இலங்கை அரசு,இந்திய அரசோடு கருணாநிதியும் கைகோர்த்ததால்தான் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். தீபச்செல்வன்

http://www.eelamenews.com/wp-content/uploads/2011/06/mahi-man.jpgதங்களைத் தாங்களே கொலை செய்யும் குழந்தைகளின் கையில் உடைந்த பொம்மைகளைத் தவிர ஒன்றுமில்லை போர் தின்று நஞ்சுண்ட நிலத்தில் குந்தி இருப்பதற்காய் இன்னும் போர் நடக்கிறது’’

இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்கு சாட்சிகளாய் விரிகின்றன தீபச்செல்வனின் வரிகள்.

கவிஞர் தீபச்செல்வன் கிளிநொச்சி இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். போருக்கு தன் சகோதரனை பலிகொடுத்தவர். ஆவணப் படங்கள், கட்டுரைகள், கவிதைகள் என போரின் அவலத்தை தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார். ‘இறுதி எச்சரிக்கை’ என்ற பெயரில் சுவரொட்டிகள் மூலம் இலங்கை ராணுவம் இவரை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தன் உயிரையும் பொருட்படுத்தாது இலங்கை அரசுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அகதிகள் முகாமில் இருந்து திரும்பிய தன் தாய், தங்கையுடன் இரத்தினபுரத்தில் வசித்து வருகிறார். சென்னை வந்திருந்த தீபச்செல்வனை சந்தித்தோம்.

மீள்குடியேறிய மக்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது?

‘‘மீள்குடியேற்றம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை. கடைசியாக போர் நடந்த இடங்களில், குறிப்பாக உடையார்கட்டு முதல் முள்ளிவாய்க்கால் வரையிலான பகுதிகளில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள் இன்னமும் தடுப்பு முகாம்களில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. முகாமுக்கு வெளியிலும் ஏராளமான மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கிறார்கள்.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழுவதற்கு நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை. அவர்களுக்கான கல்வி, தொழில் குறித்த திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை.’’

தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகள்,அவர்களின் நிலங்கள் நியாயமான முறையில் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுகிறதா?

‘‘விடுதலைப் புலிகளின் அலுவலகங்கள், இராணுவ மையங்கள் இருந்த பகுதிகளைச் சுற்றி ஏராளமான மக்கள் வசித்து வந்தார்கள்.அந்த இடங்கள் இப்போது உயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டு,அங்கு இன்னமும் மீள்குடியேற்றம் நடைபெறவில்லை. தமிழ் மக்கள் வாழ்ந்த வளமான பகுதிகளையும் சிங்கள ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு விட்டது.

கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத் தளவாடங்களை அமைத்து சிங்களமயமாக்கும் வேலைகள் வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது.யாழ்ப்பாணத்திலும் பெருமளவு பகுதிகள் ராணுவக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு விட்டன. நாவற்குழியில் எங்கள் மக்கள் வாழ்ந்த இடங்களில் 300 சிங்களக் குடும்பங்கள் வெளிப்படையாகக் குடியேறி இருக்கிறார்கள்.’’

ஐ.நா.அறிக்கைக்குப் பிறகு உலகின் கவனம் இலங்கை மீது திரும்பியிருக்கிறது.இதனால் இலங்கை அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் இருக்கிறதா?

‘‘ஐ.நா. அறிக்கை எங்கள் மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இலங்கை அரசின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை.அவர்களைப் பொறுத்தவரை நடந்து முடிந்தது ஒரு மனிதாபிமானப் போர்.‘ராணுவம் ஒரு கையில் துப்பாக்கியையும், ஒருகையில் மனிதாபிமானத்தையும் பிடித்துக் கொண்டு போனது’ என்று அதிபர் ராஜபக்ஷே தெரிவித்திருந்தார்.அந்தப் பிடிவாதம் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.’’

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்கு இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பயனளிக்கும் என நினைக்கிறீர்கள்?

‘‘ஒருமனதாக, எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தமிழக சட்டமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆறுதலாக இருக்கிறது. போர் நிறுத்தம், தனி ஈழம் என பலவற்றைக் கடந்த காலங்களில் கருணாநிதி முன்வைத்திருந்தார்.ஆனால், சில நாட்களிலேயே அது தவிடுபொடியானதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

ஆனாலும் முற்றிலும் நம்பிக்கையை இழந்து விடவில்லை.புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர்,பலன் தரக்கூடிய விஷயங்களை எங்களுக்காகச் செய்வார் என நம்புகிறோம். தமிழக முதல்வரின் இலங்கைத் தொடர்பான ஒவ்வொரு பேச்சும் எங்கள் மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இலங்கை அரசும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.’’

தமிழகத்தில் தி.மு.க.வின் தோல்விக்கு ஈழப் பிரச்னையும் ஒரு முக்கிய காரணம். இந்த அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது?

‘‘கடந்தமுறை கருணாநிதி முதல்வராகப் பதவியேற்ற போது நாங்கள் அவரை முழுமையாக நம்பினோம்.ஆனால், அவர் முதல்வராக இருந்தபோதுதான் ஈழத்தமிழர்களின் போராட்டம் சிதைக்கப்பட்டது. ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் எழுப்பிய கோபத்தை, எழுச்சியை, போராட்டத்தை கருணாநிதி முடக்கினார்.

எங்களுடைய பின்னடைவிற்கு இலங்கை அரசு,இந்திய அரசோடு கருணாநிதியும் ஒரு காரணமாக நிற்கிறார். கருணாநிதி பதவியேற்றபோது உலகத் தலைவர்,தமிழினத் தலைவர் என்றெல்லாம் நாங்கள் விளித்திருந்தோம். ஆனால், இப்போது அவர் தமிழ்நாட்டிற்கே தலைவராக இருக்கத் தகுதியற்றவர் என்று நாங்கள் உணர்கிறோம்.’’

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் மூலம் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்னைகள் அப்படியே தொடர்கிறது.இலங்கை அரசுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

‘‘நாங்கள் ராணுவத்தால் மிகவும் கட்டுண்ட, இறுக்கமான நிலையில் இப்போது இருக்கிறோம்.இன்றைய நிலையில் எங்களது நிலத்தை, ஊனப்பட்டிருக்கும் எங்களது மக்களை பாதுகாப்பதும்,எங்களது போராட்டத்தின் நியாயத்தைப் பதிவு செய்வதும்தான் முக்கியமான வேலை. இன்று ஈழத்தின் மீது, இலங்கையும் சர்வதேச நாடுகளும் மிகப்பெரிய அழுத்தத்தைச் செலுத்தி வருகின்றன.எங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படாமல், இந்த அழுத்தம் தொடருமானால், நிச்சயம் ஒருநாள் எங்கள் சந்ததியினர் உக்கிரமான ஒரு போராட்டத்தைத் தொடங்குவார்கள்.’’

அழுத்தமாக முடிக்கிறார் தீபச்செல்வன்.

Comments