பல காலமாக சிறிலங்காவின் உற்ற நண்பனாக இருந்த மூனை கடந்த ஒரு வருடமாக இழிவாக வர்ணிக்க காரணம் என்னவெனில் அவர் மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்ததுதான். சிறிலங்கா அரச தலைவர்கள் ஐநாவின் மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை தொடர்ந்தும் ஏற்க மறுப்பதுடன், அப்படியான குற்றம் எதனையும் தமிழருக்கெதிராக செய்யவில்லையென்று முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் சிங்கள ஆட்சியாளர்கள் கூறிவருகிறார்கள்.
தானும் மேற்கத்தைய நாடுகளின் ஆதரவை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற வகையில் சேவைகளை செய்கிறார் பான் கீ மூன். சிறிலங்கா அரசிற்கும், மேற்கத்தைய நாடுகளின் அழுத்தங்களிற்கும் மத்தியில் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறார் மூன். இரு சாராரையும் சாந்தப்படுத்த பல இன்னல்களை மூன் தொடர்ந்தும் சந்திக்கிறார் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.
சிறிலங்காவுக்கு எதிராக எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுவையும் அமைக்கக்கூடாது என்று கூறிவருகிறது சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள். இவ் நாடுகள் அனைத்துமே பான் கீ மூனுக்கு தொடர்ந்தும் ஆதரவாக இருக்கின்றன.
தென் கொரியாவின் வெளிவிவகார அமைச்சராக இருந்தவர்தான் பான் கீ மூன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இராஜதந்திரியாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கான தென் கொரியாவின் உயர் ஸ்தானிகராகவும் செயற்பட்டவர்தான் பான் கீ மூன். இந்தியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் நட்புறவுப் பாலத்தை கட்டியெழுப்ப இவர் பல காலம் அரும்பாடுபட்டார். இப்படியாக, இந்தியாவின் உற்ற நண்பனாக இவர் இருந்து வந்துள்ளார்.
அதீத இராஜதந்திர அறிவைக்கொண்ட பான் கீ மூன் 2007-ஆம் ஆண்டு ஐநா சபை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கோபி அனான் வகித்த பதவியை இவராக்கிக் கொண்டார். பல நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் கோபி அனானை இரண்டாவது முறையாக இப்பதவிக்கு வருவதை விரும்பவில்லை. இதற்கான காரணம் என்னவெனில், கோபி அனான் வெளிப்படையாகவே எதையும் பேசுபவர். அத்துடன் பிறரை அரவணைத்துச் செல்லும் பக்குவம் குறைந்தவர்.
ஆகவே, பல உலக நாடுகள் அனானிடம் இருந்த குணாதிசயங்களை விரும்பவில்லை. அனானிடம் இல்லாத பல குணாதிசயங்கள் பான் கீ மூனிடம் இருப்பதை கண்டுகொண்டன பல நாடுகள். அதனடிப்படையில், இவரையே இப்பதவிக்கு 2007-ஆம் ஆண்டு கொண்டு வந்தார்கள்.
நம்பிக்கைக்கு விசுவாசமாக இருக்கும் மூன்
பான் கீ மூனின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31 ம் தேதியுடன் முடிவடைகிறது. இப்பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தான் இரண்டாவது முறையாகப் போட்டியிடப் போவதாக பான் கீ மூன் ஜூன் 6, 2011 அன்று நியூயோர்க்கில் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது தெரிவித்தார். பல உலக நாடுகள் தமது ஆதரவை வழங்கியுள்ளார்கள். சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளின் வரிசையில் சிறிலங்காவும் மூனின் அறிவிப்பை வரவேற்றுள்ளதுடன், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
தான் இரண்டாவது முறையாக இப்பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறிய மூன், பத்திரிகையாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள உலக நாடுகளை ஒற்றுமைப்படுத்தி உறவுப்பாலத்தை தனது இரண்டாவது பதவிக்காலத்தில் செய்யப்போவதாகவும் கூறினார். அடக்கமாக காரியங்களை செய்யும் தகமையுடைய மூன், உலக அரங்கில் சிறப்பாக செயலாற்றுகிறார் என்றால் மிகையாகாது. இவரின் இப்பதவிக் காலத்தில் சில நாடுகளுக்கெதிராக எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் பரிதவிக்கிறார்.
பல மேற்கத்தைய நாடுகளும் மூனை விரும்புகிறார்கள். காரணம் இவர் அதிகம் பேச மாட்டார் எனவும் இவரின் அடக்கமான குணாதிசயங்களை வரவேற்கிறார்கள் இந்நாடுகள். சிறிலங்கா போன்ற வளரும் நாடுகளில் நிலவும் பிரச்சினைகள் என்பது பல உலக நாடுகளின் கண்களிற்கு பெரிதாகத் தெரிவதில்லை. இதற்கான காரணம் என்னவெனில் ஒவ்வொரு நாடுகளும் தமது பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தியே பிற நாடுகள் விடயங்களில் தலையீட்டை அதிகரிக்கின்றன. அவ்வகையில் பார்த்தால், சிறிலங்கா விடயம் என்பது பெரும் பிரச்சினையாக இந்நாடுகளுக்கு தென்படவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.
இந்தியாவின் அதீத நண்பனாகிய மூன் அவர்கள், இந்தியா கூறும் அனைத்து விடயங்களையும் கச்சிதமாகச் செய்வார். குறிப்பாக, ஐநாவின் பேச்சாளராக கேரளாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் என்பவரை மூன் நியமித்தார். இவரின் நியமனம் என்பது இந்தியாவின் பரிந்துரையிலேயே இடம்பெற்றது. இந்திய முன்னாள் இராணுவ அதிகாரியான சதீஷ் நம்பியாரின் சகோதரரே விஜய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. சதீஸ் நம்பியாரை இந்திய அரசு சிறிலங்காவின் இராணுவத்திற்கு அறிவுரை வழங்கவென கடந்த காலங்களில் அனுப்பியது. அத்துடன், மே 2009-ல் முடிவுக்கு வந்த நான்காம் கட்ட ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில் களத்தில் நின்று சிறிலங்கா இராணுவத்திற்கு ஆலோசனைகளை வழங்கியவர்தான் சதீஷ் நம்பியார்.
சதீஷ் நம்பியார் சிங்கள இராணுவத்துடன் இயங்கிக்கொண்டிருந்த வேளையில் ஐநாவின் தூதராக வவுனியா சென்று விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் இடையில் சண்டை நடைபெற்ற வேளை போரை நிறுத்த பல பிரயத்தனங்களை தான் செய்ததாக கூறினார் விஜய் நம்பியார் என்பது உலகறிந்த உண்மை. பல தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட காரணமானவர்களில் முக்கியமானவர் விஜய் நம்பியார்.
யாரை நம்புவதடா சாமி?
ஏதோ தமிழர்களின் இன்னல்களுக்கு ஐநா விடிவைத் தேடித்தரும் என்று காத்திருக்கும் உலகத் தமிழர்கள் இன்று தமது ஆதங்கங்களை வெளிக்கொண்டுவர முனைகிறார்கள். சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து 1980 வரையிலும் சாத்வீக வழியில் போராடிய தமிழர்களை சப்பாத்துக் கால்களால் அடித்துத் துன்புறுத்தினார்கள் சிங்கள அரச காடையர்கள். இதனை உலகமே கண்டு கொள்ளவில்லை.
1980-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறப்பெடுத்த ஆயுதவழிப் போர் உலகறியச் செய்தது. குறிப்பாக, பல இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக உலகநாடுகள் சென்றார்கள். இதனால், இப்பிரச்சினை உலக மயமாக்கப்பட்டது. இருப்பினும் தமிழருக்கெதிராக ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்தை பல உலகநாடுகள் கண்டுகொள்ளவில்லை.
சிங்கள அரச படைகள் செய்த அட்டூழியங்களை தடுத்து நிறுத்த உலகநாடுகள் தவறி விட்டன. ஐநாவும் சிங்கள அரசிற்கு ஆதரவாகவே இருந்து வந்தது. ஏதோ விடுதலைப்புலிகள் சிங்கள அரச படையினரின் இலக்குகள் மற்றும் சிங்களப் பகுதிகளில் இருக்கும் சிறிலங்கா அரசிற்கு உரித்தான சொத்துக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டால், உலகநாடுகள் திகில்கொண்டு விடுதலைப்புலிகளை கண்டித்து அறிக்கைகளை விட்டார்கள். ஏன், விடுதலைப்புலிகளை தமது நாடுகளில் தடையும் செய்தார்கள். ஆனால், சிங்கள அரசுடன் இராஜதந்திர மற்றும் பொருளாதார நட்புறவைப் பேணிவந்தார்கள்.
தமிழீழ விடுதலைக்காக போராட ஆயுதமேந்திய விடுதலைப்புலிகள் பல இடர்களை சந்திக்க வேண்டிவந்தது. குறிப்பாக, யாரின் விடுதலைக்கு போராட ஆயுதமெடுக்கப்பட்டதோ அவர்களின் உயிர்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மண்ணோடு மண்ணாக புதைக்கப்படுகின்ற வேளையில் தமது ஆயுதத்தை மௌனித்தார்கள் விடுதலைப்புலிகள். புலம்பெயர் தமிழர் உலகம் அனைத்தும் அறவழிப் போராட்டத்தை முடக்கிவிட்டவேளை வேறு வழியின்றி தமிழருக்கு இழைத்த கொடுமையை நேரில் பார்த்து நடவடிக்கை எடுப்பதென்ற ஒரு பாணியில் சிறிலங்கா சென்று வன்னியின் மயான பூமியை பார்வையிட்டார் பான் கீ மூன். இதில் வேடிக்கை என்னவென்றால் சிறிலங்காவின் மூத்த இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் அவருடன் சென்றார்கள்.
உலகைத் திசை திருப்ப வவுனியாவில் அடைத்து வைத்தவர்களை சென்று பார்த்து ஆறுதல் கூறினார் மூன். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் சிறிலங்கா அரசினால் சிறப்பாகப் போடப்பட்ட அகதி முகாமையே பான் கீ மூன் பார்க்க அனுமதிக்கப்பட்டார். நாட்டை விட்டு சென்றவுடன் சிறிலங்காவில் போர் ஓய்ந்து விட்டதாகவும்இ பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரேயொரு பிரச்சினை மட்டும்தான் சிறிலங்காவில் இருப்பதாகவும் அதாவது யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முகாங்களில் இருக்கும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஐ.நா சபை நடவடிக்கை எடுக்கும் என்றும் பான் கீ மூன் கூறினார். இது போதாதென்று ஒரு புள்ளி விவரத்தையும் அதாவது 7,000 பொதுமக்கள் மட்டுமே இறுதிப் போரில் பலியானதாகவும் கூறினார்.
பல அழுத்தங்களின் பின்னர் மூனால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழு தனதறிக்கையையும் கடந்த சில மாதங்களின் முன்னர் வெளியிட்டது. இதை வாசித்த சிறிலங்கா அரச தலைவர்கள் கொதிப்படைந்தார்கள். இதுவரை இவ்வறிக்கைக்கு பதில் அறிக்கை ஐநாவுக்கு வழங்கப்படவில்லை. மூனிடம் கேட்டால், சிறிலங்காவின் பதிலறிக்கை வராமால் தான் எதுவும் செய்ய முடியாது என்கிறார். இப்படியாக அடக்கி வாசிக்கும் குணாதிசயத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார் மூன்.
ஐநா சபையினால் வரையறுக்கப்பட்ட நான்காவது ஜெனீவா சட்ட வரைமுறை 12 ஆகஸ்ட் 1949 இயற்றப்பட்டது. இதன் மூன்றாவது சரத்து தெளிவாக கூறுகின்றது என்னவெனில் எந்த வேறுபாடும் இல்லாமல் எந்தக் குழுவும் ஆயுதத்தை மௌனிக்கச் செய்தால் அவர்களை மதித்து அவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது. விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கச்செய்த பின்னரும் சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டு பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்தார்கள். அத்துடன் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் அரசியல் முக்கியஸ்தர்களான நடேசன் மற்றும் புலித்தேவனை அவர்களின் குடும்பங்களின் முன்னே சுட்டுக் கொன்று இந்த உலகச் சட்டத்தை மீறினார்கள்.
சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் விஜய் நம்பியார் போன்றவர்களின் நேரடிக் கட்டளைக்கமைவாகவேதான் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைய முன்வந்தார்கள் என்கிறது அதிகார பூர்வமான செய்திகள். இவைகள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது உலகநாடுகள் ஒன்றாக இணைந்தே ஈழ விடுதலைப் போராட்டத்தை இந்நிலைக்குக் கொண்டுவந்துள்ளார்கள் போலும். ஆகவே, நீதி கேட்டு யாரிடம் சென்று முறையிடுவதென்பது தெரியாமலிருக்கிறது. அப்படிச் சென்று முறையிட்டாலும் குறித்த நீதியாளர்கள் குறிப்பாக ஐநா போன்ற உலக அமைப்பு எவ்வாறு நீதியைப் பெற்றுத்தரும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அழிவுக்குக் காரணமாக ஐநாவும் இருந்துள்ளமையினால், எவ்வாறு இவர்கள் நீதியைப் பெற்றுத்தருவார்கள் என்பதுதான் பலரிடத்தில் எழும் கேள்வி.
பான் கீ மூனின் செயற்பாட்டில் ஓரளவேனும் நம்பிக்கை கொண்டுள்ள உலகத் தமிழருக்கும் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களுக்கும் அதிர்ச்சி தரும் செய்தியே மூனை சிறிலங்கா அரசு வாழ்த்தும் அறிக்கை.
உண்மையிலேயே மூன் சிறிலங்கா அரச தலைவர்களைக் கூண்டிலேற்ற முற்பட்டிருப்பாராயின், நிச்சயமாக சிறிலங்கா அரசு மூன் இரண்டாவது முறையாக ஐநாவின் பொதுச் செயலாளராக வருவதை விரும்பாது.
மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கைக்கும், சிறிலங்கா மீது சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தும் நாடுகளின் கோரிக்கைக்கும் ஓ போடு என்கிற நிலைப்பாட்டையே உணர முடிகிறது.
அனலை நிதிஸ் ச. குமாரன்
nithiskumaaran@yahoo.com
Comments