கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டியில் நடந்த காட்டுமிராண்டித்தனம் எமக்கு இந்த யதார்த்தத்தை மீள ஒரு முறை உணர்த்தியிருக்கின்றது.
தமிழர்கள் ஆயதம் ஏந்தியது தவறு என்றார்கள் அது தவறாகவேயிருக்கலாம். ஆனால் எதற்காக ஏந்தினார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடினால் காலத்தில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும் என்பதே இன்றும் தமிழ்த் தேசியவாதிகளின் வாதமாகவிருக்கின்றது. அதுதான் நியாயமானது நிஜமானது.
தமிழர்கள் என்றைக்கு தமது உரிமைகளுக்காக போராடத் தலைப்பட்டார்களோ அன்று தொட்டு இன்று வரைக்கும் போராட்ட வடிவங்கள் பல தடவை மாற்றம் கண்டன. போராட்டம் மட்டும் நிலையாக இப்போதும் இருக்கின்றது.
இதற்குக் காரணம் தமிழர்கள் போரியல் மனோபாவத்துடன் இருந்தபோதெல்லாம் சிங்களம் தமிழர்களுக்கு முன்னாலும் சர்வதேசத்தின் முன்னாலும் தன்னையொரு அப்பாவிபோல் காட்டிக்கொண்டது தான்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் முப்பது வருடங்கள் ஈழத்தமிழர் ஜனநாயக ரீதியாக போராடியபோது தனது அரக்கக் கரங்களின் துணையுடனும் இந்திய மேலாதிக்க துரோகிகளின் ஆதரவுடனும் அந்தப் போராட்டத்தை கசக்கிப் பிய்த்தெறிந்த கதையை யாரும் மறக்கமுடியாது.
தமது உரிமைக்காக தமிழர்கள் கிளர்ந்தெழுந்தபோதெல்லாம் சிங்களத் தலைமைகள் தமது காடைத்தனத்தை காட்டினார்கள். இதற்கு சாட்சியாக தமிழாராட்சி மாநாட்டில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவிடம் இன்றைக்கும் இருக்கின்றது.
இதுபோக பல அழிக்கப்பட்டு விட்டன. பலவற்றுக்கு நிலைவாலயங்கள் அமைக்கப்படவில்லை. இந்த நிலைமையின் தொடர்ச்சியில்தான் தமிழர் விடுதலைப் போராட்டம் ஆயுதரீதியாக மாற்றம் கண்டது.
அது நடந்து வந்த கடந்த முப்பது வருடங்களில் சிங்களம் நடந்து கொண்டவிதம் சர்வதேசத்தின் முன்னால் போட்டுக் கொண்ட நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனை யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
காலத்திற்க்குக் காலம் சமாதான உடன்படிக்கைகள் என்றவொன்றை போட்டுக்கொண்டு தமிழர்களின் போரியல் மனோபாவத்தை சிதைக்க முற்பட்டது. ஆனால் அவற்றின் மூலம் தமிழர்கள் தமது எதிர்பார்ப்பை கேட்டபோது அவை சிங்களத் தலைமைகளால் கிழித்தெறியப்பட்டது.
அல்லது அப்பாவிப் பொதுமக்கள் மீது இடைவிடாத கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்து தமிழர்களிடமுள்ள போரின்பால் அல்லது போரிடும் மனோபாவத்தில் சிதைப்பை ஏற்படுத்த சிங்களம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டது. இந்த விடயத்தையும் தோண்டிப் பார்த்தால் முள்ளிவாய்க்காலைப்போல் இன்னும் பல இனப்படுகொலைகள் பற்றிய உண்மைக்கதைகள் வெளிக்கொணரப்படும்.
ஆக தமிழர்கள் எப்போதெல்லாம் கிளர்ந்தெழுந்த தமது உரிமைகளுக்காக போராட எத்தனித்தார்களோ அப்போதெல்லாம் தன்னையொரு அப்பாவிபோலக் காட்டிக்கொண்ட சிங்களம் அதை எத்தகைய கொடுரங்களைச் செய்தும் அடக்கிவிடவேண்டும் என்று நினைத்தது. இதுதான் சர்வதேசத்தின் மத்தியில் சிங்களம் கடந்த காலத்தில் பெற்றுக்கொண்டிருந்த நல்ல பிள்ளை என்ற பெயருக்குக் காரணமாக இருக்கலாம்.
எனவே நாமிங்கு கூறத்தலைப்படுவது என்னவென்றால் சிங்களம் ஒருபோதும் தமிழர்கள் விரும்பும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் போவது கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டத்தில் சமபலம் பெற்றிருந்தபோது அதனை எப்படியாவது தீர்த்துக் கட்டவேண்டும் என்று நினைத்து தனக்கு ஆதரவான தமிழ் அடிவருடிகளோடு சர்வதேசத்திடம் பிச்சை ஏற்கத் தீர்மானித்தது.
இனப்பிரச்சினைத் தீர்வு என்ற பிச்சைப்பாத்திரத்தை தெரிவு செய்யவும் சர்வதேசத்திற்கு விடுதலைப்புலிகள் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல எனவும் இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் விடுதலைப்புலிகள் தடையாகவுள்ளனர் என்பதைக் காட்டவுமே தமிழ் அடிவருடிகளை சிங்களத்தலைமை சாமர்த்தியமாக தன்னோடு இணைத்துக் கொண்டது. ஈற்றில் இந்த முயற்சியில் சிங்களம் வெற்றிபெற்றும் கொண்டது.
ஆனால் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக கூறி இரண்டாண்டுகள் கடக்கின்றது. விடுலைப்புலிகளுக்கானது என்ற போரில் தமிழர்கள் இனிமேல் ஆயுதம் ஏந்தும் எண்ணத்தையே கைவிடவேண்டும் என்னுமளவில் சுதந்திரமான வாழ்வை நேசித்த இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கடக்கின்றது.
இருந்தும் இனப்பிரச்சினைத் தீர்வு என்பதை மட்டும் சிங்களம் இன்றும் பேச வில்லை.
இதிலிருந்து இங்கிருந்து நாம் தீர்மானித்துக் கொண்டாகவேண்டும் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய தீர்வொன்றினை சிங்களம் ஒருபோதும் தர மாட்டாது என்பதை. தமிழர்கள் நலிந்து தங்களுடைய ஏவல் செய்து வாழ்ந்தால் அதனை சிங்களம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும். ஏப்போதாவது எங்கேயாவது போராடத் தலைப்பட்டால் அது பயங்கரவாதம் என்ற போர்வையில் அழித்தொழிக்க முனையும்.
இதுதான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டியில் நடந்த சம்பவத்தின் பின்னாலுள்ள கதை. யுத்தத்தின் பின்னர் தமிழர்கள் தோற்றுப்போனதொரு சமுகம் என்ற தோற்றுவாயை விதைக்க சிங்களத்தலைமை முற்பட்டது. ஆனால் அது எடுபடாத சூழலில் ஜனநாயக ரீதியாக வடக்குக் கிழக்கில் மீண்டும் தமது உரிமைப்போரைத் தொடர தமிழர்கள் தயார் என்ற சமிக்ஞையை அண்மைக்காலத் தேர்தல்கள் மூலம் சிங்களதேசம் விளங்கிக் கொண்டிருக்கின்றது.
எங்கே தமக்கான உரிமைகளைக் கேட்டு தமிழர்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்து விடுவார்களோ என்ற பயத்தில் இன்று சிங்களம் அதிர்ந்து போயிருக்கின்றது. அதனாலேயேதான் பாடசாலை தொடக்கம் கச்சேரி வரைக்கும் எல்லா இடங்களிலும் இராணுவமும் சி.ஜ.டியும் இருக்கிறார்கள். மக்களுக்காக பேசுகிறவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள், குண்டுவீசி தாக்கப்படுகிறார்கள், தடியடி பொல்லடிபோட்டு துரத்தப்படுகிறார்கள்.
யுத்தம் முடிந்து விட்டது நாட்டில் ஜனநாயகம் மலர்ந்து விட்டது என்று யாரும் நினைக்கவேண்டாம். செப்பனிடப்படும் எங்கள் வீதிகளிற்குக் கீழே சிங்களத்தின் ஆதிக்கவெறியிருக்கின்றது.
வீதிப் புனரமைப்புக்குக் கொண்டுவரப்படும் கல்லுடன் சேர்த்து புத்தவிகாரை கட்டுவதற்கான கல்லும் வருகின்றது. எதுவும் மாற்றமடையவில்லை என்பது மட்டும்தான் என்றுமுள்ள நிஜம்.
எனவே எமக்கான சுதந்திரத்தை யாரும் பெற்றுக்கொடுக்க முடியாது. தமிழர்கள் எந்த அடக்குமுறைகளையும் நீண்டகாலம் பொறுத்திருக்க மாட்டார்கள்.
பிரபாகரன் வானத்திலிருந்து வந்த மனிதனல்ல! அடக்கப்பட்ட ஒரு சமுகத்தில் சிங்கள இனவெறியர்களால் சிதைக்கப்பட்ட ஒரு சமுகத்தில் பிறந்தவர்.
அடக்குமுறைகளும், சிங்கள இனவெறியாட்டங்களும் தொடருமானால் இன்னுமொரு பிரபாகரனுக்கிங்கே பஞ்சமில்லை.
இழப்புக்கள் எங்கள் போராட்டத்தை சிதைக்குமென்றால் முள்ளிவாய்க்காலோடு நாங்கள் முடிந்துபோயிருக்க வேண்டும். போராட்ட வடிவங்கள் சிதைக்கப்பட்டனவேயொழிய காலத்திற்குக் காலம் போராட்டம் சிதைக்கப்படவில்லை.
சுதந்திரன்.
Comments