சிறிலங்காவினது போர்க் குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருதல்

போர்க்குற்றங்களையும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் உலகின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு நீங்கள் இரகசியமாகச் செய்வதற்கு நவீன தொழிநுட்பம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்பதையே இந்த ஆவணப்படம் எடுத்துக் காட்டுகிறது.

இவ்வாறு எழுத்தாளரும் ஆவணப்பட தயாரிப்பாளருமான Callum Macrae எழுதியுள்ளார்.

Lifting the lid on Sri Lanka's war crimes
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஊடகமான The Guardian வெளியிட்டுள்ள இவ்வரலாற்றுச் செய்திக் கட்டுரையை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

உண்மைகள் உரத்து ஒலிக்கும் தருணமிது.

சிறிலங்கா விமானப்படையின் கிபிர் வகையினைச் சேர்ந்த போர் விமானங்கள் தலைக்குமேலே இரைந்துகொண்டிருக்க, சிறிலங்கா இராணுவத்தின் ஆட்லறி எறிகணைகள் இடைவிடாது தாக்குதலை நடாத்திக்கொண்டிருக்க அச்சத்தில் உறைந்துபோயிருந்த தமிழ் பொதுமக்கள் சிறிய பதுங்கு குழிகளை அமைத்து அதற்குள் முடங்கினர்.

சனவரி 2009, சுதந்திரத் தமிழீழம் நோக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 ஆண்டுகாலபோரின் முடிவினது ஆரம்பமது.

சிறிலங்காவினது வட கிழக்குப் பகுதியிலுள்ள குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் அடிவாங்கிச் சிதைந்துபோன விடுதலைப் புலிகளின் அணிகள் 400,000 போதுமக்களுடன் இணைந்து ஓடிக்கொண்டிருந்தார்கள்.

'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என அறைகூவிக்கொண்டு அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கொடூரம் நிறைந்த சிங்கள அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக இல்லாதொழிப்பதற்கான உரிமம் தங்களுக்குத் கிடைத்துவிட்டது என்ற மமதையில் செயற்பட்டனர்.

போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து ஐ.நாவும் இதர அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசாங்கத்தினால் அழுத்தங்கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டன. அனைத்துலக ஊடகங்கள் புறந்தள்ளப்பட்டன.

அரசாங்கத்திற்கு எதிராக எழுதத் துணிந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் காணாமற்போனார்கள், கொல்லப்பட்டார்கள் அல்லது அச்சத்தின் காரணமாக நாடு கடந்தனர். இதுபோன்ற அட்டூழியங்கள் அரங்கேறிக்கொண்டிருக்க உலகம் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தது.

எறிகணைகள் வீழ்து வெடித்துக்கொண்டிருக்க பொதுமக்கள் அமைத்த பதுங்கு குழிகள் மிகவும் குறைத்தளவிலான பாதுகாப்பினையே அவர்களுக்கு வழங்கியது.

மூன்று அடி ஆழமான இந்தப் பதுங்குகுழிகளில் தங்களது பிள்ளைகளைப் பாதுகாக்கும் வகையில் செயற்படும் பெற்றோர்களதும், வளர்ந்தவர்களதும் தலைகள் பெரும்பாலும் பதுங்குகுழிகளுக்கு வெளியேயே தெரியும்.

அருகருகே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருக்கு யாரோ ஒருவர் மட்டும் பதுங்கு குழிக்கு வெளியே சிறியதொரு கமெராவில் வீடியோ படம் எடுத்துக்கொண்டிருக்கிறார், எறிகணைகள் அருகாக விழுந்தபோதும் அவர் தொடர்ந்தும் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

கையில் குழந்தையொன்றுடன் இருக்கும் ஒரு பெண் தமிழில் உரக்கக் கத்துகிறாள். "தயவுசெய்து பதுங்கு குழிக்குள் வாருங்கள்! வீடியோ படம் எடுக்கவேண்டாம்! இந்த வீடியோவினை வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? இவர்கள் அனைவரையும் கொலை செய்கிறார்கள்" என அந்த மாது உரத்துக் கத்துகிறாள்.

சனவரி 2009 பின்னான நான்கு மாதங்களில் இரண்டு விடயங்கள் அரங்கேறின. முதலாவதாக முடிந்தவரை எவ்வளவு பொதுமக்களை வேண்டுமானாலும் கொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் சிறிலங்கா அரசாங்கம் செயற்பட்டிருந்தது.

மருத்துவமனைகள் மீதும் 'போரற்ற பகுதிகளாகப்' பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகள் மீதும் வேண்டுமேன்றே தாக்குதல்களை நடாத்தியதன் மூலம் அரச படையினர் தங்களது இந்தத் திட்டத்தினை நிறைவேற்றினர்.

40,000 அல்லது அதற்கும் அதிகமான பொதுமக்கள் இந்த இறுதிப் போரின் போது கொல்லப்பட்டிருக்கலாம். விடுதலைப் புலிகள் பொதுமக்களை வெளியேறவிடாது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதும் கொல்லப்பட்ட பொதுமக்களின் தொகை அதிகரித்தமைக்கு இன்னொரு காரணம்.

இரண்டாவது குறிப்பிட்ட வீடியோக் கருவியினை வைத்திருந்தவர் தொடர்ந்தும் சம்பவங்களைப் படமெடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

ஏனைய பலரைப் போலவே இவரும் தனது இந்தப் பணியினைத் தொடர்ந்திருக்கிறார். சிறிய ஒளிப்படக்கருவிகள் மூலமும் கைத்தொலைபேசிகள் மூலமும் இத்தகயை படங்கள் எடுக்கப்பட்டன.

இதுபோன்ற பல படங்களை தற்போது பல்வேறுபட்ட தமிழ் இணையங்களில் பெற முடியும்.

ஏனையவை போர்க் குற்றங்கள் இடம்பெற்றதைக் காட்டும் படங்கள். மிக மோசமான போர்க் குற்றங்கள், படுகொலைகள் உள்ளிட்ட கொடூரங்களைப் புரிந்த சிறிலங்கா இராணுவத்தினரே இதனைத் தங்களது கைத்தொலைபேசிகளில் பதிந்திருக்கிறார்கள்.

போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர்தான், 'இந்தப் படத்தினை வைத்து என்ன செய்யப் போகிறாய்' என்ற போரின் மத்தியில் சிக்கியிருந்த அந்தப் பெண்ணின் கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது.

போரின் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட இந்த வீடியோப் படங்கள், மற்றும் குழப்பம் தருகின்ற ஒளிப்படங்களைக்கொண்டு நாங்கள் வீடியோ ஆவணம் ஒன்றைத் தயாரித்திருக்கிறோம்.

குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இந்த ஆவணப் படம் காத்திரமான பங்கினை வகிக்கக்கூடும்.

சிறிலங்காவினது கொலைக்களம் என அழைக்கப்படும் இந்த ஆவணப்படம் செவ்வாயன்று இரவு சனல் -4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.

தொலைக்காட்சி வரலாற்றில் இதுநாள் வரை இடம்பெற்ற ஒளிபரப்புக்களில் அதிக கொடூரம் நிறைந்த காட்சிகளை இந்த ஆவணப்படம் தன்னகத்தே கொண்டிருப்பதால் இது பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தக்கூடும்.

ஆனால் இன்னொரு முதன்மையான காரணத்திற்காக இந்த ஆணவப்படம் ஒளிபரப்பப்படவேண்டும் என நாம் நம்புகிறோம்.

தங்களது சொந்த மக்களையே படுகொலைசெய்ய முனையும் தரப்புக்களுக்கு இதுவொரு எச்சரிக்கையாக அமையும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக சமூகம் மற்றும் உலக சக்திகளைப் பொறுத்தவரையிலும் இந்த ஆவணப்படம் முதன்மையானது.

போர்க்குற்றங்களையும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் உலகின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு நீங்கள் இரகசியமாகச் செய்வதற்கு நவீன தொழிநுட்பம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்பதையே இந்த ஆவணப்படம் எடுத்துக் காட்டுகிறது.

ஆனால் இந்த ஆவணப்படம் ஒரு ஆரம்பமே.

போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை புறந்தள்ளப்படாமல் இருப்பதை நாங்கள் அடுத்ததாக உறுதிப்படுத்தவேண்டும்.

சாதாரண தொலைக்காட்சிகளின் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதிகள் என்ன என்பதை இந்த ஆவணப்படத்தில் வரும் காட்சிகள் சற்று விரிவடையச்செய்யும்.

சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகளை நீங்கள் காண்பீர்கள்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் மருத்துப்பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் வேண்டுமென்றே மறுக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனையில் நாதியற்ற அந்த அப்பாவி மக்கள் செத்து மடிவதை நீங்கள் காண்பீர்கள்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றது என்பதை தொடர்புடையவர்களைக் கரிசனையுடன் செயலாற்ற வைப்பதற்குச் சரியான வழி இதுதானெனில், கொடூரம் நிறைந்த இந்தப் படங்களைக் காட்டுவதில் தப்பு ஏதும் இல்லை என்றே நாம் கருதுகிறோம்.

சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் புரிந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நம்பத்தகுந்தவை என இரண்டு மாதங்களின் முன்னர் ஐ.நா வல்லுநர்கள் குழு கூறியிருந்தது.

குறிப்பிட்ட இந்தக் குற்றச்சாட்டுக்களை முறையாக விசாரிக்கும் வகையில் அனைத்துலக விசாரணைக் கட்டமைப்பு ஒன்றை ஐ.நா செயலாளர் நாயகம் அமைக்கவேண்டும் என அது அழைப்பு விடுத்திருந்தது.

இதுபோன்ற ஒன்றை அமைக்கும் அதிகாரம் தனக்கில்லை எனக் கூறும் செயலாளர் நாயகம் எந்த நடவடிக்கையினையும் இதுவரை எடுக்கவில்லை.

இதுபோன்ற ஒன்றை அமைக்கும் அதிகாரம் செயலாளர் நாயகத்திற்கு இருக்கிறதா அல்லது இல்லையா என்பது விவாதத்திற்குரியது.

ஆனால் ஐ.நாவினது மனித உரிமைச் சபை மற்றும் பாதுகாப்புச்சபை போன்ற கட்டமைப்புக்கள் இதற்கான அதிகாரத்தினைத் தம்மகத்தே கொண்டிருக்கின்றன.

இங்கு ஐ.நா மீண்டும் தவறிழைக்குமெனில், அது சொல்லும் செய்தி தெளிவாக இருக்கும்.

நீங்கள் உங்களது சொந்த மக்களைக் கொல்ல விரும்பினால் நீங்கள் இதுபோன்ற குற்றத்தினைச் செய்துவிட்டுத் தப்பித்துக்கொள்ளலாம் என்பதே அது.

Comments