைவது பற்றிய அக்கறை காணப்படவில்லை.

வட அயர்லாந்து விடயத்தில், கத்தோலிக்கர்களான குடியரசு வாதிகளும், புரட்டஸ்தாந்து “ஐக்கிய இராட்சிய” வாதிகளுக்குமிடையிலான போராட்டம் ஒரு வித மந்த நிலையை அடைந்ததாகவும், இரண்டுதரப்பும் தமது இலக்கை அடைவதில் முன்னேற முடியாமல் தவித்தததாகவும், அதுவே தீர்வுக்கான வாய்ப்பான சூழலை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இலங்கை தீவு விடயத்தில் அவ்வாறான நிலை காணப்படவில்லை எனவும், போரிடும் இரண்டு தரப்பும் தாம் ஆயுத வழியில் வெற்றி பெறுவோம் என நம்பியிருந்ததனால், தீர்வு முயற்சிகள் வெற்றி பெறவில்லை எனக் குறிப்பிடப்பட்டது. கேள்வி நேரத்தின் போது, பார்வையாளர் பகுதியிலிருந்து ஒருவர், “இலங்கை தீவு விடயத்தில் நோர்வேயின் மத்தியஸ்த்தத்திலான முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கான காரணம் என்ன” என வினா எழுப்பியபோது. “பைத்தியகாரரான (lunatic) பிரபாகரனே காரணம்” என பதிலளிக்கப்பட்டது. நோர்வேயின் தீர்வு முயற்சிக்கு தேசியத் தலைவர் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்பதை குறிப்பிட்ட அந்தப் பேராசிரியர் அதன் விபரங்களைப்பற்றி அங்கு விபரிக்கவில்லை என்பதனால் அவர் குறிபிடும் பைத்தியக்காரத்தனம் என்பது பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

வட அயர்லாந்து விடயத்தை பிரித்தானியா எவ்விதம் கையாண்டதோ, அதே விதத்தில் இலங்கைத்தீவின் இனமுரண்பாட்டினை மேற்குலகம் கையாண்டது என்பது தெளிவாகிறது. ஆயுத மோதல் தவிர்க்கப்பட்டு அமைதி ஏற்படவேண்டும் என்பதில் காண்பிக்கப்பட்ட ஆர்வம், நீதியான தீர்வினை ஏற்படுத்துவதில் காணப்பிக்கப்படவில்லை. ஆதலால், அடிப்படையான இவ்விடயத்தை தவிர்த்து விட்டு, மேற்குலகின் முயற்சிகளுக்கு தமிழர்தரப்பு ஒத்துழைப்பு நல்கியிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தமான வாதம்.

தேசியத்தலைவர் அவர்கள், தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை காட்டியமைக்கான அடிப்படைக் காரணங்களை கண்டறியாமல், அவர் தான் விரும்பிய தீர்வினை விடாப்பிடியாக வலியுறுத்தி நின்ற ஒரு அடிப்படைவாதியாகப் பார்க்கப்பட்டார். அவர் வரித்து நின்ற தமிழீழக் கோரிக்கையானது, அதற்கு பின்னாலிருந்த நியாயப்பாடு, சாத்தியத்தன்மை போன்றவற்றை கவனத்தில் எடுக்கப்படாமலே நிராகரிக்கப்பட்டது. தேசியத்தலைவரை போர்க்குற்றவாளியாக அறிவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வியடத்தில் மேற்குநாடுகளின் நிலைப்பாட்டினை ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு தமிழர் தரப்பிலும் சிலர் இருந்தார்கள். குறிப்பாக விடுதலைப்புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் சிலர் தேசியத்தலைவரை அகற்றி விட்டு புதிய தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கு மேற்குலக சக்திகளுடன் கரம் கோர்த்து நின்றதாகத் தெரியவருகிறது. போரின் இறுதியில், வன்னியில் முடக்கப்பட்ட மக்களை “காப்பாற்றுவதற்காக”, தேசியத்தலைவரை காவு கொடுக்கவும் இவர்கள் தயாராக இருந்தமைக்கான சில ஆதாரங்களும் கிட்டியுள்ளன. இங்கு யார் மக்களை பணயம் வைத்தார்கள் என்பதனை நாம் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

முள்ளிவாய்க்காலின் முடிவிற்கு பின்னர் காட்சி மாறிவிட்டது. முன்னைய கதாநாயகர்கள் வில்லன்களாக மாறிவிட்டார்கள். அவர்கள் மேற்குலகுடன் ஒத்துழைக்க மறுப்பதே இந்நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. இப்போது மேற்குலகின் கவனம் மகிந்த இராஜபக்சவின் மேல் விழுந்திருக்கிறது. அவர் போர்க்குற்றவாளி விருதுக்கு பொருத்தமானவராக மாற்றப்படுகிறார். இதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள வழிவகை தெரியாது தவிக்கும் அவர் உள்நாட்டில் வாய்வீரத்தை காட்டி ஒரு “கொமிக்கல் அலியாக” மாறி வருகிறார். அவரை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்பது முடிவாகி விட்டது. எப்படி நடக்கப்போகிறது அல்லது எப்போது நடக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை. (தாங்கள் அவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்வில்லை என கொழும்பிற்கு பயணம் செய்த அமெரிக்க உதவி வெளிநாட்டுச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் குறிப்பிட்டமையை இங்கு கவனத்திற் கொள்க.)

மேற்கின் (பொருளாதார) நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுக்க முடியமால், குறித்த சில முன்னாள் விடுதலைபுலி செயற்பாட்டாளர்கள் தமது தலைமையை காவு கொடுக்க விரும்பியதுபோல், சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் மகிந்த இராஜபக்சவினை பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகள் முடுக்கி விடப்படலாம். இவ்விடயத்தில் கேட்டதிற்கு அதிகமாக கடன் வழங்கிவிட்டு, அடிக்கடி சிறிலங்கா அரசின் காதைத் திருகிக் கொண்டிருக்கும் சர்வதேச நாணய நிதியம் பெரும் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கலாம். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அண்மையில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களின் உபயம் சாட்சாத் சர்வதேச நாணய நிதியம் என்பதும், அது விதித்த பொருளாதார கட்டுப்பாடுகளின்படி நடக்க முற்பட்டபோது மகிந்த அரசாங்கம் வேண்டிக் கட்டிக் கொண்டது என்பதும் தெரிந்ததே.

ஆனால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் சிங்கள தேசத்தின் மகாவம்ச மனோபாவம் மாறிவிடப்போவதில்லை, அடிப்படைப் பிரச்சனைகளும் தீரந்துவிடப் போவதில்லை. ஆதலால் நீதியான தீர்வு முயற்சியில் சர்வதேசம் இறங்குமா என்பதே எமக்கு முன்னாலுள்ள கேள்வியாக உள்ளது. இப்போதுள்ள வாய்ப்பான சூழலைப் பயன்படுத்தி அதற்கான செயற்பாடுகளில் இறங்குவதே நமக்கான பணியாக இருக்கும். இனப்படுகொலை விடயத்தை ஏற்றுக் கொள்ள வைப்பது இதன் முதற்படியாக அமையும்.

ஒரு பேப்பர் (10.06.2011)

Comments