தீர்மானத்தின் 12ம் சரத்தில் இருபகுதியும் புரிந்ததாகச் சொல்லப்படும் சர்வதேச மனிதநேயச் சட்ட மனித உரிமைச் சட்ட மீறல்கள் பற்றிய உண்மையான விசாரணைகளைத் தொடங்கும்படி அதை ‘உடனடி நடவடிக்கையாக’ உடனடியாக மேற்கொள்ளும்படி சிறிலங்கா அரசை அது கேட்டுள்ளது.
தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் ஐரோப்பியப் பாராளுமன்றத் தீர்மானத்தில் சிறிலங்கா அரசு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக நிறுவியுள்ள கற்ற பாடங்களும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்திற்கு (LLRC) முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் 10ம் சரத்தில் இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் குற்றவாளியாகக் காணப்பட்டோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி சிறிலங்கா சட்டமா அதிபர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். குற்றவியல் விசாரணை உண்மையாகவும் நேர்மையாகவும் இலங்கையில் நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
குற்றவியல் விசாரணை நடுநிலையாளர்களால் வெளிநாடுகளில் நடத்தப்பட வேண்டும். அரச படைகளால் படுகொலை செய்யப்படாமல் இன்றுவரை அரசின் பிடியில் உயிருடன் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கு எதிராகச் சிறிலங்கா சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடும்.
ஆனால் செயலாளர் நாயகம் நியமித்த ஐநா நிபுணர்குழு குற்றவாளியாகக் கண்ட அரச அதிகாரிகள் படைத் தலைவர்களுக்கு எதிராகச் சிறிலங்கா அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதை கற்பனையில் கூட எண்ணிப்பார்க்க முடியாது. இந்த நாட்டில் அப்படியான பாரம்பரியம் உண்டு.
2006ல் ஒரு ஜனாதிபதி ஆனைக்குழு நியமிக்கப்பட்டு அதனிடம் விசாரணைக்காகப் 16 வழக்குகள் ஒப்படைக்கப்பட்டன. படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரான்சின் பட்டினிக்கு எதிரான தொண்டு நிறுவனத்தின் 17 பணியாளர்கள் வழக்கும் இதிலடங்கும்.
ஒப்படைக்கப்பட்ட 16 வழக்குகளில் 7 மாத்திரம் விசாரணைக்கு எடுக்கப்பட்டன ஆனால் 5 மாத்திரம் முழுஅளவில் விசாரிக்கப்பட்டன. ஒருவராவது குற்றவாளியாகக் காணப்படவில்லை. 2009ல் ஆணைக்குழு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இதெல்லாம் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தெரிந்த விடயம்.
ஜனாதிபதி ஆணைக் குழு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு அதே ஜனாதிபதியால் வரவழைக்கப்பட்ட சர்வதேச நடுநிலை முக்கியஸ்தர்கள் குழு (International Independent Group Of Eminent Persons) மார்ச் 2008ல் கண்காணிப்பை நிறுத்திவிட்டது.
இந்தக் குழுவில் இந்தியாவின் முன்னாள் நீதியாளர் பகவதி இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மார்சுகி தருஸ்மான் ஆகியோரும் இடம்பெற்றனர். மார்சுகி தருஸ்மான் ஐநா செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் குழுவிற்குத் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி வரவழைத்த சர்வதேச நடுநிலை முக்கியஸ்தர் குழு தனது அதிருப்தியைத் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் ‘ உண்மையைக் கண்டறிவதற்கு உதவும் அரசியல் உறுதிப்பாடு கிடையாது’ என்று குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய சிறிலங்கா சட்டமா அதிபர் முட்டுக்கட்டைகளை போட்டப்படி இருந்ததாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். சாட்சிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு பாதுகாப்பு வழங்குவதற்குத் தவறியதோடு அவர்களை மிரட்டியதையும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பபட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறும் அர்த்தமுள்ள அரசியல் உரிமைகளை வழங்குமாறும் சிறிலங்கா அரசை ஐரோப்பியப் பாராளுமன்றம் கேட்பதானது ஆடுகளுக்கு நீதி வழங்கும்படி ஓநாய்களைக் கேட்பதற்கு சமமானது.
ஐரோப்பிய பாராளுமன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிலும் உறுப்பியம் வகிக்கின்றன. நேட்டோவின் லிபியா நடவடிக்கை தொடர்பாக அதன் செயலாளர் நாயகம் அன்டேர்ஸ் றாஸ்முசென் (Anders Rasmussen) பின்வருமாறு விளக்கினார்.
தனது சொந்த மக்களை கடாபி கொன்றொழிப்பதைத் தடுப்பதற்காக கடைசி நிமிடத்தில் கூட்டுப் பங்காளிகள் நடவடிக்கை எடுத்தனர் என்று தெரிவித்தார். (Interview. Newsweek.2011 May 23. 30). 40,000 ஈழத்தமிழர்கள் கொல்லப்படும் போது நேட்டோ அதே விதத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் செயற்பட்டுள்ளது.
நேட்டோவைத் தலைமை தாங்கும் அமெரிக்கா ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரைப் பங்காளி நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகியோருடன். இணைந்து நடத்தியதால் நேட்டோத் தலையீடு இல்லாமற் போய்விட்டது.
மனிதநேயத் தலையீடு (Humanitarian Intervention) தேசிய நலனுக்கு உட்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது ஒரே மாதிரியாகக் கிடைப்பதில்லை. அதே நேர்காணலில் அன்டேர்ஸ் றாஸ்முசென் விடுதலை வேட்கை பற்றிப் பின்வருமாறு கூறினார்.
உலகின் வலுவாய்ந்த சக்தி விடுதலை வேட்கையாகும் ஒவ்வொரு மனிதரிடமும் அந்த ஆசை குடி கொண்டுள்ளது.’ ஈழத்தமிழர்கள் விடுதலைப் போர் நடத்தியதைக் கொச்சைப் படுத்தியவர்களும் நீங்கள் தான். இந்த உன்னதமான கருத்தைத் சொல்பவர்களும் நீங்கள் தான். யாரை நம்புவது ?
அமெரிக்காவின் இன்ரர் நாஷனல் ஹெரால்ற் டிரைபியூன் (International Herald Tribune) பத்திரிகையின் முன்னாள் வெளிவிவகாரச் செய்தியாளர் ஜொனாதன் பவர்ஸ் (Jonathan Powers) அமெரிக்காவின் சிந்தனை வறட்சி பற்றி இவ்வாறு சொன்னார்.
அமெரிக்கா இப்போது செத்துப்போன கருத்துக்களின் வைப்பிடமாக இடம் பெறுகிறது. செத்துப்போன நட்சத்திரங்களைப் போல’ இதற்கு உதாரணமாகத் துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் ஒசாமா பின் லாடனையும் ஒரேமாதிரியான பயங்கரவாதிகள் என்று ஒப்பிட்டுப் பேசியதைக் குறிப்பிடலாம்.
பிளேக்கின் அபத்தமான கருத்தை மறுத்துக் கூறும் இடம் இதுவல்ல என்றாலும் ஈழத்தமிழர்களின் சமாதிக்கு மேல் இலங்கையில் தளம் அமைக்க விளையும் அமெரிக்காவின் ஆர்வத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
பாலஸ்தீனப் பிரச்சினை இன்று பூதாகரமாக வெடித்திருப்பதற்கு பாலஸ்தீன மண்ணில் சர்வதேசச் சட்டங்களுக்குப் புறம்பாக இஸ்ரேல் நடத்தும் யூதக் குடியேற்றங்களுக்கு அமெரிக்கா வழங்கும் பூரண ஆதரவு முக்கிய காரணமாகும். தமிழர் பகுதியில் நடக்கும் சிங்களக் குடியேற்றத்திற்கும் அமெரிக்கா ஆதரவு வழங்குகிறது.
இதனால் நல்லிணக்கத்ததையும் அதற்கு எதிரான ஆதரவையும் வழங்கும் இரட்டை முக நாடாக அமெரிக்கா இடம்பெறுகிறது. அமெரிக்காவின் பிரபல வெளிவிவகார விமர்சகர் வில்லியம் பாவப் (William Pfaff) தனது புகழ்பூத்த வெளிவிவகார நூல் ‘ காட்டுமிராண்டிக் கருத்துக்களில்’ (Barbarian Sentiments) என்ன சொல்கிறார் என்றால்.
‘தன்னை நியாயமான நாடாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா மிகவும் ஆபத்தான நாடு’ உலகின் பெருமளவு மக்களால் அமெரிக்கா இன்று வெறுக்கப்படுவதற்கு இதுவே அடிப்படைப் காரணம். அதிபர் ஒபாமா இதை மாற்றும் வலுவுள்ளவரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
சிறிலங்கா மீது அழுத்தம் பிரயோகிக்கும் வலுவை இழந்த இந்தியா ஈழத் தமிழரைப் பணயம் வைத்துப் பேரம் பேசுவதில் ஈடுபடுகிறது. பலாலி விமான நிலையப் பாவனை, காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகப் பாவனை போன்றவற்றை தனது தொடரும் ஆதரவுக்கு மாற்றீடாக இந்தியா கேட்கிறது. தூர இயக்கியால் வழிநடத்தப்படும் இந்தியப் பிரதமரால் வேறு என்ன செய்ய முடியும்.
வவுனியா மாவட்டம் கனகராயன் குளத்தில் சிங்கள இராணுவத்திற்காகப் பாரிய படையினர் நகரை அமைப்பதில் சீனா ஈடுபடுகிறது. இதற்காக தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. 500 அடி உயரமான புத்த விகாரையையும் சீனா அமைத்துள்ளது.
முறிகண்டியில் படையினருக்கான குடியிருப்புக்களையும் சீனா அமைக்கின்றது. இந்தியாவின் தமிழ் அகதிகளுக்கான வீட்டுத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. யாழ் குடா அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் வெளியிட்ட உத்தியோகபூர்வ தகவலின்படி யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 55,700 அகதிகள் இருக்க இடமின்றித் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குளத்தைக் கலக்கிப் பருந்திற்கு இரை கொடுத்தது போல் ஈழத் தமிழரின் விடுதலைப் போர் அந்நிய சக்திகளுக்கு உணவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அது தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
Comments