இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுப்போம்: சீமான்

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததது மட்டுமின்றி, இன்றுவரை ஈழத் தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இலங்கை அரசை வழக்குக் கொண்டுவர அதற்கு எதிராக பொருளாதாரத் தடையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியத் தீர்மானத்தை தமிழக மக்கள் அனைவரும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானம், இந்திய அரசு மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இன்று வரை இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு போக்கைத்தான் இந்திய மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. ஈழத் தமிழருக்கு எதிரான இனப் படுகொலைப் போரில் எல்லா விதத்திலும் ராஜபக்ச அரசுக்கு துணைபோன மத்திய அரசு, போருக்குப் பின்னும் தமிழருக்கு எதிரான அதே நழுவல் போக்கைத்தான் கடைபிடித்து வருகிறது. அதனால்தான் போருக்கு பின்னால் வன்னி முகாம்களில் இருந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழர்களில் 50 விழுக்காட்டினர் அவர்கள் வாழ்ந்து இடங்களில் குடியேற்றப்படாததையும், அவர்களின் வாழ்விற்கு ஆதாரமாக இருந்த காணிகள் பறிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு அளிக்கப்பட்டதையும், தமிழரின் பூர்வீக மண்ணில் சிங்களர்கள் குடியேற்றப்படுவதையும், தமிழினப் பெண்களை கற்பழிப்பதை ஒரு கொள்கையாகவே ராஜபக்ச இராணுவம் கடைபிடித்து வரும் நிலையிலும் எதையும் தட்டிக்கேட்காத இந்திய மத்திய அரசு, அந்நாட்டுடன் தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதில் குறியாக இருக்கிறது. அதாவது தமிழர் பிரச்சனையை பகடையாக்கி தனது உள்திட்டங்களை நிறைவேற்றத் துடிக்கிறது. அதுதான் இலங்கை அயலுறவு அமைச்சர் ஜி.எல். பெய்ரீஸ் கடந்த மாதம் டெல்லிக்கு வந்தபோது இரு நாடுகளும் இணைந்து அளித்த கூட்டறிக்கையில் கூட பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது.

ஜி.எல்.பெய்ரீஸூடன் ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையைப் பற்றி விவாதித்துள்ள மத்திய அரசு, அது குறித்து ஒரு வார்த்தை கூட கூட்டறிக்கையில் குறிப்பிடாதது அதன் நேர்மையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அது மட்டுமல்ல, தனது டெல்லிப் பயணம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்து அமைச்சர் பெய்ரீஸ் கூறிய ஒரு விடயம் நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அது என்னவெனில், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கைக்கு எதிரான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை (International Criminal Tribunal on Sri Lanka) அமைக்க வேண்டும் என்று சில நாடுகள் முயன்றபோது அதற்கு இந்திய அரசு ஆதரவு தரவில்லை என்று பெய்ரீஸ் கூறியுள்ளார். போஸ்னிய இனப் படுகொலையை விசாரித்துவரும் யுகோஸ்லாவிற்கு எதிரான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தைப் போன்றதொரு தீர்பாயத்தை – பன்னாட்டு மனிதாபிமான பிரகடனங்களின் கீழ் அமைக்கும் முயற்சியை இந்திய அரசு தட்டிக்கழித்துள்ளது என்றால் இதை விட தமிழினத் துரோகம், மானுட துரோகம் என்று ஏதாவது இருக்க முடியுமா என்பதை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக சட்டப் பேரவை இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத் தமிழினத்தின் நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் இத்தீர்மானம் ஒரு பெரும் திருப்புமுனையாகும். இதனை இந்திய அரசு நிறைவேற்றும் என்று நாம் காத்திருந்தால் இலவு காத்த கிளி கதையாக முடிந்துவிடும்.

எனவே, இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை தமிழர்களையாகிய நாம் உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம்.

1. இங்கு விற்பனைக்கு வந்திருக்கும் இலங்கை நாட்டின் பொருட்கள் எதுவாயினும் அவைகளைப் புறக்கணிப்போம்.

2. இலங்கைக்கு இங்கிருந்து அனுப்பப்படும் பொருட்களை நிறுத்துமாறு தமிழ்நாட்டு வணிகர்களை வலியுறுத்துவோம்.

3. இலங்கையில் கடந்த 2010ஆம் ஆண்டில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டபோது, அதில் இந்தியக் கலைஞர்கள் எவரும் கலந்துகொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுத்தோம். அந்த விழா தோல்வியில் முடிந்தது. அதேபோன்று, இப்போதும் இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் இலங்கையை முழுமையாகப் புறக்கணித்து தங்களுடைய மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்துமாறு கோருவோம்.

4. ‘கலை, இலக்கியம் யாவும் மக்களுக்காகவே’ என்கிற முழுக்கத்துடன் எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்பட்டுவருபவர்கள் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள். இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை முன்னெடுக்கும் மானுடத்தின் தூதுவர்களாக அவர்களை முன்னுறுத்தி செயல்படுவோம். அவர்கள் இந்தியா முழுவதும் சென்று, கலைஞர்களையும், படைப்பாளிகளையும் சந்தித்து இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்வோம்.

5. இதேபோல், இனவெறியை கடைபிடித்த தென் ஆப்ரிக்காவை எப்படி சர்வதேச சமூகம் தனிமைபடுத்தியதோ அதேபோல், தமிழினப் படுகொலை செய்த இலங்கையையும் பன்னாட்டுச் சமூகம் தனிமைபடுத்திட வேண்டும் என்ற முழக்கத்தை உலகளாவிய அளவில் நாம் முன்னெடுப்போம். குறிப்பாக இலங்கையின் கிரிக்கெட் அணி இதற்கு மேல் இந்தியாவில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று போராடுவோம். தமிழ்நாட்டு மண்ணில் அந்த அணிக்கு இடமில்லை என்பதை ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் காட்டுவோம்.

6. இலங்கை அரசின் விமான போக்குவரத்தை மனிதாபிமானமுள்ள யாரும் பயன்படுத்தாதீர்கள் என்று விரிவான அளவில் அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி பரப்புரை செய்வோம்.

7. இலங்கை இனப் படுகொலை செய்த குற்றவாளி என்பதை இந்தியா முழுவதும் கொண்டு செல்வோம்.

8. இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை கொண்டுவருமாறு நாடாளுமன்றத்தில் தங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு மத்திய அரசை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்வோம்.

9. தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கையிலுள்ள சிங்களக் கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்க்கின்றன. தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை தாங்கள் கண்டு கொள்ளப் போவதில்லை என்றும், தங்களைப் பொறுத்தவரை இந்திய அரசுடன் மட்டுமே உறவு கொண்டுள்ளதாகவும் திமிருடன் கூறியுள்ளார் இலங்கை அமைச்சக பேச்சாளர் கேகலிய ரம்புக்வாலா. இநதியா வேறு, தமிழ்நாடு வேறு என்று இலங்கை அமைச்சன் பேசுகிறான். நாம் புரியவைப்போம். தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தீர்மானத்திற்கு எந்த அளவிற்கு வலிமை உள்ளதென்பதை தமிழக மக்களாகிய நாம் உணர்த்துவோம்.

தமிழினத்தின் ஒன்றிணைந்த செயல்பாட்டிலேயே தமிழினத்தின் மீட்சி உள்ளது என்பதனை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

Comments