தமிழர்கள் அல்லாத கர்நாடக மாநிலத்திலும் தலைதூக்கியுள்ள தமிழீழப் பிரச்சினை

இந்தியாவில் முதல் முதலாக தமிழீழப் பிரச்சனை தமிழகத்தை விட்டு கர்நாடக மாநிலத்திலும் தலைதூக்கியுள்ளது.

அதாவது தனித் தமிழீழத்திற்கு இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகத் தமிழர்களும் மற்ற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வந்த நிலைமாறி முதன் முதலாக தமிழர்கள் அல்லாத கர்நாடக மாநில ஸ்ரீராம் சேனா, மராட்டிய மாநில சிவ சேனா, கன்னட பக்ச சமிதி, கன்னட பக்ச கர்நாடகா மற்றும் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புக்கள் இணைந்து இன்று பெங்களூரில் உள்ள Freedom Fighter Circle என்னுமிடத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இமயம் முதல் ஈழம் வரை இந்து நாடு, மலரட்டும் மலரட்டும் தமிழீழம் மலரட்டும் என்ற கோசங்கள் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஸ்ரீலங்கா ஹிந்து சுரக்சா பரிசத் என்ற அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அதாவது இலங்கை இந்துக்கள் பாதுகாப்பு பேரவை என்பது இதன் பொருளாகும்.

இதன் தலைவராக ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தாலிக்கும், அமைப்பாளராக அர்ஜூன் சம்பத்தும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பிரமோத் முத்தாலிக் பேசுகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கிருஷ்ணனின் மறு அவதாரம், இந்துக்கள் அனைவரும் அவரது படத்தை வைத்து வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த பேரவை இன்று 5 தீர்மானங்களை நிறைவேற்றின.

1) கொடுங்கோலன் ராசபக்சேவை ஐக்கிய நாடுகள் சபை குற்றவாளி என்று கூறியதையடுத்து இந்திய மத்திய அரசு ராசபக்சே மீது சர்வதேச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ராசபக்சேவை தூக்கிலேற்ற வேண்டும்.

2) 1972ம் ஆண்டு வங்க தேசத்தை பாகிஸ்தானிடமிருந்து இந்தியா மீட்டுக் கொடுத்தது. ஆனால் அவர்கள் இன்று இந்தியாவிற்கு எதிராக விளங்குகின்றனர். ஏனென்றால் அவர்கள் மதத்தால் இசுலாமியர்கள் என்பதால் தான். ஆனால் இந்தியா தனித்தமிழீழம் பெற்றுக் கொடுத்தால் அங்கு உலகில் இன்னொரு இந்து நாடு உருவாகும். அவ்வாறு தமிழீழம் உருவானால் மட்டுமே இந்தியாவிற்கு பாதுகாப்பு. இல்லையென்றால் அங்கு சீனா காலூன்றி விடும். இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசு தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்.

3) இந்திய வம்சாவளியினராகிய இந்துக்கள் அங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை மீட்க தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு என்று கர்நாடக மாநில அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேலும் கர்நாடக மாநில அரசின் செலவிலேயே அங்குள்ள இந்துக்களை மீள்குடியேற்றத்திற்கு உதவவும், அங்கு இடிக்கப்பட்டுள்ள கோயில்களை புனரமைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

4) தலாய்லாமா உலகெங்கும் சென்று அவரது நாட்டு விடுதலைக்கு அறவழியில் ஆதரவு திரட்டுவது போல், தமது தாய்நாட்டு விடுதலைக்காக போராடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தையும் இந்திய அங்கீகரிக்க வேண்டும்.

5) விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று இலங்கை அரசாங்கமே கூறிவிட்ட பின்பு அவர்கள் மீதான தடையை நீக்க வேண்டும். விடுதலைப்புகள் மீதான தடை என்பது ஒட்டு மொத்த இலங்கை இந்துக்களின் மீதான தடையாகும். புலிகள் மீதான தடையை நீக்கினால் மட்டுமே அங்குள்ள இந்துக்களுக்கு புனர்வாழ்வு அளிக்க முடியும்.

என்று 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஸ்ரீலங்கா ஹிந்து சுரக்சா பரிசத் வரும் செப்டம்பர் மாதத்தில் தலைநகர் டெல்லியில் தனித்தமிழீழம் என்ற ஒரு இந்துநாடு உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில இந்து அமைப்புக்களையும் ஒன்று திரட்டி ஒரு மாநாடு நடத்த உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.


Comments